வழக்கமாக பீஃப் சாப்பிடும் பாய் கடையில் நல்ல சுவையான மாட்டு வறுவலை நண்பர்களோடு சாப்பிட்டு கொண்டிருந்தேன். அப்போது பெரியார் தி.க. தோழர் ஒருவர் “ஏனுங் ராவணன் படம் பாத்திங்ளா படம் “நமக்கு’ ஆதரவாக இருக்கிறது ,மணிரத்தனம் பரவாலிங் நல்ல ஆளாட்டந்தான் தெரியுதுங்” என்றார். ராவணன் என்ற டைட்டிலை வைத்து அதுவும் மணிரத்னம் எடுத்து இருக்கிறார் என்றால் கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்று ஒரு ஐடியா இருந்தது. ஏனென்றால் மணிரத்னம் ரோஜா படத்திலேயே தான் யார் என்பதை காட்டியவர் அடுத்தடுத்து வந்த பம்பாய் உட்பட அவரது படங்களும் அவர் யாருடைய பிரதிநிதி என்பதை நிருபித்தன. ஆனால் வேலைப்பளு அதிகமாக இருப்பதால் இராவணனை பார்ப்பது தடைபட்டுக் கொண்டே இருந்தது. ஒரு வழியாய் மணிரத்ணத்தின் ராவணனை பார்த்தேன்.

******************

திருடனாக இருந்த வால்மீகி எழுதிய இராமாயணத்தை காலத்திற்கேற்றார் போல் புதுசு பண்ணி வெளியிட்டிருக்கிறார் மணிரத்னம். சரி அன்று திருடனாயிருந்த வால்மீகி ஏன் இரமாயணம் எழுதினான்? என்று தெரியவேண்டுமென்றால் நமக்கு புஷ்யமித்திர சுங்கன் என்கிற பார்ப்பன அரசனை பற்றி தெரியவேண்டும். அதேபோல் மணிரத்னம் ஏன் இரமாயணத்தை புதியதாக ராவணன் என்று ஏன் வெளியிட வேண்டுமென்றால் நாம் புஷ்யமித்திரனின் வாரிசுகளை இனங்காண வேண்டும். சரி படத்திற்குள் கொஞ்சம் போய் பார்ப்போம்.


 

வீரா என்ற பெயரில் ராவணனனையும். தேவ் என்ற பெயரில் இராமனையும். ராகிணியாக சீத்தா தேவியையும் புதுசு பண்ணியிருக்கிறார்கள். மற்றபடி கார்த்திக்கை குரங்காகவும் வையாபுரி ஐயரை அலியாகவும் காட்டியிருக்கிறார்கள். அது தேவையில்லாத் மேட்டராக இருப்பதால் அவர்களை விட்டு விட்டு கதைக்கு தொடருவோம். ராவணன் ஒரு பழங்குடி இனத்தை சேர்ந்தவன் போலிசால் தேடப்படும் குற்றவாளி அவன் அரசுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள்

ராவணன் ஏன் கலகம் செய்கிறான்?

ராவணன் குழுவாக இயங்குவது போல காட்டியிருக்கிறார்கள். சரி அவன் எதற்காக குழுவாக இயங்குகிறான்? அந்த குழுவின் நோக்கம் என்ன? அது போராட்டக் குழுவா? அல்லது கூலிப்படையா? என்று கேள்விகள் கேட்டால் அதற்கான பதில் அங்கு இல்லை. மொத்தத்துல ராவணன் அரசுக்கு எதிரானவன் என்று குழப்புகிறார் மணி. குழப்புபவர் குழம்பி போயிருப்பதாக கருத்க்கூடாது அவர் தெளிவாகத்தான் இருக்கிறார் நம்மதான் தெளிவாக குழப்புகிறார். ராமாயணத்தில் கூட ராவணன் இலங்கையை ஆண்ட அரசன் என்ற செய்திகள் இருக்கும் ஆனால் ராவணனில் அப்படி விவரங்களை காணமுடியவில்லை ஏன்? இராமயணத்தை நவீன படுத்திய மணி ராவணனன் எதற்காக போராடுகிறான் என்பதை நவீன படுத்தாமல் பொத்தாம் பொதுவாக அரசாங்கத்துக்கெதிராக செயல்படுவான் அவ்ளவுதான் என்றளவோடு முடித்துக்கொண்டது ஏன்?

ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் இருக்கும் கானகப் பகுதியை காட்டுகிறார்கள் அரசின் வளர்ச்சி திட்டங்களான கல்வி உட்பட் பிற வசதிகள் இல்லாத இடத்தில் ராவணன் அரக்கெதிராக கலகம் செய்கிறான் என்றால் அது வாழ்வாதார பிரச்சனயைல்லவா? அல்லது விடுதலைப்போர் அல்லவா? அப்படி காட்டினால் என்னாகும் படம் பார்ப்பவர்களுக்கு இந்திய அரசின் காட்டுவேட்டையல்லவா நினைவு வரும் அப்படி காட்டாமல் இருக்க ராவணன் ஒரு காட்டான், பழங்குடியினத்தை சார்ந்தவன் அவன் தேவையில்லாமல் பிரச்சனைகளை வலிய செய்து கொண்டிருந்ததால் அரசு ராமனை (அதுவும் என் கவுன்டர் ஸ்பெலிஸ்ட்) அனுப்புகிறது. அவனுடைய பணி கிளர்ச்சியை ஒடுக்குவது மட்டுமே அதன் கண்ணியான ராவணனை ஒழிக்க முயல்கிறான், அதன் ஒருகட்டமாக ராவணனின் தங்கை சூர்ப்பநகை திருமணத்திற்கு சென்று என்கவுன்டர் செய்ய முயலுகிறான் குண்டு ராவணனின் தொண்டையில்பட்டு தப்பிக்கிறான். இதற்கிடையே சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போலிசு (இங்கு ராமன் எஸ்கேப்) பாலியல் வன்முறையை ஏவி கொடுமைபடுத்துகிறது. பிறகு சூர்ப்பநகை கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்கிறார்.

இதன் மூலம் மணி சொல்லுவது என்ன? ராவணனின் வீண் வம்பு சண்டையால்தான் அவன் குடும்பத்துக்கும் பிரச்சனை, போலிசு சூர்ப்பநகையை மட்டும் கடத்தி செல்வதாக காட்டுவதே கேப்மாரித்தனம். போலிசு இருக்கும் பெண்களையயல்லாம் கடத்தி கொண்டு பாலியல் வன்புணர்ச்சி செய்து சித்திரவதை செய்வது என்பது வீரப்பன் பிரச்சனை உட்பட நாம் பார்க்கும் உண்மை. இதை மறைத்து ஒரு தனிப்பட்ட குடும்பத்திற்கும் போலிசுக்கும் இடையேயான பிரச்சனையாக காட்டி உண்மையை மறைக்கிறார் மணி, அரசுக்கும் பழங்குடியின மக்களுக்கும் இடையேயானவை தனிப்பட்ட பிரச்சனையாக என்றும் இருந்ததில்லை, அது அடிப்படையில் மக்களின் விடுதலை போராட்டமாகவே இருந்திருக்கிறது இதை குடும்ப பிரச்சனையாக சுருக்கி தான் யாருடைய பிரதிநிதி என்பதை காட்டியிருக்கிறார்.

நல்லவனுக்குள் கெட்டவன், கெட்டவனுக்குள் நல்லவன்.


 


எஸ்.பியாக வரும் ராமன் நல்லவன் கடவுளை போன்றவன் என்று சீத்தா காட்டில் புகழ்கிறாள் அப்படி பட்ட நல்லவன் ஏன் ராவணனை கொலை செய்கிறான் என்றால் அவன் சூழல் அப்படி என்பதை அவனுடைய பதவி, அரசின் பிரதிநிதி என்பதை தெளிவாக விளக்கும் மணி. சூர்ப்பநகையை கடத்தி செல்லும்போது ராமனை எஸ்கேப் ஆக்கிவிடுகிறார். முப்பது போலீசு குண்டர்கள் சூர்ப்பநகையை வன்புணர்ச்சி செய்யும்போது குழுவின் பொறுப்பாளனான ராமன் எங்கே என்றால் அவன் அப்போது மணிரத்தினத்தின் குடுமியில் மறைந்து கொள்கிறான். ராமனை எஸ்கேப் ஆக்கியதன் மூலம் ராமனின் புனிதன்மையையும் கடைநிலை போலிசு மட்டும்தான் பாலியல் வன்புணர்ச்சி செய்வான் அதிகாரிங்க எல்லாம் ரொம்ப டீசண்டு என்கிற கடைந்தெடுத்த பொய்யையும் பாதுகாக்கிறார். ராமன் நல்லவன் அவன் தன் கடமையை செய்கிறான் அவன் நல்லவனுக்குள் கெட்டவன்

