Language Selection

தமிழ் மக்களின் மீதான தொடர்ச்சியான இனவாத ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தில் போராடிய மக்கள், போராடும் உரிமையை சொந்த வலதுசாரி குறுந் தேசியவாதிகளான பாசிச புலிகளிடம் இழந்த பரிதாபம், போராட்டத்தினையே அர்த்தமற்றதாக்கி விட்டது. அண்ணளவாக 25000 பேர், அதாவது நேரடியாக இராணுவத்துக்கு எதிரான போராட்டத்திலும் உள் இயக்க ஜனநாயக போராட்டத்திலும் மாற்றியக்கப் படுகொலைகள் (துரோகத்துக்கு முன்பாக) என்று, நேரடியான போராட்ட நடவடிக்கையில் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளனர். 150000 முதல் 250000 மக்கள் இராணுவ அழித்தொழிப்பு, மற்றும் இயக்கப் படுகொலைகள், இனப் படுகொலைகள் என்ற எல்லைக்குள் தம் உயிரை இழந்துள்ளனர்.

இதை விட இந்திய, இலங்கை இராணுவத்தினால் சில நூறு பெண்கள் கற்பழிக்கப்பட்ட பின் கொன்றும், சீரழிய வைத்தும் வெறியாட்டம் ஆடப்பட்டுள்ளது. இது போன்று தமிழ் தேசிய இயக்கங்களால் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கூட்டம் கூட்டமாகவும் புதைக்கப்பட்டனர். மணியந்தோட்டத்தில் பெண்கள் கற்பழிக்கப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட நிகழ்வுக்கு பின்னணியில் புலிகள் இருந்துள்ளனர். இது போன்ற சில புதைகுழிகள் எம்மண்ணில் கண்டுபிடிக்கப்பட்டன. இதை விட இயக்கத்தின் உள்ளும் வெளியிலும் பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகியதுடன், இதை மூடி மறைக்க படுகொலை செய்யப்பட்ட நிகழ்வுகளும் இலைமறைகாயாக வெளிப்படத்தான் செய்தன, செய்கின்றன.

பல பத்தாயிரம் பெண்கள் கணவனை, மகனை, தந்தையை இழந்து இந்த ஆணாதிக்க அமைப்பில், அநாதைகளாகி வயிற்றுப் பிழைப்புக்கே கையேந்தி நிற்கின்றனர், நிற்கவைக்கப்படுகின்றனர். அதேபோல் அன்றாடக் கஞ்சிக்கு இருந்த உழைப்பைக் கூட பறிகொடுத்த பெண்கள், ஊமையாக்கப்பட்டுள்ளனர், ஊமையாக்கப்படுகின்றனர். இலங்கையில் 20 இலட்சம் பேர் (மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர்) ஊனமுற்றவர்களாக உள்ளதுடன், இதில் அண்ணளவாக 16 இலட்சம் பேர் எழுந்து நடமாட முடியாத நிலையில், மூன்று சக்கர வண்டியை நம்பி பிச்சைக்காரராக வாழ்கின்றனர். சில ஆயிரம் குழந்தைகள் தாய் தந்தையை இழந்து அனாதையாகி, இந்தச் சுரண்டல் அமைப்பில் அனைத்து விதமான ஒடுக்குமுறைக்குள்ளாகி பரிதாபத்துக்குரியவராகியுள்ளனர், பரிதாபத்துக்குரியவராகின்றனர். இந்த அநாதைக் குழந்தைகளின் அவலத்தை பராமரித்த புலிகள், தமது குறுந்தேசிய இனவாத பாசிச சர்வாதிகாரத்தை நிறுவ, அவர்களை மூளைச்சலவை செய்து நேரடியாக ஆயுதபாணியாக்கினர். சொந்த மண்ணையும் நாட்டையும் விட்டு அகதியாக மேற்கு நாடுகளில் புகலிடம் புகுந்தவர்கள், பொருளாதார ரீதியாக பலமாக இருந்த போதும், அங்கு மூன்றாம் தர அடிமையாக நிறவாதத்தையும், கொடூரமான சுரண்டலையும் சந்திக்கின்றனர். பகட்டுத்தனமான யாழ் பூர்சுவா அடிப்படைவாதத்தை கொண்ட இந்த மேற்கு புலம்பெயர் பிரிவுகள், உலகமயமாதலின் பண்பாட்டு கலாச்சாரத்தை இலங்கையில் வெம்பவைத்து வீங்கி விரிவாக்கும் வகையில், தமது ஊதியத்தை வரைமுறையின்றி பயன்படுத்த துணையாகின்றனர். கொழும்பையும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வாழ்கின்ற மேற்கு புலம்பெயர் உறவினர்களும், யாழ் குடாவிலும் புலம்பெயர் பணத்தைக் கொண்டே ஏகாதிபத்திய பண்பாட்டு கலாச்சார சீரழிவுகளை சமூக மயமாக்குகின்றனர். இந்த புலம்பெயர் பணத்தை அடிப்படையாகக் கொண்ட பண்பாட்டு சீரழிவை நம்பி, பெருமளவில் பொறுக்கி வாழும் பல ஆடம்பர வக்கிரமான தொழில்கள் விரிவடைகின்றன. இந்த புலம்பெயர் பணத்தை உழையாது அனுபவிக்கும் சுகவாழ்வு வாழும் பிரிவினரின் அற்ப உடல் சுகத்தை போக்கும் கருவியாக, பல ஆயிரம் பெண்கள் இனம் கடந்து பலியிடப்பட்டுள்ளனர். சமூக உறவுகள் பணத்தை அடிப்படையாகக் கொண்ட வர்த்தகமாக மாறிவிட்டது. மறு தளத்தில் சொந்த மண்ணை விட்டு நாட்டிலும், நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் வாழும் அகதிகளின் வாழ்வு என்பது மிகக் கொடூரமானதாகும். வாழ வழியற்றதுடன், உழைப்பை இழந்ததுடன், அனைத்தையும் இழந்துவிட்ட இவர்களின் வாழ்க்;கை, பல தலைமுறையை கடந்து துயரம் தொடருமளவுக்கு, உலகமயமாதல் விரிவாக்க உலகில் அவலமாக காட்சியளிக்கின்றது. சொந்த மண் முதல் புலம்பெயர் நாடுகள் வரை மனநோயாளர்கள் எண்ணிக்கை என்பது, வரைமுறையின்றி பெருகிச் சென்றது. இடங்களுக்கும், நிலமைகளுக்கும், சூழலுக்கும் ஏற்ப இது வேறுபட்ட போதும், மனித அவலம் பெருகிச் செல்வதில் எந்த தடையையும் அது சந்திக்கவில்லை.

