என்.எல்.எவ்.ரி.யின் துணையுடன், பல்கலைக்கழக முற்போக்கு மாணவர்களின் பங்களிப்புடன் நான் நடத்திய போராட்டம், ராக்கிங் இன்றிய ஆண்டாக மாறியது. புலிகள் தண்டனை மூலம் ஓழிக்கும் ஆர்ப்பாட்டமான துண்டுப்பிரசுர மிரட்டல் பிசுபிசுத்துப் போனது. இப்படி புலிகளின் அரசியலுக்கு அங்கு இடமிருக்கவில்லை. ராக்கிங்கை புலிகளின் வன்முறை மூலம் ஒழிக்க முடியாது என்பது, மாணவர்களின் பொதுக் கருத்தாகியது.   

இப்படி அன்று அன்ரி ராக்கிங் நிலைப்பாடு, பெரும்பான்மையின் கருத்தாகியது. ராக்கிங் செய்ய விரும்பிய சிறிய அணி, தனிமைப்பட்டு அதைக் கைவிட்டது. புலிகள் அரசியல் ரீதியாக ஓரம் கட்டப்பட்டனர். 1986ம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் புதிய கல்வி ஆண்டு இப்படித்தான் தொடங்கியது. 

இதை முறியடிக்க புலிகள் குறுக்கு வழியில் இறங்கினர். ராக்கிங் செய்ததாக கூறி, மூவரை யாழ் நகர வீதிகளில் வைத்து தாக்கினர். இப்படித்தான் புலிகள் திட்டமிட்டு, வலிந்து ஒரு தாக்குதலை நடத்தினர். உண்மையில் அவர்கள் ராக்கிங் செய்திருக்கவில்லை. அப்படி செய்தாலும் கூட, தாக்கும் உரிமை அவர்களுக்கு கிடையாது. பல்கலைக்கழகம் உட்பட நிர்வாகம் வரை, அன்று அதை தண்டித்திருக்கும். துப்பாக்கி முனையில் நாலு குண்டர்கள் சேர்ந்து தாக்குவது போல், புலிக் குண்டர்கள் தாக்கினர்.  

இதை அடுத்து பல்கலைக்கழகம் கோபத்தில் கொதித்தெழுந்தது. சென்ற வருடம் தனிமைப்பட்டு போன பல்கலைக்கழக புலி சார்பு மாணவர் அமைப்பு தான், இன்னமும் மாணவர்களை பிரநிநிதித்துவம் செய்தது. இந்த நிலையில், இதற்கு எதிராக போராட  மறுத்தது. இதற்கு முன் மருத்துவபீட மாணவன் கேசவன் (புளாட் மாணவர் அமைப்பைச் சேர்ந்த) தாக்கப்பட்ட நிகழ்வை, இயக்க பிரச்சனையாக காட்டி அதையும் புறக்கணித்து இருந்தது. கேசவன் தாக்குதல் பின்னணியில், சிவரஞ்சித்தை புலிகள் மிரட்டிய நிகழ்வும் உள்ளடங்கியிருந்தது. 

அன்று சிவரஞ்சித் புலியில் இருந்து ஓதுங்கி, முற்போக்கான அரசியல் நிலையெடுத்து இருந்தார். பல்கலைக்கழகத்தின் முற்போக்கு அரசியல் வட்டத்துடன் தன்னை அடையாளப்படுத்தி நின்றதுடன், ஒரு சிறு சஞ்சிகையை (பெண்கள் சஞ்சிகை) தன் குடும்பம் ஊடாக கொண்டு வந்தார். (பெயர் ஞபாகமில்லை, அவரின் மனைவி ஊடாக என்று ஞாபகம்). இந்த செயல்பாட்டால் புலிகள் அவரைக் கொல்லலாம் என்று பல்கலைக்கழகம் அஞ்சியது. அதே நேரம் சிவரஞ்சித் அஞ்சி வாழ்ந்த நிலையில் தான், கேசவன் தாக்கப்பட்டார். கேசவனை சிவரஞ்சித் வீட்டின் முன் கொண்டு வந்து அவரின் வாசலில் வைத்து தாக்கியவர்கள், படுகாயமடைந்த அவரை சிவரஞ்சித் வீட்டின் முன் போட்டுவிட்டே சென்றனர். இதன் மூலம் நாளை இதுதான் உன் கதியும், என்று சிவரஞ்சித் மறைமுகமாக எச்சரிக்கப்பட்டார்.

