சென்ற தொடரில் புளட்டில் இருந்து விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் என்பதை கூறியிருந்தேன். அவர்கள் அரசியல் ரீதியாக முன்னேறிய பிரிவினராக இருந்ததுடன், அரசியல் முன்முயற்சி கொண்டவராக இருந்தனர். விமலேஸ் அதில் குறிப்பிடத்தக்க ஒருவன். போராட்டத்தின் அரசியல் திசை வழியையும், மாணவர்களின் இயல்பான தன்னெழுச்சியான போராட்டத்துக்கு பதில், அதை அரசியல்ரீதியாக முன்னெடுக்கும் வண்ணம் முன்னேறிய பிரிவு பல்கலைக்கழத்தில் தொடர்ச்சியாக 1986 - 1987 இல் தீவிரமாக இயங்கியது. இயக்கங்களின் அராஜகங்களுக்கு எதிரான மக்கள் அரசியல், மிக உச்சக் கட்டத்தை எட்டிய காலம்.

இன்று இதை மறுப்பதும், இதை திரிப்பதும், இதைப் புனைவதும் நாவலன் போன்றவர்களின் இன்றைய அரசியலாகின்றது. அன்று இந்த போராட்டத்தின் பின், தன்னெழுச்சியில் கலந்து கொண்ட நாவலன் இன்று அதுதான் நடந்தது என்று கூறுவது, அவரின் இன்றைய தன்னெழுச்சியான திடீர் அரசியலுக்கு ஏற்புடையதாக உள்ளது. உண்மையில் இன்றும் நாம் நடத்திய தொடர்ச்சியான போராட்டத்தை மறுப்பதன் மூலம், தனது திடீர் தன்னெழுச்சி வகை இன்றைய அரசியலே அரங்கேற்றியதாக அரங்கேற்றிக் காட்ட முனைகின்றார். இதையே அன்று அவர் செய்ததுடன், அதுதான் நடந்தது என்று காட்டவும் முனைகின்றார். இதற்கு மாணவர் அமைப்புக்குழு தலைவர் சோதிலிங்கத்தை உசுப்பேற்றி அதன் மூலம் புனையமுனைகின்றார்.           

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக தேசம்நெற் ஜெயபாலனின் புரட்டு அம்பலமாக, இனியொரு நாவலன் இருப்புக் கொள்ளாது நெளிகின்றார். புதிய புரட்டுகளை அவிழ்த்து இதன் மூலம் புனைய முனைகின்றார். அதையும் பாருங்கள்.

"ரயாகரன் விஜிதரன் குறித்த பல்கலைக் கழக மாணவர் போராட்டத்தைத் தானே தலைமை தாங்கி நடத்தியதாகக் குறிப்பிடுகிறார். இது குறித்து உங்கள் கருத்து?"

என்ன என்று நாவலன், அமைப்புக் குழு தலைவர் சோதிலிங்கத்திடம் கேட்கின்றார்.

எவ்வளவு பெரிய அரசியல் மோசடி. நான் தான் அமைப்புக் குழு தலைவர் என்று, எங்கேயாவது எப்போதாவது சொன்னதுண்டா!? அப்படி இருக்கும் போது, ஒரு பொய்யனாக மாறி ஏன் புனைகின்றான்? அதுவும் அந்த குழுவின் தலைவனிடம், இப்படி புரட்டி ஏன் கேட்கின்றான்? இதுதான் நாவலன் என்றால், இதுதான் நாவலன் அரசியலும் கூட. சுழியோடும் வாழ்வும், அது சார்ந்த அரசியலும்.   

தனது அரசியல் புரட்டை மூடிமறைக்க, பொய்யாக புனைந்த ஒன்றை கேள்வி கேட்டுத்தான் உண்மைகளை புரட்ட முடிகின்றது. அமைப்புக் குழு தலைவர் சோதிலிங்கம் என்பது மட்டுமின்றி, உண்ணாவிரதம் நிறுத்தப்பட்ட முதல்நாள் வரை கூட நானோ நாவலனோ அந்த அமைப்புக் குழுவில் இருந்ததில்லை. இதை நான் தெளிவாக எழுத்தில் வைத்துள்ளேன். இப்படி உண்மைகள் இருக்க, தன் அரசியல் புரட்டுகளை மூடிமறைக்க, சோதிலிங்கத்தை புரட்டி உசுப்பேற்றிவிட முனைகின்றார். கேவலமான கேடுகெட்ட சுழியோடும் அரசியல். 

