Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

புளட் இயக்கம் பல்கலைக்கழகத்தில் நுழைந்தது விஞ்ஞானபீடத்தின் வாயிலாகத்தான். ஆனால் புளட்டிடம் அப்போது தனியான மாணவர் அமைப்பு இருக்கவில்லை. விஞ்ஞானபீடத்திலிருந்து உள்வாங்கப்பட்ட மாணவர்களும் இடம்பெயர்ந்த மாணவர்களும் புளட்டின் மக்கள் அமைப்பில் தங்களை இயங்குசக்தியாக்கிக் கொண்டார்கள். இவர்களுக்கு பலசுற்றுப் பாசறை வகுப்புகள் நடாத்தப்பட்டு அவர்கள் கிராமங்களில் மக்கள் அமைப்புக்களை உருவாக்கும் அரசியல்பணியில் பிரச்சாரப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.

பெரும்பான்மையான முதற்கட்ட பாசறைவகுப்புகள் தோழர் தங்கராசாவினால் கொக்குவில் பிரதேசத்தில் நடாத்தப்பட்டன. தோழர் தங்கராசா ஜே.வி.பி யிலிருந்து பிரிந்து வந்த இடதுசாரியாக அறிமுகப்படுத்தப்பட்டார். புளட் மீதான பார்வையை மலையகத்தைச் சேர்ந்த இவரது ஈடுபாடு அன்று மேம்படுத்திக் காட்டியது. கொக்குவில் பாசறைக்கு முன்னதாக எந்தப் பாசறைகளும் யாழ் பிரதேச அமைப்புக்கமிட்டி என்றளவில் நடாத்தப்படவில்லை என்பதாகவே படுகின்றது. இந்த வகையில் மக்கள் அமைப்புருவாக்கத்திற்காக இயங்கிய பல்கலைக்கழக மாணவர்களைக் கொண்டே சாகும்வரை உண்ணாவிரதமிருந்தவர்களை (மதிவதனி உட்பட) கடத்துவதை முறியடிக்கும் முயற்சியில் புளட் இயக்கம் முதன்முதல் பல்கலைக்கழகத்தில் தனது நடவடிக்கையை நடாத்தியிருந்தது.

மற்றும்படி பல்கலைக்கழகத்திலோ பாடசாலை மாணவர்களிடையோ மாணவர் அமைப்பு அன்று தோன்றியிருக்கவில்லை. இங்கு எஸ்.எம் ஒரு பல்கலைக்கழக மாணவனாய் புளட் இயக்கத்தினை பல்கலைக்கழகத்திற்குள் அறிமுகப்படுத்தியிருந்தாலும் மருத்துவபீட மாணவன் லவன், விஞ்ஞானபீட மாணவர்களான சத்தியமூர்த்தி, விமல்ராஜ் போன்றோர் இலங்கை இராணுவத்தால் சிறைப்படுத்தப்பட்டபோது புளட்டின் மாணவர் அமைப்பு அன்று உருவாகியிருக்கவில்லை. தமிழீழ மாணவர் பேரவை உருவாக்கம் பெற்றபோது அது பல்கலைக்கழகத்தினுள் கலைப்பீட மாணவர்களை அதிகளவில் தனது உறுப்பினராக பெற்றுக்கொண்டது. மக்கள் அமைப்பில் முன்னர் இணைந்திருந்த விஞ்ஞானபீட மாணவர்கள் பலர் புளட்டின் உள்முரண்பாடுகளையும் மக்கள் விரோத நடவடிக்கைகளையும் கண்டு ஓதுங்கியிருக்க தலைப்பட்ட வேளை புளட்டின் மாணவர் அமைப்பு கலைப்பீடத்தில் பெரும் வளர்ச்சியைக் கண்டிருந்தது. இவை யாவும் சுழிபுரம் மற்றும் செல்வன் அகிலன் படுகொலைகளுக்கு முந்தைய காலப்பகுதிகள் ஆகும். ஆனால் மாணவர் அமைப்பு ஒரு தீர்மானகரமான சக்தியாக வளர்ந்து வந்தது. பின்னாட்களில் புளட்டினது அரசியல் போக்குகளுக்கும் அராஜகத்துக்கும் எதிரான சக்திகளால் அது நிறைந்திருந்தது. இந்த வகையில் ரெசோ புளட்டின் அராஜகத்திற்கெதிராக தன்னை பிற்காலத்தில் நிலைநிறுத்தக் கூடியதாயிருந்தது.

