Language Selection

புதிய ஜனநாயக மக்கள் முன்னணி
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

இந்த திட்டம் ஒடுக்கப்பட்ட அனைத்து மக்களின் நலன்களை முரணற்ற வகையில் முன்னிறுத்துகின்றது. வர்க்க ஒடுக்குமுறை முதல் சமூக ஒழுக்குமுறையில் இருந்தும் விடுதலையடைய, ஒடுக்கப்பட்ட சமூகப் பிரிவுகள் அதை தமக்குள் முரணற்ற வகையில் இதற்கு எதிராக போராடக் கோருகின்றது.

 

 

1. மக்கள் மேலான வர்க்க ஒடுக்குமுறைகளை இனம் காணல்

 

1.1. மக்களின் உழைப்பு, ஆளும் வர்க்கங்களால் சுரண்டப்படுகிறது.

 

1.2. அன்னிய சக்திகள் தேசிய உழைப்பையும், தேசிய வளத்தையும் சுரண்டிச்செல்லுகின்றது.

 

1.3. தேசிய வளங்கள் அன்னிய சக்திகளுக்கு, நாட்டை ஆளும் வர்க்கங்களால்  தாரை வார்க்கப்படுகின்றது.

 

1.4. நாட்டை அன்னிய நிதி மூலதனத்துக்கு தாரைவார்ப்பதுடன், மக்களின் உழைப்பைச் சுரண்டியும் கொடுக்கின்றனர்.

 

1.5. தேசிய பண்பாடுகள், கலாச்சாரங்கள், உழைப்பின் ஆற்றல், உழைப்பின் நுட்ப திறன், அன்னிய தலையீடுகள் மூலம் அழிக்கப்படுகின்றது.

 

1.6. மனிதவிரோதச் சட்டங்கள் மூலம், மக்களின் உரிமைகள் நாள்தோறும் பறிக்கப்படுகின்றது.

 

2. மக்கள் மேலான சமூக ஒடுக்குமுறைகளை இனம் கானல்

 

2.1. இன ரீதியான ஒடுக்குமுறைகள்

 

2.2. பாலின ரீதியான ஒடுக்குமுறைகள்

 

2.3. சாதிய ரீதியான ஒடுக்குமுறைகள்

 

2.4. மத ரீதியான ஒடுக்குமுறைகள்

 

2.5. பிரதேச ரீதியான ஒடு;க்குமுறைகள்

 

2.6. பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறைகள்

 

3. இலங்கையும், இலங்கை அரசையும் வரையறுத்தல்

 

3.1. இலங்கை நவகாலனிய அரைநிலப்பிரபுத்துவ தரகு முதலாளித்துவ சுரண்டல் அமைப்பாகும்.

 

3.2. உலகமயமாக்கல் என்ற ஏகாதிபத்திய உலக ஒழுங்கிலான சங்கிலியில், இலங்கை பிணைக்கப்பட்டுள்ளது.

 

3.3. ஜனநாயகத்தின் பெயரில் நிலவுவது  பாசிசமாகும். இதன் மூலம் சுரண்டவும், ஒடுக்கவும் அதனால் முடிகின்றது.

 

3.4. இலங்கை அரசு சிங்கள பேரினவாதத்தை பௌத்த மத அடிப்படை வாதத்தையம் கொண்டு மக்களை ஒடுக்கி வருகின்றது.

 

3.5. இலங்கை அரசு இனங்களை ஒன்றுக்கு எதிராக ஒன்றை மோதவிட்டு, மக்களை பிரித்தாளுகின்ற இனவாத அரசாகும்.

 

4. மக்களின் எதிரிகளை (உள்நாடு மற்றும் சர்வதேசம்) இனம் காணல்

 

4.1. இலங்கை அரசு மக்களைச் சுரண்டியும், ஓடுக்கியும் வாழும் ஆளும் அதிகார வர்க்கங்களின் பிரதிநிதியாகும்.

 

4.2. இலங்கை மக்களை சுரண்டியும், அடக்கியாளும் வர்க்கமாக தரகு முதலாளித்துவமும், நிலப்பிரபுத்துவமும் உள்ளது.

 

4.3. இலங்கை மக்களின் வாழ்வை சுரண்டவும் சூறையாடவும், ஏகாதிபத்தியங்கள் (அமெரிக்கா, ஐரோப்பா, யப்பான்…) இலங்கை அரசின் துணையுடன் தலையிடுகின்றன.

 

4.4. இலங்கையில் பிராந்திய வல்லரசுகளின் (இந்தியா, சீனா …) அத்துமீறல்களுடன், மக்கள் ஒடுக்கப்படுகின்றனர்.



5. மக்களை ஒடுக்கும் வடிவங்களை இனம் காணல்

 

5.1. இலங்கை பௌத்த சிங்கள பேரினவாத அரச வடிவத்தை ஆணையில் வைத்து, தமிழ் சிங்கள மலையக முஸ்லீம் மக்களை ஒடுக்குகின்றது.

 

5.2. சிங்களப் பேரினவாத மேலாதிக்கம் மூலம், இனங்களை ஒடுக்கியும் பிரித்தாளும் முறைகள் மூலமும், தன்னை நிலைநிறுத்தியுள்ளது.

 

5.3. ஜனநாயக வடிவங்கள் மூலம் மக்களைச் சுரண்டும் சமூக ஒழுங்கை கொண்டு, மக்களை ஒடுக்குகின்றது. இதற்கு ஏற்ப, அது தன் பாசிச வடிவத்தைக் கையாளுகின்றது.



