வரலாற்றைப் புரட்டுபவர்கள், அதைத் திரித்து விடுகின்றனர். இதன் மூலம் அந்த அரசியலை மறுத்து, நிகழ்காலத்தில் தங்கள் எதிர்புரட்சி அரசியலை முன்தள்ளுகின்றனர். இந்த வகையில் கடந்த காலத்தில் இயங்கங்களுக்கு எதிராக மக்களுக்காக நடந்த புரட்சிகரமான போராட்டத்தை மறுப்பதும், அதை இருட்டடிப்பு செய்வதும், அதை எதுவுமற்றதாக காட்டுவதே, இன்று திடீர் புரட்சி பேசுவோரின் எதிர்ப்புரட்சி அரசியல் உள்ளடக்கமாகும். இந்த வகையில் தான் எந்த சமூக நோக்கமுமற்ற, தன் மூடிமறைத்த அரசியல் பின்னணியுடன் தேசம்நெற் இயங்குகின்றது. இந்த வகையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தை திரித்துப் புரட்டிவிடுகின்றனர். அன்று இயக்கங்களின் மக்கள்விரோத போக்குக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்தை, கொச்சைப்படுத்தி திரித்து விடுகின்றனர்.

ரஜனி திரணகம "முறிந்தபனை" என்ற தன் நூலில்

"தமது அயலவர் ஒருவர் திடீரெனக் கடத்திச் செல்லப்பட்டுக் காணாமல் போனால் மக்கள் அது பற்றிப் பாராமுகமாயிருந்தனர். இவ்வாறு இருக்கத் தயாராயில்லாத சிலர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களாவர். விஜிதரன், றயாகரன் எனும் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் விவகாரத்தின்போது, இத்தகைய சூழ்நிலைகளிலே, அவர்கள் துணிகரமாகச் செயற்பட்டார்கள். .... அது பெருமளவில் உற்சாகத்தைக் காட்டுகின்ற முற்போக்கு இயக்கமாயிருந்தது. ... அதன் எதிர்ப்பு முடிவுற்றதும், அதன் தலைவர்கள் தலைமறைவாகவோ அல்லது வெளிநாட்டுக்குச் செல்லவோ வேண்டியிருந்தது. தலைவர்கள் பலரும் சமூகத்தின் கீழ்மட்டத்திலுள்ள நூற்றுக்கணக்கான சாதாரண பெண்களும், அவசியமானதும் மூத்தவர்கள் செய்வதற்குப் பின்வாங்கியதுமான ஒன்றைச் செய்வதில், அரியதொரு துணிவைக் காட்டினார்கள்."

இப்படிப்பட்ட ஒரு போராட்டத்தையே, தேசம்நெற் தன் பிற்போக்கு அரசியல் நோக்குடன் புரட்டித் திரித்து கொச்சைப்படுத்துகின்றது.

இந்த மாணவர் போராட்டம் எங்கிருந்து, எப்படித் தொடங்கியது. இதுவொரு அடிப்படையான கேள்வி. இது போன்ற போராட்டங்களை முன்னெடுக்கக் கூடிய "மாணவர் அமைப்புக் குழு" எதில் இருந்து எப்படி உருவானது? ஆம் நான் அன்று தொடங்கிய ராக்கிங் எதிர்ப்பு போராட்டம் தான், இந்த போராட்டக் குழுவை மட்டுமல்ல, போராட்டத்தையும் கூட உருவாக்கியது.

அன்று ராக்கிங்கிக்கு எதிரான எனது அரசியல் நிலையை தடுக்க, புலிகள் ராக்கிங்கிக்கு எதிராக கையாண்ட வன்முறைதான் மாணவர்களை அரசியல் மயமாக்கியது. யாழ் பல்கலைக்கழகத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வரலாறு, ராக்கிங்கிக்கு எதிரான எனது அரசியல் நிலையுடன், நான் நடத்திய போராட்டத்தின் நீட்சியுடன் தொடங்கியது. 

தேசம்நெற் திரித்தது போல் விஜிதரன் போராட்டத்தில் மாணவர் அமைப்புக் குழு திடீரென தோன்றி, தன்னிச்சையாக திடீர் புரட்சிகர கோசத்தை வைத்தது கிடையாது. அமைப்புக்குழு முன் கூட்டியே இருந்ததுடன், இது அன்ரி ராக்கிங் குழுவின் அரசியல் அடித்தளத்தில் இருந்து தோற்றம் பெற்றது. இதில் நாவலன் போன்ற சிலர் புரட்சிகரமான போராட்ட அணிதிரட்டல் எழுந்த பின், அந்த அரசியல் அலையில் இணைந்தனர். முன்பே நாவலன் வெளியில் புரட்சிகர சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலில் இருந்தவர் என்பதுடன், என்னுடன் வெளியில் இருந்த மாணவர் அமைப்புக்கள் சார்பான பொதுநிகழ்ச்சி நிரல் சார்ந்து பொதுவாக சேர்ந்து  இயங்கியவர். எமது அன்ரி ராங்கிங் நிகழ்ச்சி நிரலில், எம்முடன் தன்னை இணைத்துக் கொண்டவரல்ல. இந்த அன்ரி ராங்கிங் நிகழ்ச்சி நிரல் தான், புலிக்கு எதிரான யாழ் பல்கலைக்கழக போராட்டத்தில் புரட்சிகர வரலாற்றை தீர்மானித்தது.   