இதன் போது புலி சார்பு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு இதற்கு எதிராக அசைந்து கொடுக்கவில்லை. ராக்கிங் பெயரால் புலி தாக்கிய போது, இதையே அது செய்தது. அன்ரி ராக்கிங் அணி, முழு மாணவர்களால் பொதுவில் தெரிவு செய்யப்பட்டதல்ல.  

போராட்டம் அடிவீழ்ந்த அந்தக்கணமே தன்னிச்சையாக வெடித்தது. அது தன்னிச்சையான சில கோசங்களை முன்னிறுத்தியது. அவற்றை தமிழ்தேசிய போராட்டத்துக்கு எதிரான கோசமாக காட்டி, புலிகள் விசமப் பிரச்சாரத்தை மேற் கொண்டனர்.

இந்த நிலையில் அன்றி ராக்கிங் அணி உள்ளடங்கிய முற்போக்கு பிரிவு, போராட்டத்தை நெறிப்படுத்தவும் தலைமையை ஏற்கவும் வேண்டிய நிலையை உணர்ந்தது. எப்படி என்ற விவாதத்தை, நாம் பல்கலைக்கழக தேனீர் விடுதியில் கூடி நடத்தினோம். இதன் போதே மாணவர்கள் கூட்டிய ஒரு பொதுமேடையில் புதிய குழுவை அமைப்பது என்ற முடிவை, விஜிதரன் முன்வைத்தான். இதுதான் விஜிதரனின் கதையை புலிகள் முடிக்க காரணமாகும்.

இதே நேரம் போராட்டம் சட்ட விரோதமானது என்று புலி சார்பு மாணவர் குழு கூறியது. இது தனது போட்டி புலி நிகழ்ச்சி நிரலை முன்வைத்;தது. இதை முறியடிக்க வேண்டியிருந்தது.  புலிசார்பு மாணவர் அமைப்புக் குழுவில் இருந்த முன்னைய புலியல்லாத உறுப்பினர்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஒரு போட்டிக் குழுவை மாணவர்களைக் கொண்டு தெரிவு செய்வது என்று முடிவாகியது. இந்த வகையில் முன்னைய குழுவில் இருந்த விமலேஸ்வரன், ஜோதிலிங்கம் உட்பட பழைய பிரதிநிதிகள் அதிகமாக உள்ளடங்கிய, புதிய அமைப்புக் குழு தெரிவானது. ஜோதிலிங்கம் இதன் தலைவர். இவர் ஈ.பி.ஆர்.எல்.எவ் இல் இருந்த புரட்சிகர குழுவாக செயல்பட்ட செழியன்-தாஸ் பிரிவைச் சேர்ந்தவர். விமலேஸ்வரன் இதன் செயலாளார். இவர் என்.எல்.எவ்.ரி. மாணவர் அமைப்பின் தலைமைக் குழு உறுப்பினர்களில் ஒருவர். இப்படி உருவான அமைப்புக் குழுவில், இந்தத் தெரிவை முன்வைத்த விஜிதரன் கூட இருக்கவில்லை.

