தாழ்த்தப்பட்ட மக்கள் பொருளாதாரரீதியில் முன்னேறுவதை ஆதிக்க சாதிகளால் எவ்வாறு தாங்கிக் கொள்ள இயலாது என்பதை விளக்க, "தீண்டப்படாதவர்கள்" எனும் நூலில், இராசஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாமர் சாதி மக்கள், தங்கள் வீட்டுத் திருமணத்தை சற்று விமரிசையாகக் கொண்டாடிய காரணத்திற்காக, ஜாட் ஆதிக்க சாதிவெறியர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தைக் குறிப்பிடுகிறார், அம்பேத்கர். இது நடந்து 85 வருடங்களுக்கு மேலாகியும், இன்றும் பொருளாதாரரீதியில் முன்னேறும் தாழ்த்தப்பட்டோர், ஆதிக்க சாதியினரால் தாக்கப்படுவது தொடர்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் அரியானாவிலுள்ள மிர்ச்பூரில் தாழ்த்தப்பட்ட வால்மீகி சாதியினரின் 20 வீடுகள், 400 ஜாட் சாதிவெறியர்களால் கொளுத்தப்பட்டன. போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து கொண்டிருக்க, தப்பிக்க முடியாதபடி தீயில் மாட்டிக்கொண்ட உடல் ஊனமுற்ற 18 வயதான இளம்பெண் ஒருவரும், அவரைக் காப்பாற்ற சென்ற, நோய்வாய்ப்பட்ட அவரது தந்தையும் எரிந்து சாம்பலாயினர். இதனைத் தொடர்ந்து ஜாட் சாதிவெறியர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டனர். தாழ்த்தப்பட்டவர்களைத் தாக்குவதைத் தங்களது பிறப்புரிமையாகப் பார்க்கும் ஜாட் வெறியர்கள், இந்தக் கைது நடவடிக்கையினை எதிர்த்து, "காப்" எனப்படும் 45 கிராமங்களின் பஞ்சாயத்தைக் கூட்டிக் கைதானவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் உயரதிகாரி ஒருவர் கலந்து கொண்ட இந்த சாதிக் கட்டப் பஞ்சாயத்துக்குத் தலைமை ஏற்றவரோ, அரசு பள்ளி ஆசிரியர்.

தாழ்த்தப்பட்டவர் வளர்க்கும் நாய் ஒன்று ஜாட் சாதியைச் சேர்ந்த ஒருவரைப் பார்த்துக் குரைத்ததுதான் இந்தக் கொடூரத் தாக்குதலுக்குக் காரணமாம். ஆனால், உண்மையில் தாழ்த்தப்பட்ட வால்மீகி மக்களின் கல்வி, பொருளாதார முன்னேற்றத்தைக் கண்டும், அவர்கள் மீதான ஜாட் சாதியினரின் ஆதிக்கப் பிடி தளர்ந்து வருவது கண்டும் பொறுக்கமாட்டாது, அவர்களைத் தாக்கத் தருணம் பார்த்திருந்த சாதி வெறியர்களுக்கு நாய் குரைப்பு ஒரு முகாந்திரம் மட்டுமே.

ஜாட்டுகளின் சாதிவெறி தாக்குதல்கள் இந்தப் பகுதிக்குப் புதிதல்ல. கடந்த வருடம் இதே பகுதியில், ஜாட் சாதி வெறியர்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக இழுத்துச் சென்றுள்ளனர். 1997-இல் தாழ்த்தப்பட்ட விவசாயக் கூலிகள், கூலி உயர்வு கேட்டுப் போராடிய பொழுது சமூகப் புறக்கணிப்பு செய்து, வீடுகளைத் தாக்கி எரித்துள்ளனர். 2005-இல் சோனாபட் மாவட்டம் கோஹனா நகரில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைச் சூறையாடி எரித்துள்ளனர்.

