ஒருபுறம் மக்களை அணிதிரட்டும் அரசியல் மறுக்கப்படுகின்றது. மறுபுறம் மக்கள் அரசியலுக்கான அனைத்தையும் மறுக்கின்ற பாசிசம். இரண்டும் ஒன்றுடன் ஒன்று கைகோர்த்துக் கொண்டு இலங்கையிலும், புலத்திலும் இயங்குகின்றது.

புலிகள் இருந்த காலத்தில் புலிப் பாசிசம், தானல்லாத எதையும் அனுமதிக்கவில்லை. மறுபக்கத்தில் புலியல்லாத அரசியல் தளத்தில் மக்கள் அரசியலை துறந்ததுடன், மக்களை அணிதிரட்ட தாம் அணிதிரள்வதை மறுத்து மக்களின் முதுகில் குத்தினர்.


புலிகள் இருந்த காலத்தில் (அவர்களின் பிந்தைய 20 வருடத்தில்), புலிக்கும் அரசுக்கும் எதிராக தம்மைத்தாம் அணிதிரட்டும் அரசியலை மறுக்க, மக்கள் அரசியலைத் துறந்தனர். இதன் விளைவு புலிகள் அழிந்தபோது, மண்ணிலும் சரி புலத்திலும் சரி எந்த மாற்றும் இருக்கவில்லை. விளைவு என்ன?, மக்களை அணிதிரட்ட மறுக்கும் அரசியல் பிரமுகர்கள் தான் உருவானார்கள். தங்கள் தனிமனித இருப்பு சார்ந்த அடையாள அரசியலையும், லும்பன்தனமான அராஜகவாத அனாசிட் சித்தாந்தங்களையும் முன்தள்ளி, இதுதான் புலிக்கு மாற்றான அரசியலாக காட்டினர். மக்களை அணிதிரட்ட மறுப்பது கூட, புலியெதிர்ப்பு அரசியல்தான். புலியை விமர்சித்தது, மக்களை அணிதிரட்டத்தான். இதைச் செய்ய, நாங்கள் அமைப்பாவது அவசியம். இதை மறுப்பது கூட, புலியெதிர்ப்பு அரசியல் தான்.

மக்கள் தன்னிச்சையாக தாங்களாகவே சுயமாக ஸ்தாபனமயப்படுவது கிடையாது. அது கற்பனையானது. அது உதிரி வர்க்கத்தின் அராஜகவாத லும்பன்களின் அனாசிட்  சித்தாந்தமாகும். மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்றால், நாங்கள் அமைப்பாக இருக்க வேண்டும். நாங்கள் எதைச் செய்தாலும், இதுதான் முன்நிபந்தனையாகும். இது இன்று மண்ணிலும், புலத்திலும் தொடர்ந்து மறுக்கப்படுகின்றது. இதை மறுத்து, புதிய போராட்ட அரசியல் மரபுகள் எதுவும் உருவாகிவிடவில்லை.  

இலங்கையில் இயல்பான சூழலுக்கு பதில், கண்காணிப்பும் அதிகாரம் கொண்ட பாசிச சூழலும் நிலவுகின்றது. இது சமூகத்தின் சொந்த மீட்சிக்கு பதில், தனிநபர் பயங்கரவாத அரசியலை  உருவாக்கி வருகின்றது. சமூக விடையங்கள் வெளிப்படையற்ற, இரகசியமான அணுகுமுறைகள் மூலமும், தனிப்பட்ட மிரட்டல்கள் மூலமும் கையாளப்படுகின்றன. இதைச் செய்ய முடியாதவர்கள் மனம் உடைந்து சோர்ந்து துவண்டு ஒடுங்கிவிடுகின்றனர்.

கடந்தகாலத்தில் இலங்கையில் நிலவிய பாசிசம் விதைத்த விதையும், தொடரும் பாசிசப் போக்கினாலும் சமூகமோ உறைநிலையில் இருக்க, தனிநபர் பயங்கரவாத அரசியல் மூலமே சாத்தியமான அரசியல் தெரிவாகின்றது. இதற்கு மாறாக மக்களை அணிதிரட்டுவதை மறுக்கும் அரசியல், மறுதளத்தில் தொடர்ச்சியாக உற்பத்தியாகின்றது.    

