09282021செ
Last updateவெ, 24 செப் 2021 3pm

அராஜகத்துக்கு மூளையே இல்லை-விஜிதரன் நாட்கள்

முன்னேறுங்கள்
போர் முனையில் !
மூளையை சலவை செய்து
முகங்களில் மூர்க்கத்தோடு
விழிகளை மேலே தூக்கி
கால்களில் வலிமையோடு
போர் முனையில்
முன்னேறுங்கள் !

நெருப்புக் கொள்ளியுடன்
என் அப்பன் சொல்கிறான்
”ஆமி சுடுகிறான்
அடுப்புச் சுடுவதையிட்டு
அலட்டிக் கொள்ளாதே”
எதிர்த்துப் போரிடுவதைத் தவிர
என் தாய்க்கு
வேறு வழியில்லை!

குருட்டுத் துப்பாக்கி குரல்வளையை குறிபார்க்கும்
மிரட்டல் தொலைபேசிகள்
மிச்சத்துக்கு அறிக்கைகள்
ஆனாலும் நாம் வாழ்ந்தாக வேண்டும்!
போர் முனையில் முன்னேறுங்கள்

மரப்பிடிக்கும் இரும்புக்குழாய்க்கும்
மனிதாபிமானம்
இருக்க நியாயமில்லை
அதற்காக
மனிதத் தோலுக்குமா ….?

மனிதத்தை தோற்கடிக்க
மரணத்தால் முடியாது
முன்னேறுங்கள்

இருப்புக்காகவே
எல்லாம் நடக்கிறது
இருப்பைத் தேடியே
இயக்கம் இருக்கிறது

வரி விதிக்கப்பட்ட
வாயோடு
புதை குழிகளை
புன்னகையோடு வரவேற்போம் !

சுரங்கத்தில்
தங்கமிருக்கலாம்
என்று
கரங்களில் விலங்குகளோடு
நடக்க
நமக்குச் சம்மதமில்லை.

விழிகளைத் தருவேன்
தாயகத்துக்கென்றவனை
விலங்கிட்டுக் கொன்றது
அநியாயம் … கொடுமை
என்றால்
விஜிதரனைக் காணவில்லை
என்பதற்கு விளக்கம் என்ன வேண்டிக்கிடக்கிறது!
முன்னேறுங்கள் போர் முனையில்

அராஜகத்துக்கு மூளையே இல்லை
அதனால்
மூலைக்கு மூலை
மக்கள் முணுமுணுப்பது
அதற்கு விளங்கவேயில்லை!
விவாதத்திற்கிடமின்றி
ஒன்று மட்டும்
உண்மை !

விலங்குகளோடு வாழ
மக்கள் விரும்பமாட்டார்கள்

விளங்குதா?
முன்னேறுங்கள் போர் முனையில்