10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

அரசியல் வேலைத்திட்டமின்றி , பொது வேலைத்திட்டம் சாத்தியமில்லை

புலிகளின் அழிவின் பின் பலரிடம் எழுந்துள்ள கேள்விகளில் ஒன்று, ஏன் மாற்றுக் கருத்துக் கொண்டவர்கள் எல்லோரும் இணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இயங்க முடியாது? இந்தக் கேள்வியை இன்று பலர் எழுப்பி வருகின்றனர். இவ்வாறு இயங்குவதற்கு, என்ன தடையாக இருக்கின்றது? இது எந்த வகையில் அது சாத்தியமாகும் என்பதை முதலில் நாம் கண்டறிவது அவசியம். அதனடிப்படையிலான ஒரு பார்வை அவசியமாகின்றது.

புலம் பெயர்ந்த நாடுகளில் இயங்கிக் கொண்டிருந்த , இயங்கிக் கொண்டிருக்கும் “முற்போக்கு” சக்திகள் என்று தம்மை அடையாளப்படுத்தியவர்களை, நாம் பல பிரிவாக வகைப்படுத்தலாம்.

1.அரசு எதிர்ப்புடன், புலியின் அழிவின் பின் அந்தத் தலைமைத்துவத்தை எற்கத் துடிப்பவர்கள்.

2.புலி எதிர்ப்பை மாத்திரம் அரசியலாக வைத்திருந்தவர்கள். அதன் அழிவின் முன்னும்,  பின்னும் அரசு சார்புநிலை எடுத்தவர்கள்.

3.புலி – அரசு எதிர்பையும், சமூக சார்ந்த சித்தாந்தங்களையும் அரசியலாக கொண்டிருந்தாலும், தம்மை பிரமுகர்களாக்குவதற்காக தமிழ்நாட்டு பிற்போக்கு அரசியல்வாதிகளுடன் இணைந்து செயல்பட முற்பட்டவர்கள்.

4.புலி-அரசு எதிர்ப்பிற்கு அப்பால், சமூக சித்தாத்தத்தை கொள்கையாக கொண்டிருந்த பலர், சிறு உதிரியான ஆனால் ஒத்த கோட்பாடற்ற  குழுக்களாக மாறி உள்ளவர்கள்.

5.புலி – அரசு எதிர்பிற்கு அப்பால் சமூக சித்தாந்தங்களை அரசியலாக கொண்டிருந்த போதும், ஒரு குழுவாக மாறாது தொடர்ந்தும் அடையாளத்தை தக்கவைக்கும் உதிரியாக இருப்பவர்கள்.

இப்படி புலம் பெயர் நாடுகளில் இருப்பவர்களைப் பொதுவாக பிரித்துப் பார்க்கலாம். இதில் முதல் மூன்று வரையறைக்குட்பட்டவர்களைப் பற்றி, நாம் கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. காரணம் இவர்கள் தமது சுய விருப்பிற்கும், தம்மை பிரமுகர்களாக காட்டுவதற்குமாகவே, அரசியலை செய்பவர்கள். கவிதைகள், கதைகள், வாய்சாவடல்களுக்கு அப்பால், இவர்களிடம் மக்கள் பற்றிய சிந்தனை என்பது தன்நலம் கருதியதாகவே உள்ளது. இதனால் இவர்களை ஒரு புறமாக வைத்துவிட்டு 4ம் 5ம் வகையினர் பற்றி பார்ப்போம்.

