Language Selection

சிறி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

பல்கலைக்கழக அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு எதிராக தரப்படுத்தல் உருவானது என கொதித்தெழுந்து ஆயுதம் ஏந்திய தமிழ் இனவாத அரசியல் தமிழ் பிரதேச பல்கலைக்கழகத்துக்கு அத்திவாரமிட்டு அதனை உருவாக்கித்தந்த பேராசிரியர் கைலாசபதிக்கு குண்டெறிந்தது பற்றி தேசம்நெற் ஜெயபாலன் வரலாறு ஏன் பதியவில்லை?

ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...06   என்ற தனது கட்டுரையினூடாக ரூபன் இந்த வரலாற்றை பின்வரும் குறிப்புகளில் தமிழரங்கத்தில் பதிந்திருப்பதை இங்கு மீளவும் தருகின்றேன்.

சனி 06 ஒக்டோபர் - 74 காலை நேரம் பலாலி - யாழ் வீதி இரு மருங்கிலும் மக்களும் பாடசாலை மாணவர்களும் அணிவகுத்து நின்றனர். அன்று மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. தார்வீதியில் சிறிமாவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெண்கட்டியால் எழுதப்பட்ட வாசகங்கள் நனைந்து கொண்டிருந்தது. கறுப்புக் கொடிகளும் குடைகளும் மக்களின் கைகளில் காணப்பட்டது. ஆங்காங்கே சில மேடைகளில் சிலர் எதிப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிமாவின் வாகனம் இராணுவ அணிவகுப்புடன் பலாலி விமானநிலையத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. மழை பெய்துகொண்டிருந்ததாலும் பாதுகாப்புக்காரணத்தினாலும் வேகமாகவே அவ்வாகனம் சென்றது.

காங்கேசன்துறை பொலீஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்படிந்த ஜுப்புக்குக் குண்டு வீசப்பட்டது. துரையப்பாவின் சிறிமாவுக்கான நகரசபை மரியாதையைக் குழப்பும் நோக்குடன் மற்றொரு குண்டு யாழ் புகையிரத நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டது. இதேபோல யாழ் பஸ்தரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதேபோல சிறிமாவுக்கு மொழிபெயர்ப்பாளராகக் கலந்துகொண்ட கம்யூனிச கட்சி உறுப்பினரின் வீட்டுக்கும் குண்டு வீசி எச்சரிக்கப்பட்டது. மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவராக (வேந்தராக) பதவி ஏற்ற க.கைலாசபதியின் யாழ் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. ஒரு சில பஸ்சும் கொழுத்தப்பட்டது. இதில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியினரின் தூண்டுதலிலும் வழிகாட்டலிலும் புதிய புலிகளின் செட்டியும் பிரபாகரனும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். இவ் வன்முறைச் சம்பவங்களின் பின் பல தீவிரவாத இளைஞர்கள் பலரும் கைதாகத் தொடங்கினர்.

தேசம்நெற் ஜெயபாலன் தனது கட்டுரையில்

//1977ம் ஆண்டு இனக்கலவரமும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் மாணவர்கள் சிலர் தாக்கப்பட்டதன் எதிரொலியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கற்றுக்கொண்டிருந்த சிங்கள மாணவர்களைத் தாக்க சிலர் முற்பட்டனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் ஆசிரியர்களும் அவர்களுக்கு எவ்வித தீங்கும் நேர்ந்துவிடாது பாதுகாத்து பத்திரமாக தென்பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.//  

என கூறுகிறார்.

சிங்கள மாணவர்கள் எல்லோருமே பத்திரமாக அனுப்பி வைக்கப்படவில்லை.

யாழ்ப்பாணக்கல்லூரி வளாகத்தில் கல்விபயின்ற சிங்கள மாணவர்கள் இருவர் பஸ் ஒன்றில் யாழ்நகரம் நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தபோது இந்த பஸ்சில் பயணம் செய்தவர்களால் கத்திக்குத்துக்கு இலக்காகி இரத்தப்பலி எடுக்கப்பட்டனர். இந்த குற்றத்துக்கு பொலீசால் தேடப்பட்டவரான ”அம்பன்” என்பவர் பிற்காலத்தில் காந்தீயத்தின் பண்ணைகளில் தலைமறைவாகி இருந்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த அம்பன் பின்நாட்களில் புலிகளோடு இணைந்தார்.