ராவணன் ஏன் கிளர்ச்சியாளனாக இருக்கிறான்? அதற்கான அவனுடைய சூழ்நிலை என்ன? என்பதை காட்டாமல் ராவணன் பழங்குடியினத்தை சேர்ந்தவன், அவன் சாதி இயல்பே அப்படித்தான் என்று தனது பார்ப்பன குருரத்தை காட்டுகிறார் மணி. குரங்காக வரும் கார்த்திக்குடன் ராமன் பழங்குடியின மக்களிடம் ராவணன் எப்படி பட்டவன் என்று கேட்கும்போது ”நல்லவன்தான் ஆனா தேவையில்லாம வம்புக்கு போகும்” குடி கூத்தியானு எல்லா பழக்கமும் இருக்கு” ”சிரிக்க சிரிக்க பேசும்’ என்று பலரும் சொல்லுவது போல்காட்டியிருக்கிறார்கள். ராவணன் கெட்டவனுக்குள் நல்லவன்

தூது செல்லும் குரங்கு கார்த்திக் ராவணனிடம் நான் அவிங்க (ராமன்)ஆளுதான் ஆனா என் ஓட்டு உனக்குத்தான் ஏனா உனக்காக எவ்வளவு பேரு இருக்காங்க பாரு என்கிறான்.

இப்படி காட்சி வைத்திருக்கும் மணி, நெல்லிக்காயும், வெங்காயமும் தின்று வாழும் மக்கள் ஏன் ராவணனுக்காக உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள்? ”சிரிக்க சிரிக்க பேசும்’

ராவணனின் குணத்திற்காகத்தான் உயிரையும் கொடுக்க தயாரயிருக்கிறார்கள் என்று நாம் சொன்னால் குச்சி ஐஸ் திங்கற பாப்பா கூட வேலைய பார்டா என்று சொல்லிவிடும்.

சீத்தா தேவியும், கொச்சை படுத்தபடும் பழங்குடியின தலைவனும்

சீதையை ரொம்ப நல்லவளாக காட்டியிருக்கிறார் மணி . வீரமான மேட்டுகுடி பெண்ணாககாட்டி தனது வர்க்க பாசத்தை கழிந்து வைத்திருக்கிறார் மணி. ஜெயமுண்டு பயமில்லை மனமே என்று மேட்டு குடி சீதை பாடும்போது நமக்கு வரும் சிரிப்பை அட்க்க முடியவில்லை. பஃப்பில் திரிவதும் அரை குறை ஆடைகளோடு ஆணாதிக்கத்தின் பெண் பிரதிநிதிகளாய் வரும் இவர்களின் வீரத்தை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். மேட்டுகுடி பெண்ணாக ஃபுல் மேக்அப்பில் வரும் சீதையை பார்த்து ராவணன் மனம் சஞ்சலப்படுகிறான்

இங்கயே இருந்திரு என்று சீதையிடம் கேட்கிறான் ஆனால் கை கூட படாமல் பார்த்துக் கொள்ளும் ராவணன் சீதையிடம் பொறாமையாக இருக்கிறது என்று கூறுகிறான் இறுதிக்காட்சியில் சீதை சொக்க தங்கம் என பிதற்றுகிறான் வாடுகிறான் . சொக்க தங்கம் என எதை வைத்து ராவணன் முடிவு செய்கிறான் அவளது குணநலன்களை வைத்தா என்று பார்த்தால் அப்படியும் காட்சிகள் இல்லை. சீதையின் முகத்தை ரசிப்பது போன்ற காட்சிகள் இருக்கின்றன. அதாவது ஒரு மேட்டுக்குடி பெண்ணின் அழகில் மயங்கிவிடுகிறான் ராவணன்.