6. பிரதான முரண்பாடும், இன்றைய சூழலும்

 

6.1. முதன்மை முரண்பாடாக இன முரண்பாடே உள்ளது. ஆனால் நாட்டில் இன்று நடந்து முடிந்த யுத்தத்தின் மூலம், இந்த முரண்பாடு பின்தள்ளப்பட்டு வர்க்க முரண்பாடு; முதன்மையான முரண்பாடாக மாறி வருகின்றது.

 

6.2. இன முரண்பாட்டை ஒடுக்க கையாண்ட அதே பாசிசம், இன்று இலங்கை தளுவிய சுரண்டும் வர்க்கத்தின் பாசிசமாகியுள்ளது.

 

6.3. யுத்த சூழல் மூலம் அன்னிய சக்திகளின் தலையீடும், ஊடுருவலும் அதிகரித்த அளவில் ஏற்பட்டுள்ளது. அன்னிய நலன்கள் முதன்மையாகி நிற்கின்றது. இதனால் மக்கள் அதிகரித்த சுரண்டலையும், சூறையாடலையும் எதிர்கொள்கின்றனர்.

 

6.4. மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டு, அவை முதன்மையான பிரச்சனையாகி வருகின்றது.

 

6.5. மக்கள் பெற்றிருந்த உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதும், அவைக்கான போராட்டமும் கூர்மையாகிவருகின்றது.

 

7. தமிழ் மக்களின் இன்றைய எதார்த்தம்

 

7.1. பேரினவாத அரசே, தமிழ் மக்களின் முதல் எதிரியாக உள்ளது. அது தமிழன் என்ற அடையாளத்தின் மேல், குறிப்பானதும் சிறப்பான பாசிச தாக்குதலை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

 

7.2. சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வு தான், தமிழ் மக்களின் பிரச்சனைக்கான அரசியல் தீர்வாகும். இதை இந்த அரசு வழங்க மறுக்கின்றது. இதுவல்லாத எதுவும், ஆளும் வர்க்கத்தின் குறுகிய நலன்களுக்கும், அவர்களின்  தேவைக்கும் உட்பட்டவையாக இருக்கும்.

 

7.3. தமிழினத்தின் மேலான இனவழிப்பும், அதன் சுமைகளும், சுமக்க முடியாத அவலத்துடன் இந்த பேரினவாத பாசிச அரசு தமிழ் மக்கள் மேல் சுமத்துகின்றது.

 

இந்த வகையில்

 

1. தமிழ் மக்கள் வடக்கு,கிழக்கு பிரதேசங்களை தமது பாரம்பரிய பிரதேசமாகக் கொண்டவர்கள். அவர்கள் ஒரு தேசிய இனத்தவர். சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள்.

 

2. பௌத்த சிங்களப் பேரினவாத பாசிச அரசின் அடக்குமுறையும் அதன் இருப்பு, இதன் நோக்கம் என்பன தேசிய இன வளர்ச்சியை சிதைத்திருக்கிறது. இந்த திட்டமிட்ட தொடர்ச்சியான இன அழிப்பிலிருந்து விடுபட, தமிழ் மக்கள் தம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

 

3. தேசிய உரிமையை வென்றெடுக்க உறுதியாக விட்டுக் கொடுக்காது போராடுதல் அவசியம்.



4. இலங்கை பேரினவாத பாசிச அரசு, பிராந்திய வல்லரசு, மற்றும் ஏகாதிபத்தியங்களுடன் சமரசம் செய்வதனூடாகச் இதை தக்கவைக்க முனைகின்றது.

 

5. மக்களது ஜக்கியத்தாலும், உறுதியாலும், அரசியல் பலத்தாலும் உருவாக்கப்படும் மக்கள் சக்தியால் மட்டும் தான், தமிழ்மக்கள் தம்மை தற்காக்க முடியும்;.

 

6. தமிழ் தேசிய இனத்தின் அனைத்து ஒடுக்கப்பட்ட வர்க்கமும் இணைந்து, அவற்றிற்கு இடையேயான முரண்பாட்டைத் தேசிய முரண்பாட்டிற்கு கீழ்ப்படுத்தி சிநேகபூர்வ வழிகளில் கையாளுதல் அவசியமானது.

 

7. போராட்டத்தில் ஜக்கியப்படுகிற அனைத்துப் புரட்சிகர வர்க்கப்பிரிவினரும், தனித்துவமான ஸ்தாபனங்களைக் கொண்டிருக்கும், ஜனநாயகம் உத்தரவாதப்படுத்தப்பட்டதாக அமைந்து  இருக்க வேண்டும். ஆயினும் இந்த நலன்கள் முன்னணியின் குறிக்கோள்களை பாதிக்காத வண்ணம், அதன் நலன்களுக்குக் கீழ்ப்பட்டு அணுகப்படுவதாகவும், தனது வளர்ச்சிப்பாதையை வகுத்துக் கொள்வதாக இருக்கவேண்டும். முரணற்ற ஜனநாயகத்தை அடிப்படையாக கொள்ள வேண்டும்.

 

8.ஆயுதப் போராட்டம் இன்று முடிவுக்கு வந்துள்ளது. இருந்த போதும் ஜனநாயக வழயிலான  மக்கள் போராட்டத்தை இந்த பாசிச அரசு அனுமதிக்காது. மக்கள் தம் உரிமைக்காக போராடும் ஜனநாயக உரிமையை வழங்காது. மாறாக பாசிச வழியில் அதை ஒடுக்கும். இது இயல்பாக ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு மறுபடியும் இட்டுச்செல்லும்.