தேசம்நெற் ஜெயபாலன் தனது கட்டுரையில்

//அந்த முக்கிய பொறுப்புக்களில் ஒன்றாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே பிரபாகரனுக்கு வாழ்க்கைத்துணை என்ற பொறுப்பையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே ஏற்றுக்கொண்டார். யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கில் தமிழீழ விடுதலைப் புலிகள் அவர்களைக் கடத்திச் சென்றனர். அவ்வாறு கொண்டு செல்லப்பட்ட மாணவிகளில் ஒருவரான விவசாயபீட இரண்டாவது ஆண்டு மாணவியான மதிவதனி ஏரம்புக்கும் வே பிரபாகரனுக்கும் 1984 ஒக்ரோபர் 1ல் தமிழகத்தில் திருப்போரூரில் திருமணம் நடைபெற்றது.//

என்கின்றார்.

இந்தக் கடத்தல் சம்பவம் உண்ணாவிரதமிருந்த மாணவர்களின் உயிரைக் காப்பாற்றும் நோக்கத்தில் புலிகளால் மேற்கொள்ளப்பட்டது என போகிற போக்கில் எழுத முனைகிறார் ஜெயபாலன். உண்மையில் இது ஒரு தன்னெழுச்சியான போராட்டமாகவே ஆரம்பத்தில் இருந்தது. இனக்கலவரங்களால் இடம்பெயர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் தென்னிலங்கையின் பாதுகாப்பற்ற சூழலைக் காரணம் காட்டி  தமது தென்னிலங்கை வளாகங்களுக்கு திரும்ப மறுத்தனர். தங்கள் கற்றைநெறிகளை தாங்கள் யாழ்பல்கலைக்கழகத்தில் தொடருவதற்கு உரிய இடமாற்ற அனுமதியைக் கோரினர். அது அரசினால் பரிசீலிக்க மறுக்கப்பட்டபோது அதனை எதிர்த்து எழுந்ததே இந்த உண்ணாவிரதப் போராட்டம். இடம்பெயர்ந்த மாணவர் சங்கம் என்ற மாணவர் குழு அதனை தன்னெழுச்சியாக ஏற்பாடு செய்திருந்தது. இந்த தன்னெழுச்சியான போராட்டத்துக்கு மாணவர்கள் மத்தியிலும் ஆதரவு இருந்தது. அன்றிருந்த இயக்கங்களும் ஆதரவாய் இருந்தன. ஆனால் புலிகள் இப்போராட்டம் அகிம்சை வழியிலானது வெற்றி கொள்ள முடியாதது மாணவர்கள் வீணாக தங்கள் உயிர்களை பலியிடப் போகிறார்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய காலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் எதற்கு? இது ஆயுதப் போராட்ட வழிக்கு ஒருவகைப் பின்னடைவு என்ற பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்து விட்டார்கள். தங்கள் கைகளை மீறி எதுவும் போகக் கூடாது என்பது அவர்களது இயக்க விதிகளில் ஒன்று. எனவே இப்போராட்டத்தை குழப்புவதற்கு அவர்கள் முயன்றார்கள். இந்த உண்ணாவிரதமிருந்தவர்கள் கடத்தப்படப்போகிறார்கள் என்ற புலிகளின் திட்டம் வெளியே ஏற்கனவே மாணவர்கள் மத்தியில் தெரிந்திருந்தது. கடததப்படப் போகும் நாள் நேரம் என்பனவும் கசிந்திருந்தது. இந்தக் கடத்தல் கைங்கரியத்தை தடுக்க வேண்டும் என்று மாணவர்களின் இன்னொரு பிரிவினர் முடிவெடுத்திருந்தனர். அன்றைய நாளில் உண்ணாவிரதமிருந்த முன்றலில் கடத்தப்படும் நிகழ்வை தடுப்பதற்கு கூடி இருந்தவர்களில் நானும் ஒருவன்.

