09242023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

ஐயாவின் பதினொரு பதிவுகளும், எனது பின்னூட்ட முரண்களும்...06

ஆண்டு 1974 இரண்டாம் பகுதி


சிவகுமாரன் மிகத்துணிவுள்ளவனாகவும், உணர்ச்சிக் கொந்தளிப்புள்ளவனாகவும் இருந்தான். தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்தால் ஆவேசத்துடன் வீடு திரும்பியிருந்தான். அந்தச் சாமவேளையிலும் இரண்டு குண்டுகளுடன் சந்திரசேகராவைத் தேடி யாழ் நகருக்கு வருகிறான்.

சந்திரசேகரா 40 விசேட கலகம் அடக்கும் பொலீசாரை கொழும்பிலிருந்து வரவழைத்து, கூட்டத்தை இறுதியில் கண்ணீர்புகை, குண்டாந்தடிகள் உதவியுடன் கலைத்திருந்தார். இவரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் 9 பேர் பலியானதால் சிவகுமாரன் இவரை பழிதீர்க்கத் துடித்தான்.

நகரில் எவரையும் காணததால் சிவகுமாரன் நல்லூர் அருளம்பலத்தின் வீட்டுப்பக்கமாக வந்தான். அங்கே இரு பொலீசார் காவலுக்கு நின்றனர். அவர்கள் மீது சிவகுமாரன் குண்டை வீசினான். பொலீசார் உயிர் தப்பியபோதும் அவர்களின் கால்கள் பேய்ந்திருந்தது. சிவகுமாரனுக்கு ஆத்திரம் இன்னும் அடங்கிவிடவில்லை. சந்திரசேகராவை எப்படியும் கொல்லுவதில் மிகத்தீவிரமாக இருந்தான்.

தமிழாராய்ச்சி மாநாட்டில் நடந்த அனர்த்தத்துக்கு துரையப்பாவே காரணம் என்றும், அவர் கொல்லப்படவேண்டும் என்றும் கூட்டணியினர் 'துரோகப் பட்டியலால்' இளைஞர்களுக்கு ஏவியபோதும், சிவகுமாரனின் முதலிலக்கு சந்திரசேகராவாகவே காணப்பட்டது.

கள்ளமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட ஜனார்தனனை பேசவைக்க முடியாமற் போன வெப்பியாரமும் சிவகுமாரனைப் பாதித்திருந்தது. இறுதிசம்பவங்களுக்கு முதல் நாள் ஜனார்த்தனன் யாழ் கூட்டணிக் காரியாலத்தில் இருப்பதாக பொலீசாருக்குத் தகவல் கிடைத்திருந்தது. அடுத்து சந்திரசேகராவும், நாணயக்காராவும் கூட்டணியின் காரியாலயமான 2ஆம் குறுக்குத் தெருவுக்கு விரைந்தனர். காரியாலயத்தில் அமீரும், ஜனார்த்தனனும் பேசிக்கொண்டிருந்தனர்.

ஆயினும் சந்திரசேகரா அவரைக் கைது செய்யவில்லை. சட்டவிரோதமாக நாட்டுக்குள் வந்த ஒருவரை பொலீசார் கைதுசெய்யாமல், நாளைக்குக் கூட்டத்தில் பேசவேண்டாம் என்றும், பார்வையாளராகப் பங்குபற்றிவிட்டு செல்லுமாறும் இது கட்டளையுமல்ல வேண்டுகோள் என்றும் கூறிவிட்டு, மாநாட்டுக்கு வாழ்த்தும் தெரிவித்து விட்டுச்சென்றிருந்தார்.

இவ்வாறான ஒரு பின்னணியில் தான் சிவகுமாரன் சந்திரசேகராவைத் தீர்த்துக் கட்டுவது கூட்டணிக்கு தலைவலியாக இருந்தது. இப்பொழுது புதிதாக அருளம்பலத்தின் வீட்டுக்காவலுக்கு நின்ற பொலீசாருக்கும் சிவகுமாரன் குண்டு வீசியிருந்தான். துரோகியல் பட்டியலுக்கு வெளியே சிவகுமாரன் தாக்குவது கூட்டணிக்குப் பிடிக்கவில்லை. துரையப்பாவைக் கொல்லுவதே கூட்டணியின் இலக்காக இருந்தது.