 

9. இன்று ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இலங்கையில் வாழும் அனைத்து இனத்தைச் சேர்ந்த ஒடுக்கப்பட்ட மக்கள் போராட்டத்துடன் தமிழ்மக்களின் போராட்டம் இணைக்கப்பட வேண்டும். அதன் பொது நலனுக்கு முரணற்ற வகையில், அதற்குள் உட்படுத்தி தமிழ்மக்கள் தம் உரிமைகளை அவர்களுடன் சேர்ந்து வெல்லவேண்டும்.

 

10. தமிழர் அல்லாத மற்றய சமூகத்தின் எதிரியும் இந்த அரசு என்பதை அங்கீகரித்து, அவர்களுடன் கடந்தகாலத்தில் நாம் ஏற்படுத்திய குறுந்தேசிய இனவாத இடைவெளிகளை அகற்ற தமிழர்கள் போராட வேண்டும்.

 

11. எம்மைச் சுற்றியுள்ள இனவாதத்தின் சகல சமூகக் கூறுகளையும் அகற்ற போராட வேண்டும்.

 

12. உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள்தான், தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரித்து அதற்காக நிற்பார்கள் என்ற அடிப்படையில், எம் போராட்டத்தை சரிசெய்ய வேண்டும். உலகளவில் ஆளும் வர்க்கத்தை எதிர்த்து நிற்கும் பரந்துபட்ட உலக மக்களை சார்ந்து நின்று எம் உரிமைகளைக் கோர வேண்டும்.

 

13. முஸ்லீம் மக்கள் மேல் தமிழ் குறுந்தேசிய இனவாதம் இழைத்த கொடுமைகளை இனம் கண்டு, அதற்கு எதிராக போராட வேண்டும்.

 

14. முஸ்லீம் மக்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ, அல்லது அதற்குக் கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது, அவர்கள் தனியான ஒரு தேசிய இனத்தவர்கள். இவர்கள் எமது போராட்டத்தில் ஊக்கமிகு பங்காளிகளுமாவர். இவர்களிற்கான அரசியலதிகார அமைப்பு முறைகள் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்டவையாக அமைதல் வேண்டும். அவர்கள் ஜக்கியப்படுவதற்கு மேலாக அவர்களது இணைவு குறித்த முடிவு அவர்களது சுயநிர்ணய உரிமையாகும். இதை அங்கீகரித்து இணைந்து போராட வேண்டும்.

 

15.மலையக மக்கள் தமிழ் தேசிய இனத்தின் ஒரு பகுதியினரோ அதற்கு கீழ்ப்பட்டவர்களோ அல்லர். மாறாக அவர்கள் தனித்துவமான இனப்பகுப்பைச் சேர்ந்தவர்கள். அல்லது, அவர்கள் தனியான ஒரு தேசிய இனத்தவர்கள். இவர்கள் எமது போராட்டத்தில் ஊக்கமிகு பங்காளிகளாக இருப்பர். மலையக மக்கள் வாழும் பிரதேசங்கள் அவர்களது சொந்தப் பிரதேசங்களில் பூரண சுயாட்சி அதிகாரம் கொண்டதும், அவர்களது இன உருவாக்கத்தை வளர்த்தெடுப்பதுமான அரசியலதிகார அமைப்பொன்றினை உருவாக்க குரல் கொடுக்க வேண்டும்.

 

16.சிங்கள மக்கள் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தின் எதிரிகளோ, தமிழ் மக்களின் எதிரிகளோ அல்லர். அவர்களும் எமது பொது எதிரியால் ஒடுக்கப்படுபவர்களே. ஆயினும் தேசிய ரீதியில் சிங்கள மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தும் பௌத்த சிங்களப் பேரினவாத சிந்தனைப்போக்கினைக் களைந்தெறியாத வரை, அவர்கள் நமது போராட்டத்தின் நியாயத்தன்மையைப் புரிந்து கொள்ள முடியாது. எனவே அவர்களை அந்தச் சிந்தனையில் இருந்து விடுவிக்க, நாம் எமது போராட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலமே அவர்களுக்கு உதவ முடியும். இதன் மூலம் நாம் ஐக்கியத்தை உருவாக்க முடியும்;.

 

17.தமிழ் தேசியம் சிங்கள தேசியத்துக்கு எதிரானதல்ல. மக்களுக்கான தேசியம், தமிழ் சிங்கள மக்களின் பொதுவான தேசிய கூறுகளை உள்ளடக்கியது. அரச ஒடுக்குமுறை வடிவத்தில்; மட்டும் தான், அவை குறிப்பாக வேறுபட்டது. தமிழ் தேசியத்தை சிங்கள மக்களின் வாழ்வு சார்ந்த தேசியத்தில் இருந்து பிரிக்க முடியாது. ஆளும் வர்க்கத்தின் இனவாத தேசியத்தில் இருந்து மட்டும் தான் பிரிக்கமுடியும்.

 

18.தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் சிங்கள மக்களுடன் இணைந்த,  ஒரு ஒன்றுபட்ட புரட்சிக்காக நாம் இணைந்து போராட வேண்டும். இதற்கான அனைத்து முன்முயற்சியையும், நாம் முன்னின்று முன்னெடுக்க வேண்டும்.