இந்த வகையில் தனிநபர் முரண்பாடுகளும், சமூக முரண்பாடுகளும், மாற்று அபிப்பிராயங்களும் கூட, தனிநபர் பயங்கரவாத அரசியல் வழிமுறையில் தான் தொடர்ந்து அணுகப்படுகின்றது. சமூக உள்ளடக்கத்தில் இதை புரிந்து கொள்ளவும், அதன் ஊடாக இதை அணுகவும் முடியாத நிலை அங்கு காணப்படுகின்றது. ஒருபுறம் பாசிசம். மறுபுறம் இதைப் பற்றிய புரிதலற்ற சமூக வாழ்நிலை. இதை விளக்கி அணிதிரட்ட தயாரற்ற, பிரமுகர்களைக் கொண்ட அறிவு சார்ந்த லும்பன்களின் அரசியல் மேலாண்மை.

சமூகத்தின் தொடரும் அவலத்தின் பின் இதுவே அரசியல் அடிப்படையாகவும், மையமாகவும் காணப்;படுகின்றது. பின்வரும் அரசியல் போக்குகள் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது.     

1.கடந்த 30 வருடமாக நிலவிய தனிநபர் பயங்கரவாத அரசியல் அணுகுமுறை தான், பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிமுறையாக சமூகம் முழுக்க புரையோடிப் போன ஒன்றாக இன்றும் நீடிக்கின்றது. இந்த வழிமுறை தவறானது என்பதை சமூகம் முன் எடுத்துச் செல்லும், அரசியல் கூறுகள் இலங்கையில் உருவாகிவிடவில்லை. மக்களை அறிவூட்டும் சமூகப் பொறுப்புள்ள அரசியல், எவரிடமும் கிடையாது.  

2.அரச பாசிசம் மக்கள் அணிதிரள்வதையும், மக்கள் அரசியல் மயமாகுவதை கண்காணித்து அதைத் தடுக்கின்றது. அதாவது தனிநபர் பயங்கரவாதத்தை விமர்சித்து, மக்கள் தான் தங்கள் பிரச்சனைகளுக்காக போராடவேண்டும் என்பதை எடுத்துச்செல்லும் சமூகக் கூறுகளை கண்காணித்து ஒடுக்குகின்றது. தனிநபர் பயங்கரவாத செயல்முறை மட்டும் தான், இரகசியமான சாத்தியமான ஒன்றாகவும், செயல் சார்ந்த விளைவு சார்ந்த ஒன்றாகவும் தொடர்ந்து நீடிக்கின்றது.   

3.மக்கள் வெறும் பார்வையாளராக இருப்பது தான் போராட்டம் என்று உருவாக்கிய மரபு, தங்கள் பிரச்சனைகளை தீர்க்க கதாநாயகர்களையும் இடைத்தரகர்களையும் அடிப்படையாக கொண்ட பொறுக்கிகளையும் நம்பி இருக்கும் சமூகக் கண்ணோட்டம் இன்று உருவாகியிருக்கின்றது. இதை மாற்ற, முன்முயற்சியுடன் தங்களை ஒருங்கிணைக்க தயாரற்ற மலட்டு அறிவுத்துறையே, இன்று பொதுத்தளத்தில் அரசியல் மேலாண்மையுடன்  குழி பறிக்கின்றனர்.        

4.பாரம்பரிய கட்சிகள் முதல் இடதுசாரி கட்சிகள் வரை, மக்களை புரட்சிகரமாக அணிதிரட்டும் அரசியல் நடைமுறையற்ற முகவர்களைக் கொண்ட பிரமுகர் கட்சியாக கடந்தகாலத்தில்  இருந்ததுடன், இன்றும் அதுவாகவே நீடிக்;கின்றனர்.

5.உதிரியாக உருவான புரட்சிகர தனிநபர்கள் கூட, மக்களை கல்வி புகட்டி திரட்டும் புரட்சிகர அரசியல் நடைமுறைக்குள் செல்ல தயாரற்றவராகவே உள்ளனர். அவர்கள் அமைப்பாகாமல், மக்களை அமைப்பாக்க முடியாது. பிரமுகர்களைச் சுற்றியும், அடையாள அரசியலையும் தாண்டி, மக்களை அணிதிரட்டுவதே மக்களுக்கான அரசியல் என்பதை நடைமுறையில் செய்ய மறுக்கின்றனர். மக்களை அணிதிரட்ட தாங்கள் அமைப்பாவதல்லாத, பிரமுகர்தனம் தான் அரசியலாக மாறிவருகின்றது.

