தமிழ் மக்கள் பிச்சை கேட்பதாகவும், பிச்சை போடுவதுதான் தமிழ் மக்களின் அரசியல் என்கின்றனர். மகிந்த குடும்ப சர்வாதிகாரம் உருவாக்கியுள்ள பாசிசம், இன்று இதைத்தான் அரசியலாக வழிகாட்டுகின்றது. இதை உதவி, மனிதாபிமானம், தமிழரின் கடமை என்று எல்லாம் இதற்கு விதவிதமாக பெயர் சூட்டிக் கொள்கின்றனர்.

இந்த வகையில் வசதியானவன், தமிழ் மக்களுக்கு பிச்சை போடுவதையே இன்றைய அரசியலாக்க முனைகின்றனர். ஏகாதிபத்தியங்கள், ஏகாதிபத்திய தன்னார்வ நிறுவனங்கள், புலம்பெயர் தமிழன், புலம்பெயர் அரசியல் வியாபாரிகள், நடிகைகளும் நடிகர்களும், தமிழ்நாட்டை சூறையாடிய கருணாநிதி, இந்தியா என்று அனைவரும் இப்படி ஒரு குடையின் கீழ், தமிழ் மக்களுக்கு தாங்கள் உதவுவது பற்றி பேசுகின்றனர். தாங்கள் போடும் பிச்சை பற்றிய, ஒரு அரசியல் விம்பத்தை உருவாக்குகின்றனர். 

இதுதான் பேரினவாத மகிந்த குடும்பம் தீர்மானித்திருக்கின்ற, இன்றைய அரசியல் எல்லை. இதை யாரும் மீற முடியாது. நடிகை அசின் முதல் தேசம்நெற் வரை இந்த தண்டவாளத்தில் தான், சிரட்டை கட்டி நடந்து காட்டுகின்றனர்.

இதற்கு எதிரான குறுகிய எதிர் அரசியல் தேசியமாகிவிடுகின்றது. நடிகர் சங்கம் முதல் புலிகள் வரை, ஓட்டைச் சிரட்டையில் தண்ணீர் பிடித்து குடித்துக் காட்ட முனைகின்றனர்.

தமிழ் மக்களைக் கொன்று குவித்தவர்கள், அவர்களின் வாழ்வாதாரங்களை புடுங்கியவர்கள், அவர்களை அனாதைகளாக்கி பிச்சையெடுக்க வைத்தவர்கள், கூட்டாக நடத்துகின்ற அரசியல் நாடகங்கள் இவை. தமிழ் மக்களைக் கொல்ல, அவர்களின் வாழ்வாதாரங்களை அழிக்க, வெடிகுண்டுகளை வாங்கிய கும்பலிடம், மக்களை வாழவைக்க வக்கில்லை. அந்த மக்களின் நிலங்களை அபகரித்து, அதில் தங்கள் மாடமாளிகைகளை கட்டும் மகிந்த கும்பல், மக்களுக்கு கொடுக்க தங்களிடம் எதுவுமில்லை என்று கையை விரிக்கின்றது. பிச்சையை போடவைக்கின்றது. ஆம் இதுவும் கூட, திட்டமிட்ட இனவழிப்புதான்.

இப்படிப்பட்ட தங்கள் பாசிச முகத்தை மூடிமறைக்க, மக்களை ஏய்க்கும் கவர்ச்சி தேவைப்படுகின்றது. சமூகத்தில் பாலியல்  ஆபாசத்தை கலையாக விதைக்கும் நடிகைகள், நடிகர்கள் கொண்ட கும்பலை, மகிந்தவின் பாசிசம் விருந்து வைத்து அழைக்கின்றது. இதன் மூலம் பாலியல் கவர்ச்சியை முன்னிறுத்தி, மக்களை மந்தையாக மேய்க்க மகிந்த குடும்ப சர்வாதிகாரம் முனைப்பாகவே முனைகின்றது.

இப்படிப்பட்ட பாசிசத்தை குளிர்மைப்படுத்தும், நடிகை நடிகர்களின் சமூக அக்கறை என்ன? அவர்களுக்கு என்று ஒரு சமூக அக்கறைதான் உண்டா? அவர்கள் தங்களை மூடிமறைக்க சினிமா கவர்ச்சி மட்டும் போதாது, நிஜவாழ்வின் "மனிதாபிமானம்" என்ற புது வேசம் தேவைப்படுகின்றது. இதுதான் மகிந்தாவின் நிலையும் கூட. இரண்டு எதிர்மறைகள் கூட்டாக  சேர்ந்து, தங்களை நேராக்க முனைகின்றது.

