நாம் இவ்வளவு காலமும் புகலிடச் சிந்தனை மையம் என்ற பெயரிலே இயங்கி வந்தோம். இது எமது அரசியல் நோக்கம் மற்றும் குறிக்கோளுக்கு போதாமையும், தவறான அரசியல் அர்த்தத்தை அது கொடுப்பதால், பெயர் மாற்றம் அவசியமானதாக உள்ளது. இந்த வகையில் புதிய ஜனநாயக மக்கள் முன்னணி என்று, எமது அமைப்பிற்கான பெயர் மாற்றத்தை செய்துள்ளோம்.
இந்த பெயர் மாற்றம் பற்றிய சில விளக்கங்களையும், அதற்கான அரசியல் காரணங்களையும் தெரிவிப்பது அவசியமாகின்றது.
1. புகலிட சிந்தனை மையம் என்றால், அது செயலை மறுக்கின்ற வெறும் சிந்தனை மையமாக பொதுவாக பார்க்கப்படுகின்றது. சமூக மாற்றத்தைக் கோரும் அரசியல் வேலைகளை செய்வதை மறுத்து, அனைத்தும் வெறும் சிந்தனையாக மாறிவிடுகின்ற சித்தாந்தத்தை இது உள்ளடக்கியுள்ளது.
2. புகலிட சிந்தனை மையம் போன்றவை, அன்று சோவியத் நாடுகளுக்கு எதிராக வலதுசாரிய குழுக்களால் உருவாக்கப்பட்ட குறிப்பான அரசியல் புள்ளியில் வைத்து இது அடையாளம் காணப்படுகின்றது. குறிப்பாக வெளிநாட்டவர்களால் இப்படி நோக்கப்படுகின்றது. அன்று புகலிட சிந்தனை மையங்கள், மார்க்சிய எதிர்ப்;பு சிந்தனை மையங்களாக செயல்பட்டதை சுட்டிக் காட்டுகின்றனர். நாம் இதற்கு மாறான செயல்தளத்திலான எமது செயல்பாட்டுக்கு, தவறான பெயர் தடையாக மாறியுள்ளது.
3. நாம் அன்று எதிர்பார்த்ததை விடவும், இலங்கையில் பாசிசம் என்பது நவீனமாகி அது உலகளாவில் தன்னையொத்த பாசிச சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து நிற்கின்றது. அந்த திசையில், அது மேலும் மேலும் பாசிசமாகி முன்னேறிச் செல்லுகின்றது. தனது பாசிச கட்டமைப்புக்கு ஏற்ப, அரசியல் அமைப்பு சட்டத்தையே மாற்றியமைக்க முனைகின்றது. குடும்ப ஆட்சியை நீடித்து வைக்கும் வண்;ணம், குடும்ப சர்வாதிகாரத்தை ஆட்சியமைப்பாகின்றது. இலங்கையில் ஜனநாயகம் என்பது, பாசிசத்துக்கு இணங்கி அதற்கு உட்பட்டு பேசுவது என்ற எல்லைக்குள் இயல்பாக்கப்படுகின்றது. இதனால் பாசிசத்துக்கு எதிரான, நாட்டுக்கு வெளியிலான போராட்டங்கள், அணிதிரட்டல்கள் முதன்மை பெற்று வருகின்றது. நாட்டுக்குள் இது செல்வாக்கு வகிக்கும் என்பதுடன், அரசியல் ரீதியான முதன்மையான எதிர்ப்பு மையங்களாக புலம்பெயர் செயல்தளம் மாறுகின்றது. இந்தச் சூழலை நோக்கி, பாசிசம் நாட்டில் அடக்குமுறை மக்கள் மேல் ஏவி வருகின்ருது. எமது பெயர் மாற்றம் இதை எதிர்கொள்ளும் வண்ணம், பாசிச எதிர்ப்பு முன்னணியை உருவாக்கும் வண்ணமும், மேலும் அவசியமாகின்றது
4. புகலிட சிந்தனை மையம் என்றால் என்ன? இந்த கேள்வி தமிழர் அல்லாத தளத்தில் இருந்தும் இன்று கேட்கப்படுகின்றது.
நாம் இன்று வேலை செய்வதற்கும், முன்னேறுவதற்கும் இவை தடையாக இருப்பதால், பெயர் மாற்றம் அவசியமாகின்றது. சரியான கருத்தை தெளிவாக எடுத்துச்செல்லவும், வலதுசாரிய சிந்தாந்தங்களை தவிடு பொடியாக்கவும், ஒரு மாற்றத்தை முன்னிறுத்தி வேலை செய்வதற்கும், இந்த பெயர் மாற்றம் எம்முன் அவசியமாக இருக்கின்றது.
இந்த வகையில் புகலிட சிந்தனை மைய இணையமான www.psminaiyam.com என்பது www.ndpfront.com ஆக மாற்றப்படுகின்றது. அத்துடன் ஆங்கிலம் உட்பட பல ஐரோப்பிய மொழிக்கான ஒரு இணையமாக www.ndpfront.net என்ற இணையம் விரைவில் இயங்க உள்ளது. அதுவரை காலமும் நோர்வே மொழியில் இயங்கும் psmnorge.wordpress.com என்ற தளம், www.ndpfront.net இல் தற்காலிமாகவும், பின் பல்மொழி ஊடகமாக இயங்கவுள்ளது. கடந்த எம் வரலாற்றைச் சொல்லும் 1000 கணக்கான ஆவணங்கள் உள்ளடக்கிய, எமது ஆவணப்படுத்தலை, நீங்கள் www.tamilarangam.net இணையத்தில் காணமுடியும்.
