Language Selection

செங்கொடியின் சிறகுகள்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

கடந்த ஏழாம்தேதி இரவு கோடியக்கரைக்கு தென்கிழக்கே கடலில் மீன்பிடித்துக்கொண்டிருந்த வேதாரண்யம் பகுதியைச் சேர்ந்த மீனவர் செல்லப்பன் என்பவர், இலங்கை கடற்படையினரால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். கடந்த காலங்களில் நாநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டிருக்கின்றனர். படகுகளை சேதம் செய்வதும், வலைகளை அறுத்தெறிவதும், மீனவர்களை துன்புறுத்துவதும் கொல்வதும் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. கருணாநிதி 3 லட்சம் கொடுத்தர், கண்டனக் கூட்டம் நடத்தினார், கடிதம் எழுதினார். வைகோ 25 ஆயிரம் கொடுத்தார். ஜெயலலிதா பதவி விலகச் சொன்னார். நாளிதழ்கள் இரண்டு நாள் எழுதின.

அவ்வளவுதான் இனி அடுத்த கொலையோ, தாக்குதலோ நடக்கும் வரை மௌனம். இதுதான் வழக்கமாக நடந்து வருகிறது. சில வேளைகளில் மீனவர்கள் போராட்டம் நடத்துகிறார்கள், கடலுக்கு போகாமல் வேலை நிறுத்தம் செய்கிறார்கள். அரசுகளின் பாராமுகத்தால் வேறுவழியின்றி மீண்டும் கடலுக்கு திரும்புகிறார்கள். ஒரு நாட்டின் கடல் எல்லையைத் தாண்டி இன்னொரு நாட்டின் கடல் எல்லைக்குள் சென்று மீன்பிடிப்பது உலகம் முழுவதிலும் இருந்துவரும் ஒரு செயல் தான். இதற்காக எந்த நாடும் இன்னொரு நாட்டு மீனவர்களை துன்புறுத்துவதில்லை, படகுகளை, உடைமைகளை சேதப்படுத்துவதில்லை, கொல்வதில்லை. எந்த நாடும் சொந்த நாட்டு மீனவர்கள் அன்னியக் கடற்படையால் கொல்லப்படுவதைக் கண்டு அமைதி காப்பதில்லை. ஆனால் இங்கு மட்டும் அது நடந்து கொண்டிருக்கிறது ஏன்?

இலங்கை கடற்படையில் இந்த அத்து மீறல்கள் நிகழும்போதெல்லாம், மைய, மாநில அரசுகளிடம் ஆயத்தமாக ஒரு பதிலிருக்கும், “மீனவர்கள் எல்லை தாண்டினார்கள்” பாகிஸ்தான் மீனவர்கள் குஜராத்வரை வருவதில்லையா? வங்கதேச மீனவர்கள் இந்திய எல்லைக்குள் பிடிபடவில்லையா? இந்திய மீனவர்கள் பாகிஸ்தானின் சிறைகளில் இல்லையா? ஏன் கொல்ல வேண்டும்? இந்தக் கேள்வியை எழுப்பாமல், அதற்கான பதிலைத் தேடாமல் தமிழகத்தில் சிங்களவர்களை நடமாட விடமாட்டோம் என்பதும், ஐ.நா சபை தமிழக மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும் என்பதும் தமிழனுக்கென்று ஒரு தாயகம் இல்லாததுதான் காரணம் என்பதும் பிரச்சனையை திசை திருப்பி நீர்த்துப்போகச் செய்வதற்கே உதவும்.

இலங்கைக் கடற்படை தமிழக மீனவர்களை ஏன் கொல்லவேண்டும்? அதைக்கண்டு இந்தியா ஏன் முறுவல் பூக்கவேண்டும்? ஏனென்றால் இந்தியா மீனவர்களை கடல்புறத்திலிருந்து அப்புறப் படுத்த முயல்கிறது. அதனால்தான் இலங்கையை எதிர்த்து ஒரு வார்த்தை கூடப் பேசாமல் உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறது. தெளிவாய்ச் சொன்னால் இந்திய போட்டுக்கொடுத்த திட்டத்தின்படியே இலங்கை செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. மீனவர்களை விரட்டும் இலங்கையின் செயல் ஒரு முனைதான். இதன் மற்ற முனைகளையும் தெரிந்து கொண்டால்தான் இதன் முழு பரிமாணமும் விளங்கும் அத்தோடு இந்திய அரசின் கோரமுகமும் தெரியும்.