இவ்வாறான சூழலில் சுதந்திரதினமும் வந்தது...

இந்த சுதந்திரதினத்தை தமிழாராய்ச்சி மாநாட்டின் பொலீசாரின் அடாவடித்தனத்துக்கு எதிராக பிரமாண்டமான ஆர்ப்பாட்டமாக நடத்த கூட்டணியினரும் இளைஞர்களும் திட்டமிட்டனர். கட்டிடங்கள், மின்கம்பங்கள் என்று யாழ் நகர் கறுப்புக் கொடிகளால் நிறைந்து காணப்பட்டது. பாடசாலை முழுவது மூடிக்கிடந்தன. முனியப்பர் கோவிலில் இருந்து இளைஞர்களின் மாபெரும் ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடக்க இருந்தது. இன்று விடுமுறை நாளாக இருந்ததால் மாணவர் வெள்ளம் முனியப்பர் கோவிலில் நிறைந்து வழிந்தது.

இந்த உணர்ச்சி பொங்கிய ஆர்ப்பாட்டத்தை அடுத்து பொலீசார் இளைஞர்களை மீண்டும் கைதுசெய்யத் தொடங்கினர்.

சுதந்திர தினத்துக்கு முன்னதாக 29.01.74 அன்று சிறீமா - இந்திராகாந்தியுடன் ஒப்பந்தம் செய்துவிட்டு நாடு திரும்பியும் இருந்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக் கழகம் ஒன்றை இவ்வருடம் உருவாக்குவதற்கு அரசு உத்தேசித்தும் இருந்தது. இதைக் கூட்டணி எதிர்த்தது. இதனால் இதன் திறப்புவிழாவை இலகுவாக்க தீவிரவாத வன்முறை இளைஞர்களை பொலீசார் கைது செய்யவும் தொடங்கினர்.

மறுபுறத்தே சிவகுமாரன் சந்திரசேகராவை கொலைசெய்ய அலைந்து திரிகிறான். சந்திரசேகராவின் ஜுப்புக்கு தெல்லிப்பளையில் வைத்துக் குண்டு வீசுகிறான். இலக்குத்தவறி விடுகிறது. இதையடுத்து தந்தை செல்வா - சிவகுமாரைச் சந்தித்துப் பேசுகிறார். இந்தியாவில் காந்திக்கு, சந்திரபோஸ் இருந்ததுபோல தமக்கு சிவகுமாரை இருக்கும்படி வேண்டுகிறார். தமது நிகழ்ச்சி நிரலுக்குள் இயங்குமாறு கேட்டுக் கொண்டார்.

சிவகுமாரனோ சந்திரசேகராவை கொல்லும் திட்டத்தில் இருந்து பின்வாங்க மறுத்தான். இம்முறை சந்திரசேகராவைக் கொல்ல அவரின் வீட்டுக்கு அருகில் இருந்த கோவிலில் சிவகுமாரனும் அவனது நண்பர்களும் காத்து நின்றனர். சந்திரசேகரா ஜுப்பில் வருவதைக் கண்ட சிவகுமாரன் ஜுப்பை மறித்தான். சாரதியின் கதவைத்திறந்து சந்திரசேகராவின் நெற்றிக்கு நேரே கைத்துப்பாக்கியை வைத்துச் சுட்டான். துப்பாக்கியோ வெடிக்க மறுத்தது. இதைக்கண்ட சக நண்பர்கள் ஓட்டமெடுக்கத் தொடங்கினர். சிவகுமாரன் சந்திரசேகராவை ஜுப்பிலிருந்து இழுத்து விழுத்தி கத்தியால் குத்திக்கொலை செய்ய முயன்ற இறுதி முயற்சியும் துணையின்றி கைவிட்டுவிட்டு சிவகுமாரனும் தப்பி ஒடினான்.

