Language Selection

ஐயர்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இன்று புளட் அமைப்பின் தலைவராகவிருக்கும் சித்தார்தன் இரு குழுக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளிலும் சமரச முயற்சிகளிலும் ஈடுபடுகின்றார். பிரபாகரன் குழுவோடு பேசிவிட்டு எம்மைத் தேடிவந்த சித்தார்தன் நாம் ஏன் பிரபாகரன் குழுவோடு இணைந்து செயற்படக் கூடாது என கேள்வியெழுப்புகிறார். நாம் எமது கோரிக்கைகள் குறித்துக் கூறுகிறோம். தமிழீழ விடுதலைப் புலிகளின் வழி தவறானது என்றும் அது அழிவிற்கே வழிவகுக்கும் என்பதை தெளிவுபடுத்த முனைகிறோம். அவர் அதனைப் புரிந்து கொண்டதற்கான எந்த அறிகுறியையும் காட்டவில்லை. அவர் கூறியதெல்லாம் இரண்டு குழுக்களுமே தமிழ் ஈழத்தை நோக்கியே போராடுகிறீர்கள் பின்னர் ஏன் இணைந்து செயற்படக் கூடாது என்பதே.

சித்தார்த்தன் மட்டுமல்ல எம்மோடு இணைவு குறித்தும் இணக்கப்பட்டு குறித்தும் பேசியவதற்கு முன்வந்த அனைத்துத் தரப்பினரும் இதே வகையான சிந்தனைப் போக்கினைத் தான் கொண்டிருந்தனர்.

இதே வேளையில் குலம் சிறையிலிருந்து விடுதலையாகிறார். விடுதலையான மறுதினமே அவர் எம்மைத் தேடிவருகிறார். எமது பிரிவை அறிந்து விரக்தியடைந்த அவர் எமது இரு பகுதியினருடனும் பல தடவைகள் பேச்சுக்களில் ஈடுபடுகிறார். இதன் பின்னதாக லண்டலிருந்து ராஜா என்பவரும் எம்மிடம் வருகிறார். புலிகளோடு முன்னமே தொடர்பிலிருந்த அவர் எமது இணைவிற்காக தொடர்ந்து உழைக்கிறார். பல தடவைகள் பிரபாகரன் குழுவைச் சார்ந்தோரையும் எம்மையும் மாறி மாறிச் சந்திக்கிறார். இவரின் முயற்சியின் பலனாக பழைய மத்திய குழுவை மறுபடி ஒன்று கூடி பிரிவிற்கான காரணத்தை விவாதிக்க வேண்டும் என்ற முடிவிற்கு வருகிறோம்.

பிரிவிற்கு முன்னதாக மத்திய குழுவில் நான்கு உறுப்பினர்கள் மட்டுமே அங்கம் வகிக்கிறோம். நான்,நாகராஜா, பிரபாகரன், பேபி சுப்பிரமணியம் போன்ற நால்வரில் நாகராஜாவும் நானும் புதியபாதைக் குழுவில் செயற்பட்டுகொண்டிருக்க பேபி சுப்பிரமணியம் பிரபாகரன் சார்ந்த குழுவோடு இணைந்திருந்தார்.

இந்த சந்திப்புக் குறித்து சுந்தரம், கண்ணன், நாகராஜா, குமணன் உட்பட எமது குழுவிலிருந்த அத்தனை உறுப்பினர்களோடும் விவாதிக்கிறோம். சுந்தரம்இ கண்ணன் போன்றோரிற்கு ஆரம்பத்தில் சந்திப்பு நடைபெறுவது குறித்து முரண்பட்ட கருத்துக்கள் நிலவினாலும் இறுதியில் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருகிறார்கள்.

இறுதியாகச் சந்திப்பு நிகழும் நாள் தீர்மானிக்கப்படுகிறது. ராஜாவின் ஏற்பாட்டின்படி நானும் நாகராஜாவும் இருக்கும் இடத்தை நோக்கி பிரபாகரனும் பேபி சுப்பிரமணியமும் வருகின்றனர். யாழ்ப்பாணப் பகுதியிலிருந்த தொலைக் கிராமம் ஒன்றில் சந்திப்பு நிகழ்கிறது. பிரபாகரன் என்னோடு அதிகமாகப் பேசவில்லை. சில நிமிடங்கள் எங்கிருது ஆரம்பிப்பது என்ற சிந்தனையோடத்திற்கு நடுவே பேச ஆரம்பிக்கிறோம். நடந்து முடிந்த இதயம் கனக்கும் நிகழ்வுகளிலிருந்தே பேச்சுக்களை ஆரம்பிக்கிறோம்.

இன்னும் பசுமை கொழிக்கும் நினைவுகளாக நிறைந்திருக்கும் ஒவ்வொரு போராளிகளும், நடந்தே கடந்த காடுகளும் மலைகளும் அப்போதும் எனது நினைவுகளில் மறுபடி மறுபடி வந்துபோயின. எனக்கு நேரெதிரில் பிரபாகரன் பேபியுடன் தயாராக இருந்தார்.