இப்படி நான் தான் "தலைவர்" என்று கூறியதாக நாவலன் புனைந்து கேட்க, அதற்கு அவர்

"அந்த அமைப்புக் குழுவின் தலைவர் என்ற வகையில் எனதும் விமலேஸ்வரன் ஆகியோர் தலைமையில் ஆரம்பமானது."

என்கின்றார்.

நான் சொன்னதையே தான், அவர் சொல்லுகின்றார். இது தானே உண்மை. ஆக மொத்தத்தில் சோதிலிங்கம் எனது கட்டுரையைப் படிக்காமல், நாவலன் உசுப்பேற்றியதில் இருந்து புலம்பியது இங்கு உண்மையாகின்றது. நான் சொல்லாத ஒன்றுக்கு, கண்ணை மூடிக்கொண்டு அவர் பதிலளிக்கின்றார். இப்படி லாட அரசியலைத்தான்,  நாவலன் நடத்துகின்றார்.  

அடுத்து அதே தொடரில் சோதிலிங்கம்

"ரயாகரனின் செயற்பாடுகளால் மாணவர்கள் மத்தியில் சில நெருக்கடிகளை நாம் சந்திக்க நேர்ந்தது என்பதே உண்மை."

என்கின்றார்.

சரி, நாவலன் அல்ல நீங்கள் தான் அதை சொன்னீர்கள் என்று எடுத்தால், அந்த "செயற்பாடு" என்ன? நீங்கள் சந்தித்த அந்த "நெருக்கடி" தான் என்ன? சரி நீங்கள் சந்தித்த அந்த "நெருக்கடியை" அமைப்பு குழு எப்படித் தீர்த்தது? புலுடா விடாதீர்கள்.

எல்லாம் இட்டுக்கட்டிய புரட்டு. தேசம்நெற்றில் விஜிதரன் போராட்டத்தில் தான் அமைப்புக் குழு உருவாக்கியதாக கூறியது யார்? முதல் 7 பேர் கொண்ட அமைப்புக்குழுவில் நாவலன்  முதலில் சேர்ந்த பின், என்னை நாவலனின் புண்ணியத்தில் சேர்த்ததாக புளுகியது யார்? 7 பேரே அமைப்புக் குழு என்று, பொய்யாக புனைந்தது யார்? தன்னியல்பான போராட்டம் என்று அதில் சொன்னது யார்? இப்படி புரட்டுகளை எல்லாம் புனைந்தது யார்?  தேசம்நெற்றின் புனைவை மறுக்க, சோதிலிங்கத்திடம்  பேட்டி எடுக்கவில்லை. மாறாக அதை மூடிமறைக்க, எனக்கு எதிராக நான் சொல்லாதவற்றை சொல்லிப் பேட்டி எடுக்கின்றார் நாவலன். பல புரட்டுகளை புனைந்ததன் மூலம் உசுப்பேற்றி, தன் கருத்தை அவர் மூலம் கூறவைக்க முனைகின்றார்.

அடுத்த அவதூறு சார்ந்த புனைவைப் பாருங்கள்.

"விமலேஸ்வரன் கொல்லப்பட்டதற்கான காரணங்கள் என்னவாக இருக்கலாம்?

என்று

நாவலன் கேட்க அதற்கு

சோதிலிங்கம்

"அன்று மாகாண சபைக்கான தேர்தல்களை இந்திய இராணுவ அதிகாரம் திட்டமிட்டிருந்தது. அவ்வேளையில் விமலேஸ்வரன் போன்றோர் அத் தேர்தலில் போட்டி போடலாம் என்ற பயம் புலிகளுக்கு இருந்திருக்கலாம். இவ்வாறு ஒரு கருத்துத் தான் அப்போது நிலவியது."

என்கின்றார். 