சிவகுமாரனின் இந்த துணிச்சல் மிகுந்த தாக்குதல் முயற்சியால் அரசு சிவகுமாரனை வலைவீசி தேடியது. பல்கலைக்கழகத்தை திறப்பதற்கு சிறிமாவின் யாழ் வருகை பாதுகாப்பு காரணங்களால் அடுத்தடுத்துப் பின்போடப்பட்டு வந்தது. இதனால் சிவகுமாரனை சீக்கிரத்தில் கைதுசெய்வதற்கான அழுத்தங்களும், இதற்கான தீவிர முயற்சிகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன.

சிவகுமாரனின் ஊரான உரும்பிராயைச் சுற்றி பல நூற்றுக்கணக்கான பொலிசார் சுற்றிவளைத்துத் தேடுதலில் ஈடுபட்டனர். சிவகுமாரன் உரும்பிராயில் உள்ள ஒரு தோட்டத்திலும், மயிலிட்டியில் - ஊறணியிலும் தலைமறைவாகி இருந்தான். இவனுக்கு கத்தோலிக்க குருமாரும் அன்று இதற்கு உதவினர்.

சிவகுமாரன் தலைமறைவு வாழ்க்கையில் இருந்து இந்தியா தப்பிச்செல்ல முடிவெடுத்தான். இதற்கான பண உதவியை கூட்டணியில் இருந்தவர்களிடமும், அவர்களின் ஆதரவாளரிடமும் பெற முயற்சித்தான். அவர்கள் சாட்டுப்போக்குச் சொல்லி தட்டிக் கழித்து வந்தனர். இந்த நிலையில் சிவகுமாரன் கொள்ளை ஒன்றின் ஊடாக பணத்தைப் பெற்று தப்பிச் செல்ல முடிவெடுத்தான்.

05.06.74 புதன்கிழமை காலை....

மருதனாமடம் சந்தியில் காரொன்றைக் கடத்திய சிவகுமார் குழுவினர், கோப்பாய் கிராமிய மக்கள் வங்கியை கொள்ளையிட முயன்றனர். இதேநேரம் கோப்பாயில் இருந்த பொலீஸ் இன்ஸ்பெக்கடரான விஜயசுந்தராவுக்கு வங்கிக் கொள்ளை தொடர்பான தொலைபேசி தகவல் வந்தது. விஜயசுந்தராவும் அவர் சகாக்களும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அங்கே சிவகுமாரனை அடையாளம் கண்டுவிட்ட விஜயசுந்தரா, சிவகுமாரனைக் கைதுசெய்து தனது கஸ்டடியில் அடைக்குமாறு தமது பொலீஸ் சிப்பாய்களுக்குக் கட்டளையிட்டார்.

கடந்த வருடம் (73) நல்லூர் கோவில் திருவிழாவின் போது...

பெண்களிடம் அங்கச்சேட்டை விட்ட சிவில் பொலீஸ்காரரை சிவகுமாரன் தனியே தாக்கியிருந்தான். இதனால் அவனைக் கைதுசெய்து கோப்பாய் பொலீஸ் நிலையத்தில் அடைத்திருந்தனர். இதனால் விஜயசுந்தரா சிவகுமாரனை அடையாளம் கண்டிருந்தார். (இக்கைதின் போது பல பொதுமக்கள் சிவகுமாரனை விடுதலை செய்யும்படி மனுக்கொடுத்ததை அடுத்து சிவகுமாரன் விடுவிக்கப்பட்டிருந்தான்.)

விஜயசுந்தராவின் கட்டளையை அடுத்து, சிவகுமாரன் விஜயசுந்தராவை நோக்கிச் சுடத்தொடங்கினான். அவனிடம் இருந்த இரண்டு குண்டுகளையும் சுட்டான். இரண்டும் இலக்குத் தவறிவிட்டது. சிவகுமாரனும், அவரது குழுவினரும் ஆளுக்கொரு பக்கமாக ஒடத்தொடங்கினர். பொலீசார் ''கள்ளனைப் பிடியுங்கள்'' என்று கத்தியபடி துரத்தினர். பலர் சிவகுமாரனைப் பிடிக்க பின்னால் ஓடினர். சிவகுமாரன் ''நான்தான் சிவகுமாரன், என்னைப் பிடிக்கவேண்டாம்'' என்றதும் பொதுமக்கள் அதே இடத்தில் மலைத்துப்போய் நின்றனர்.