பாலியலை அடிப்படையாக கொண்ட சினிமாக் கலையின் பெயரிலான ஆபாசம், எதார்த்த வாழ்வில் அவர்கள் அளவில் கூட போலியானது. எதார்த்தத்தில் கூட அவர்கள் நடிக்க வேண்டி ஏற்படுகின்றது. அவர்களின் படங்கள் முதல் அவர்கள் நிஜவாழ்வின் உண்மை வாழ்க்கை வரை, அனைத்தும் சமூகத்துக்கு எதிரானது. சமூகத்தை இழி நிலைக்கு இட்டுச்செல்வதுதான் அதன் நோக்கமாகும். இங்கு கவர்ச்சி அதன் எடுப்பான குறியீடு. இப்படியிருக்க பாசிசத்துக்கு தங்கள் கவர்ச்சி மூலம் துணை போவதை மூடிமறைக்கவும், மக்களை ஏமாற்றி கொள்ளையடிக்கும் தங்கள் கவர்ச்சி வாழ்க்கையை பாதுகாக்கவும், மக்களுக்கு பிச்சை போடுகின்றனர். இந்த பிச்சை மூலம், மூட்டை மூட்டையாக குவித்துவைத்துள்ள தங்கள் பணத்துக்கு, வரிச்சலுகையை பெறுவது வெளித் தெரியாத ஒரு பகற் கொள்ளை.

இது உதவி, மனிதாபிமானம் என்று, தங்கள் ஆபாசமான பகட்டு வாழ்வு மீது மூகமுடியை போட்டுக்கொள்ள அவர்களுக்கு உதவுகின்றது. மறுதளத்தில் தமிழ் என்று போலி வேசம் போட்டு குலைக்கும் கூட்டம், கடிக்கப் போவது போல் பாசாங்கு செய்கின்றது. இரண்டும் தமிழ்மக்களை ஏமாற்றி மொட்டை அடிக்கும் வேலையையே செய்கின்றனர்.  

இப்படி தமிழ் மக்களை பிச்சைக்காரராகவே தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் அரசு, பிச்சை போடுவதையே தமிழனின் எதிர் அரசியலாக்க முனைகின்றது. இப்படி மகிந்த குடும்ப பாசிசம், தனது அரசியலுக்கு ஏற்ற எடுபிடி அரசியலை உருவாக்குகின்றது. பல மனிதாபிமான முகம் கொண்ட, அரசியல் மாமாக்கள் உருவாகின்றனர்.

மறுபக்கத்தில் தமிழ் மக்கள் பெயரால் திரட்டப்பட்ட பல பத்தாயிரம் கோடி பணத்தை, புலம்பெயர் மாபியாப் புலிகள் தமதாக்கி, தமக்குள் அடிபடுகின்றனர். சரணடைந்த புலிகள் தம்முடன் எடுத்துச் சென்ற பல பத்தாயிரம் கோடி பணம், தங்கம்; அனைத்தையும் மகிந்த குடும்பம் கொள்ளையடித்துள்ளது. அதே நேரம் அவர்களைக் கொன்றது. புலிகள் புதைத்து வைத்த செல்வத்தைக் கைப்பறியவர்கள், புலிகளின் ஆயுதங்களையும் கூட சர்வதேச சந்தையில் விற்று, அந்தப் பணத்தையும் கூட தமது தனிப்பட்ட சொத்தாக்கியுள்ளது. இப்படி தமிழ் மக்களின் சொத்தைத் திருடிய கூட்டம் தான் இன்று நாடாளுகின்றது. இப்படிப்பட்ட இவர்கள், தங்கள் எடுபிடிகளைக் கொண்டு, பிச்சை போட வைக்கின்றனர். அனைவரையும் பிச்சை போடும் தன் எடுபிடி அரசியலுக்குள் கொண்டு வருகின்றது. தான் ஒரு சிங்கள பேரினவாத அரசு என்ற வகையில், தமிழ் மக்களை பிச்சைக்காரராக வைத்திருத்தல் தான் அரசின் கொள்கையாகியுள்ளது.  

மற்றவர்களைக் கொண்டு தமிழ் மக்களுக்கு பிச்சை போட வைப்பதன் மூலம், அரசு கவர்ச்சி அரசியல் செய்கின்றது. தமிழ் மக்களின் சொத்தைத் திருடிய கூட்டத்தின் தலைவரான மகிந்தா, தன் மனைவியையே அசினுடன் கூடி சுற்றுலா செய்யவும், தமிழ் மக்களுக்கு பிச்சை போடும் கூத்தை அரங்கேற்றி அதை ரசிக்கும் தன் வக்கிரபுத்தியுடன் அனுப்பி வைக்கின்றார்.

மகிந்த தன் பாசிசத்தை மூடிமறைக்கும் இந்த பாசிசக் கூத்தையும், தங்கள் கவர்ச்சிகரமான ஆடம்பரமான பாலியல் சார்ந்த சினிமா ஆபாசம் மூலம் மக்களிடம் கொள்ளையடித்த சொத்தை மூடிமறைக்க, நடிகர் கூட்டம்  பிச்சை போடுகின்றனர். அதை அந்த மக்களுக்கான உதவி என்று கூறி, தமிழ்மக்களை ஏமாற்றும் மற்றொரு ஆபாச சினிமாக் கூத்தை அரங்கேற்றுகின்றனர்.

தமிழ் மக்களை பிச்சைக்காரராக தொடர்ந்து வைத்திருக்க விரும்பும் மகிந்தா குடும்பத்தினதும், இந்த ஆபாச சினிமா கழிசடைகளினதும் கண்ணோட்டமும், இப்படி ஒரு புள்ளியில் பொருந்திக் போகின்றது. அந்த நடிப்புத் தான் இன்றைய சினிமாவாக, அதுவே அரசியலாகின்றது.                         

பி.இரயாகரன்
16.07.2010