1930 களில் கிட்லரின் தலைமையிலான நாசிய ஜெர்மனி, யூதர்களுக்கு எதிரான பல இன, நிறத் தடைகளைக் கொண்டு வந்தது. அதுபோல்தான் இந்தத் தடையும். அன்று போல் இன்றும், சொந்த மக்களை ஏமாற்றும் தடைச் சட்டங்கள்.

சர்வதேச ஒழுங்கை உலகில் பேணிக் கொள்ளும் மேற்குநாடுகளோ, இஸ்லாமிய மத வன்முறையைக் காட்டித்தான் தன்னை நிலைநிறுத்துகின்றது. இதன் மூலம் ஈராக்கிய எண்ணை வயல், ஆப்கானிஸ்தானில் எரிவாயு முதல் கனிம வளங்கள் அனைத்தையும் மேற்கு கொள்ளையிடுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்தை, வெறும் மத வன்முறையாக மட்டும் காட்டுகின்றது. தங்கள் ஆக்கிரமிப்புக்கு எதிரானதாக, அது காட்டுவது கிடையாது.

ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்களில், மதம் சார்ந்த பிரிவுகளும்  இருப்பதால், அதையே அனைத்துமாக காட்டிவிடுகின்றனர். இதன் பின் அதில் உள்ள பிற்போக்கான மதக் கூறுகளை முதன்மைப்படுத்திக் காட்டுவதன் மூலம், மேற்கு தனது ஆக்கிரமிப்பை மத அடிப்படைவாதத்துக்கு எதிரானதாக கூறி, உலகளாவில் தன்னை நியாயப்படுத்திக் கொள்கின்றது.

உண்மையில் இதன் பின்னணியில் இருப்பதோ, பொருளாதார சூறையாடல் தான். உலகத்தின் எண்ணெய் மற்றும் கனிமவளங்களை கொள்ளையிடவும், மற்றைய போட்டி ஏகாதிபத்தியத்திடம் இருந்து அதை தக்கவைக்கவும், ஏகாதிபத்திய முரண்பாடுகளை அடிப்படையாக கொண்ட ஆக்கிரமிப்பு மோதல்கள் தான் நடக்கின்றது.

மத்திய கிழக்கில் இஸ்ரேல் என்ற பேட்டை ரவுடியை உருவாக்கிய மேற்கு, இதைத் தான் அவர்கள் மூலம் செய்கின்றனர். இங்கு இஸ்ரேல் (யூத) – பாலஸ்தீன (இஸ்லாமிய) மோதல் என்பது வெறும் கண்துடைப்பு.      

இந்த நிலையில் மேற்கு தன் சொந்த மக்கள் முன், இஸ்லாமிய 'பயங்கரவாதம்" பற்றி பீதியை பிரச்சாரத்தை செய்கின்றது. இஸ்லாம் என்றால் "பயங்கரவாதம்" என்ற ஒரு அரசியல் விம்பத்தையும், அவர்கள் பொது உலக கண்ணோட்டமற்ற அடிப்படைவாதிகளாகவும் காட்டி வருகின்றனர். இதன் மூலம் ஈராக், ஆப்கான், மத்திய கிழக்கில் மத அடிப்படைவாதத்துக்கு எதிராக மேற்கு போராடுவதான ஒரு போலி விம்பத்தை உருவாக்கியுள்ளனர்.  

இதன் மூலம் மேற்கின் வெள்ளை நிறவெறியையும், இனவெறியையும் இதன்பால் உருவாக்குகின்றனர். உள்நாட்டில் தங்கள் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்த, தாம் முஸ்லீம் மக்களுக்கு எதிராக இருப்பதாக காட்ட, முஸ்லீம் மத அடையாளங்கள் மீதான தங்கள் நிறவெறிச் சட்டங்களை கொண்டு வருகின்றனர். இதை அன்று நாசி ஜெர்மனியும் செய்தது.

தங்களை இன நிற வெறியற்றவராக காட்டிக் கொள்ளவும் முனைகின்றனர். பர்தாவை பெண் உரிமைக்கு எதிரானதாக காட்டி, தாம் அதற்காகத்தான் இந்தச் தடைச் சட்டத்தை கொண்டு வந்ததாக பீற்றிக் கொள்கின்றனர். இஸ்லாமிய மத அடிப்படைவாதத்தின் தர்க்கங்களையும், அதன் பண்பாடு கலாச்சாரக் கூறுகளையும் காட்டி, தன்னை அதற்கு எதிரான "ஜனநாயகத்தை" முன்னிறுத்தும் "கனவான்களாக" காட்டிக் கொண்டு தான் தடை சட்டங்களைக் கொண்டு வருகின்றனர்.

இதன் மூலம் வெள்ளை இன நிற வெறியாளர்களை திருப்தி செய்து அவர்கள் ஆதரவை பெறுகின்ற அதேநேரம், இதை பெண்ணின் உரிமையாகக் காட்டி பரந்துபட்ட மக்களின் ஆதரவையும் பெற்றுவிட முனைகின்றனர். இதன் மூலம் உள்நாட்டில் மக்களை ஏமாற்றி, வெள்ளை நிறவெறியுடன் உலகை சூறையாடும் ஏகாதிபத்திய உண்மையைப் புதைக்கின்றனர்.