புலிகளோ தமக்கேயுரிய வீர சாகசப் பாணியில் பல்கலைக்கழகத்துக்குள் வாகனமொன்றில் நுழைந்து ஆயுதம் தரித்த ஒரு அதிரடி நடவடிக்கையாக உண்ணாவிரதமிருந்த மாணவர்களை அள்ளி ஏற்றிக் கொண்டனர். புழுதி கிளம்பும் வேகத்தில் பல்கலைக்கழக வாசலை நோக்கி வாகனத்தைச் செலுத்திச் சென்றனர். ஒவ்வொரு வாசலையும் இழுத்துச் சாத்தி வாசல்களில் கடத்தல்நடவடிக்கையை தடுத்து மறிக்கவென நின்றிருந்த மாணவர்கள் அவர்களோடு வெறுங்கையோடு போராடிப் பார்த்தனர். அவர்களோ வாகனத்தை அங்கும் இங்கும் குறுக்காக ஓடி புலிகள் சார்பு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர் ஒருவரின் உதவியால் கதவொன்று திறந்துவிடப்பட வெளியேறினர். இந்த வாகனத்தை கலைத்துப் பின்சென்று குறுக்கே நின்று நாங்கள் மறித்தபோதும் அவர்கள் மோதி உயிரை எடுக்கவும் தயாராகவிருந்தார்கள். இப்படிப்பட்டவர்களா உண்ணாவிரதமிருந்த மாணவர்களின் உயிரின் மேல் கரிசனை கொண்டு அவர்களைக் காப்பாற்ற கடத்தினார்கள்?. மதிவதனியின் கடத்தல் இவ்வாறு தான் நடந்தது. 

மறுநாள் புலிகள் பற்றிய விளம்பரம் வீர சாகசமாக எங்கும் பேசப்பட்டது. அவர்கள் விரும்பியபடி அது அவர்களுக்கான ஒரு வீர சாகசப் பிரச்சாரமாகவும் மாறியது.

இதனை மறிக்க நடந்த போராட்டம் இந்த வீரசாகசப் பேச்சுகளுக்குள் மங்கி மறைந்து போனது என்பது தான் வரலாறு.

ஆனால் அதே புலிகள் பின்னாட்களில் திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம், தனது ஆயதங்களையும் தொலைத்தொடர்பு உபகரணங்களையும் மீளக் கையளிக்குமாறு கோரிக்கை வைத்து இந்தியாவில் பிரபாகரன் தானே நடத்திய உண்ணாவிரதப் போராட்டம், அன்னை பூபதியின் உண்ணாவிரதப் போராட்டம்,  இலண்டனில் பரமேஸ்வரனின் உண்ணாவிரதப் போராட்டம் என தங்கள் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு இன்னொரு நியாயம் பேசி அவற்றை நடாத்தி முடித்தார்கள்.

பல்கலைக்கழக மாணவர்கள் விஜிதரனுக்காக நடாத்திய போராட்டத்தின் போது அவர்களுக்கு மரணதண்டனை அளித்து பழி முடித்தார்கள். பல்கலைக்கழக மாணவர்களின் உண்ணாவிரதம் பற்றி கிட்டு உதிர்த்த வார்த்தைகள் இவை

"பு .. மக்கள் இவங்கள் இப்படியே இருந்து செத்துப்போகட்டும் யாராவது உண்ணாவிரதத்தை முறித்துக்கொண்டு எழும்பினால் வெடி வைப்பம் "

சூழ நின்ற பல்கலைக்கழக மாணவர்கள் செவிமடுக்கும் வகையில் இந்த முத்துவார்த்தைகளை உதிர்த்து மிரட்டிச் சென்றான் கிட்டு.

அதன்படியே தான் விமலேஸ்வரன் படுகொலை செய்யப்பட்டான்.

"என்எல்எப்ரி அமைப்பில் இருந்த பி இரயாகரனிடம் அவ்வமைப்பால் மேற்கொள்ளப்பட்ட ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையின் பணம் மற்றும் நகைகள் மறைத்து வைக்கப்பட்ட விபரம் இவருக்குத் தெரியும் என்பதினாலேயே இவரைத் தாங்கள் கைது செய்ததாக புலிகளின் தளபதி மாத்தையா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த கூட்டத்தில் கூறிக்கொண்டிருந்த போது"

என்ற தனது செருகலை விசமமாகச் செய்திருக்கிறார் ஜெயபாலன்

இங்கு தேசம்நெற் ஜெயபாலன், இரயாகரன் கைது செய்யப்படுவதற்கான காரணமாக புலிகள் கூறியதாக ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையை நாசூக்காக செருகி புலிகளின் உண்மையாக நோக்கத்தை இலாவகமாக பாதுகாக்கின்றார். பல்கலைக்கழகத்தில் பிரசன்னமாகியிருந்த மாத்தையாவினுடைய பேச்சு ஒலிவடிவில் தமிழரங்கத்தில் வெளியிடப்பட்டிருக்கின்றது. கேட்டுப்பாருங்கள். தனது பேச்சில் மாத்தையா கூட ஒரு சாட்டுக்காகவேனும் வைக்க முனையாத, எங்கும் கூறியிருக்காத குற்றச்சாட்டை வேண்டுமென்றே இங்கே ஜெயபாலன் அள்ளி வீசுவது புரிகின்றது. மிக நேர்மையான ஜேர்னலிசம்.