சிவகுமாரன் நீர்வேலி 'பூதர்மடத்தடி' யைத்தாண்டி, தோட்டவெளிகளை ஊடறுத்து தப்ப முயற்சித்தான். தோட்டவெளியை ஊடறுத்து ஓடும்போது அங்கு வெட்டப்பட்டுக் கிடந்த புகையிலை அடிக்கட்டை ஒன்று அவனின் காலைப் பதம்பார்த்துவிட்டது. தொடர்ந்து ஓடமுடியாத சிவகுமாரன் அத்தோட்டத்தில் இருந்த சிறிய கொட்டில் ஒன்றுக்குள் பதுங்கிக் கொண்டான்.

தோட்டவெளிக்குள் இறங்கிய பொலீஸ் பட்டாளம், அங்கே பயிர்களுக்கு நீர் இறைத்த வயதுமுதிர்ந்த விவசாயி ஒருவரைக் கண்டனர். அவரை விசாரித்ததில் சிவகுமாரன் என்று அறிந்திராத அந்த வயதுமுதிர்ந்த விவசாயி அச்சிறிய கொட்டிலை சுட்டிக்காட்டவே சிவகுமாரன் பொலீசாரால் சுற்றிவளைக்கப்பட்டான். சிவகுமாரனைக் கைதுசெய்ய முயன்றபோது, அவன் நஞ்சை (சயனைட்) உட்கொண்டான்.

சிவகுமாரன் யாழ் பிரதான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆஸ்பத்திரியைச் சுற்றி பொலிஸ் காவலுடன் சிவகுமாரன் படுத்திருந்த கட்டிலுடன் விலங்கிடப்பட்ட நிலையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். சிவகுமாரனின் தாயாரும், வைத்தியரான அவனது சகோதரனும் அருகில் இருந்தனர். சிவகுமாரனை காப்பாற்றும் நம்பிக்கையுடன் வந்திருந்த சகோதரன் சிவகுமாரனின் காதில் குசுகுசுத்தார். சிவகுமாரன் மருந்துகளை உண்ண மறுத்தான். இதை அறிந்த தாயார் அழத்தொடங்கினார். சிவகுமாரனோ ''அம்மா அழவேண்டாம். உனதுமகன் இறந்தால் இன்னும் ஆயிரம் சிவகுமாரன்கள் பிறப்பார்கள்!'' என்று தேற்றினான். நேரம் சென்று கொண்டிருந்தது. சிவகுமாரனின் விரல்கள் நீலமாகிக் கொண்டு வந்தது. அதைத் தாயிடம் காட்டிய சிவகுமாரன் இன்னும் சிறிதுநேரத்தில் தான் இறந்துவிடுவேன் என்று கூறியபோது, இந்தத்தாயின் இதயத்தை ஆயிரம் ஈட்டிகள் குத்துவது போல இருந்திருக்கும்...

05.06.74 புதன்கிழமை மாலை 5 மணி 30 நிமிடமளவில் சிவகுமாரனின் உயிரும் பிரிந்தது.......

''சிவகுமாரன் இறந்துவிட்டான்!'', ''திரவியம் இறந்துவிட்டான்!!'' , ''தங்கம் இறந்துவிட்டான்!!!'' குடாநாட்டின் சந்துபொந்துகள் எங்கும் செய்திகள் பரவியது. மதில்களும், கட்டிடங்களும், தார்வீதிகளும் சிவகுமாரனின் வாசகங்களால் எங்கும் நிறைந்தது. யாழ்ப்பாணமே அழுதது. இளைஞர்கள் குமுறத் தொடங்கினர்.