புலிகள் தம் அதிகாரத்தை பல்கலைகழகத்தில் நிலைநிறுத்தவும், ராக்கிங்கு எதிரான எனது அரசியல் அணிதிரட்டலைத் தடுக்கவும், அவர்கள் ராக்கிங்கிக்கு எதிரான ஒரு நிலையை எடுக்கத் தூண்டியது. நான் மாணவர்கள் ராக்கிங்கிக்கு எதிராக அரசியல் ரீதியாக அணிதிரள்வதை கோர, புலிகள் ராக்கிங்கு எதிரான வன்முறையை ஏவினர். இப்படி இரு வழியான, நேர் எதிரான  போராட்டம் தான், பல்கலைக்கழகத்தின் புரட்சிகரமான போராட்டத்துக்கு இட்டுச்சென்றது.  புலிகள் ராக்கிங்கிக்கு எதிராக கையாண்ட வன்முறைதான், புலிக்கு எதிரான போராட்டத்தின் நிகழ்ச்சிநிரலை உருவாக்கியது. நான் கூறியதற்கு மாறாக, புலிகள் ராக்கிங்கை வன்முறை மூலம் ஒழிக்கப் போவதாக கூறினர். மாணவர்கள் மீது வன்முறையை ஏவினர். இதற்கு எனது ராக்கிங் எதிர்ப்பு அரசியல் போராட்டமே மூல காரணமாக இருந்தது. இப்படி இரண்டு நேர் எதிரான போராட்ட வழிமுறை தான், புலிக்கு எதிரான மாணவர்களின் அரசியல் போராட்டத்தின் வரலாறாக மாறியது. இது எப்படி எங்கிருந்து தொடங்கியது? இதை நாம் அன்று நடந்த விடையங்கள் ஊடாகப் பாhப்போம்.

நான் பல்கலைக்கழகம் புகுந்த 1985ம் ஆண்டு ராக்கிங்கிக்கு எதிராக, தனித்தே என் எதிர்ப்புப் போராடத்தைத் தொடங்கினேன். என் தந்தை உட்பட (அக்காலத்தில் தந்தை கடுமையாக உயிருக்கு போராடியபடி இருந்த நிலையில் உற்சாகம் ஊட்டினார். – அவ்வருடம் அவரும் மரணித்தார்) எனது இயக்கம் முழுமையாக இதற்கு துணையாக நின்றது. 1985ம் ஆண்டு ராக்கிங் செய்ய மறுத்துத் தொடங்கிய எனது போராட்டம், 1988; நான் பல்கலைக்கழகத்தில் இருந்த வரை என்னுடன் தொடர்ந்தது.

1985 இல் ராக்கிங்கை எதிர்த்து அதை செய்ய மறுத்த நான், நேருக்கு நேர் முகம் கொடுத்தேன். இது படிப்படியாக என்னை மட்டும் ராக்கிங் செய்யவைக்கும் சவாலாக, அந்த எல்லைக்குள் அவர்கள் அணிதிரண்டனர். பலர் நூற்றுக்கணக்கில் என்னைச் சுற்றிவளைத்தனர். இதன் போது மிரட்டுதல், அச்சுறுத்துதல், பின்பக்கம் நின்று அடித்தல், தூசணத்தால் பேசுதல், கதைத்தல் என்று இது முன்னேறியது. நான் நேருக்கு நேர் பதில் கொடுத்தேன். எங்கும் ஓரே கூச்சல் குழப்பம். பல்கலைக்கழக நிர்வாகம் அடிக்கடி இதில் தலையிட்டது.

இந்த நிலையில் தான், ஒரு துண்டுப்பிரசுரத்தை விநியோகிக்கும் முடிவை நான் எடுத்தேன். இதுதான் பல்கலைக்கழகப் போராட்டத்திற்கு, அரசியல் அடிதளத்தையிட்டது. நான் முதல் ஆண்டு மாணவனாக இருந்த போதும், துண்டுப்பிரசுரத்தை தன்னந்தனியாக பல்கலைக்கழகத்தில் துணிந்து விநியோகித்தேன். அச்சுறுத்தல் மற்றும்  துண்டுப்பிரசுரத்தை பறிக்க முயன்ற போது, அதை மீறியும் அனைத்து பீடத்துக்கும் விநியோகித்தேன். நான் அன்று விநியோகித்த துண்டுப் பிரசுரத்தில். "றாக்கிங் என்பது பல்கலைக் கழக மாணவர்களின் ஒரு பண்பாட்டு அம்சமா? என்று கேட்டு இருந்தேன். இப்படி அன்று நான் வெளியிட்ட துண்டுப்பிரசுரமும், பல்கலைக்கழகத்தை இரண்டாக்கியது. தொடங்கியது போராட்டம். புலிசார்பு மாணவர் அமைப்பும், புலிசார்பு மாணவர் சங்கமும், இருதலைக்கொள்ளி எறும்பாக நெளிந்தது. மாணவர்களை தங்கள் ஒரு தலைமையின் கீழ் கட்டுப்படுத்தும், பொதுவான பிற்போக்கான சமூக ஓட்டத்தைத் தகர்த்தது.