மிர்ச்பூர் கிராமத்தில் 300 தாழ்த்தப்பட்டோர் குடும்பங்கள் உள்ளன. இங்குள்ள நிலங்கள் அனைத்தும் ஜாட்டுகளுக்கே சொந்தம். தாழ்த்தப்பட்டவர்கள் காலம் காலமாக ஜாட்டுகளின் நிலங்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வருகின்றனர். ஆயினும், அவர்களை ஜாட்டுகள் விருப்பம் போல ஆட்டிவைத்த நிலை இன்று இல்லை. ராம் அவதார் என்பவரது தலைமையில் விவசாயக் கூலிகள் அமைப்பாகியுள்ளனர். கொடுத்த கூலியைக் கைகட்டி வாய் பொத்தி வாங்கிக் கொண்டிருந்த தாழ்த்தப்பட்டோர், இன்று சுயமரியாதையுடன் தமக்கான நியாயமான கூலியைக் கேட்டுச் சட்டரீதியாகப் போராடி வாங்குகின்றனர். மேலும், தாழ்த்தப்பட்டவர்கள் இன்று ஒப்பீட்டளவில் படிப்பறிவு பெற்றவர்களாக உயர்ந்துள்ளனர். குடும்பத்துக்கு ஒருவராவது உயர்நிலைப் பள்ளி வரை படித்திருக்கிறார்.

முன்பு தாங்கள் ஆதிக்க சாதியினரை அண்டியிருந்தபோது பட்ட அவமானங்கள் பற்றிப் பேசும் போது, ஓவு பெற்ற கல்லூரி முதல்வரான ராம் குமார், 1995-இல் நடந்த ஒரு சாதிக் கலவரத்திற்குப் பிறகு, அமைதி திரும்புவதற்காக ஜாட் சாதியினர் முன் தாழ்த்தப்பட்டவர்கள் தமது தலைப்பாகையைக் கழற்றிய சம்பவத்தை நினைவு கூறுகிறார். ஆனால், இன்றைய தலைமுறையோ இது போன்ற அவமரியாதைகளைப் பொறுத்துக் கொள்ளத் தயாராக இல்லை என அவர் கூறுகிறார். இப்பகுதியிலுள்ள தாழ்த்தப்பட்டோர் பலர் ஆசிரியர்களாகவும், பொறியாளர்களாகவும், அரசு உயரதிகாரிகளாகவும் உயர்ந்துள்ளனர். பலரும் கல்வியறிவு பெற்றிருந்தாலும், வேலைவாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காத காரணத்தால், ஜாட்டுகளின் நிலங்களில் இன்னமும் பலர் கூலிகளாகவே உள்ளனர்.

இவ்வாறு சுயமரியாதையோடு தாழ்த்தப்பட்டவர்கள் தமக்குச் சமமாக வாழ்வதைப் பொறுக்காத ஜாட்டுகள், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அவர்களைத் தாக்கி வருகின்றனர். தாழ்த்தப்பட்டவர்களை இழிவான பெயர் சொல்லி அழைத்து வம்புக்கிழுப்பது, கட்டிலில் உட்காரக் கூடாது என மிரட்டுவது, விவசாயக் கூலி கொடுக்காமல் இழுத்தடிப்பது என்று தொடர்ந்து சீண்டி வருகின்றனர். இங்கு ஒவ்வொரு வருடமும் விவசாயக் கூலிகளுக்கு சரிவரக் கூலி கொடுக்காத வழக்குகள் மட்டும் 200 வரை பதிவாகின்றன.

இந்தப் பகுதியைச் சேர்ந்த சந்தர் சிங் என்பவர் ஆடு மேத்து சேர்த்த காசில், ஜாட்டுகள் மத்தியில் மாடி வீடு கட்டி, வீட்டிலேயே மளிகைக் கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தார். இந்தக் ‘குற்றத்திற்கு’த் தண்டனையாக, ஜாட் சாதியினர் அணிதிரண்டு அவரது வீட்டையும் கடையையும் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.