சிவகுமாரனின் மரணவீட்டை கூட்டணியினரான அமிர்தலிங்கமும், நவரத்தினமும், செல்லத்துரையும் நடத்த முற்பட்டனர்.

சிவகுமாரனின் பூதவுடல் மரண விசாரணைக்குப் பின்பு பொலிஸ் பாதுகாப்புடன் அவரின் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்டது. மூன்று தினங்களாக 15 ஆயிரம் பொதுமக்களுக்கு மேல் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

7ம் திகதி காலை வடக்கிலிருந்த அனைத்துக் கடைகளும் பூட்டப்பட்டன. அன்று காலை விடப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க எங்கும் தோரணங்களும் கறுப்புக் கொடிகளும் கட்டப்பட்டன. இறுதி ஊர்வலம் அவன் இல்லத்தில் இருந்து ஆரம்பமானது.  பூதவுடல் வீடடிலிருந்து புறப்பட ஆயத்தமான போது:  உணர்ச்சிவசப்பட்ட 7 இளைஞர்கள் முதலில் தமது விரல்களை பிளேட்டினால் கீறி சிவகுமாரனின் நெற்றியில் வீரத்திலகமிட்டனர். இதைத் தொடர்ந்து 100க்கு மேற்பட்ட இளைஞர்கள் இவ்வாறு இரத்தத்திலகமிட்டனர். இதன் பின்னர் மைல் கணக்காக பொதுமக்கள் அந்த இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். பூதவுடல் உரும்பிராய் பட்டினசபையிலும்  தாழ்த்தப்பட்ட மக்களுக்குச் சொந்தமான சென். மைக்கல் தேவாலயத்திலும்,  பொது அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

இறுதியாக பூதவுடல் உரும்பிராய் வேம்பன் மயானத்துக்கு எடுத்துவரப்பட்டு இங்கு அஞ்சலிக்கூட்டம் நடைபெற்றது. கூட்டணி உறுப்பினரான அமிர்தலிங்கம் பேசுகையில், "சிவகுமாரன் தமிழ் மக்களுக்காக அளப்பரிய தியாகத்தைப் புரிந்துள்ளார். பிறப்புரிமையை மீட்டு எடுப்பதற்காக அவர் கையாண்ட வன்முறை போராட்டத்தில் நான் வேறுபடுகிறேன். இருந்தபோதிலும் அவரது அர்ப்பணிப்பு உணர்வுக்கு தலைவணங்குகிறேன். அவரின் வீரத்தியாகம் வீணாகாது. அவரது சாம்பலில் இருந்து பல்லாயிரக்கணக்கான வீரர்கள் முளைப்பார்கள். அவரது சமாதியில் இருந்து தமிழ் ஈழம் எழும்பும்'' என்று உணர்ச்சிமயமான உரை நிகழ்த்தினார்.

இவ்வுரைகளை அடுத்து, அங்கு வந்திருந்த பெருந்தொகையான ஆண்களும் பெண்களும் ''சிவகுமாரனின் முகத்தை இறுதியாகப் பார்க்கவேண்டும்'' என்று அழுகுரலில் கேட்டனர்.  அங்கு நின்றிருந்த வானின் மேல் ஏறி நவரத்தினமும், செல்லத்துரையும் சிவகுமாரனின் பூதவுடலை கைத்தாங்கலாக உயர்த்திப் பிடித்தனர். மக்களின் அழுகுரல் மயானத்தில் நின்றிருந்த அனைவரையும் கலங்கவைத்தது.

இறுதியாக, தந்தையார் சிவகுமாரனின் பூதவுடல் வைக்கப்பட்ட சிதைக்கு தீமூட்டினார். ..

 

சிவகுமாரனுக்கு கூட்டணியினரும், 'மாவை'யின் தலைமையிலான இளைஞர் பேரவையினரும், ''ஈழத்து பகத்சிங்'', என்றும் பட்டம் வழங்கினர்.

இவ்வருடமே அந்த  வேம்பன் மயானத்தில் சிவகுமாரனுக்கான நினைவுக் கல்லறை கட்டப்பட்டது! இதுவே ஈழப்போராட்டத்தில் கட்டப்பட்ட முதலாவது 'மாவீரர் கல்லறை'.