 

19.இந்திய பிராந்திய மேலாதிக்க அரசு தமிழ் தேசிய விடுதலையினதும், இலங்கையின் சுயாதிபத்தியத்தினதும் எதிரியாக இருக்கின்றது. ஆளும் வர்க்கங்கள், பாராளுமன்ற கட்சிகள்,   தமிழினவாதிகள் அனைவரும், அங்கு ஒடுக்கப்பட்ட மக்களின் பொது எதிரிகளே. இதை இனம் காண வேண்டும். ஒடுக்கப்படும் இந்திய மக்களும், அவர்களின் புரட்சிகர அமைப்புக்களும் எமது நட்பு சக்திகளே. அவர்களது ஆதரவு, எமது போராட்டத்தின் வெற்றிக்கு முக்கியமானதாகும்.

 

8.எமது எதிரிகளையும், நண்பர்களையும் இவ்வாறு வகைப்படுத்தலாம்.

 

8.1. தமிழ் தரகுமுதலாளிகளும், தமிழ் நிலப்பிரபுக்களும் எமது எதிரிகள். இவர்கள் போராடுவது போல் செயற்பட்டாலும் இவர்கள் திட்டமிட்டு போராட்டத்தை அழிப்பவர்கள், அழித்தவர்கள்.

 

8.2. தமிழ் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து ஒடுக்கப்படும் தமிழ் தேசிய வர்க்கங்களும் எமது போராட்ட சக்திகளாவர்.

 

8.3. முஸ்லீம், மலையக, சிங்கள மக்கள் எமது உறுதியான நண்பர்களும் பங்காளிகளுமாவார். ஆளும் வர்க்க பிரதிநிதிகள் எம் எதிரிகளாவர்.

 

8.4. இந்திய மக்கள், தமிழ் நாட்டு மக்கள் எமது நண்பர்கள். அவர்களை ஆளும் வர்க்கங்கள் அவர்களின் எதிரி, எம் எதிரிகள் கூட.

 

8.5. ஏகாதிபத்தியம் எமது எதிரி. அந்த நாடுகளிவ் உள்ள மக்கள் தான் எம் நண்பர்கள்.

 

9.அரசியல் கட்சிகளும் துரோகக் குழுக்களும்

 

9.1.தமிழர் விடுதலைக் கூட்டணி, தமிழ் தேசிய விடுதலைக் கூட்டணி, தமிழ் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரிவினர். இவர்கள் தமிழ் மக்களின் எதிரிகளாவர்.

 

9.2. தமிழீழ விடுதலைப்புலிகள் மீளப் பலம்பெற முடியாத வண்ணம் அழிந்துவிட்டனர். அதன் எச்சங்களே புலத்தில் உள்ளனர். இவர்கள் தமிழ் தரகு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவத்தை பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள். இவர்கள் ஏகாதிபத்திய நலன்களுடன் தம்மைப் பிணைத்துக்கொண்டதன் மூலம், தம்மை அழித்துக் கொண்டவர்கள்.

 

9.3. கூலி தமிழ்க்குழுக்கள் வர்க்க அடிப்படை நிலப்பிரபுத்துவம் மற்றும் தரகு முதலாளித்துவமாகும். தமிழ் மக்களுக்கு  துரோகம் செய்து, அரசுடன் நின்றவர்கள், நிற்பவர்கள். அரசியல் ரீதியாக அரச கூலிக் குழுக்கள். தமிழ் மக்களின் எதிரிகளாவர்.

 

10.போராட்ட வழிமுறைகள்.

 

10.1.எதிரிகளை அம்பலப்படுத்துதல்.

 

10.2.பாதிவழிக் கூட்டாளிகளின் தவறுகளை இனம் காட்டுதல்.

 

10.3.ஊசலாடும் நம்பகமற்ற கூட்டாளிகளை இனம் காட்டுதல்.

 

10.4.ஊசலாடும் துரோக நிலையெடுத்தோரின் அரசியல் துரோகத்தை இனம் காட்டி, அதன் அணிகளை வென்றெடுத்தல்.

 

10.5.ஊசலாடும் புரட்சிகர அணிகளை வென்றெடுக்க போராடுதல்.

 

10.6.பாராளுமன்றப் பாதை மூலமும், சமரசம் மூலமும், பேச்சுவார்த்தை முலமும், மக்களின் சொந்த அரசியல் வழிக்கு வெளியில் பிரச்சனை தீர்க்கப்படலாம் என்னும் போக்கை அம்பலப்படுத்துதல்.

 

10.7.கடந்தகாலப் போராட்ட அனுபவங்களை கேள்விக்குள்ளாக்குதல். அதை அரசியல் ரீதியாக செயல் இழக்கப் பண்ணுதல்.

 

10.8.போராட்டத்தில் நடந்த, நடக்கின்ற நிகழ்வுகளை ஆய்வுக்குட்படுத்துதல், விவாதித்தல்.

 

10.9.ஒடுக்கப்பட்ட வர்க்கத்தின் போராட்டத்தையும்;, ஒடுக்கப்பட்ட சமூகங்களின் போராட்டத்தையும், பொதுவான அடிப்படையான அரசியல் கொள்கைகளாக கொண்டு பிரச்சாரம் செய்தல்.