அண்மையில் இந்தியா மின்பிடி ஒழுங்குமுறை மசோதா என்றொரு மசோதாவைக் கொண்டுவந்தது. வெளியிலிருந்து இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுருவி விடாமலிருப்பதற்காக என்று காரணமும் சொல்லப்பட்டது. ஆனால் அதன் சட்டவிதிகளைப் பார்த்தாலே புரிந்து போகும், அது பயங்கரவாதிகளை தடுப்பதற்காக அல்ல மீனவர்களை துரத்திவிட்டு அந்த இடத்தில் பயங்கரவாதிகளை கொண்டுவந்து நிறைப்பதற்காக என்பது.

மீன்பிடி கலங்கள் அனைத்தும், அது கட்டுமரமா, விசைப்படகா என்ற வேறுபாடின்றி அரசிடம் பணம் கட்டி அனுமதி பெற்றிருக்கவேண்டும், குறிப்பிட்ட கால இடை வெளியில் அதை தவறாமல் புதுப்பிக்கவும் வேண்டும். மீன்பிடிகலம் எதுவாக இருந்தாலும் அதன் நீளம் 12 மீட்டருக்கு அதிகம் இருக்கக்கூடாது. இருந்தால் தண்டமும், தண்டனையும் உண்டு. மீனவர்கள் என்று எங்கு என்னவகை மீன்பிடிக்கிறார்கள் என்பதை பதிவு செய்யவேண்டும். என்ன காரணத்திற்காக மீன்பிடிக்கிறார்கள் வயிற்றுப் பாட்டிற்கா, வணிகத்திற்காகவா, ஆய்வுக்காகவா என்று தெரிவித்திருக்க வேண்டும். 12 கடல் மைல்களைத்தாண்டி ஆழ்கடல் பகுதிக்குச் செல்லக்கூடாது. சென்றால் 9 லட்ச ரூபாய் அபராதம் மூன்று மாதம் சிறைத்தண்டனை. மீன்பிடி கலத்தினுள் பத்தாயிரம் ரூபாய் மதிப்பிற்கு அதிகமாக மீன்களை வைத்திருக்கக் கூடாது. எந்த வகை மீனைப் பிடிக்கவேண்டும், எந்த வகையை பிடிக்கக் கூடாது என வரையறை செய்யவும், மீன்பிடிப்பை ரத்து செய்யவும் அனுமதி மறுக்கவும் அரசுக்கு அதிகாரமும் உண்டு. இதை என்நேரமும் சோதனை செய்யலாம், சோதனை செய்வதை தடுப்பவர்களுக்கு பத்து லட்சம் அபராதம், மீன்பிடிகலம் பறிமுதல் செய்யப்படுவதுடன் அதில் இருக்கும் தொழிலாளர்கள் அனைவருக்கும் 25 ஆயிரம் வீதம் வசூலிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட கலத்தை மீட்கவேண்டுமானால் கலத்தின் மொத்த மதிப்பில் பாதியை பிணைத்தொகையாக செலுத்தவேண்டும். இது அனைத்திற்கும் மேலாக தவறாக நடவடிக்கை எடுக்கப்பட்டாலோ, தவறாக பறிமுதல் செய்யப்பட்டாலோ அதிகாரிகள் மீது நட்ட ஈடு கோரவோ, வழக்குதொடுக்கவோ முடியாது. இவைகள் ‘மீன்பிடி ஒழுங்குமுறை மசோதாவின்’ சில அம்சங்கள்.