இந்தக் காலகட்டத்திலேயே விமலேஸ்வரன் தன்னை ரெசோ மாணவர் அமைப்பில் இணைத்துக் கொண்டு இயக்க அரசியலுக்குள் உள்நுழைந்தான். புளட்டினது படுகொலைகள் அதனது அரசியல் புரட்டுக்கள் மக்கள் விரோதப் போக்குகள் ரெசோவினால் கேள்விகளால் துளைக்கப்படும் காலகட்டத்தில் சுழிபுரம் படுகொலைகள் மக்களை உலுக்கியபோது ரெசோ அமைப்பிலிருந்து விமலேஸ்வரன் வெளியேறினாலும் தனது சக தோழர்களுடனான தொடர்புகளைக் கைவிடாது பேணி விவாதங்களையும் அரசியல் நடப்புகளையும் தொடர்ச்சியாக அவதானித்தவண்ணம் இருந்தான். புளட் அமைப்பினுள் இருந்தமையால் ஏற்பட்ட தோழமையை விமலேஸ்வரன் என்னுடன் தொடர்ச்சியாகப் பேணி வந்தான்.

நாங்கள் சிலர் ரெசோ சார்பில் விடாப்பிடியாக பின்தளம் சென்று நிலவரங்களை அறிந்து வந்ததன் பின்னால் விமலேஸ்வரன் என்னைச் சந்தித்த வேளை தன்னை ரெசோவிலிருந்தும் புளட்டிலிருந்தும் விடுவித்து வெளியேறிய முடிபு சரியானது தான் என்பதை அவன் திடப்படுத்திக் கொண்டான்.

இதற்கிடையில் புலிகள் ரெலோ இயக்கத்தினரை அழித்து யாழ் தெருவெங்கும் பயங்கரம் விளைவிக்கின்றார்கள். உடல்கள் தெருக்களில் ரயர் போட்டு தீக்கிரையாக்கப்படுகிறது. அவர்களின் அட்டகாசமான போக்குகள் கட்டுக்கடங்காதிருந்தது. தமக்கு எதிராக எவரும் இன எவரும் எதிர்ப்படார் என்ற போக்கிலேயே அவர்கள் நடந்து கொண்டார்கள்.

விஜிதரன் என்ற பல்கலைக்கழக கலைப்பீட மாணவன் ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டிய மாணவர் அமைப்பினுள் இருந்தமையால் கடத்தப்பட்டுக் காணாமல் போகின்றார். கேசவன் என்ற மருத்துவபீட மாணவன் தாக்கப்படுகின்றான். விஜிதரனின் தாயும் தந்தையும் மட்டக்களப்பில் இருந்து பயணம் பண்ணி பல்கலைக்கழக மாணவர்கள் எல்லோரும் விசேடமாகக் கூட்டப்பட்டிருந்த கூட்டத்தில் இருகரம் கூப்பி கண்ணீர் மல்க தமது மகனை விடுவித்து தருமாறு கோருகிறார்கள். அந்தப் பெற்றோர்கள் மட்டுமல்ல இதே போல் எத்தனையோ பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை இயக்க அராஜகவாதிகளிடம் இழந்திருக்கிறார்கள். அத்தனைக்கும் எதிராக மக்களை அணிதிரட்டும் பணியில் மானுட விடுதலையில் மாணவர் ஒரு படையாக வேண்டும் என்பது மாணவர்களாயிருந்த போராளிகளுக்கு புரிகின்றது.

இம் மாணவப் போராளிகள் தமது சக மாணவனுக்கான போராட்டத்தை மட்டுமல்லாது மக்கள் மேல் இழைக்கப்படும் இவ்வாறான அனைத்துப் போக்குகளுக்கும் எதிராக போராடவும் இப்போக்குகளுக்கு முடிபு வைக்கும்படியும் எல்லா இயக்கங்களையும் நோக்கி கோரிக்கை வைத்து சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தெரிவு செய்கிறார்கள். தனது முன்னைய இயக்கத்தின் அராஜகத்தையும் அப்போக்குகளையும் எதிர்த்து நின்ற விமலேஸ்வரன் இங்கும் இந்த சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொள்கிறான். விமலேஸ்வரனை சாகும்வரை உண்ணாவிரதிகளில் ஒருவராக நான் தரிசிக்கின்றேன். புளட்டிலிருந்து ஒதுங்கியிருந்த நான் அப்போது வெறும் பார்வையாளனாகவே இருந்தேன். விமலேஸ்வரன் உண்ணாவிரதிகளில் ஒரு போராளியாக உரையாற்றிய போது நான் ஒரு உதிரியாக அந்த மேடைப் பேச்சை முன்னிருந்து செவி மடுக்க மட்டும் தான் முடிந்தது. தளராத தனது போராட்டத்தை தனது உரை மூலம் வெளிப்படுத்திய விமலேஸ்வரனை மீண்டும் நான் சந்திக்க இரண்டு வருடமாயிற்று.