போராட்டத்தை நெறிப்படுத்தும் இன்றைய மையமான அரசியல் கருதுகோள்கள்

 

1. தேசியத்துக்கு எதிரான தரகுமுதலாளித்துவ வர்க்கம் மற்றும் நிலப்பிரபுத்துவ வர்க்கத்துக்கு எதிராக போராடி அந்த வர்க்கத்தை ஒழிக்கப் போராட வேண்டும்.

2. உழைக்கும் மக்களின் தலைமையிலான மக்கள் ஆட்சியை அமைக்க போராட வேண்டும்.

 

3. தேசியத்தை அழிக்கும் உலகமயமாதல் ஒப்பந்தம் முதல் அனைத்து தேசவிரோத சர்வதேச ஒப்பந்தங்களையும் கிழித்தெறிய வேண்டும்.

 

4. ஏகாதிபத்தியங்களையும், அதன் பொருளாதார அடிப்படையிலான உலகமயமாதலையும் எதிர்த்துப் போராடவேண்டும்.

 

5. உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் ஆதரவை எமது தேசியம் சார்ந்து நிற்கவும், அவர்களின் ஆதரவையும் கோரவேண்டும்.

 

6. இனங்களுக்கு இடையிலான முரண்பாட்டை சுயநிர்ணய அடிப்படையில் தீர்க்க வேண்டும்.

 

7. தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். தேசிய இனங்கள் தாம் வாழும் பிரதேசங்களில் நிர்வாகங்களை கையாளும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

 

8. சுயநிர்ணயம் என்பது பிரிந்து போவதையும், ஜக்கியப்பட்டு வாழ்வதையும் அடிப்படையாக கொண்டது என்பதை பரஸ்பரம் அங்கீகரிக்க வேண்டும்.

 

9. சுயநிர்ணயம் என்பது தேசிய பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட தேசியமாகும் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

 

10. தேசியத்துக்கு எதிரான சகல அன்னிய பொருளாதாரத்துக்கும் தடை விதிக்கப்பட வேண்டும். அதாவது உலகமயமாதலை திட்டவட்டமாக எதிர்த்து சுயநிர்ணயத்தை வரையறுக்கவேண்டும்.

 

11. சகல வெளிநாட்டு மூலதனங்களையும், சொத்துக்களையும் நட்டஈடு இன்றி தேசிய மயமாக்கி, தேசிய பொருளாதாரத்தை வளர்க்க வேண்டும்.

 

12. மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவு செய்யும் வகையில், தேசிய உற்பத்திகளை இனம் கண்டு அதை வளர்த்தெடுக்கவேண்டும்.

 

13. ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பணப்பயிர் உற்பத்தி முற்றாக தடை செய்யப்பட வேண்டும்.

 

14. தேசிய வளங்களை சரியாக அடையாளம் காணவும், அவற்றின் சமூகப் பெறுமானத்தை உயர்த்தி வளர்த்தெடுக்க வேண்டும்.

 

15. தேசியத்தை கூறுபோட்டு ஏலம் போட்டு விற்க கோரும் சகல வெளிநாட்டுக் கடன்களையும், உள்நாட்டு தரகு கடன்களையும் அதற்கான வட்டிகள் கொடுப்பதையும் உடன் நிறுத்தவேண்டும். அதை தேசிய பொருளாதார வளர்ச்சிக்காக திருப்பிவிடவேண்டும்.

 

16. சிறுபான்மை தேசிய இனங்களான மலையக, முஸ்லீம் மக்களின் சுயாட்சி பிரதேசங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

17.சிறுபான்மை இனங்களின் ஜனநாயக பூர்வமான வளர்ச்சியை உறுதி செய்யும் ஆட்சியமைப்பை உருவாக்க வேண்டும்.

 

18.சிறுபான்மை இனங்கள் மேலான கடந்தகால, நிகழ்கால இனவாத ஒடுக்கமுறையை தெளிவாக அடையாளம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

 

19.சிறுபான்மை இனங்களும் பெரும்பான்மை இனங்களும் பரஸ்பரம் ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்து தேசியத்தை உயர்த்தி ஐக்கியத்தை வளர்க்க வேண்டும்.

 

20.சகல இனப்பிளவு நடவடிக்கையையும் எதிர்த்து போராடவும், ஐக்கியத்தை வளர்ப்பதும் அடிப்படையான தேசிய கடமையாக ஏற்க வேண்டும்.

21.மலையக மக்களின் பிரஜாவுரிமை வழங்கப்படுவதுடன், இதனுடனான வரலாற்று ரீதியாக மனிதவிரோத குற்றத்தை இனம் காணவேண்டும்.

 

22.இனவாத ஒடுக்குமுறைக்குள் வௌ;வேறு பிரிவினர் எப்படி நடத்தினர் என்பதை இனம் காண வேண்டும். சிறுபான்மை இனத்தில் தொடங்கி பெரும்பான்மை இனம் வரை எந்த வகையில் இணைந்தும் தனித்தும் இதைச் செய்தனர் என்பதை, தெளிவாக அரசியல் ரீதியாக விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

 

23.பெரும்பான்மை இன மக்கள் மேல் நடத்திய குறுந்தேசிய இனத் தாக்குதலை இனம் கண்டு விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும்.

 

24.திட்டமிட்ட இன அழிப்பு சார்ந்து உருவான குடியேற்றங்கள் அடையாளம் காணப்பட்டு, அந்த பகுதிகள் சிறுபான்மை இனத்திடம் ஒப்படைத்தல் வேண்டும்.

 

25.இங்கு ஆயுதமேந்தியவர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற்றப்பட வேண்டும்.