இந்த மசோதா சொல்லும் சட்டங்களும் விதிமுறைகளும் வெளிப்படையாகவே அறிவிக்கின்றன, மீனவர்கள் கடலுக்குள் செல்லக்கூடாது என்று. கரையோரப் பகுதிகளில் மீன்வளம் குறைவதால், ஆழ்கடலுக்குள் செல்லவேண்டிய கட்டாய நிலையிலிருக்கிறார்கள் மீனவர்கள். கடலுக்குள் சென்று இரண்டு நாளோ மூன்று நாளோ தங்கியிருந்து மீன்பிடித்துத் திரும்பினால்தான் படகு உரிமையாளர்களுக்கு அளந்ததுபோக மீனவர்களுக்கும் கொஞ்சம் மிஞ்சும். இப்படி ஒருமுறை கடலுக்குள் சென்று வர மானிய விலையில் டீசல் தந்தும் ஒன்றரை லட்சம்வரை செலவாகிறது. ஆனால் மசோதா சொல்கிறது ரூபாய் பத்தாயிரத்துக்கு அதிகமாக மீன்கள் இருக்கக் கூடாது என்று. பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகமாக மீன் இருப்பதற்கும் பயங்கரவாதிகள் கடல்வழியாக ஊடுறுவதற்கும் என்ன தொடர்பு?

விசைப்படகோ, கட்டுமரமோ 12 மீட்டருக்கு அதிகமான நீளத்தில் இருக்கக் கூடாது என்கிறது சட்டம். நாள் கணக்கில் கடலுக்குள் இருப்பதென்றால், கடலுக்குள் செல்லும் தொழிலாளிகளுக்கான உணவு முதல் பிடிக்கும் மீன்களை வைத்திருப்பதற்கான இடம், அது கெட்டுப்போகாமலிருப்பதற்கான பனிக்கட்டிகள் வரை வைத்திருப்பதற்கு இடம் வேண்டும். இது எதைப் பற்றியும் கவலைப் படாமல் 12 மீட்டருக்குள் இருந்தாக வேண்டும் என்பது எந்த விதத்தில் பயங்கரவாதிகள் ஊடுறுவதை ஒடுக்கும்?

பத்தாயிரத்துக்கு அதிகமாக மீன் இருந்தாலோ, 12 மீட்டருக்கு அதிகமான நீளமிருந்தாலோ லட்சக்கணக்கில் அபராதம் விதித்து படகையும் பறிமுதல் செய்வது மீனவர்களை ஒடுக்குமா? இல்லை பயங்கரவாதிகளை தடுக்குமா? இந்தச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தாலோ, படகை பறிமுதல் செய்தாலோ, மீனவர்களை கைது செய்தாலோ அது தவறாக ஆதாரமற்றதாக இருந்தாலும் யாரும் கேள்விகேட்கமுடியாதபடி இந்தச்சட்டம் அதிகாரிகளை பாதுகாப்பது ஏன்?

கடற்புற மேலாண்மைத் திட்டம் என்று இன்னொரு சட்டமும் நடைமுறைப் படுத்தபடுகிறது. சில ஆண்டுகளுக்கும் முன்னர் ஓங்கலை (சுனாமி) வந்த சுருட்டிய பின்னர் மீனவர்களை பாதுகாக்கிறோம் என்று காரணம் கூறி இந்தத்திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் படி கடற்கரையிலிருந்து அரைகிலோமீட்டர் தூரத்திற்குள் மீனவர்கள் குடிசை போடக்கூடாது என்று அடித்து விரட்டப்பட்டனர். கட்டிக்கொடுத்த சுனாமி குடியிருப்புகள் சில மாதங்களிலேயே பல்லிளித்துவிட்டன. ஆனால் மீனவர்களை விரட்டிவிட்டு கட்டப்பட்ட நட்சத்திர விடுதிகளும் பொழுதுபோக்கு மையங்களும் பளபளக்கின்றன. ஏன் சுனாமி குடிசைகளை மட்டும்தான் சுக்கலாக்குவேன் என்று சபதம் செய்துவிட்டு வருகிறதா? நட்சத்திர விடுதிகள் சுனாமியை தாங்கி நிற்கும் என்றால் கடலையே வாழ்க்கையாய் கொண்டிருக்கும் மீனவர்களை அதுபோன்ற விடுதிகளில் குடியேறலாமே கடலோரங்களிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்திவிட்டு பணக்காரர்களும் முதலாளிகளும் சொகுசாய் பொழுதுபோக்குவதற்கு மீனவர்களை அசிங்கம் என அப்புறப்படுத்துகிறது அந்தத் திட்டம். இந்தியாவின் புரதத்தேவையில் பாதியை நிறைவேற்றும் மீனவர்கள் அசிங்கம் என்றால் அழகு என்பது எது?

