அரச நிகழ்ச்சிநிரலுக்கு உட்பட்ட பல புலம்பெயர் நிகழ்வுகள் ஏற்கனவே உள்ளது. அதனுடன் கே.பி ஊடான புதிய நிகழ்வு இன்று அரங்கேறியுள்ளது. தேசம்நெற்றின் லிட்டில் எய்ட் எப்படியோ, அப்படித்தான் இதுவும். தலித், கிழக்கு என்று எத்தனை வேசம் போட்டாலும், அரசின் நிகழ்ச்சிநிரலுக்குள் தான் அனைத்தும் அரங்கேறுகின்றது. இதுதான் கே.பி ஊடானதும் கூட. வேறுபாடு கிடையாது.
முள்ளிவாய்க்காலில் புலிகளின் ஆயுதரீதியான முடிவை, இன்று புலத்தில் அரசு தொடங்கி வைத்துள்ளது. ஏற்கனவே நாடுகடந்த தமிழீழக்காரர்களும், வட்டுக்கோட்டைக்காரர்களும் சொத்துச் சண்டை முதல் அதிகாரத்துக்காகவும் மோதி வருகின்றனர். ஒருவரை ஒருவர் தூற்றியும், காட்டிக்கொடுத்தும் வருகின்றனர். விமர்சனம் சுயவிமர்சனம் செய்து, மக்களை சார்ந்திருக்க மறுக்கின்ற அரசியல் அரங்கில் நடக்கும் குத்துவெட்டுகள் இவை.
இந்த முரண்பாட்டுக்குள் இலங்கை அரசு புகுந்து, தன் பங்குக்கு மோதலை தீவிரமாக்கி வருகின்றது. புதிய பிளவுகளை உருவாக்கும் வண்ணம், காய்நகர்த்தி வருகின்றது. இதில் ஒன்றுதான் கே.பி மூலம், தூண்டில் போடப்பட்டுள்ளது.
இவை அனைத்தும் தம்மை மூடிமறைக்க மக்களுக்கு உதவுதல், தீர்வு பற்றி பேசுதல்… என்ற பலமுனை கொண்ட மூகமூடிகளைப் பயன்படுத்திக்கொண்டு, பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு ஏற்ப நகர்கின்றனர். ஏற்கனவே புலியெதிர்ப்பு அரசியல் பேசிய மாற்றுகள் (மனோரஞ்சன், ராஜேஸ்வரி, டொக்டர் பாலா ..), தலித்தியம் பேசிய தேவதாஸ், கிழக்கிசம் பேசிய எக்சில் ஞானம், ஊடகவியலிசம் பேசி அரசியல் செய்த தேசம்நெற் ஜெயபாலன் லிட்டில் எய்ட்; வரை…, எண்ணற்ற அரசின் அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள், வெளிப்படையானதும் இரகசியமானதுமான பலமுனை கொண்ட மக்கள் விரோத அரசியல் நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் அரங்கேறுகின்றது. அனைத்தும் மக்களைச் சாராத, தங்கள் சொந்தநலன் சார்ந்த எல்லைக்குள், மக்களை முன்னிறுத்தித்தான் இதை முன்தள்ளுகின்றனர்.
அரசுக்கு வெளியில் எதையும் மக்களுக்கு செய்ய முடியாது என்ற தர்க்கத்தை முன்னிறுத்தி, தம்மைத்தாம் நியாயப்படுத்திக்கொண்டு தான் இதை அரசுடன் சேர்ந்து செய்கின்றனர். மக்களைச் சார்ந்து நிற்கும் கண்ணோட்டம், நேர்மை இதன் பின் கிடையாது. இதையே அரசியல் விடையத்தில் செய்கின்றனர். அந்த வகையில் தீர்வு விடையத்திலும், பேரினவாதம் தருவதை பெற்றுக்கொண்டு, செல்லும் அரசியலை முன்தள்ளுகின்றனர்.
