01312023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

புதிய ஜனநாயக கட்சியின் 5வது மாநாடும், அதன் பெயர் மாற்றமும்

புதிய ஜனநாயகக் கட்சி தனது 5 வது மாநாட்டில் தனது கட்சியின் பெயரை "புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி" என்று பெயரை மாற்றியுள்ளது. இப்படி தன் பெயரை மாற்றியுள்ள அக்கட்சி, இலங்கையில் வர்க்கப் போராட்டத்தை தன் அரசியல் நிகழ்ச்சி நிரலாக முன்னெடுக்குமா என்பதே எம்முன்னுள்ள அரசியல் கேள்வி. புரட்சிகர அரசியல் வெற்றிடத்தை, அக்கட்சி தன் வர்க்கப்போராட்டத்தின் மூலம் முன்னெடுக்குமா?

பெயர் மாற்றங்கள் மட்டும், புரட்சிகர கட்சியாக்கிவிடாது. மாறாக 70 க்கு பிந்தைய தனது 40 வருட இக்கட்சியின் புரட்சிகரமான நடைமுறையற்ற, பிரமுகர் கட்சி என்ற தனது இருப்பை மாற்றியமைக்க வேண்டும். இதை அரசியல் ரீதியாக, குறைந்தபட்சம் விமர்சனத்துக்குள்ளாக்கி இருக்க வேண்டும். ஆனால் வெளியாகிய அறிக்கையோ, இதை எந்தவகையிலும் பிரதிபலிக்கவில்லை.  

புதிய ஜனநாயகக் கட்சி கொண்டிருந்த கடந்தகால அரசியல் திட்டம், கொள்கை அளவில் பொதுவில் சரியான அரசியல் தன்மையைப் பிரதிபலித்தே வந்தது. அத்திட்டத்துக்கு பெயரை மாற்றுவதால், வர்க்கப் புரட்சியை முன்னெடுக்கும் புதிய மாற்றம் இயல்பில் வந்துவிடாது.

மீண்டும் அதே தலைமை. அது மீளவும் தன்னைத்தான் தலைமையாக நிலைநிறுத்தியுள்ளது. இது எந்த வகையில், புதிய அரசியல் ரீதியான மாற்றத்தை பிரதிபலிக்கும்? கடந்தகால தனது பிரமுகர் தனத்தில் இருந்து, தன்னை சுயவிமர்சன ரீதியாக எந்த வகையில் தன்னை மாற்றியுள்ளது? இதுதான் இன்று பெயர் மாற்றத்தின் பின்னான, எமது கேள்வியாகும்.

கட்சியின் பெயர் மாற்றத்தை எடுத்தால், அது கூட மிகத் தவறான அரசியல் அடிப்படையைக் கொண்டுள்ளது. "புதிய ஜனநாயக மாக்சிச-லெனினிசக் கட்சி" என்பது, கோட்பாட்டு ரீதியாகவே தவறானது. இது ஒரு மார்க்சிய லெனினியக் கட்சியாக உள்ளடக்க ரீதியாகவே இருக்க முடியாது. மார்க்சிய லெனினியம், புதிய ஜனநாயகத்தை தனது கட்சிப் பெயராக கொண்டு இருக்க முடியாது. "புதிய ஜனநாயகம்" என்பது பாட்டாளி வர்க்கத்தை மட்டும் கொண்டதல்ல. மாறாக அது தேசிய முதலாளித்துவ வர்க்கங்களையும் உள்ளடக்கிய, வர்க்கங்களின் பொது அரசியல் நலனை அடிப்படையாகக் கொண்டது. இது மார்க்சிய லெனினிய நலனை மட்டும் கொண்டதல்ல. இது பாட்டாளி வர்க்க நலன்கள்; முதல் தேசிய முதலாளி வர்க்க நலன்களை உள்ளடக்கிய, ஒரு புரட்சிகர அரசியல் அடிப்படையைக் கொண்டது. புதியஜனநாயகம் என்பது, ஒரு வர்க்கத்தின் அரசியல் நலனை மட்டும் பிரதிபலிக்கும் கோசமல்ல. இதை உள்ளடக்கிய அரசியலை, மார்க்சிச-லெனினிசக் கட்சியாக கூறினால் அதுவொரு அரசியல் திரிபாகும். பாட்டாளி வர்க்கத்தை ஏமாற்றும் அரசியல் மோசடியாகும்.  மார்க்சிய லெனினியம் என்பது, அதன் அரசியல் உள்ளடக்கத்துக்கு ஏற்ப ஒரு கம்யூனிசக் கட்சியாக மட்டும்தான் இருக்க முடியும்;.