ராக்கிங் செய்தவர்கள் முதல் வருட மாணவர்களிடம் இருந்து துண்டுப்பிரசுரங்களை பறித்து, அதை பொது இடத்தில் போட்டுத் தீ வைத்தனர். முதல் வருட மாணவர்கள் அதை இரகசியமாக வைத்து படிக்கத் தொடங்கினர். முதல் வருட மாணவர்களிடம் எனக்கு எதிராக ஒரு துண்டுப்பிரசுரத்தை அடிக்க கட்டாய நிதியையும் வசூல் செய்தனர். இந்தளவு நடந்த போதும், நான் துணிச்சலுடன் பல்கலைக்கழகத்தில் தனித்து நின்றேன்.

இந்த துண்டுப்பிரசுரத்தை அடுத்து, ராக்கிங் செய்த கும்பல், மாணவர்களின் பொதுக் கூட்டத்தை கூட்டினர். புலிகள் சார்ந்த மாணவர் சங்கம் இதை முன்னின்று கூட்டியது. புலிகள் சார்ந்த அமைப்பு பொது ஓட்டத்தில் நின்று, எனக்கு எதிரான கண்டனத்தை வெளியிட்டது. துண்டுப்பிரசுரத்தை விட்டது தவறு என்றனர். இப்படி அவர்கள் நிலையெடுக்க, மாணவர்கள் இரு பிரிவாகி சர்ச்சைக்குள்ளாகியது. இதனால் புலிசார்பு மாணவர் அமைப்பின் தலைமைத்துவம், கேள்விக்குள்ளாகியது. ஆம் அன்று எனது போராட்டத்தால் அது இரண்டாகியது. இனி அவர்கள் தலைமை சாத்தியமில்லை என்பதை அன்றைய நிகழ்வு பறைசாற்றியது. அதன் பொதுத்தலைமைத்துவத்துக்குரிய, நம்பகத்தன்மையை இழந்தது. அது செயலற்ற, புலித் தன்மைக்குள் இட்டுச்சென்றது. இந்த நிலையில் நான் அனுமதி கோரி, மேடையில் ஏறி, பேச முற்பட்டேன். மேடைகளை நோக்கி கதிரைகள் எறியப்பட்டன. கூட்டம் சிதறிக் கலைந்தது. என்னைத் தாக்க ஒரு கூட்டம் மேடை நோக்கி வர முனைந்தது. என்னைப் பாதுகாக்க ஒரு பகுதி மாணவர்களும், ஆசிரியர்களும் அணிதிரண்டனர். இப்படி  பல்கலைக்கழகம் அன்று இரண்டுபட்டது. என்னை பாதுகாத்த மாணவர்கள், மாணவர்  அறைக்கு என்னை இட்டுச் சென்ற போது, அந்தக் கட்டிட யன்னல்கள் அடித்து நொருக்கப்பட்டது. இப்படி ராக்கிங் சார்ந்து, இரு அணியாக பல்கலைக்கழகம் பிளந்தது. அன்ரி ராக்கிங் அணிக்குள் முற்போக்கு எண்ணம் கொண்ட அனைவரும் இணைந்தனர். இயக்கத்தில் இருந்து ஓதுங்கியிருந்த பலர் என்னுடன் தம்மை அடையாளப்படுத்திக் கொண்டனர். இதில் குறிப்பாக விமலேஸ்வரன், செல்வி, தில்லை… முதல் விஜிதரன் என்று பலரும் என்னுடன் அணிதிரட்டனர். இப்படி நான், நாம் என்ற பலம் பொருந்திய, உறுதியான அரசியல் அடிப்படையை உருவாக்கிக் கொண்டோம். ராக்கிங் செய்த சிறுபான்மை கூட்டம், சிறு கும்பலாக தனிமைப்பட்டது. பெரும்பான்மை அறிவியல் பூர்வமாக முதல் முறையாகத் சிந்திக்கத் தொடங்கினர். இதை அடுத்து தொடர்ச்சியான நிகழ்வுகள், பல்கலைக் கழகத்தை புலியின் வலதுசாரிய அரசியல் போக்கில் இருந்து இடதுசாரி போக்குக்கு மாற்றியமைத்தது.          

தொடரும்

பி.இரயாகரன்
04.07.2010

 1. விஜிதரனின் அரசியலை மறுப்பதன் மூலம், சமூக மாற்றத்துக்கான போராட்டத்தை மறுத்தல் (யாழ் பல்கலைக்கழகப் போராட்டம் மீதான புரட்டு – பகுதி 1)