இப்படி இந்த அமைப்புக் குழு உருவானது. இதைச் சுற்றி 100க்கு மேற்பட்ட, அரசியல் ரீதியாக விடையத்தை புரிந்து கொண்ட முன்னேறிய தோழர்கள் இருந்தனர். அவர்களை அன்ரி ராக்கிங் போராட்டம் அரசியல் ரீதியாக ஒருங்கிணைத்து இருந்தது. புளட்டில் இருந்து ஓதுங்கியிருந்த பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பலர், இதன் பின் அணிதிரண்டு இருந்தனர். விமலேஸ்வரன் கூட முன்னாள் புளட் அமைப்பில் இருந்து, ஒதுங்கி இருந்தவர்தான். அன்ரி ராக்கிங் அணியிலும் சரி, அமைப்புக் குழு உருவாக்கம் பற்றி நடத்திய கூட்டத்திலும் நாவலன் பங்கு பற்றியிருக்கவில்லை. அன்று மூன்று மாணவர்கள் தாக்கியதற்கு எதிராக, அமைப்புக்குழு முன்னெடுத்த போராட்டத்தில் நாவலன் தன்னை அடையாளப்படுத்தவில்லை. மாறாக மூன்று மாதத்தின் பின், நடந்த விஜிதரன் போராட்டத்தில் தான் தன்னை பகிரங்கமாகவில்லாமல் அமைப்புக் குழுவின் செயல்பாட்டுடன் இணைத்துக்கொண்டார். இப்படி நூற்றுக்கணக்கானவர்கள்  தம்மை இணைத்துக் கொண்டு போராட்டத்தை நடத்தினர். இதில் என்னுடையதும் மற்றும் நாவலனின் பங்கும் தனித்துவமானதாக மாறியதுடன், போராட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக மாறினோம். இருந்த போதும் எம்மை அமைப்புக் குழுவில் இணைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது, சிவத்தம்பியால்தான். புலிக்காக அவர் நடத்திய எதிர்ப்புரட்சி அரசியல் நாடகம் மூலம், இந்த போராட்டத்தினை வழி நடத்தியது அமைப்புக் குழுவுக்கு வெளியில் இருந்த நாம் இருவரும் என்பதை தெரிந்து கொணடார். அவர் எம்முடன் தான் பேசவேண்டும் என்று (சிவத்தம்பி இவர்தான் புலிக்கும் எமக்கும் இடையில் மத்தியஸ்தம் செய்யப் போவதாக கூறி புலியால் வழிநடத்தப்பட்டவர்) விடுத்த நிர்ப்பந்தத்தை அடுத்து, நாம் அவருடன் பேசவென அமைப்புக் குழுவில் இணைக்கப்பட்டோம்;. இப்படித்தான் நான் - நாவலன் அமைப்புக்குழுவில் இணைந்தோம். ஒரேநாளில் பொதுமேடையில் ஒன்றாக பெயர் அறிவிக்கப்பட்டு, இணைக்கப்பட்டோம்.

இப்படி உண்மையிருக்க தேசம்நெற் திரித்து புரட்டியது. தேசம்நெற் கூறுவதைப் பாருங்கள்  "விமலேஸ்வரன் பல்கலைக்கழக மாணவர்களைக் கூட்டி ‘விஜிதரன் போராட்டத்திற்கான "மாணவர் அமைப்புக்குழு" வை உருவாக்கினார். இக்குழுவினுள் விரைவில் சபாநாவலனும் உள்வாங்கப்பட்டார். அன்ரி ராக்கிங் மற்றும் விடயங்களால் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் ஒதுக்கப்பட்டு இருந்த இரயாகரன் சபாநாவலனின் அழுத்தத்தினால் விஜிதரன் போராட்டத்திற்கான மாணவர் அமைப்புக் குழுவினுள் இணைத்துக் கொள்ளப்பட்டார்." என்பதொல்லம் புரட்டுத்தனமானது.        

தொடரும்

பி.இரயாகரன்
06.07.2010

3.  ராக்கிங் நிலைப்பாடு பல்கலைக்கழகத்தைப் பிளந்தது, புலிகளைத் தனிமைப்படுத்தியது (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 3)

2. ராக்கிங்குக்கு எதிராக மாணவர்களை அணிதிரட்டுவதைத் தடுக்கவே, ராக்கிங்குக்கு எதிராக புலிகள் வன்முறையை ஏவினர் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி - 2)

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)