ஆக இப்படி புலிகள் கொன்றதற்கு புது அரசியல் விளக்கம், நியாயத்தை கூட்டாக கற்பிக்கின்றனர். கொன்ற புலியை விட, பலமடங்காக தங்கள் சுயநலத்துடன் அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். 22 வருடமாக, இப்படி ஒரு பாசிச நியாயத்தையோ, காரணத்தையோ யாரும் சொன்னது கிடையாது. மறுபடியம் விமலேசை இன்று கொல்லுகின்றனர். புலிகள் கொன்றதற்கு இதுதான் காரணம் என்று, ஒரு புலி விளக்கம் கொடுக்கின்றனர். உண்மையில் இது கூட நாவலனின் புரட்டு சார்ந்த சுயநலம்தான்.

இதையே நாவலன்

"மு.திருநாவுக்கரசு என்ற விரிவுரையாளர் … என்னை அழைத்து நான் விமலேஸ்வரன், சோதிலிங்கம் போன்றோர் மாகாண சபைத் தேர்தலில் ஈ.பி.ஆர்.எல்.எப் இனால் பயன்படுத்தப்படலாம் என்றும் வேட்பாளர்களாகக் கூடப் பயன்படுத்தக் கூடிய வாய்ப்பு இருப்பதாகப் புலிகள் கருதுவதாகவும் அதனால் கொலைசெய்யப்படக் கூடிய வாய்ப்புக் கூட இருப்பதாகவும் கூறுகிறார்"

என்று கூறிய அதே புலுடாவைத் தான், இங்கு காரணமாக கற்பித்து, அது அரசியல் நியாயமாக முன்வைக்கப்படுகின்றது.

இதே போன்று நாவலனின் கூற்றுக்கு பொழிப்புரை எழுதும், யாழ்ப்பாணி என்ற புனைபெயர் பேர்வழியும் அவதூறு பொழிகின்றார். அவர்

"வடகிழக்கு மாகாணசபை தேர்தலுக்கு அண்மியகாலத்தில் இவ்வாறான கண்மூடித்தனமான பரந்துபட்ட படுகொலை பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டதென்பது உண்மை. விமலேஸ் படுகொலை செய்யப்படுவதற்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் என்னை சந்தித்தபோது இதே போன்றதொரு அபிப்பிராயத்தை கொண்டிருந்தார். சில தினங்களில் கொழும்பு செல்லவும் திட்டமிட்டிருந்தார்." என்கின்றார்.  ஆக இப்படி புலியிசம், தங்கள் சுயநலத்தை மூடிமறைக்க விமலேஸ் படுகொலையின் பின்னால் மறைமுகமாக புளுத்து வெளிவருகின்றது.

இதுதான் உண்மை என்றால், கொழும்பு செல்லவுள்ளதாக புலிக்கு தகவல் கொடுத்தது யார்? யாழ்ப்பாணியா!? 

இங்கு இவர்கள் இதன் மூலம் சொல்லும் அரசியல் என்ன? புலிகள் தங்கள் சரியான காரணத்துக்காக, தவறாகச் சுட்டனர் என்பதை சொல்ல முனைகின்றனர். இதைத்தான் இந்த அரசியல் புலுடாப் பேர்வழிகள், மறைமுகமாக சொல்ல வரும் செய்தி. விமலேஸ்வரனின் அரசியலுக்காக அல்ல இந்தக் கொலை. இவையே இவர்கள் கூட்டிக் கழித்து காட்டும் கணக்கு.

உண்மையில் இதை இன்று இவர்கள் இப்படி புனைவது ஏன்? விமலேஸ் அரசியல் எம்முடன் மட்டும் நீடிப்பதும், அதை நாம் மட்டும் முன்னிறுத்துவதும் என்பதும் தான் இதற்கான காரணமாகும். அவர்களின் சுயநலத்துக்கு அது தடையாக இருக்கின்றது. விமலேஸ்சை போற்றி அரசியல் ரீதியாக தூற்றுவது, எமது அரசியலை மறுக்கும் இன்றைய அரசியல் அடிப்படையாகிவிட்டது.

விமலேஸ் தேர்தலில் நின்று விடுவார் என்ற புலிகளின் தவறான பயம் மற்றும் காரணம் தான் கொல்ல வைத்தது, அவரின் அரசியல் அல்ல என்பதையே சொல்ல முனைகின்றனர். மு.திருநாவுக்கரசு மூலம் நாவலன் அதைச் சொல்ல, சோதிலிங்கம் புலிகளின் அந்த பயம் தான் கொன்றது என்ற கருத்து நிலவியது என்கின்றார்.