சிவகுமாரனின் மரணம் அன்று வழக்கிலிருந்த சமூக நடைமுறைகளை, சுயமாகவே மக்களை மீறவைத்தது.

1. இறந்த ஒருவரின் பூதவுடலுக்கு இரத்தத்திலகமிட்டு மரியாதை செலுத்தியது இதுவே முதல் நிகழ்வாக இருந்தது.

2. யாழ் திருச்சபை வரலாற்றில், முதல் முதலாக வேறு மதத்தைச்சார்ந்தவரின் உடல் தேவாலயத்தில் வைக்கப்பட்டு, 'கோவில் புத்தகத்தில்' பதியப்பட்டதும் இதுவே முதல் தடவையாகும்.

3. சாதிபேதத்தைக் கடந்து தாழ்த்தப்பட்ட மக்கள் தமது அஞ்சலிக்காக கோரிய ஓர் உயர்சாதி இளைஞனின் உடலாகவும் (மரணமாகவும்) இது இருந்தது.

4. பெண்களையும் மயானத்துக்குக் கூட்டிவந்த ஒரு மரணமாகவும் இதுவே வரலாற்றில் முதலாக இருந்தது.

5. மயானத்தில் கல்லறையும் கட்டப்பட்ட மரணத்துக்குரியவனாக சிவகுமாரனின் மரணமே வரலாற்றில் முதலாக நடந்தது.

ஐயாவுடனான முரண் -2

''அவரூடாக பிரான்சிஸ் அல்லது கி.பி.அரவிந்தனும் எமக்கு அறிமுகமாகிறார். ஜீவராஜா, பிரான்சிஸ், சிவகுமார், மகேந்திரன் ஆகியோர் எமது இடத்திலிருந்தே கோப்பாய் வங்கிக் கொள்ளையை மேற்கொள்ளப் போகிறார்கள்''  என்று ஐயா எழுதியிருந்தார்.

அன்று குடாநாட்டில் ஒரு கீரோவாகவே சிவகுமாரன் பேசப்பட்டான். இந்தக் கீரோவே இவர்களைத் தேடி வந்தபோது, ஏன் ஐயா போன்றவர்கள் இக் கீரோத்தனத்தால் ஈர்க்கப்படவில்லை? பிரபாகரனே இக்காலத்தில் சிவகுமாரனைச் சந்திக்க விரும்பியிருந்தார்! அப்பேற்பட்ட அன்றைய கிரோவை அவர் சந்திக்க தடையாக இருந்ததும்... நீங்கள் இக்கீரோத்தனத்தால் தேடிவந்த போதும்... ஈர்க்கப்படாததுக்குமான காரணம் ஒன்றுதானா?

கூட்டணியின் 'துரோகிகள் பட்டியலுக்கு' வெளியே அரசு இயந்திரப் பொலீசாரையும் சிவகுமாரன் எதிர்க்க முற்பட்ட போக்குக்கும், கூட்டணிக், பிரபா, தங்கத்துரை போன்றவர்களுக்கும் இருந்த முறிவுப்போக்கா அன்று இந்தக்கீரோத்தனம் உங்களை ஈர்க்காமல் போனது?

......................................................................


சிவகுமாரனின் மரணத்தை அடுத்து, சிறிமா யாழ் வருவது திட்டமிடப்பட்டது...

சிவகுமாரனின் மரணத்தால் கொதித்துப் போயிருக்கும் இளைஞர்களை, யாழ் பல்கலைக்கழக திறப்புக்கு எதிராக தூண்டத் திருப்பியது கூட்டணி அரசியல். இதைத் துரையப்பாவின் துரோகத் திட்டமாகவும் காட்ட முற்பட்டது. 74ம் ஆண்டு 'தாயகம்' ஆனி இதழில் கைலாசபதி, 'பரமன்' என்ற புனைபெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

யாழில் உருவாகும் பல்கலைக்கழகம் விவசாயம் மற்றும் மீன்பிடித்துறையில் ஆய்வுகளையும், ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளக்கூடிய வளாகமாக இது உருவாகி வளரவேண்டும் என்றும், அதன் அவசியத்தையும் அவர் எழுதியும் இருந்தார்.