இந்த அராஜகங்களைத் தட்டிக் கேட்க வேண்டிய போலீசும் நீதிமன்றமும் எப்போதும் ஆதிக்க சாதியினரின் பக்கம்தான் நிற்கின்றன. சமீபத்திய தீ வைப்புச் சம்பவம் முழுவதையும் வேடிக்கை பார்த்த போலீசு, தப்பிப் பிழைத்தவர்களுக்கு உதவக்கூட வரவில்லை. தாக்கி விரட்டப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் 25 கி.மீ. தூரம் நடந்தே சென்று, தமது சொந்த ஏற்பாட்டில் வாகனங்கள் பிடித்துத் தப்பிச் சென்றுள்ளனர். நாய் குரைத்ததாகப் பிரச்சினையை ஜாட்டுகள் ஆரம்பித்த உடனேயே, தாழ்த்தப்பட்டவர்கள் போலீசு அதிகாரிகளிடம் முறையிட்டு உதவி கேட்டுள்ளனர். ஆனால் போலீசோ, ஜாட் சாதியினர் தாக்குதல் தொடுத்துவிட்டுப் பாதுகாப்பாகச் செல்வதற்குத்தான் ‘பந்தோபஸ்து’ கொடுத்துள்ளது. பிரச்சினையைத் தீர்த்து சமரசம் பேசுவதற்குச் சென்ற வால்மீகி சாதியைச் சேர்ந்த ஒரு பஞ்சாயத்து உறுப்பினரும், ஒரு வட்டார சமிதி உறுப்பினரும் போலீசாரால் அடித்து விரட்டப்பட்டுள்ளனர்.

இந்தப் பகுதியில் திட்டமிட்ட தாக்குதலைத் தொடர்ந்து நடத்தி வரும் ஜாட் சாதிவெறியர்களை ஓட்டுக் கட்சியினர் எவரும் கண்டிப்பதோ, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதோ இல்லை. வழக்கமான நிவாரணக் கோரிக்கையைத் தவிர்த்து, தாழ்த்தப்பட்டவர்களை வேறு இடங்களுக்கு குடியேற்றலாமா, அல்லது இரு சாதியினரையும் இணைக்கும் பாதையை மறித்துவிடலாமா என்று பல யோசனைகளை ‘அக்கறையுடன்’ முன்வைக்கிறார்கள்.

நிலங்கள் அனைத்தும் ஜாட் சாதிவெறியர்களுக்கு சொந்தமாக இருப்பதும், அரசு அவர்களின் பக்கம் இருப்பதுமே ஜாட்டுகளின் கேட்பாரற்ற சாதிவெறித் தாக்குதல்களுக்குப் பின்னணியாகும். அரியானாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் தாழ்த்தப்பட்டவர்கள் இது போன்ற பல தாக்குதல்களை அன்றாடம் எதிர்கொள்கின்றனர். அரசும், அதிகாரிகளும், நீதிமன்றமும் கழிப்பறைக் காகிதங்களாகக் கருதி நடைமுறைப்படுத்தாமல் இருக்கும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை இனிமேலும் நம்பிப் பலனேதும் இல்லை. ஜாட் சாதிவெறியர்களைத் தனிமைப்படுத்த, அவர்களின் வாக்குரிமை உள்ளிட்ட அனைத்து சிவில் உரிமைகளையும் ஜனநாயக உரிமைகளையும் ரத்து செய்யுமாறு நாடெங்கும் தெருப் போராட்டங்களை நடத்துவதும், சாதிவெறியர்களின் தாக்குதலை முறியடிப்பதும், திருப்பித் தாக்கிப் பாடம் புகட்டுவதும்தான் தொடரும் இத்தகைய சாதிவெறித் தாக்குதல்களுக்குத் தீர்வாக அமையும்.
*துரை