உண்ணாவிரதப் போராட்டம் முடிபுக்கு வந்ததன் பின்னால் ஈ.பி.ஆர்.எல்எவ் வின் மீது புலிகளின் பாய்ச்சல் ஆரம்பித்தது. அதையடுத்து புளட் தனது இயக்க நடவடிக்கைகளை தானே நிறுத்திக் கொள்வதாக உள்ளீடாக அறிவிக்கின்றது. யாழ் குடாவெங்கும் புலிகளின் முழுக்கட்டுப்பாட்டில் வருகின்றது.

இந்திய இராணுவம் இலங்கையினுள் சமாதான படையாக நுழைகின்றது.

ரெசோவின் குருபரன், கவிராஜ் (சிவக்குமார்) புலிகளால் கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்படுகிறார்கள். குருபரன் சில வாரங்களின் பின்னும் கவிராஜ் பல மாதங்களின் பின்னும் விடுதலை செய்யப்படுகிறார்கள். வசந்தன் 1987 ம் ஆண்டு யூலை மாதம் 18ம் திகதி சனிக்கிழமையன்று விடுதலை செய்யப்படுகின்றான். இரயாகரன் இதற்கு முதல்நாள் தப்பித்து வந்தது காது வழிச் செய்தியாக எனக்கு எட்டுகிறது.

நான் உதிரியாகவிருந்து பல்கலைக்கழகத்தில் ஆய்வுகூட போதனாசிரியராக கடமையாற்றிய வேளை எனக்கு மறைமுகமான எச்சரிக்கைகள் கிடைக்கப் பெறுகின்றன. இந்திய இராணுவத்துடன் பேச்சுவார்த்தைக்கென அழைக்கப்பட்டு செல்லும் வழியில் இந்திய இராணுவத்தால் சுடப்பட்டு இறந்த ஜொனி என்ற புலி உறுப்பினரால் எனது அரசியல் ஈடுபாடு பற்றியும் செயல்பாடுகள் பற்றியும் விசாரிக்கப்பட்டதாகவும் யாழ் பல்கலைக்கழகம் ஏற்கனவே குழம்பிப்போயிருக்கும் நிலையில் இன்னுமொரு கைது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் ஜொனியினால் வாதிடப்பட்டதாக ஜொனிக்கு நெருங்கியவர்களால் எனக்கு வேண்டுமென்றே தெரிவிக்கபட்டதாய் நான் உணர்ந்தேன்.

இக் கால கட்டத்தில் இந்திய இராணுவத்துடனான மோதல் ஆரம்பமாகியது. நானும் எனது மனைவியின் குடும்பமும் போரின் அகோரத்திலிருந்து இடம்பெயர்ந்து வன்னிக்கு சைக்கிளில் பயணமாகி வன்னேரிக்குளத்தில் அகதியானோம். போகும் வழியில் உழவுஇயந்திரம் ஒன்றில் பூநகரியைக் கடந்து காட்டுவழியில் நாங்கள் கிளிநொச்சி நோக்கி வந்து கொண்டிருந்தோம்.

விஜிதரனின் பேராட்டத்துக்குப் பின்னால் புலிகளால் கொலைப்பட்டியலில் சேர்க்கப்பட்டு தலைமறைவாகியிருந்தான் விமலேஸ்வரன். இந்திய இராணுவத்தின் போர் ஆரம்பித்த பின்னால் தன்னுடைய தலைமறைவுக்கு அவன் தனது ஊரான பூநகரியை தெரிவு செய்திருக்க வேண்டும். நாங்கள் அகதிகளாக அவ்வழியால் பூநகரி காட்டுவழி கிளிநொச்சி சென்றபோது அவ்வழியால் வந்த விமலேஸ்வரன் பின்னர் எங்களை கண்டதாக செய்தியனுப்பியிருந்தான். இந்தக் காலம் விமலேஸ்வரன் தலைமறைவு வாழ்க்கைக் காலம். தனது தோற்றத்தை மாற்றியிருந்ததால் எம்மால் அவனை வழியில் அடையாளம் காணமுடியவில்லை. தனது தோற்றத்தையே மாற்றி தனது தலைமறைவு வாழ்வை எச்சரிக்கையாக வாழ்ந்த விமலேஸ்வரன் ஏன் தான் யாழ்ப்பாணம் பின்னர் திரும்பி வந்தபோது அவ் எச்சரிக்கை உணர்வில் அலட்சியமானான் என்பது கேள்வியாகவேயுள்ளது.