மறுபக்கம் அதே சுனாமியை காரணம் காட்டி சுய உதவிக் குழுக்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் கடலோரப்பகுதிகளில் களமிறக்கி விடப்பட்டுள்ளன. ரொட்டி தயாரிப்பு, கைவினைப் பொருட்கள், மெழுகுவர்த்தி, செங்கல் தயாரிப்பு என்று மீனவர்களுக்கு மாற்றுத்தொழில்களை அவை கற்றுக்கொடுக்கின்றன. ஒருபக்கம் சட்டம் போட்டு மீன்பிடிக்கப் போகாதே என்று தடுக்கிறது, இன்னொரு பக்கம் கடன் கொடுத்து ஆசை காட்டி கஷ்டப்பட்டு ஏன் மீன்பிடிக்கவேண்டும் சுலபமான வேறு தொழில்களைப் பார்க்கலாமே என மடை மாற்றுகிறது.

மீன்பிடிப்பதிலிருந்து மீனவர்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்று அரசு ஏன் துடிக்கவேண்டும்? 1990களின் தொடக்கத்தில் நரசிம்மராவ் அரசு ‘மீன்வளக் கொள்கை’ என்று ஒரு கொள்கையை கொண்டுவந்தது. அதன்படி பன்னாட்டு முதலாளிகள் இந்தியக் கடல் பகுதிகளில் மீன்பிடித்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. அவர்கள் மிகப்பெரிய இயந்திரங்களுடன் கூடிய கப்பல்களின் மூலம் கடலை அரித்துக்கொண்டிருக்கிறார்கள். விளைந்த மீன் குஞ்சு என்ற பேதமில்லாமல் முட்டைகளைக் கூட விட்டுவைக்காமல் உருஞ்சி எடுக்கிறார்கள். தேவையான ரகங்களைப் பிரித்தெடுத்துவிட்டு இறந்தவைகள் எஞ்சியவைகளை கழிவுகளாய் கடலுக்குள் தள்ளிவிடுகிறார்கள். சலித்தெடுத்த மீன்களை பதப்படுத்தி டப்பாக்களில் அடைத்து ஏற்றுமதி செய்கிறார்கள். இவைகள் நாகரீக உணவுகளாய் “ஃபிரஷ்” கடைகளில் அலங்கரிக்கப்பட்டு அமர்ந்திருக்கின்றன. இதுபோன்ற ஏற்றுமதியில் இந்தியாவும் ஈடுபடவேண்டுமென்றால் மீன்பிடித்தலை ஒழுங்குபடுத்தும் ஆணையம் இருக்கவேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் நிர்பந்திக்கின்றன. அதனால் தான் ஒழுங்கு படுத்தல் என்ற பெயரில் நாட்டில் மீன்பிடி தொழிலை பாரம்பரியமாகச் செய்துவரும் பல லட்சம் மீனவர்களை கடலை விட்டு அப்புறப் படுத்தி சில முதலாளிகளை மிகப்பெரிய கப்பல்களில் மீன்பிடிக்க ஏற்பாடு செய்கிறது. பல லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரத்தைவிட சில முதலாளிகளின் லாபம்தானே அரசுக்கு முக்கியம்.

இதனால்தான் அரசு ஒரு முனையில் சட்டம் போட்டு மிரட்டுகிறது, இன்னொரு முனையில் தன்னார்வ குழுக்கள் மூலம் கடன் கொடுத்து கெஞ்சி விரட்டுகிறது, இதே காரணத்திற்காகத்தான் வேறொரு முனையில் இலங்கை கடற்படையை விட்டு கொல்லச்சொல்லி அச்சுறுத்துகிறது. இப்படி எல்லா முனைகளிலும் வாழ வழியற்று துரத்தப்படுவது மீனவர்கள் மட்டுமல்ல. அனைத்துப் பிரிவு மக்களுமே தங்கள் வாழ்வாதாரங்களிலிருந்து விரட்டப்படுகிறார்கள். அவர்கள் இனி இழப்பதற்கு ஒன்றுமில்லை என்பதை தங்கள் சொந்த அனுபவங்களின் மூலம் புரிந்திருக்கிறார்கள். ஒன்றிணைந்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை உணர்வது மட்டுமே மிச்சமிருக்கிறது.

தொடர்புடைய கட்டுரைகள்