இரயாகரன் என்பது அன்றைய காலநிலையில் ஒரு நபர் அல்ல. ரெலோ இயக்கத்துக்கும் புலிகளுக்கும் இரயாகரன் என்பது அழிக்கப்பட வேண்டிய அரசியல் போக்கு என்பதாகவே அவர்கள் கருதினார்கள். அதற்காக அவர்கள் என்ன காரணத்தையும் கூறிக்கொள்வார்கள். கள்ளன், சமூகவிரோதி, பெண்பிள்ளைப் பொறுக்கி, காட்டிக்கொடுப்பவன், துரோகி என்று புலிகள் தங்கள் அரசியல் எதிரிகளை அழித்த பின்னால் கூறும் காரணங்கள் இவைகள் என்று தெரிந்திருந்தும் புலிகள் கூறியதாக கூறி ஹற்றன் நசனல் வங்கிக்கொள்ளையை இங்கு செருகியிருப்பது, புலிகளின் நடவடிக்கைகளுக்கு அவர்களால் கூறப்படும் பொய்க்காரணங்களை உண்மையில் அவர்கள் கூறாமலே சேர்த்திருப்பதானது, இங்கு பேசப்படும் நபர் இரயாகரன் என்பதற்காகவே விரும்பிச் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இது உள்நோக்கம் கொண்டது.

நீங்கள் எல்லாம் எதிர்ப்பது இரயாகரன் என்ற தனிநபரையல்ல. இரயாகரன் என்பது நீங்கள் விரும்பாத ஒரு அரசியலின் குறியீடு என்பதாகிவிட்டதால் அந்த அரசியலை எதிர்ப்பதற்கு முடியாமல் நபரின் மீது சென்று விழுகிறீர்கள். இதனால் யாரையும் கேள்வி கேட்க முடியாது என்று எவரும் கருத வேண்டாம். விமர்சனம் என்பது நேரடியானதும் வெளிப்படையானதும் நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். அரசியலில் விமர்சன சுயவிமர்சனப் பாங்குக்கு எவரும் உள்ளாக வேண்டியவர்களே. மக்களுக்கு நேர்மையில்லாதவர்கள் தங்கள் கடந்தகாலத்தைய அரசியலில் படுகொலை அரசியலுக்கும் துன்புறுத்தல்களுக்கும் சித்திரவதைகளுக்கும் நியாயம் கற்பித்தவர்களும் துணைபோனவர்களும், மக்களுக்கு எதிரான இலங்கை இந்திய ஒடுக்குமுறை அரசுகளின் சார்பாக அரசியல் செய்தவர்களும் கைகோர்த்து திரிந்தவர்களும் திரிபவர்களும் விமர்சனத்துக்குள்ளாகும் போது அவர்களின் எதிர்வினை என்பது இதுதான். தங்கள் மீதான இந்த விமர்சனங்கள் அரசியல் அடிப்படை கொண்டது என்பதை ஏற்க மறுக்கிறார்கள். தங்களது அரசியல் பாதைகளை என்றும் தாமாகவோ அல்லது விமர்சனங்கள் ஊடாகவோ திரும்பித் தரிசிக்க அவர்கள் முன்வருதில்லை. கேள்விகளாக அவைகள் அவர்களை நோக்கி வைக்கப்படும் போது கேள்வி கேட்பவரின் தகுதியையே அவர்கள் திருப்பித் தாக்குகிறார்கள். அதன் மூலம் தங்களது கடந்தகால அரசியலை மீளவும் பாதுகாக்கின்றார்கள். எவற்றையும் ஈவிரக்கமின்றி தயவு தாட்சண்யமின்றி மக்களுக்கு வெளிச்சமாக்குவது இவர்களுக்கு பிடிப்பதில்லை. இவற்றை இரயாகரன் போன்றோர் செய்து வருவதால் இரயாகரன் இவர்களுக்கு சிம்மசொப்பனமாக தெரிகின்றார்.