எம்மில் யாருக்குமே பிரிந்து செல்வது என்பதும் தனியான குழுக்களாகச் செயற்பட வேண்டும் என்பதும் அடிப்படை நோக்கமாக இருந்ததில்லை. நாம் இணைந்து செயற்பட வேண்டும் ஆனால் நமது திசைவழி தவறானது என்பதையே நானும் நாகராஜாவும் மறுபடி மறுபடி கோடிட்டுக் காட்டிக்கொண்டிருந்தோம்.

பேபி எப்போதும் போல மௌனமாகத்தான் இருந்தார். பிரபாகரன் இடைக்கிடை குறுக்கிட்டு ஆட்சேபனை தெரிவிக்கிறார். விவாதங்கள் சில நிமிடங்கள் நீடிக்க, கோரிக்கைகள் குறுக்கப்பட்டுகொண்டே வருகிறது.

செயற்குழு, மக்களமைப்பு, மக்கள் போராட்டம் என்பவற்றிலிருந்து இணைவை ஏற்படுத்தும் நோக்கில் கோரிக்கைகளை குறைத்துக்கொண்டே வருகிறோம். எதிலும் இணக்கம் ஏற்பட்டாகவில்லை. இறுதியில் நான் கேட்டதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நாம் கொலைகளுக்கான சுயவிமர்சனம் செய்துகொள்வோம் என்கிறேன்.

இந்த வேளையில் தான் முதல் தடவையாகப் பிரபாகரனிடம் மைக்கல் பற்குணம் கொலைகள் குறித்த எனது விமர்சனத்தை முன்வைக்கிறேன். இதுவரையில் சுந்தரம், குமணன் போன்றோர் கொலை குறித்துப் பேசும் போதெல்லாம் செயற்குழு தெரிவுசெய்யப்பட்டு மக்கள் வேலைகள் முன்னெடுக்கப்படுதலே இப்போதைக்கு பிரதானமானது என்று கூறி அவர்களைத் தடுத்திருந்தேன். இப்போது நான் பிரபாகரனை நோக்கி நேரடியாக அதே கேள்வியை முன்வைக்கிறேன்.

மைக்கலையும் பற்குணத்தையும் வெறும் பயத்தினதும் சந்தேகத்தினதும் அடிப்படையில் கொலைசெய்ததை சுயவிமர்சன அடிப்படையில் தவறு என்று ஏற்றுக்கொண்டு இயக்கவேலைகளில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்று கோருகிறேன்.

நாம் ஆரம்பத்தில் தவறிழைத்திருக்கிறோம் அவற்றைத் தவறுகள் என்று ஏற்றுக்கொண்டு என்று ஏற்றுக்கொண்டு அமைப்பு வேலைகளில் இணைந்து செயற்படுவோம் என்பது மட்டும் தான் எனது குறைந்தபட்சக் கோரிக்கையாக அமைந்தது.

தவறுகள் ஏற்றுக்கொள்ளப்பட்டால் உள்ளக ஜனநாயகமும் விவாதத்திற்கான வெளியும் உருவாகும் என நானும் நாகராஜாவும் நம்பியிருந்தோம். இவ்வாறான பன்முகத்தன்மையின் அவசியத்தை, விவாதங்களூடாக முடிவுகளை நோக்கி நகரும் தேவையை அனைத்து உறுப்பினர்களும் எதிர்பார்த்திருந்தனர்.

நான் கூறிய அனைத்தையும் அவதானமாகக்கேட்டுக்கொண்டிருந்த பிரபாகரன், எனது கோரிக்கையை முற்றாக நிராகரிக்கிறார். பேபி சுப்பிரமணியமும் அதனை ஆமோதிக்கிறார். தான் பற்குணம் மைக்கல் ஆகியோரைக் கொலைசெய்ததில் எந்தத் தவறும் இல்லை. இந்தக் கொலைகளை அன்றும் இன்றும் சரியான செயற்பாடாகவே கருத்துவதாகப் பிரபாகரன் வாதிடுகிறார். அதற்கு மேலேயும் சென்று கொலைகள் தவறு என்று தான் கருதினால் தற்கொலைசெய்துகொள்வேண்டும் என்றும் பிரபாகரன் கூறுகிறார். அவை தவறானால் தான் தற்கொலை செய்துகொள்ளத் தயார் என்கிறார்.

மைக்கல் வெளியேறி பாதுகாப்புப் படைகளிடம் சிக்கிக் கொண்டால் எமக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதியிருந்தோம். பற்குணம் தனியாகச் சென்று செயற்பட விரும்பிய போதும் இவ்வாறான மனோநிலையிலேயே இருந்திருக்கிறோம். அவர்கள் அரசின் உளவாளிகளாகவோ, ஆதரவாளர்களகவோ, இன்னும் காட்டிக்கொடுப்பாளர்களாகவோ இருந்ததில்லை.