 26.06.74 கச்சதீவு கையெழுத்தானதுடன், மனனாரின் மீன்பிடி மற்றும் தலைமன்னார் படகுச் (கப்பல்) சேவை தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கியிருந்தன.

சிவகுமாரனின் மரணம் பல இளைஞர் குழுக்களுக்குள்ளும் ஆயுதப் போராட்டத்தின் போக்கைத் தீவிரப்படுத்தி இருந்தது. இநதப் பின்னணியில் யாழ் பல்கலைத் திறப்பு விழாவும், காங்கேசந்துறை இடைக்காலத் தேர்தலும் அறிவிக்கப்படுகிறது. காங்கேசன்துறை தொகுதியில் தந்தை செல்வாவும், அவரை எதிர்த்து அளவெட்டி வி.பொன்னம்பலமும் (கம்யூ.கட்சி) வேட்ப்பாளர்களாகப் போட்டியிட்டனர்.

பல்கலைக்கழகத் திறப்புக்கு எதிர்ப்பும், வி.பொன்னம்பலத்துக்கு எதிரான தேர்தல் பிரச்சாரமும் ஒருங்கே சூடுபிடிக்கத் தொடங்கியது. வி. பொன்னம்பலத்தை வெருட்டவும், அவருக்கு இடைஞ்சலைக் கொடுக்கவும், அன்று அளவெட்டி பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம் இளைஞர்களால் கொள்ளையிடப்பட்டது!

முதல் தடவையாக வெற்றிகரமாகக் 91 ஆயிரம் ரூபா கொள்ளையிடப்பட்ட சம்பவமாக இது இருந்தது. இக்காலத்தில் 87 ஆயிரம் ரூபா தெல்லிப்பளை ப.நோ.கூ சங்கத்தில் கொள்ளையிடப்பட்டதாகவும் பதிவுகள் கூறுகின்றன. இவை இரண்டும் நடந்தனவா? அல்லது தெல்லிப்பளையா? அளவெட்டியா? சரி என்பதற்கான ஆதாரங்கள் இன்னும் சரியாக வெளிவந்திருக்கவில்லை.

இந்தியாவில் அப்பொழுதிருந்த 'ஈழத்து சந்திரபோஸ்' என்று அழைக்கப்பட்ட இராசரத்தினத்தின் இவ்வாண்டு 'டயறி'யில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

புதன் 04, செப்டம்பர் -74

''தாமிரபருணி புதிய புலிகள் என்னும் பெயரை உருவாக்கி கொடுத்தேன். அதன் உள்ளாக்க கருத்தையும் விளக்கித் தங்கத்திடம் கூறினேன். அவரும் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார். இது ஒரு புதிய சகாப்தம். கம்பெனிப் பிரயாணத்துக்குரிய முதலாவது வண்டியில் நானும் திரு. கமுரும் ஏறி வந்தோம். திரு கஜன் என்னைச் சந்தித்தார்.''

வியாழன் 05, செப்டம்பர் - 74

'' கடையிலே தங்கியிருந்தேன். எங்களது முதலாவது டுரிஸ் பஸ் இன்று அதிகாலை 5-00 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.  டி . என் . டி ( T.N.T ) க்குரிய உறுதிப் பிரமாணத்தையும் குறிப்புக்களையும் வரைந்தேன்.''

ஐயாவின் தகவலின் (பதிவுகளின்) படியும் இவரே புதிய தமிழ் புலிகள் (ரி . என் . ரி) என்ற யெரை செட்டிக்கும், பிரபாவுக்கும் உருவாக்கிக் கொடுத்ததாகவும் உறுதிப்படுத்தியிருந்தார்!)