இப்படி சொல்லும் உங்களிடம் நாம் திருப்பிக் கேட்கின்றோம், யாரிடம் இந்தக் கருத்து நிலவியது? இதில் நீங்கள் யார்? உங்களிடம் இந்த கருத்து நிலவவில்லை என்றால், இதை நீங்கள் சொல்வது ஏன்?

இதுவே உங்கள் கருத்து என்பது வெளிப்படையான உண்மையாகிவிடுகின்றது. இதனால் தான் கேட்கின்றோம் உங்கள் அரசியல் நோக்கமென்ன? உங்கள் அரசியல் பின்னணி என்ன?

நாவலன் கூற்றுப்படி இரண்டு நாளுக்கு முன் மு.திருநாவுக்கரசு சொன்னது நடந்து விட்டது. இதனால் அது காரணமாகி விடுகின்றது. இதனால் தான் இவர்கள் கொல்லப்பட்ட காரணம் விமலேஸ்சின் அரசியலல்ல என்கின்றனர். புலிகளுக்கிருந்த தேர்தல் பயம் என்கின்றனர். இப்படி புலிகள் கொல்லப் போவதாக விமலேஸ்சை கொன்ற அன்றும், மு.திருநாவுக்கரசு கூறியதாக கூறும் நாவலன், தேசம்நெற்றில் எனது பெயரையும் இணைத்திருந்தார். அதில் தேர்தல் கதையே இல்லை. இங்கு நாவலன் "என்னை அழைத்து நான் விமலேஸ்வரன், சோதிலிங்கம்" போன்றவர்கள் என்று எனது பெயரை தவிர்த்து நாசூக்காக கதையையே மாற்றுகின்றார். சரி ஏன் இதே காரணத்துக்காக, புலிகள் உங்களைக் கொல்லவில்லை?         

தேசம்நெற்றில் என் பெயரையும் சேர்த்து சொன்னவர், அது அம்பலமானவுடன் அதை கைவிடுகின்றார். தேசம்நெற்றில் எனக்கு தகவலைக் கூற, நான் தலைமறைவாகிவிட்டேன் என்கின்றார். அதைப் பாருங்கள்

"மு.திருநாவுக்கரசுவின் தகவலை இரயாகரனுக்குச் சொல்ல அவர் உடனடியாக தலைமறைவாகிறார்."

என்கின்றார். இப்படி கூறிய பின்னணியில் இரண்டு புலுடா அம்பலமாகின்றது.

1. அப்படியொரு விடையத்தை எனக்கு நாவலன் சொல்லவில்லை.

2. நான் அன்று அப்படித் தலைமறைவாகி இருக்கவில்லை. அன்று விமலேஸ் கொல்லப்பட்ட இடத்தில் நான் இருந்தது மட்டுமின்றி, அவனின் உடலை பல்கலைக்கழகம் கொண்டுவரவும் நான் முயன்றேன். விமலேஸின் தங்கை அதை என்னிடம் கோரியதும் உண்மையாக (தங்கை மூலம் இதை உறுதி செய்ய முடியும்) இருக்க, புரட்டுகள் புனைவுகள் நாவலன் மூலம் இங்கு கோலோச்சுகின்றது.

இதை மூடிமறைக்க, எனது பெயரை இப்போது நீக்குகின்றார். மாறாக அவர் "என்னை அழைத்து நான் விமலேஸ்வரன், சோதிலிங்கம்" என்று புதுக் கதையை சொல்லுகின்றார்.

இதில் தேர்தலை புதிதாக இணைக்கின்றார். புலிகள் இதனால்தான் கொன்றனர் என்பதன் மூலம், விமலேஸ்சின் அரசியலை மறுத்து, எமது அரசியலை மறுப்பதே இன்றைய அரசியலாகின்றது. இதனால் போராட்டத்தை தன்னியல்பானதாக காட்டுவது, திரிப்பது தொடங்குகின்றது. "போராட்டம் மாணவர்களின் தன்னெழுச்சியாகவே அமைந்தது" என்று சோதிலிங்கம் மூலம் சொல்ல வைக்கின்றார். இதைத்தான் தேசம்நெற்றில் நாவலன் சொல்ல வைக்கின்றார். இப்படி தன்னியல்பானதாக சொல்வதில் உள்ள அக்கறை, அரசியல் ரீதியானது. ஆம் அந்த அரசியலை மறுப்பதாகும்.