இந்திய இராணுவத்தின் போர் யாழ் குடாநாட்டை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னால் அதன் உக்கிரம் சிறிது தணிந்திருந்தது. மீண்டும் நாங்கள் சுன்னாகம் திரும்பி வந்தோம். நாட்கள் கடந்தன.

எனது தற்காலிக நியமனம் பல்கலைக்கழகத்தில் முடிவுறும் தறுவாயில் நான் வெளிநாடு செல்வதற்கான தயாரிப்பில் இருந்தேன். ஆங்கில தகுதிப் பரீட்சை எழுதுவதற்காக கொழும்பிற்கு நான் எனது மனைவியுடன் பயணமானேன். கொழும்பில் மீண்டும் ஆனந்தன் என்ற தற்காலிக புனைபெயரோடு தனது தங்குமிட விலாசத்தை தந்து தன்னை வந்து சந்திக்கும்படி விமலேஸ்வரனின் கேட்டதற்கிணங்க நான் அங்கு தேடிச் சென்றபோது அங்கு ஒரு கடையில் நாள் கூலிக்கு கணக்கெழுதி தனது சம்பாத்தியத்தில் அக்கடையில் ஒரு மூலையில் படுத்து தூங்கி வாழ்ந்து கொண்டிருந்தான்.

இச் சந்திப்பின் போது அவன் தனது தனிப்பட்ட காதல் தொடர்பாய் மனந்திறந்தான். தனது அப்போதைய காதலியை தான் நுவரெலியாவுக்கு சென்று சந்திக்க இருப்பதாகவும் என்னையும் எனது மனைவியையும் தன்னுடன் நுவரெலியாவுக்கு வருமாறு அழைத்தான். தங்குமிடம் பற்றி யோசிக்க வேண்டாமெனவும் தான் அதற்கு ஒழுங்கு செய்வதாகவும் சொன்னபடியால் நாங்களும் முதன்முதலாக மலையகம் நோக்கி அவனுடன் கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி பஸ்சில் பயணித்தோம். பஸ்சில் செல்லும்போது தனது காதலியை ஏன் அவசரமாக சந்திக்க வேண்டும் என்பதற்கான சூழலை சொன்னான்.

தனது அரசியல் ஈடுபாட்டைக் கைவிடும்படியும் குறிப்பிட்ட நிகழ்வுகள், சடங்குகள் கொண்ட ( தாலி கட்டுதல் போன்ற) முறையிலேயே திருமணம் நடக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்புகளையும் அவள் கொண்டிருப்பதால் தான் நேரில் சென்று பேசுவதே சரியென்பதால் தான் இப்பயணம் என்று கூறினான்.

குறிப்பிட்ட தேதியில் அவர்கள் சந்தித்துக் கொண்டார்கள். ஆனால் முடிபு நிரந்தரப் பிரிவு என்றாகியிருந்தது. இம்முடிபு பற்றி பின்னர் விமலேஸ் எப்போதும் பிரஸ்தாபிக்கவில்லை. தனது அரசியல்வழியில் தான் ஏற்றுக் கொண்டவற்றுக்கு மாறாக தன்னை இழக்கவிரும்பாத அந்தக் கம்பீரமான தனது வாழ்க்கைத்துணை பற்றிய முடிபை விமலேஸ் இல்லாத வேளையில் எங்களுக்குள் பின்னர் நாங்கள் பலமுறை பேசிக் கொண்டோம். இப் பயணத்தின் போது நாங்களும் விமலேஸ்வரனும் பூண்டுலோயாவில் தங்கியிருந்தோம். அங்கு நாங்கள் தங்கியிருந்த வேளை விமலேஸ்வரனுக்கு குளிர்காய்ச்சல் ஏற்பட்டது.