முதலில் சிறு குழுக்களாக இயங்கிக் கொண்டிருப்பவர்களைப் பற்றி பார்ப்போம்.  இக்குழுக்கள் தமக்கிடையே ஒரு ஐக்கியத்தை கொண்டுவருவதற்கும், ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்டபடையில் வேலை செய்வதற்கும் என்ன தடையாக உள்ளது? இந்தக் கேள்வியை முன்வைத்து, அதற்கான பதிலை தேடினால் கிடைப்பது, ஒவ்வொரு குழுக்களிடமும் தமக்கேயான அரசியல் கொள்கையும் திட்டம் இன்மையோ அல்லது அதை பகிரங்கமாக வைத்து செயற்பாடமையை இனம் காணமுடியும்.  திட்டம் இல்லாமலே அல்லது தங்கள் கருத்துகளை வெளிப்படையாக முன்வைக்காமலே இருக்கும் பட்சத்தில், அவர்களின் அரசியல் நிலைப்படும் மக்http://www.ndpfront.com/wp-admin/post.php?action=edit&post=7642&message=10கள் முன் வெளிப்படையாக இல்லாமல் போய் விடுகின்றது. ஒவ்வொரு விடையங்கள் தொடர்பாகவும், எப்படி எதன் அடிப்படையில் பார்கின்றார்கள் என்பது, தெரியாமல் போய் விடுகின்றது. தனிப்பட்ட நபர்கள் மத்தியில், கதைப்பதை கொண்டு, குழுக்களுக்கு இடையில் பொது ஐக்கியத்தை பேண முடியாது. வெறுமனே தம்மை முற்போக்கு குழுக்களாக காட்டுவதன் மூலம் மாத்திரம், ஓரு பொது வேலைத் திட்டத்தை எழுந்தமானமாக முன்வைக்க முடியாது. இதைவிட புலம்பெயர் நாடுகளில் வாழ்பவர்களில் பலர் எதோ ஒரு இயக்கத்தில் இருந்தவர்களாகவோ அல்லது அதன் தொடர்பு கொண்டவர்களாகவோ காணப்படுவதால், அவர்கள் சார்ந்த  இயக்கங்களின் கடந்த கால தவறுகள் மற்றும் தோல்விகளுக்கான சுயவிமர்சன ரீதியான பார்வை அவசியமாகின்றது. இதனை சாதாரண தரத்தில் இயக்கத்தில் இருந்தவர்களிடம் எதிர்பார்க்கவில்லை. மாறாக முக்கிய பொறுப்புக்களிலும், தலைமையிலும் இருந்தவர்களிடம் எதிர்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமானதாகும்..

போராட்டத்தில் ஈடுபட்ட ஒவ்வொருவரும் தமது சுய கருத்தையோ அல்லது அவர்கள் இருந்த அமைப்பின் மீதான விமர்சனத்தையோ முன்வைக்காதவிடத்து, அவர்கள் அவ்வமைப்பின் மீது தற்போதும் பற்றுக் கொண்டவர்களாகவே கருதப்படுவர். இதன் கடந்தகால மக்கள் விரோத செயற்பாடுகளை மூடிமறைப்பவர்களாகவே பார்க்கப்படுவர். சிலர் கூறலாம், நான் விலகி விட்டேன். பிரிந்துவிட்டேன், அவர்களைப் பற்றி எமது குழுவிக்குள் கருத்தை முன்வைத்துவிட்டேன். எனவே பகிரங்கமாக வைப்பது என்பது சாத்தியமற்றதும், ஆபத்தானதும் என்று கூறுவது, ஒரு சந்தர்ப்பவாதமாகவே பார்க்கப்படவேண்டும். ஒரு சிலருக்கு, அதுவும் தான் சார்ந்தவர்களுக்கு மட்டும் கூறினால் போதும் என்றால், இவர் விடுதலை வேண்டிப் புறப்பட்டது அவர்கள் (அக்குழுவிற்கு) மட்டுமானதா! இல்லை. தமிழ் மக்கள் உட்பட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கானது அல்லவா போராட்டம். அவ்வாறாயின் அதை மக்கள் மத்தியிலேயே முன்வைப்பது அவசியமானது.  பாதுகாப்புக் காரணம் என்று சொல்பவர்கள், தம்மை மூடி பாதுகாக்க சொல்லும் நொண்டிச்சாட்டு. இவர்கள் வசிப்பது புலம்பெயர் நாடுகள். அதிலும் இவர்களுடைய பிரச்சனைகள் நடந்தது, 20 வருடங்களுக்கு மேலாகின்றது இப்படி இருக்க, இவர்களுக்கு பாதுகாப்பு பிரச்சனை என்பது தங்களது கடந்த கால தவறுகளை ழூடிமறைக்கும் செயலாகும்.  பாதுகாப்பு பிரச்சனை, இதனால் நாம் வெளிப்படையாக எதையும் கூற முடியாது போன்ற வாதங்கள், தமது சந்தர்ப்பவாத அரசியலை பாதுகாக்க சொல்லப்படும் வெறும் கோசங்களே.

இவ்வாறு எந்த ஒரு அடிப்படை அரசியலையும் செய்யாது, தனிமையில் பொது வேலைத்திட்டத்தின் கீழ் சேர்ந்து இயங்குவது என்பது புலி, ஈபிஆர்எல்வே, ஈரோஸ், ரெலோ வின் பொது வேலைத்திட்டம் போன்றதே. ஒவ்வொன்றும் மற்றத்தை எவ்வாறு அழிக்கலாம் என்ற பாணியிலானதாகவே இருக்கும்.