எது எவ்வாறாயினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமையைப் பாதுகாக்க இந்தக் கொலைகள் அவசியமானது தான் எனப் பிரபாகரன் கூறுகிறார்.

பிரபாகரனின் இந்தக் கூற்றானது எமக்கு பேசுவதற்காக இருந்த அனைத்து வழிகளையும் மூடிவிடுகிறது. தனிமனிதப் படுகொலைகளைத தவறு என்று தெரிந்த பின்னரும் நியாயப்படுத்துகின்ற போக்கானது, இணக்கப்பாட்டை நோக்கி நகரமுடியாத இக்கட்டான சூழ்நிலையை உருவாக்கிவிடுகிறது.
பேசுவார்த்தை எந்த முடிவையும் எட்டவில்லை. பிரபாகரன் பேபி ஆகியோர் எம்மிடம் முகம் கொடுத்துப் பேசாமலே எழுந்து சென்றுவிடுகின்றனர்.

குறைந்தபட்ச இணக்கத்திற்குக் கூட முன்வர மறுத்த பிரபாகரன் குறித்து எமக்கு மிகுந்த விரக்தியும் வெறுப்பும் தான் எஞ்சுகிறது.
எமது அமைப்பின் வருவாய்க்காக நாட்கூலியையும் தோட்டவேலைகளையுமே நம்பியிருந்த துன்பகரமான சூழலில் பிரபாகரன் குழுவை எதிர்த்துக்கொண்டு எம்மோடிருந்த மத்தியதர வர்க்க இளைஞர்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தனர். பத்திரிகை ஊடாக மக்கள் மத்தியில் போராட்டத்தை நோக்கிய சிந்னையை விதைக்க வேண்டும் என்றும் மக்களமைப்புக்களை உருவாக்க வேண்டும் என்றும் நாம் மிக உறுதியான கொள்கைப்பிடிப்போடிருந்தோம்.

எது எவ்வாறாயினும் நாம் எமது வேலைகளில் எந்தப்பின்னடைவையும் கொண்டிருக்கவில்லை. புதிய பாதை சஞ்சிகைக்கான வேலைகளை தொடர்கிறோம். தவிர, சண்முகதாசனின் சீனக் கொம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்த முக்கிய இளம் உறுப்பினர் ஒருவரை அணுகி அவரூடாக அரசியல் வகுப்புக்களையும் ஒழுங்கு படுத்துகிறோம்.

தாம் சார்ந்த சமூகத்தின் விடுதலையை நோக்கி அனைத்தையும் துறந்து முழு நேர உறுப்பினர்களாக இணைந்திருந்த பிரபாகரன் உட்பட அனைத்துப் போராளிகளையும் ஏதாவது ஒரு குறைந்தபட்ச அடிப்படையிலாவது ஒருங்கமைக்க வேண்டும் என்ற உணர்வில் தான் நாம் பேச்சுக்களுக்குச் சம்மத்தம் தெரிவித்திருந்தோம்.

பேச்சுக்களின் தோல்வி எமக்கு மட்டுமல்ல, இணக்கப்பட்டை ஏற்பட முனைந்த ஆதரவாளர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.

ஆதரவாளர்கள் தமது முயற்சியை கைவிடவில்லை. லண்டனிலிருந்து வந்திருந்த ராஜா மற்றும் குலம் ஆகியோர் இணைவுக்கான புதிய திட்டங்களோடு எமது உறுப்பினர்கள் அனைவரையும் சந்திக்கின்றனர். பிரபாகரன் குழுவிலிருந்த உறுப்பினர்களையும் பலதடவை தனித்தனியாகச் சந்திக்கின்றனர். இடைவிடாத இவர்களின் முயற்சியின் பலனாக அனைத்து உறுப்பினர்களும் சந்த்தித்து உள்ளக வாக்கெடுப்பு ஒன்றை நிகழ்த்த வேண்டும் என்று முடிவாகிறது. பிரபாகரன், நாகராஜா, பேபிசுப்பிரமணியம், நான் அனைத்து உறுப்பினர்களையும் அழைத்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துவதற்கான திகதியும் குறிக்கப்பட்டுவிட்டது.

(இன்னும்வரும்..)

 

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்  

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)

  

13 வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

  

14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

 

15.உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

 

16.கொல்லப்படுவதிலிருந்து தப்பிய உமாமகேஸ்வரன் (பாகம்16)

 

17.நாம் செல்லும் திசை தவறானது – புலிகளுள் துளிர்விடும் அதிர்ப்தி – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 17)

 

18.புத்தகத்தைப் பறித்தெறியும் பிரபாகரன் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பாகம்18) : ஐயர்

 

 19.இரண்டாகப் பிளவுறும் விடுதலைப் புலிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்19) : ஐயர்


20.புதிய பாதையின் தோற்றம் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம்20) : ஐயர்

 

 http://inioru.com/?p=14842