அந்த அழகும் இளமையும் அவனை கலங்கடிக்க வைக்கிறது, அதற்காக தனது தங்கையின் மரணத்திற்கு காரணமான ராமனையும் மன்னித்து விடுகிறான் பிறகு சீதையை பார்த்து கொண்டே மகிழ்ச்சியாக நாயை போல் ராமனால் சுட்டு இறக்கிறான். ஆனால் சீதையோ ராவணனை பார்த்து சஞ்சலபடவுமில்லை மயங்கவுமில்லை அவனுள் நல்லவனை பார்க்கிறாள் அவனுக்காக இரக்கம் கொள்கிறாள். இதன் மூலம் மேட்டுக்குடி நாட்டிய பேரொளியை ஒழுக்கமானவளாகவும் , நியாயமான குணங்களை உடையவளாகவும் காட்டியிருக்கிறார் மணி ஆனால் ராவணன் மனதுக்குள் சீதையை நினைக்கும் அலைஞ்சானாக காட்டி ஒடுக்கபட்டவன் மேல் மேட்டுகுடி சீதைகள் இரக்கம் காட்டினால் ஒடுக்கப்பட்ட ராவணன்கள் மேய பார்ப்பார்கள் என அக்கிரகாரத்துக்கு மணி அடிக்கிறார் ரத்னம்.

அன்று ராமயணத்தில் தமிழர்களை குரங்காகவும். காட்டுமிராண்டிகளாகவும் காட்டி மகிழ்ச்சியடைந்தன பார்ப்பன கும்பல்

இன்று ஒடுக்கப்பட்ட ராவணனையும் அவனை சார்ந்தவர்களையும் காட்டுமிராண்டிகளாக காட்டியிருக்கிறது மணிரத்னம் பார்ப்பன கும்பல்.

இந்திய அரசின் காட்டு வேட்டை நடக்கும் சமயத்தில வந்திருக்கும் இப்படத்தில் மணிரத்னம் சொல்லுவது ‘அரசாங்கத்துகிட்ட வெச்சுக்காதீங்க போட்டு தள்ளிருவாங்க உங்களாள ஒண்ணும் பண்ண முடியாதுலே’ என்று பத்து தலை கொண்ட ராவணனை “எடுத்திருக்கிறார்.

உள்ளங்கை நெல்லிக்கனி

படத்தை பார்க்கும் நோக்கர்க்கு இப்படம் எப்படிப்பட்ட அலைகளை ஏற்படுத்தும்?

போலீசு மேல் கோபமும்,பழங்குடியின போராளிகள் மீது ஆதரவும் ஆர்வமும் ஏற்படுகின்றதா என்றால் அதுதான் இல்லை ! ராவணன் கதையில் சீதை ஏன் நாயகியாக இருக்க வேண்டும்? பொதுவாக கதையின் நாயகனாக தன்னை உணருவது அதனூடாக நாயகனின் கோபத்தையும், ஆசைகளையும் உணருவது பெரும்பான்மையான படம் பார்ப்பவர்களின் உணர்வு. இப்படம் அப்படி நாயகனாக நோக்கரை உணரவைக்கவில்லை. ஏனென்றால் கதையின்நாயகி வில்லனின் மனைவி. கதையின்நாயகி நாயகனுக்கு ஜோடியில்லை. எனவே நோக்கர்களுக்கு நாயகனின் உணர்வு வருவதில்லை. மாறாக அது அழகு சீதையின் ஜோடியும் வில்லனுமான ராமனாக தன்னை உணர செய்கிறது. (இல்லையயன்றால் எட்டி நின்று பார்க்க வைக்கிறது) இதன் மூலம் ராமனின் பீத்தல் பெருமையை பாதுகாத்த மணி, ராவணனை தீண்டத்தகாதவனாக காட்டி பழம்பார்ப்பன பெருமையை பாதுகாக்கிறார். ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாய் நடக்கும் ஆரியபார்ப்பன யுத்தத்தில், இது போன்ற எத்தனை மணிரத்னங்களை மனித சமுதாயம் கண்டிருக்கும் , அது சரி ஒரு வகையில் மணிரத்னம் இந்த கால வால்மீகி என்றால் வால்மீகி அந்த கால மணிரத்னம் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி அல்லவா !.சரி இப்போது புஷ்யமித்ர சுங்கனின் வாரிசுகள் யாரென்று புரிந்து கொண்டீர்கள் அல்லவா?

அறிமுகம்

இந்த திரைப்பட மதிப்புரையை எழுதியது தோழர் விடுதலை. விடுதலை எனும் பெயரில் ஒரு வலைத்தளம் நடத்திவருகிறார். அதில் அரசியல் விழிப்புணர்வுக்கான கருத்து படங்களை, ஆசான்களின் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

வலைத்தள முகவரி: http://vitudhalai.wordpress.com/
மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

 http://senkodi.wordpress.com/