அன்று முன் கூட்டியே உருவாகியிருந்த அமைப்புக் குழுதான், அரசியல் ரீதியாக  போராட்டத்தை முன்னெடுத்தது. எந்தக் கோரிக்கையும், மாணவர்கள் தன்னெழுச்சியாக முன்வைத்தவையல்ல. அவை முன்னேறிய அரசியல் பிரிவால், அமைப்புக்குழுவுடன் இணைந்து  முன்வைக்கப்பட்டது. இந்த போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்குழு உருவாக  காரணமாக இருந்த புலிகளின் ராக்கிங் வன்முறைக்கு எதிரான போராட்டம் தான் தன்னெழுச்சி வகைப்பட்டது. இதன் கோசம் உட்பட அனைத்தும் அப்படித்தான் இருந்தது. அதை மாற்றி ஒழுங்குபடுத்தவே தான், அமைப்புக்குழு உருவானது. அந்தப் போராட்டம் தன்னெழுச்சியான கோரிக்கையை அகற்றி, அரசியல் ரீதியாக நெறிப்படுத்தி போராட்டம் முன்னேறிய பிரிவால் வழிநடத்தப்பட்டது. அந்த அமைப்புக்குழுவை உருவாக்கியதே, முன்னேறிய பிரிவுதான். அமைப்புக்குழு தன்னெழுச்சியாக தானாக உருவாகவில்லை. இதுவெல்லாம் நடந்து முடிந்த இரண்டு மாதத்தில், விஜிதரன் போராட்டம் நடந்தது. போராட்டம் முன்பு போல் தன்னெழுச்சியாக நடக்கவில்லை. தன்னெழுச்சியாக கோசங்கள் முன்வைக்கப்படவில்லை. முன்னேறிய அரசியல் பிரிவால் நடத்தப்பட்டது. இதை மறுப்பது, 1917ம் லெனின் தலைமையிலான புரட்சியை எந்த கட்சியுமில்லாத திரோஸ்கியே நடத்தியதாக கூறுகின்ற அதே புரட்டுப் போன்றது. புரட்சிகர சூழலை லெனினின் கட்சி தயாரித்து வந்ததை மறுத்து, சோவியத் நடத்தியதாக காட்டுகின்ற அரசியல் புரட்டு போன்றது.

இங்கு மற்றொரு புரட்டைப் பாருங்கள். சோதிலிங்கம் கூறுகின்றார் ".. பின்னதாகக் கிராமிய உழைப்பாளர் சங்கத்தில் எம்மோடு இணைந்து கிராமிய மட்டங்களில் வேலைசெய்தார்." என்கின்றார். ஆக இங்கு "எம்மோடு" இணைந்து என்கின்றார். சோதிலிங்கம் அப்படி, விமலேஸ்சுடன் கிராமத்தில் வேலை செய்தது கிடையாது. இதுவொரு அரசியல் பித்தலாட்டம். இங்கு "எம்மோடு" என்று ஓட்டிக்கொள்வது, சோதிலிங்கத்தின் பெயரில் நாவலனின் மற்றொரு புரட்டுத்தான். விமலேஸ்சின் அரசியலை மறுத்து எம் அரசியலை மறுக்க, கையாண்ட அரசியல் பித்தலாட்டங்கள் இவை.             

தொடரும்

பி.இரயாகரன்
20.07.2010

9. புளட்டுக்கு எதிராக போராடி விலகிய மாணவர்கள் தான், போராட்டத்தின் முன்னோடிகள் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 09)

8. "தன்னெழுச்சியானது" என்று திரித்து சாமியாடும் பித்தலாட்ட அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 08)

7. சமூக மாற்றத்தைக் கோராமல் சமூகத்தை திரிக்கும் பம்மாத்து அரசியல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 07)     

6. போராடினால் மரணம், இதுதான் புலியின் மொழியாக நாம் தொடர்ந்து போராடினோம்; (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 06)

5. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 5)

4. ராக்கிங்கை அரசியல் ரீதியாக கைவிடுவதை தடுக்க, புலிகள் ஏவிய வன்முறை (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 4)

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)