சிறிமா ஒக்டோபர் மாதம் 06 ஆம் திகதி யாழ் பல்கலைக் கழகத்தை திறந்து வைப்பார் என்றும் அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டோபர் 3 ம் திகதி புதன் கிழமை, தீவிரவாத இளைஞர்களும் கூட்டணியினரும் இணைந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதன்பின்னர் சிறிமாவின் யாழ் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும்படி, பலாலி - யாழ் வீதிகளுக்கு அருகிலிருந்த மக்களையும், பாடசாலை மாணவர்களையும் கூட்டணியினரும் இளைஞரும் கேட்டிருந்தனர்.

சனி 06, ஒக்டோபர் - 74

காலை நேரம், பலாலி - யாழ் வீதி இரு மரங்கிலும், மக்களும் பாடசாலை மாணவர்களும் அணிவகுத்து நின்றனர். அன்று மழை இலேசாகத் தூறிக்கொண்டிருந்தது. தார்வீதியில் சிறிமாவின் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வெண்கட்டியால் எழுதப்பட்ட வாசகங்கள் நனைந்து கொண்டிருந்தது. கறுப்புக் கொடிகளும், குடைகளும் மக்களின் கைகளில் காணப்பட்டது. ஆங்காங்கே சில மேடைகளில் சிலர் எதிப்பாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

சிறிமாவின் வாகனம் இராணுவ அணிவகுப்புடன் பலாலி விமானநிலையத்திலிரு வந்து கொண்டிருந்தது. மழை பெய்துகொண்டிருந்ததாலும் பாதுகாப்புக்காரணத்தினாலும் வேகமாகவே அவ்வாகனம் சென்றது.

காங்கேசன்துறை பொலீஸ் நிலையத்தின் முன்பாக நிறுத்திவைக்கப்படிந்த ஜுப்புக்குக் குண்டு வீசப்பட்டது. துரையப்பாவின் சிறிமாவுக்கான நகரசபை மரியாதையைக் குழப்பும் நோக்குடன் மற்றொரு குண்டு, யாழ் புகையிரத நிலையத்துக்கு அருகில் வைக்கப்பட்டது. இதேபோல யாழ் பஸ்தரிப்பு நிலையத்திலும் குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதேபோல சிறிமாவுக்கு மொழிபெயர்ப்பாளராகக் கலந்துகொண்ட கம்யூனிச கட்சிஉறுப்பினரின் வீட்டுக்கும் குண்டு வீசி எச்சரிக்கப்பட்டது. மற்றும் யாழ் பல்கலைக்கழகத்தின் முதலாவது தலைவராக (வேந்தராக) பதவி ஏற்ற க.கைலாசபதியின் யாழ் வீட்டுக்கும் குண்டு வீசப்பட்டது. ஒரு சில பஸ்சும் கொழுத்தப்பட்டது. இதில் எவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டணியினரின் தூண்டுதலிலும் வழிகாட்டலிலும் புதிய புலிகளின் செட்டியும், பிரபாகரனும் இணைந்து இத்தாக்குதலை நடத்தியிருந்தனர். இவ் வன்முறைச் சம்பவங்களின் பின் பல தீவிரவாத இளைஞர்கள் பலரும் கைதாகத் தொடங்கினர். 

கண்ணாடியின் உட்கொலைக்குப் பின்னர் பிரபாகரனும், செட்டியும் இணைந்து நடத்திய கொள்ளை, வன்முறைச் சம்பவங்களாக இவைகள் கருதப்படுகின்றன.

யாழ் பல்கலைக்கழகத் திறப்புவிழாவை அடுத்து துரையப்பா ''பெண்களைக் கூட்டிக்கொடுத்தார்'' என்ற பழியோடும், அவருக்கு இயற்கை மரணம் இல்லை என்றும், ''சிங்களப் பொலீஸ் நாய்கள்'' என்றும் சூடான மேடைப்பேச்சுக்களுடன் அடுத்தவருடத் காங்கேசன்துறைத் தேர்தலுக்கான ஆரவாரங்களுடன் அடுத்த வருடமும் பிறக்கிறது...


தொடரும்....

ரூபன்
14.06.10

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்