இப்படி பொதுவாக காணப்படுகின்ற நிலைமை என்பது, இலங்கையிலும் புலத்திலும்  புரட்சிகரமான சிந்தனை செயல்நடைமுறை அனைத்தையும் இல்லாததாக்குகின்றது. மக்களை அணிதிரட்டும் அரசியல் நடைமுறையாக உருவாகாத வரை, மக்களை பார்வையாளராக முன்னிறுத்தும் பிரமுகர்தன அரசியல் தான் தொடர்ந்து நீடிக்கும். இதுதான் எம்முன்னுள்ள பாரிய சவால்.

 

இது

1.தனிநபர் பயங்கரவாதம் மூலம் பிரச்சனைகளை தீர்க்கும் அரசியல் அணுகுமுறைக்கு சமூகத்தை தள்ளுகின்றது

2.பெருச்சாளிகள் கொண்ட இடைத்தரகர்களை நம்பி தத்தளிக்கும் அரசியலையும், மக்களின் இயலாமையையும்  உருவாக்கும்.

இது மக்களை செயலற்ற பார்வையாளராக்கி, குறுக்கு வழியில் காரியத்தை சாதிக்கும் காரியவாத மனிதர்களை கொண்ட, ஒரு மலட்டு சமூகமாக தொடர்ந்து சிதைந்து கொண்டு இருக்கின்றது. இன்று குறைந்தபட்சம் மக்கள் தான் தமக்காக தாம் போராட வேண்டும் என்ற கருத்தைக் கூட, இலங்கையிலும் புலத்திலும் நேர்மையாக எடுத்துச் சொல்ல, செல்ல எவருமில்லை.

நாங்கள் புலத்தில் இதை முன் வைக்கின்றோம். இந்தக் கருத்துக்கூட, பல தடைகளை அவதூறுகளை சந்திக்க வேண்டியுள்ளது. உதிரி வர்க்கத்தினதும், அனார்க்கிஸ்ட்டுகளின் லும்பன்தனமான அடையாள அரசியலையும் முன்னிறுத்தி, இது எதிர்க்கப்படுகின்றது. இதன் மூலம் மக்களை அணிதிரட்டி அமைப்பாக்கும் அரசியலை மறுப்பது, முதன்மையான அரசியல் கூறாக மாறுகின்றது. மறுதளத்தில் வலதுசாரியம் தன்னை பலமுனையில் மீள் உருவாக்கம் செய்கின்றது. இடதுசாரியம் தொடர்ந்து பல வழிகளில் மறைமுகமாகவும் நேரடியாகவும் அதற்கு சேவை செய்கின்றது.

மக்களை வலதுசாரியத்துக்கு எதிராக விழிப்புற வைக்கவும், அவர்களை அணிதிரட்டவும், தங்களை அமைப்பாக்க வேண்டும். இதை மறுக்கின்ற இன்றைய உதிரிகளின் அரசியல் பொதுத்தளத்தில், இவையே இன்றைய மக்கள் விரோத அரசியலில் முதன்மைப் போக்காக உள்ளது. இலங்கை - புலம் எங்கும் இந்த அரசியல் போக்குத்தான், மக்களுக்கு குழிபறிக்கும் மாற்று அரசியலாக உள்ளது. இதை அரசியல் ரீதியாக முறியடிக்கும் போராட்டமின்றி, மக்களை அணிதிரட்ட எம்மை நாம் அணிதிரட்ட முடியாது. தனிமனித சிந்தனை, செயல் அனைத்தும், இன்று அமைப்பாக்க வேண்டும். இதுதான் தனிநபர் பயங்கரவாதமாகட்டும், வலது பாசிசமாகட்டும், அனாhக்கிஸ்டுகளின் அடையாள இருப்பு சார்ந்த செப்படி அரசியல் வித்தையாகட்டும், அனைத்தையும் மக்களை முதன்மைப்படுத்தி மக்கள் செயல் சார்ந்த அரசியல் ஊடாக முறியடிக்க முடியும்.    

பி.இரயாகரன்
22.06.2010