 

26.அதேநேரம் அந்தப் பகுதிகளில் வாழும் பெரும்பான்மை இன மக்களின் பாதுகாப்பான வாழ்க்கைக்கு சிறுபான்மை இனங்கள் பொறுப்பு ஏற்க வேண்டும்.

 

27.சகல மக்களையும், அவர்களின் சொந்த வாழ் இடத்தில் வாழ அனுமதிக்கவேண்;டும்.

 

28.யுத்த குற்றங்கள் விசாரணை செய்யப்பட வேண்டும். அவர்கள் தண்டிக்கப்;பட வேண்டும்.

29.அன்னிய நாட்டினரின் மத்தியஸ்தம் என்ற போர்வையில் நடக்கும் தலையீட்டை நிறுத்த வேண்டும்.

30.அமைதியையும் சமாதானத்தையும் ஜனநாயகக் கோரிக்கையின் அடிப்படையில் இனம் கண்டு, பரஸ்பரம் அங்கீகரித்து அவற்றை ஏற்படுத்த வேண்டும். இங்கு ஜனநாயக கோரிக்கை என்பது எந்த இனத்துக்கும் விசேட அதிக சலுகைகளை வழங்குவதை மறுக்கின்றது.

 

31.சகல இனவாத படைகளையும் கலைத்து, மக்களை ஆயுதபாணியாக்க வேண்டும்.

32.மக்கள  நீதிமன்றத்தை நிறுவ போராட வேண்டும்.

 

25.சகல நிர்வாக அலகுகளும் கீழ் இருந்து மேல் நோக்கி விரிவுபடுத்தப்பட வேண்டும்.

 

33.மக்களை தமது சொந்த பிரதேசத்தில் மீள குடியேற்ற வேண்டும்.

34.பயங்கரவாதச் சட்டம், அவசரகாலச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட வேண்டும்.

 

35.உலகளவில் நாடு திரும்ப விரும்பும் அரசியல் மற்றும் பொருளாதார அகதிகளுக்கான அடிப்படை வசதியை செய்து கொடுக்க வேண்டும். குறிப்பாக இந்திய அகதிகள் விடையத்தில் விசேட கவனம் செலுத்தவேண்டும்.

 

36.கடலிலும் நிலத்திலும் புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் சமூக பொருளாதார மீட்சிக்கு முதலுரிமை வழங்க வேண்டும்

 

37. திட்டமிட்ட இனவாத அடிப்படையில் கொண்டு வந்த இரட்டை பிரஜாவுரிமை பறிப்பை ரத்து செய்து, இரட்டைப் பிரஜாவுரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதாவது இலங்கை பிரஜாவுரிமையை வைத்திருக்கும் உரிமையை நாடு கடந்தவர்களுக்கு வழங்கவேண்டும்.

 

38.நாடு கடந்து வாழ்பவர்களை கட்டாயப்படுத்தி நாடு கடத்துவதற்கு எதிராக போராட வேண்டும்

 

39.யுத்தத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு, கல்விச் சீரழிவுகளை மேம்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகளை வழங்க வேண்டும்.

 

40.குடும்பத்தின் ஒரு உறுப்பினரை இழந்த நிலையில் ஆதரவற்று வாழ்கின்றவர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கு அடிப்படையான வசதிகளை வழங்க வேண்டும்.

 

41.யுத்தத்தில் அங்கவீனமானவர்களுக்கு விசேடமான அடிப்படையான வாழ்க்கை ஆதாரங்களை உறுதி செய்யவேண்டும்.

 

42.அனைத்து அரசியல் கைதிகளையும், சமூக பொருளாதார கைதிகளையும் விடுவிக்க வேண்டும்.

 

43.கடந்த கால அரசியல் படுகொலைகள் வரலாற்று ரீதியாக இனம் காணப்பட்டு அவற்றை சமூக ஆதாரமாக்க வேண்டும்.

 

44.தனிச்சலுகை கொண்ட மக்களை பிளவுபடுத்தும் ஜனநாயக விரோத சமூகப் பொருளாதார கூறுகளை உடன் தடை செய்யவேண்டும்.

 

45.சகல இனவாத, மதவாத, சாதியக் கட்சிகளையும் தடை செய்யவேண்டும்.

 

46.இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட அரசியல், கல்வி, கலை இலக்கியங்கள், அமைப்பு வடிவங்கள், மற்றும் பண்பாட்டு கலாச்சார கூறுகள் அனைத்தும் நீக்கப்படவும், தடை செய்யப்பட வேண்டும். இவை அனைத்தும் வரலாற்று ரீதியாக அடையாளம் காணவேண்டும்.

 

47.அரசில் இருந்து மத ஆதிக்கத்தை, மதத் சார்புத்தன்மையை நீக்கவேண்டும். மாறாக மக்களின் தனிப்பட்ட வழிபாட்டு உரிமைக்குள், மக்களின் சமூக பொருளாதார தேவை ப+ர்த்தி செய்வதன் ஊடாக, வழிபாட்டின் சமூக அறியாமையை படிப்படியாக நீக்கவேண்டும்.

 

48.சமூகத்தில் இனம் கடந்து புரையோடிப் போயுள்ள சாதியக் கொடுமைகளை முற்றாக நீக்கவும், சாதியச் சார்பான அனைத்து முயற்சிகளையும் முற்றாக தடை செய்யவும் வேண்டும்.