புலம்பெயர் சமூகம் தலைமுறை தொடர்ச்சியின்றிய, குறித்த வயதுடையோரே புலம் பெயர்ந்தனர். இதனால் இவர்களின் எதிர்காலம், மிக ஆழமாக சீரழிவை சந்திக்கின்றது. மேற்கில் உள்ள தனிமனித சுதந்திர ஜனநாயகத்தில் வெம்பிப் போகும் சமுதாய உறவுகள், இவர்களை சின்னாபின்னப்படுத்துகின்றது. குழந்தைகள் பெற்றோரை தனிமையாக கைவிட்டுச் செல்வது, ஒரு பொதுப் போக்காக மாறி வருகின்றது. இதனால் தனிமை மற்றும் கடின உழைப்பால் சீரழிந்தும், வேலையிழந்தும், இருக்க வீட்டை இழந்தும், அவலமாக வீதிகளில் அநாதையாக மடிவது முதல் மனநோயாளிகள் உருவாகும் போக்கு பொதுப்போக்காகி வருகின்றது. புலம்பெயர் சமூகத் தொடர்பு சார்ந்து எம் மண்ணில் உழைப்பிழந்து வாழும் கூட்டம், படிப்படியாக புலம்பெயர் தொடர்பை இழந்து சீரழிவை மூலதனமாக்குவது அதன் பொதுக் குணாம்சமாக மாறிவருகின்றது. இதற்குள் இதை பிழைப்பாக்கியும், இந்த மக்களின் சொந்த சமூக அவலத்தை திசை திருப்பவும், புலம்பெயர் நாடுகள் முதல் இலங்கை வரை நூற்றுக் கணக்கான மதக்குழுக்கள் புதிது புதிதாக உருவாகி வருவதுடன், பாரியளவில் மதமாற்றத்தை செய்து வருகின்றனர். மக்களின் அவலத்தை பிழைப்புக்காக பயன்படுத்தும் மதங்களும் நபர்களும், மக்கள் சிந்திப்பதை தடுக்கும் வகையில் சிந்தனையை மழுங்கடிக்கின்றனர். உலகமயமாதலை மூடிமறைக்கும் வகையில், இதற்கான நிதி உதவிகள் இந்த மதவாத அமைப்புகளுக்கு தாராளமாக சென்றடைகின்றன. இந்த கூட்டம் இலங்கை முதல் ஐரோப்பா வரை பிரசுரங்களையும், விமானம் ஏறி பிரச்சாரங்களையும் செய்து தம்மை விரிவாக்கி வருகின்றனர். இதன் மூலம் தமிழ் மக்களின் அவல வாழ்வை, தமது சொந்த சுகபோகமாக்குகின்றனர்.

 

 

தொடரும்

பி.இரயாகரன்

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

5. பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)