மக்கள் மீதான தங்கள் கருசனையைத் தான், அரசுடனான நிகழ்ச்சிநிரல் ஊடாக செய்வதாக தர்க்கிக்கின்றனர். இந்த வகையில் தான் அரசியல் தீர்வு முதல் மக்களுக்கு உதவும் மனிதாபிமான நடத்தைகள் வரை அரங்கேற்றுவதாக விளக்கம் கொடுக்கின்றனர். இதன் மூலம் தான் பேரினவாதம் பல்வேறு வழிகளில், புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் ஊடுருவி குழிபறிக்கின்றது. இதன் மூலம் பிளவுகளை விதைப்பது முதல் தன் கைக்கூலிகளை உருவாக்குவது வரை, தனது அரசியல் நிகழ்ச்சிநிரலுக்குள் வைத்து கையாளுகின்றது. இதன் மூலம் விரைவில் புலம்பெயர் சமூகத்தில் தன்னை நிலைநிறுத்திவிடும் என்பதை, மிகத் தெளிவாக அரசுடனான அனைத்து புலம்பெயர் நிகழ்ச்சிநிரலும் மிகத் துல்லியமாக அம்பலமாகின்றது. அரசு தன் நேர்மையற்ற உள்நோக்கம் கொண்ட சதியுடன் இவற்றைச் செய்வதற்கு, மக்களின் பெயரில் அதை செய்யும் மக்கள் விரோதக் கூட்டம் தான், இன்று இந்த அரசின் நிகழ்ச்சிநிரலுக்கான அரசியல் அத்திவாரமாகும்.
இந்த வகையில் கே.பி ஊடான, பேரினவாத அரசின் புதிய மற்றொரு நிகழ்ச்சி நிரல். இதன் மூலம் பேரினவாத இலக்கு பலவாகும்.
1. நாடுகடந்த தமிழீழக்காரருக்குள் ஒரு பிளவை இது உருவாக்கும். இதன் மூலம் தனக்கு சார்பான ஒரு நிகழ்ச்சிநிரலுக்குரிய ஒரு பிரிவை உருவாக்கும். இது தவிர்க்க முடியாதது.
2. இதன் மூலம் வட்டுக்கோட்டைக்காரருக்கும், நாடுகடந்தகாரருக்கும் எதிரான மோதலை தீவிரமாக்கியுள்ளது. பரஸ்பரம் அம்பலப்படுத்தல் ஊடாக, அவர்களின் மக்கள் விரோத மாபியாத்தனத்தை அவர்களைக் கொண்டு அம்பலமாக்குவதன் மூலம், புலம்பெயர் மக்கள் மத்தியில் இருந்து அவர்களை தனிமைப்படுத்துவர். விமர்சனம், சுயவிமர்சனம் செய்ய மறுக்கும் இந்த மாபியாக் கூட்டம் புலம்பெயர் சமூகத்தில் தொடர்ந்து அம்பலமாகும்.
3. புலம்பெயர் மக்களின் உழைப்பை பல வழிகளில் வறுகிய புலிகள், அதை தமது தனிப்பட்ட சொத்தாக தம் பின்னால் குவித்து வைத்துள்ளனர். புலம்பெயர் புலிச் சொத்துக்களை தமதாக்கும் மகிந்த குடும்பத்தின் கனவு, இதன் மூலம் கணிசமாக நிறைவேறும். ஏற்கனவே சரணடைந்த புலிகள் தம்முடன் எடுத்துச்செல்ல வைத்திருந்த சில ஆயிரம் கோடி சொத்துக்களை திருடி மகிந்த குடும்பம் தனது தனிப்பட்ட சொத்தாக்கிவிட்டது. அத்துடன் கே.பி மூலம் உலகளவில் இருந்த சில சொத்துக்களை கைப்பற்றி தனதாக்கியுள்ளது. தமிழ் மக்களை வாட்டி வதைத்து கொள்ளையிட்ட புலிகள், அதை மகிந்த குடும்பத்திடம் கொடுத்துவரும் தொடர்ச்சிதான் கே.பி மூலமான நாடகத்தின் ஒரு அங்கமாகும்.
4. இதன் மூலம் அரசுக்கு எதிரான சர்வதேச நாடுகள் நலன் சார்ந்த முரண்பாட்டின் உள்ளடக்கமாக இருக்கும், தமிழர் நலன் சார்ந்த ஏகாதிபத்தியம் சார்ந்த அரசியல் அடிப்படைகளை தமிழர் தரப்பில் இருந்து எழும் குறுகிய எதிர்ப்பு அடிப்படையை பிளவுறச் செய்யும்.
இப்படி பேரினவாத நலன் சார்ந்த நிகழ்ச்சிநிரல்கள், புலத்தில் பலமுனையில் ஊடுருவி வருகின்றது. இதுபோன்று ஏகாதிபத்திய நலன் சார்ந்த நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றது. அனைத்தும் மக்களைச் சார்ந்திராத, தனிப்பட்ட நபர்கள் குழுக்கள் மூலம் பெருமளவில் அரங்கேறுகின்றது. ஒரு எதிர்ப்புரட்சி அரசியல் நிகழ்ச்சி நிரல் தான், அரசுடனான இணைந்த அனைத்து முன் நகர்வுகளுமாகும்.
பி.இரயாகரன்
29.06.2010