 

49.அனைத்து சாதிப்படி நிலைகளும் ஒழித்துக் கட்டப்பட வேண்டும். பிறப்பை முன்னிறுத்திய உழைப்பை வரையறுக்கும் சாதிய கூறுகள் முற்றாக தடை செய்ய வேண்டும்.

 

50.சாதிய ரீதியான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாக அடையாளம் காணவும், இதற்கும் இந்து மதத்துக்கும் உள்ள உறவு தெளிவாக வரலாற்று ரீதியாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்.

 

51.தீண்டாமையை ஒரு சமூகக் குற்றமாக பிரகடனம் செய்யவேண்டும்.

 

52.சமூக அடிமைப் பிராணியாக வாழும் பெண்களின் மேலான ஆணாதிக்க கொடுரங்களில் இருந்து பெண்களை விடுவிக்கவேண்டும். இதற்கு எதிரான அனைத்து முயற்சிகளையும் தடை செய்ய வேண்டும்.

 

53.பெண்ணின் மீதான ஒடுக்குமுறையை வரலாற்று ரீதியாகவே அடையாளம் காணவேண்டும்.

 

54.மனிதனை மனிதன் சுரண்டும் ஜனநாயக விரோதத்தை ஒழித்துக் கட்டவேண்டும். இதை மீட்டு எடுக்கும் அனைத்து முயற்சிக்கும் தடை விதிக்க வேண்டும்.

 

55.மக்களை பிளவுபடுத்தும் இனம், பால், சாதி.. சார்ந்து நடத்தும் பிளவு நடவடிக்கைகளான அரசியல், அமைப்பு வடிவங்கள், கல்விமுறைகள், பொருளாதார கூறுகள், கலை இலக்கிய முயற்சிகள், பண்பாட்டு கலாச்சார கூறுகள், மரபுகள் அனைத்தும் முற்றாக தடை செய்யப்பட வேண்டும் அத்துடன் இதை எதிர்த்து போராட வேண்டும். மக்கள் இயற்கையான உயிரியல் பிராணியாக வாழ்வதை உறுதி செய்ய வேண்டும்.

 

56.அனைத்து அரசு சாராத ஏகாதிபத்திய நிதியுதவியில் இயங்கும் நிறுவனங்களையும் (தன்னார்வக் குழுக்களையும்) முற்றாக தடை செய்ய வேண்டும். அத்துடன் வெளிநாட்டு நிதியாதாரத்தில் இயங்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் இது பொருந்தும்.

 

57.மக்களின் உழைப்பு, அவர்களின் முரணற்ற வாழ்வு, அவர்களின் முரணற்ற பண்பாட்டை, கலாச்சாரத்தை உயர்வானதாக மதித்து அவற்றை முன்னிலைப்படுத்த வேண்டும்.

 

58.சகல வெளிநாட்டு உள்நாட்டு கலாச்சார பண்பாட்டு சீரழிவுகள் தடை செய்யப்பட வேண்டும். மாறாக தேசிய பண்பாட்டையும் கலாச்சாரத்தையும் தேசிய உற்பத்தி மீது வளர்த்தெடுக்க வேண்டும்.

 

59.நிலப்பிரபுத்துவ தரகு பண்பாட்டு கலாச்சாரத்தை தடை செய்யவேண்டும். மக்களின் உயர்ந்த சமூக பண்பாட்டு கலாச்சார வாழ்வை மீட்டெடுக்கவேண்டும்.

 

60.மக்களின் உழைப்பும், வாழ்வும் சார்ந்த பண்பாட்டு கலாச்சாரத்தை முன்னிலைப்படுத்தும் அதேநேரம், உலகளாவில் இருந்து இதை வரவேற்க வேண்டும்.

 

61.இனவாத இனப்பிளவை அடிப்படையாக கொண்ட தரப்படுத்தல் முறையை எதிர்த்து, பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெறும் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதியை வழங்கவேண்டும்.

 

62.பின்தங்கிய மாவட்டங்களின் (தமிழ், சிங்கள, மலையக, முஸ்லீம் மக்களின்) கல்விக்கான அடிப்படை வசதியை, உயர்த்தவேண்டும்.

 

63.சாதி, பால் ரீதியாக பின்தங்கிய கல்விமுறைக்கு பதில், அதை உயர்த்தும்  அடிப்படை வசதியை உருவாக்க வேண்டும்.

 

64.இலங்கை தேசியவளத்துக்கும் அது சார்ந்த உற்பத்திக்கும் ஏற்ப கல்வியை முற்றாக மாற்றவும், அதற்கு இசைவான பல்கலைக்கழக பட்டப்படிப்புகளை வழங்க வேண்டும்.

 

65.உயர் அதிகாரிகளை உருவாக்கவும், உயர் அந்தஸ்துக்கான கல்விக்கு பதிலாக மக்களின் வாழ்வுடன் இணைந்த, அவர்களின் சமூக வாழ்வை மேம்படுத்தும் கல்வியை வழங்கவேண்டும்.

 

66.முன்னேறிய கல்வி அடிப்படையை பெறும் வகையில், பின்தங்கிய மக்கள் கல்வியை பெறும் வகையில், சமுக பொருளாதார சூழலை உருவாக்க வேண்டும்.

 

67.இலங்கையில் தாய்மொழிக்கு அடுத்ததாக, பரஸ்பரம் தமிழ் மற்றும் சிங்களத்தை கட்டாய மொழியாக்க வேண்டும்.