இதை "புதிய ஜனநாயக மார்க்சிச-லெனினிசக் கட்சி" ஒரு தவறாக செய்திருந்தால், அது புரட்சியில் ஈடுபடுவதை தன் ஒரு அரசியல் நடைமுறையாக அது முன்னெடுக்கும் பட்சத்தில், அவை திருத்தப்பட வேண்டும். தெரிந்தே இந்தத் திரிபை புகுத்தியிருந்தால், திட்டமிட்டே பாட்டாளி வர்க்கத்தை இன்னும் சிறிது காலம் ஏமாற்ற நடத்திய பெயர் மாற்றமாகவே இனம் காண வேண்டும். இதுபற்றி எம்பங்குக்கு அவர்களுடன் நாம் பேச வேண்டியுள்ளது.   

மேலும் இந்த அறிக்கையில் ".. பாராளுமன்ற வரையறைகளுக்கப்பால் விரிந்தது பரந்த அரசியல் வேலைத்திட்டம் உறுதியாக முன்னெடுக்கப்பட வேண்டும்." என்பதன் மூலம், பாராளுமன்ற வரையறை பற்றி, தங்கள் தவறான கடந்தகால பார்வையை மார்க்சிய உள்ளடக்கத்தில் திருத்தத் தவறியது வெளிப்படுகின்றது. "பாராளுமன்ற வரையறைகளுக்கு"ள் தாம் நீடிப்பதையே, இந்த கூற்று மறுபடியும், பிரதிபலிக்கின்றது.   

கடந்தகாலத்தில் தாம் வர்க்கப்போராட்டத்தில் ஈடுபடாத நிலையில், அப்படி ஈடுபட்டவர்களை மறுக்கும் அரசியலை இங்கு முன்தள்ளுகின்றனர். அதை தம் அறிக்கையில் "மிதவாதத் தமிழர்கள் முதல் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரை எவரும் முற்போக்கு தேசியத்தை முன்னெடுக்காது ஏகாதிபத்தியச் சார்பு, இந்தியச் சார்பு நிலை நின்று பழைமைவாதப் பிற்போக்குத் தேசியத்தை முன்னெடுத்தனர்." என்ற வரலாற்றுப் புரட்டை மீளவும் முன் வைக்கின்றனர். ஏகாதிபத்திய எதிர்ப்பு, இந்திய எதிர்ப்பு, முற்போக்கு தேசியத்தை முன்வைத்துப் போராடிய வர்க்க கூறுகளை நிராகரிக்கின்ற, அதன் தியாகத்தை கொச்சைப்படுத்துகின்ற அரசியல் பித்தலாட்டத்தை மீளவும் இங்கு வெளிப்படுத்தியுள்ளனர். இப்படி அன்றைய எதிர்ப்புரட்சி கூறுகளை சார்ந்து நின்று, புரட்சிகர கூறுகளை நிராகரிக்கின்ற அரசியலையே மீளவும் முன்வைத்துள்ளனர். அன்றைய பிற்போக்குவாதிகளுக்கு, கொள்கை ரீதியாகவும், கோட்பாட்டு ரீதியாகவும் இன்று துணையாக நிற்கின்றனர். அன்று தாங்கள் ஒரு புரட்சிகரமான அரசியல் பாத்திரத்தை வகிக்காத, அதே நேரம் அதை சுயவிமர்சனம் செய்யாமல் இருக்கும் வரை, புரட்சிகரமான அன்றைய கூறுகளையும் அதன் தியாகத்தையும் எதுவுமற்றதாக காட்டுவதே புரட்சிகரமற்ற அரசியலாகி விடுகின்றது.

உண்மையில் நீங்கள் தொடர்ந்தும் தவறுகளை இழைக்கின்றீர்கள். புரட்சியில் உங்களுக்கு அக்கறை இருக்கும் பட்சத்தில், நாம் உங்களுடன் விவாதிக்க முடியும். உங்கள் திட்டத்தில் உள்ள உடன்பாடு, உங்களுடன் விவாதிக்க எம்மைக் கோருகின்றது. அதற்காக நீங்கள் முன் கையெடுக்காவிட்டாலும், நாம் முன் கையெடுக்கவேண்டிய பொறுப்பு எமக்கு உண்டு என்பதை நாம் உணருகின்றோம்.   

பி.இரயாகரன்
09.07.2010

 


பி.இரயாகரன் - சமர்