இப்படி மத அடிப்படைவாதமும், ஏகாதிபத்தியம் ஒன்றை ஒன்று எதிராக தம்மை முன்னிறுத்தி முன்நகர்த்தும் போராட்டங்கள் முதல் சட்டங்கள் வரை, ஒட்டு மொத்த மக்களுக்கும் எதிரானது. ஒன்றை மூடி மறைக்க மற்றொன்றை முன்னிறுத்தும் அரசியல், மக்களை ஏமாற்றி வைத்திருக்கும் அரசியல் தந்திரங்கள் தான்.

மத அடிப்படைவாதம் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பைக் காட்டி தனது பிற்போக்கான நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டித்தனமான அடிப்படைவாதங்களை நிலை நிறுத்துவது போல், மத அடிப்படை வாதத்தைக் காட்டி உலகைக் கொள்ளையடிக்கும் உலகம் தளுவிய ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புகளை செய்கின்றனர்.

இந்த வகையில்தான் பர்தா மீதான ஏகாதிபத்திய தடையும், மத அடிப்படைவாதத்தின்  எதிர்ப்பும் வெளிவருகின்றது. இப்படி இவர்கள் மக்களை திசைதிருப்பி, அவர்களுக்குள் மோத விடுவதன் மூலம், தங்கள் நலன்களை இரண்டு தரப்பும் அடைகின்றது.

இதன் பின்னணியில் எண்ணெய் வயல்களை கொண்ட பிரதேசத்தில் வாழும் முஸ்லீம் மக்களை ஏகாதிபத்தியங்கள் உலகளாவில் சூறையாடி சுரண்டுவதும், மேற்கில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இரண்டாம் தரப் பிரஜையாக நடத்தப்படுவதும் நடக்கின்றது. இதன் பின்னணியில் மத அடிப்படைவாதம் செழிக்கின்றது. இப்படிப்பட்ட இரண்டுக்கும் எதிராக போராடுவதுதான் சரியானது.

இதை ஏகாதிபத்தியங்களோ, மத அடிப்படைவாதிகளோ செய்வதில்லை, செய்யப் போவதுமில்லை. அவர்கள் எதைச் செய்;தாலும், அது தவறானதாக, உள் நோக்கம் கொண்டதாக, மூடிமறைக்கப்பட்டதாகவே இருக்கும். இந்த வகையில் தான், பிரஞ்சு ஏகாதிபத்தியம், பர்தா தடைச் சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

பிரஞ்சு வாழ் முஸ்லீம் மக்கள், இன ரீதியாக மத ரீதியாக, நிற ரீதியாக, வெளிநாட்டவராக ஒதுக்கப்பட்டு, பிரஞ்சு மக்களில் இருந்து அன்னியப்படுத்தப்பட்ட நகர்ப்புறம் சார்ந்த சேர்pப்புறங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். இப்படி குவிக்கப்பட்ட பிரதேசங்களில் வேலையின்மை என்பது, பொதுத்தன்மையாகி விடுகின்றது. இப்பிரதேசத்தில் இருந்து வேலை கேட்டுச் சென்றால் வேலை மறுப்பும், பெயரை வைத்து வேலை மறுப்பும் என்பது பொதுவான மூலதனத்தின் எழுதாத சட்ட ஒழுங்கு. இதனால் இந்த பிரதேசங்களில் வறுமை, வன்முறை, சமூக விரோதச் செயல்கள் பெருகிவிடுகின்றது. அராஜகமும், லும்பன்தனமும் கொண்ட, ஒரு கெரில்லா பிரதேசமாக மாறிவிடுகின்றது. சட்டம் ஒழுங்கு இங்கு இருப்பதில்லை.

இப்படி இப்பிரதேசங்களை உருவாக்கிய பிரஞ்சு ஏகாதிபத்திய இன நிறக் கொள்கை, பின் இந்த சூழலைக் காட்டியே பிரஞ்சு மக்களை ஏமாற்றுகின்றது. இதன் பின்னணியில் பர்தா அணியத் தடை என்ற சட்டங்களைக் கொண்டு வருகின்றது.

இந்த மக்களுக்கு வேலை வாய்ப்பையும், கவுரவமான வாழ்க்கையும் உருவாக்க வக்கற்ற  இன நிற வெறி கொண்ட பிரஞ்சு அரசு, பர்தா சட்டங்கள் மூலம் மக்களை பிளக்கின்றது.  முஸ்லீம் மக்கள் உழைத்து கவுரவமாக வாழ வைப்பதன் மூலம், மத அடிப்படைவாதத்துக்கு எதிரான பிரச்சாரங்களை அந்த மக்களே நடத்துவதற்கு உதவ வேண்டும். இதைத் தான் ஒரு ஜனநாயக அரசு செய்ய வேண்டும். இதற்கு மாறாக ஏகாதிபத்தியமாக இருப்பதால் ஓட்டுமொத்த முஸ்லீம் மக்களை எதிராக காட்டி, பிரஞ்சு மக்களை திசைதிருப்ப முனைகின்றது.

இந்த ஏகாதிபத்திய தனத்துக்கு எதிரான போராட்டம் தான், மத அடிப்படைவாதம் முன்னிறுத்தும் பர்தாவுக்கு எதிரான போராட்டத்தையும், மக்களை சார்ந்து நின்று கோரும். இல்லாத அனைத்தும், எதிர்க்கப்பட வேண்டும்.

பி.இரயாகரன்
14.07.2010