இரயாகரன் தெருவில் போகின்ற எந்த நபரையும் இழுத்துவைத்து தலையில் குட்டுவதில்லை. தங்களை கடந்தகாலத்தில் அரசியல் நபர்களாகப் பிரகடனப்படுத்திக்கொண்டோர்களை இயங்கிக் கொண்டோர்களை நோக்கி சாதாரண ஒரு பொதுமகனிற்கு இருக்கக்கூடிய கேள்விகள் மீது ஒரு அரசியல் வெளிச்சம் பாய்ச்சுவது என்பதானது அவற்றை மறைத்து அரசியல் செய்ய விரும்புவர்களுக்கும் வெளிப்படையான அரசியல் செய்யாதவர்களுக்கும் பிடிக்காது தான். மீண்டும் இந்நபர்கள் போர்த்து மூடிக்கொண்டு மக்களை ஏய்க்க முயலுவார்கள். இவற்றை அம்பலமாக்கி மக்களிடம் படிப்பினையாக மாற்றி விழிப்படைய வைக்க வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதவர்களே விமர்சனத்துக்கு அச்சம் கொள்பவர்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் சமூகத்துக்கு ஆற்றியவற்றை வெறும் கிள்ளுக்கீரையாகப் பார்க்கும் ஜெயபாலன் யாருக்காகவோ, மக்களுக்கு முன்னிறுத்தப்பட வேண்டிய பிரமாண்டமான பல்கலைக்கழகத்தின் பல வரலாற்று நிகழ்வுகளை மூடி மறைக்கின்றார்.

போராட்டங்கள் ஆரம்பத்தில் பல பல்கலைக்கழக மாணவர்களின் கைதுகளில் ஆரம்பமாகின்றது. லவன் என்ற மாணவனின் கைது மற்றும் மாதகலைச் சேர்ந்த விமல்ராஜ், கொக்குவில் சத்தியமூர்த்தி போன்றவர்களின் கைதுகளுக்கு எதிரான ஊhவலம் யாழ் நகர வீதிகளில் இராணுவத்தினரின் தடைகளையும் மீறி நடந்தேறியிருக்கின்றது.
மட்டக்களப்பு வெள்ள நிவாரணத்துக்காக யாழ் குடாவெங்கும் மாணவர்கள் தமது விரிவுரைகளைத் துறந்து நிதியும் உதவிகளையும் சேர்ததிருக்கின்றார்கள்.

வரலாற்றில் மிகவும் பெறுமதிமிக்க ஆவணங்களாக இன்று விளங்கும், போராட்ட செல் நெறிமுறைகளையும் தவறுகளையும் கேள்விக்குட்படுத்தி மக்கள் மேல் இழைக்கப்பட்ட கொடுமைகளையும் ஆவணப்படுத்தி அவற்றை யார் எவர் செய்தார்களோ அவர்களை நோக்கி விமர்சனம் செய்து வெளியிடப்பட்ட வெளியீடுகளின் ஆக்கதாரர்களான மனித உரிமைகளுக்கான யாழ்.பல்கலைக்கழக ஆசிரியர்களின் பங்கை இங்கு புறக்கணித்திருப்பதானது இக்கட்டுரையின் பிரதான நோக்கம் வேறானது என்பதை புரிய வைக்கின்றது. யாரையோ இருட்டடிப்பு செய்வதற்காக பல்கலைக்கழகத்தையே இருட்டாக்கி காட்டப்பட்டிருக்கின்றது.

கொலையாளிகள் தன்னை என்றோ அழிக்கக் காத்திருக்கின்றார்கள் என்பதை எப்படி லசந்த என்ற சிங்கள ஊடகவியலாளர் முன்கூட்டியே தனது எழுத்தில் பதிந்து வைத்திருந்தாரோ அதேபோலவே  ரஜனி திரணகம என்ற மருத்துவபீட உடற்கூற்றியல் விரிவுரையாளரும் தனது உயிர் பறிபடப்போகின்றது என்பதை தனது எழுத்தில் முன்கூட்டியே எழுதி வைத்திருந்தார். இன்று ஊடகவியலாளர்கள் கொலை செய்யப்படுகின்றார்கள் எனக் கூக்குரலிடும் அதே புலி நபர்கள் அன்று ரஜனி திரணகமவின் கொலையாளிகளின் கூட்டாளிகள். இந்த ரஜனி திரணகம யாழ். மருத்துவ பீட விரிவுரையாளர் என்ற தனது சமூகப் பொறுப்பை நிறைவேற்ற தனது உயிரை அர்ப்பணித்திருப்பதும் பெறுமதிமிக்க முறிந்தபனை என்ற நூலின் ஆசிரியர்களில் ஒருவராக இருந்ததும் யாழ் பல்கலைக்கழக வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றும் உச்சமானதொன்றுமாகும். இந்த வெளிச்சங்கள் புலப்படாதவர்கள் சொல்ல வருவது வேறு நோக்கம் கொண்டது.