இரவு முழுவதும் நடுங்கியபடி தூக்கமின்றியிருந்த விமலேஸ்வரன் மறுநாள் காலை மிகவும் பலவீனமாகியிருந்தான். எனது மனைவிக்கும் காய்ச்சல் காலையில் ஏற்பட்டதால் வைத்தியரிடம் விமலேஸையும் வருமாறு கேட்டு அவன் மறுத்ததால் நாங்கள் மட்டுமே சென்றோம். திரும்பி வந்தபோது விமலேஸ் உடுப்புகளைத் தோய்த்துக் கொண்டிருந்தான். அந்த உடுப்புகள் எவையும் அவனது அல்ல. எனது உள்ளாடை முதல் சாரம் போன்றவற்றை தோய்த்துப் பிழிந்து காயவிட்டுக் கொண்டிருந்தான். எங்களுடைய நேரத்தை மிச்சமாக்கி தருவதற்காக தான் சிரமம் எடுத்துக் கொண்ட அவனது பண்பு அவனது தோழமையை பறைசாற்றி நின்றது.

திரும்பி வரும் வழியில் தனது மனதிலுள்ள இன்னொரு உள்ளக்கிடக்கையையும் அவன் வெளிப்படுத்தினான். தனக்கு வாழ்க்கைத் துணையாக தான் தீர்மானிக்கக் கூடிய நிலையில் இருக்கும் தனது முன்னாள் தோழி பற்றி அவன் பிரஸ்தாபித்தான். ஆனால் அந்தக் காதல் அவன் கொலையுண்டு வீழ்ந்ததோடு அவனோடு புதையுண்டு போனது.

இந்தச் சந்திப்பின் பின்னால் கொழும்பில் வைத்து நான் அவனிடம் விடைபெற்று யாழ்ப்பாணம் திரும்பியிருந்தேன்.

ஒருநாள் பல்கலைக்கழகத்திலிருந்து நான் வீடு நோக்கி புறப்பட்ட சிறிது தூரத்தில் எதிரே விமலேஸ்வரனை நான் சந்தித்தபோது எனக்கு விமலேஸின் அந்த வெளிப்படையான நடமாட்டத்தை எச்சரிக்கவே வாய் திறந்தது. தலைமறைவாக வாழ்ந்த நீ எந்த உத்தரவாதத்தில் இவ்வாறு பாதுகாப்பற்ற சூழலில் தன்னந்தனியாக சைக்கிளில் தெருக்களில் நடமாடுகிறாய் என்றபோது தனக்கு புலிகளால் எந்த ஆபத்தும் ஏற்படாது என்று தெரியப்படுத்தப்பட்டதாலேயே தான் வெளிவந்ததாகவும் எனினும் தான் பரீட்சைக்கு தோற்றுவதற்கு தன்னுடைய பாடக்குறிப்புக்களை இன்னொருவரிடமிருந்து பெற்றுச் செல்வதற்காகவே வந்தததாகவும் சொன்னான். எந்தச் சூழலிலும் இவ்வாறான நடமாட்டங்களை தவிர்த்துக் கொள்ளும்படி நான் அவனை வேண்டி விடைபெற்ற பின்னால் மீண்டும் அவனைச் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிட்டவேயில்லை.

இந்தச் சந்திப்புக்குப் பின்னாலும் இரண்டு தடவை என்னை எனது மனைவியின் வீட்டில் சந்திக்க அவன் வந்திருந்தவேளை நான் அங்கிருக்கவில்லை. கடைசியாய் என்னைக் காணவந்தபோது சற்று அதிகநேரம் அங்கிருந்ததாகவும் பொழுது சாய்ந்த பின்னரே சென்றதாகவும் நான் கேள்விப்பட்டேன்.

இன்னொரு மாலைவேளை நான் வீடு திரும்பிவந்த வேளை எனது மனைவியின் ஓவென்ற கதறல் தான் என்னை வரவேற்றது. தேற்றி விசாரித்தறிந்ததில் விமலேஸ்வரன் வீதியில் சுடப்பட்டு இறந்தான் என்ற செய்தி காதில் பேரிடியாய் இறங்கியது. விமலேஸ்வரனின் உறவினர்கள் அயலிலேயே இருந்ததால் செய்தி இங்கும் எட்டியிருந்தது.

மாலைவேளை நான் எனது மற்றைய நண்பர்களை தேடி ஓடியபோது எவரும் நெருங்கமுடியாதபடி விமலேஸ்வரனின் உடல் வீழ்த்தப்பட்ட இடத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு பூநகரிக்கு எடுத்துச் செல்லப்பட்டது என அவர்கள் அறிவிக்கிறார்கள். இனியென்ன என்றவாறாய் வீடு திரும்புகிறேன்.

பூநகரியில் நடந்த மரணவீட்டிலும் கழுகுக் கண்கள் கண்காணிப்பில் ஈடுபட்டதாய் பின்னர் தகவல் கிடைத்தது.

- சிறி

http://www.ndpfront.com/?p=8198