பொது வேலைத் திட்டத்திற்காக வருவதற்கு முன் ஒவ்வொரு குழுவும், தமக்காக சுய வேலைத் திட்டத்தையும், சமூக போக்குகள் மீதான கருத்தையும்  மக்கள் மத்தியில் முன்வைக்க வேன்டும். அப்படி வைக்கப்படும் பட்சத்தில், அதிலிருக்கும் பொதுத் தன்மையை மையமாகக் கொண்டே, நாம் பொது வேலைத்திட்டத்தை உருவாக்க முடியும்.

அது தான் ஆரோக்கியமானதாகவும், ஐக்கியமானதாகவும், பலம் வாய்ந்ததாகவும் காணப்படும்.

ஒரு பொது வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றுக்கு மேற்பட்ட குழுக்கள் சேர்ந்து இயங்குவதானால், அங்கு முதலில் ஒவ்வொரு குழுவும் தமக்கேயான அரசியல் திட்டத்தை முன்வைக்கவேண்டும். அவ்வாறு முன்வைக்கப்பட்ட அரசியல் திட்டத்தில், அக்குழுக்கள் சமூகத்தில் உள்ள பிரச்சனைகளை எவ்வாறு பார்க்கின்றனர் அனுகுகின்றனர் என்பதை மையப்படுத்தி, அதிலிருந்து ஒரு பொது அரசியல் திட்டத்தை உருவாக்கி வேலைசெய்ய முடியும். இதை விடுத்து மூடிமறைத்து, எமக்கு இடையில் தனிமையில் ஒரு பொது வேலைத்திட்டத்தில் இணைந்து வேலை செய்வோம் என்றால் எதன் அடிப்படையில்? உதாரணங்களாக இலங்கை அரசை எந்தவகையில் பார்ப்பது? பாசிச அரசாகவா? பயங்கரவாதத்தை ஒழித்த தேசிய அரசாகவா? தனது நாட்டையே மற்றவர்களுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் தரகு முதலாளித்துவ அரசாகவா? இவ்வாறு எந்த வகையில் வகைப்படுத்துகின்றனர் என்பதை வைத்துத்தான், ஒரு பொது வேலைத்திட்டத்தை நாம் உருவாக்க முடியும்.

தனிநபர்களாக இருப்பவர்களைப் பற்றி பார்ப்போமாயின், இதில் இன்று புலம்பெயர் நாடுகளில் பலர் வாழ்கின்றனர். இவர்களை எந்த அடிப்படையில் பொது வேலைத்திட்டத்தின்கீழ் கொண்டுவருவது என்ற முக்கிய கேள்வி உண்டு.

இன்று முற்போக்கு சக்திகளாக இருக்கும் உதிரிகளும், ஒரு விதத்தில் தமிழ் மக்களுக்கு பிழையான பாதையையே காட்டுகின்றனர். என்னவெனின் அமைப்புருவாகாமல் இருப்பதன் மூலம், தமது அடையாள தனித்துவத்தை மட்டும் பாதுகாப்பதுடன், இவர்களின் இயக்கம் என்பது மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும். எந்த புரட்சிகர சிந்தனையைக் கொண்டிருந்தாலும், அமைப்புருவாக்கம் என்பது அவசியமாகின்றது. எற்கனவே உள்ள அமைப்புகளுடனோ அல்லது தமக்கு தனியான அமைப்பாகவே தம்மை வெளிப்படுத்துவதன் மூலம் மட்டுமே, மக்கள் மத்தியில் சென்று வேலை செய்யமுடியும்.

இக்கட்டுரையின் ஒட்டுமொத்தக் கருத்தும் பொது வேலைத்திட்டம் என்பது ஒவ்வொரு குழுவும், தமக்கான வேலைத்திட்டத்தை முன்வைத்து அதனடிப்படையில் பொது தன்மையை உருவாக்குவதே. அன்றி அது சாத்தியமற்ற ஒன்று. குழுவல்லாத தளத்தில் உள்ளவர்கள் அல்லது தனிநபர்கள், தனிநபர்களாக இயங்கும் அமைப்பின் திட்டத்தை எற்று இதில் இணைந்து வேலை செய்ய முடியும்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்