நாம் எமது அமைப்பின் சார்பாக விரையில் சஞ்சிகை ஒன்றை வெளியிட உள்ளோம். இதன் மூலம், பரந்துபட்ட மக்களிடம் செல்ல உள்ளோம். எமது திட்டத்தை (பார்க்க) அடிப்படையாக கொண்டு, சமூகத்தில் புதிய மாற்றத்துக்கான ஒரு தொடக்கமாக இது அமையும். எமது முயற்சிகளுடன் இணைந்து பங்காற்ற வருமாறு கோருகின்றோம்;.
மக்களின் அடிப்படையான போராட்டத்தையும், இதை மறுக்கும் இரண்டு எதிர்ப் போக்குகளையும் இனம் காணுமாறு கோருகின்றோம்.
1. வலதுசாரிய சித்தாந்தமான கூட்டணி முதல் புலி வரையான கடந்த காலத்தின் அரசியல் மற்றும் இராணுவ வடிவங்கள் தோற்றுப் போன ஒன்று என்பதை, வரலாறும் மக்களின் துயரம் நிறைந்த வாழ்வும் மிகத் தெளிவாக நிரூபித்து இருக்கின்றது. இருந்தபோதும், மாற்று வழிகளில் நம்பிக்கை கொடுக்கும் அரசியல் சக்திகள் இன்றி, அது இன்னமும் செல்வாக்கு வகிக்கின்றது. இதை மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு எம்முன்னுள்ளது.
மறுபக்கத்தில் மீண்டும் அந்த வலதுசாரிய வழியில் செல்வதாலும், அதை பின் தொடர்வதால், புதிய மீட்சி எதுவும் வந்து விடாது. தொடர்ந்தும் அழிவைத் தவிர, வேறு எதையும் அவர்கள் தந்து விடப் போவதில்லை. இது எமது அனுபவம் சார்ந்த உண்மையும் கூட. கடந்த காலத்தில் மக்கள் எந்த நன்மையையும் இவர்களால் பெற்றது கிடையாது. மாறாக அழிவைத்தான் பெற்றார்கள்.
தங்கள் கடந்தகால தோல்விக்கு பொறுப்பு ஏற்காதவர்கள், அதை விமர்சனம் சுயவிமர்சனம் செய்யாதவர்கள், மக்களுக்கு எதிராக இழைத்த படுபாதக செயலுக்காக மனவருந்தாதவர்கள், தொடர்ந்து எப்படி மக்களுக்காக நேர்மையாக உழைப்பார்கள். சொந்த சுயநலத்தைத் தாண்டி, வலதுசாரியம் என்றும் மக்களுக்காக இயங்குவதில்லை. அவர்கள் நம்பினால், கடந்த மனித அழிவு போல் தான், மீண்டும் எஞ்சிய இனத்தை அழிப்பார்கள். இதன் மூலம் தொடர்ந்து அவர்கள் பணம் சம்பாதிக்கத்தான் முடியும். இதுதான் அவர்கள் அரசியல் வழி.
2.வலதுசாரியத்தை அரசியல் ரீதியாக முறியடிக்காது, இதற்கு எதிராக ஒரு திட்டத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டாத அனைத்தும், வெறும் அறிவு சார்ந்த அனைத்தும், ஒருபுறத்தில் புலியெதிர்ப்பு அரசியலாக மாறிவிடுகின்றது. அது வலதுசாரியத்துக்கே மீளவும் அது உதவும். அந்த வகையில் முற்போக்கு முதல் மார்க்சியம் வரை பேசுகின்ற புத்திவித்தனமான விமர்சன அரசியலால், சமூகத்தில் மாற்றம் வந்து விடாது. மாற்றம் என்பது செயலுக்கான ஒன்றாக, அரசியல் திட்டத்தை முன்வைத்து செய்யப்பட வேண்டிய ஒன்றாகவே இன்று எம்முன்னுள்ளது.
அத்துடன் கடந்த காலத்தில் மக்கள் பாசிசத்தால் சிதைந்தபோது, மக்களுக்கு குரல்கொடுக்காதவர்கள் தொடர்ந்து எப்படி மக்களுடன் தொடர்ந்து நிற்பார்கள்? திடீர் அரசியல் பேசுவதும், தங்கள் கடந்த காலத்தை மூடிமறைப்பதுடன், தாங்கள் அல்லாத தளத்தில் மக்களுக்கான கடந்தகால போராட்டத்தை மறுப்பதும் கூட, மூடிமறைத்த மக்கள் விரோத சந்தர்ப்பவாத அரசியலாகத்தான் தொடருகின்றது.
இவை இரண்டும் பாசிசத்துக்கு எதிராக மக்களை செயலூக்கமுள்ள மாற்றுத் தளத்தை உருவாக்குவதற்கான முதற் தடையாகும். புலத்திலும் சரி, மண்ணிலும் சரி இதுதான் நிலைமை. வேறுபட்ட சக்திகள், ஓரே சித்தாந்த தளத்தில் விதிவிலக்கு இன்றி எங்கும் இயங்குகின்றனர்.
வலதுசாரி சிந்தாந்தத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட எம்தேச மக்களை விடுவிக்க, இடதுசாரியம் முற்போக்கு மார்க்சியம் பெயரில் சுய அடையாளத்தையும் பிரமுகர்தனத்ததையும் பேணும் வெற்று அரட்டைகளுக்கு பதில், செயலூக்கமுள்ள மக்களை புரட்சிகரமாக அணிதிரட்டும் வழியைத் தேர்ந்தெடுங்கள். அதற்காக உழையுங்கள், அதற்காக போராடுங்கள். இதில் உள்ள தடைகளை, உள்ளேயேயும் சரி, வெளியேயும் சரி இனம் கண்டு தகர்த்தெறியுங்கள்.
புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
NDPF
12.06.2010