 

68.பல்கலைக்கழகம் வரை தாய்மொழி கல்வியை அமுல்படுத்தப்பட வேண்டும். ஆங்கிலக் மொழியிலான அடிப்படைக் கல்வி தடை செய்யப்படவேண்டும்.

 

69.கல்வியில் இருந்து மதக்கல்வியை முற்றாக தடை செய்யவேண்டும்.

 

70.அனைவருக்கும் பல்கலைகக்கழகம் வரை இலவசக் கல்வி தாய்மொழியில் வழங்கப்பட வேண்டும்

 

71.இன மத அடிப்படையிலான வேலைவாய்ப்புமுறை தடை செய்யப்பட வேண்டும்.

 

72.சகல மக்களுக்கும் வேலைவாய்ப்பை தேசிய அரசு உறுதி செய்ய வேண்டும்.

 

73.மக்களின் சமூகத் தேவையை முதன்மைப்படுத்தி வேலைவாய்ப்பு உருவாக்கப்படவேண்டும்.

 

74.சமூக இழிவாக கருதும் வேலைகளில் சமூக கடமைகளை ஒழித்துக் கட்டவும், சமூக இழிவாகப் பட்ட வேலைகளின் சமூக அந்தஸ்த்தை உயர்த்தவேண்டும்.

 

75.சிறிலங்கா என்ற இனவாத பெயருக்கு பதில் மக்களின் வாழ்வியிலுடன் தொடர்புடையதாக நாட்டின் பெயர் கொடி மாற்றப்பட வேண்டும்.

 

76.சகல வெளிநாடு சார்ந்த இராணுவத்துறை, உளவுத்துறை, சேவைத்துறை, கலை கலாச்சாரத்துறை, பொருளாதாரத் துறை என அனைத்தும் முற்றாக தடை செய்யப்டவேண்டும்.

 

77.உலகளவில் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு ஆதரவை தெரிவிக்கவும், அதற்கு ஆதரவாக போராடவும் வேண்டும்.

 

78.மறுகாலனித்துவ முயற்சியை எதிர்த்து மக்களை ஆயுதபாணியாக வேண்டும்.

 

79.மக்களின் கருத்து எழுத்து பேச்சுச் சுதந்திரம் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

 

80.எட்டுமணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஒய்வு, எட்டு மணி நேர உறக்கம் உறுதி செய்யப்பட வேண்டும். உழையாதவனுக்கு உணவில்லை என்ற சட்டம் அமுல்படுத்தப்பட வேண்டும்.

 

81.வயோதிபர்கள், அங்கவீனர்கள், குழந்தைகள் சமூகப்பொறுப்பில் பராமரிக்க வேண்டும்.

 

82.அனைவருக்கும் மருத்துவ வசதிகள் இலவசமாக வழங்கப்பட வேண்டும்.

 

83.அனைவருக்கும் இருப்பிடம், உணவு, நீர், சுத்தமான காற்று கிடைப்பதை இச் சமூகம் உறுதி செய்ய வேண்டும்.

 

84.மக்களின் ஒய்வுகள் சமூகவளர்ச்சியை உறுதி செய்யும் வகையில் மக்களின் எழுச்சிக்கான அடிப்படைகளை உறுதி செய்யவேண்டும்.

 

85.இயற்கைவளங்களை பாதுகாக்கவும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சமூக பொருளாதார கட்டமைப்புகளுடன் கூடிய வாழ்வுமுறையை உருவாக்கவேண்டும். இதற்கு ஏற்றவாறு வாழ்வுமுறை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

 

86.கற்பு, விதவை, தீண்டாமை போன்ற இழிவுக் கொடுமைக்கான சமூகப் பண்பாட்டுக் கூறுகளையும், கடமைகளையும் எதிர்த்து அதை முற்றாக மாற்றியமைக்க வேண்டும்.

 

87.வரைமுறையற்ற நேரடி மற்றும் மறைமுக வரிமுறை நீக்கப்பட்டு, நியாயமான சமூக பொருளாதார வளாச்சியின் அடிப்படையிலான வரிமுறை அமுல்படுத்தப்பட வேண்டும்.

 

அரச உருவாக்கியுள்ள நாசிய முகாங்கள் சார்ந்த, உடனடியான அரசியல் கோசங்கள்


1.திறந்தவெளி சிறைக் கூடத்தை, சர்வதேச சமூகமே பொறுப்பெடு!

 

2.அவர்களை சுதந்திரமாக, அவர்கள் விரும்பியவாறு விரும்பிய இடத்தில் வாழவிடு!

 

3.உற்றார் உறவினரை சந்திக்கவும், அவர்கள் ஒன்றாக சேர்ந்தும் வாழ அனுமதி!

 

4.சமூகமாக மக்கள் சொந்த வாழ்விடத்தில் சேர்ந்து வாழ அனுமதி!

 

5.மக்களை இழிவுக்குள்ளாக்கி, கையேந்த வைத்து, அவர்களின் அரசியல் உரிமையை பறிக்காதே!

 

6.சகல மக்களுக்கும் உணவும், இருப்பிடமும், உடையையும், கல்வியையும் உடன் வழங்கு!

 

7.அவர்களின் சொத்து இழப்புக்கான முழு நட்டஈட்டையும் உடன் வழங்கு!

 

8.கொல்லப்பட்ட மக்களுக்கு முழு நட்டஈட்டைக் கொடு!

 

9.அவர்கள் தம் சொந்த தொழிலைத் தொடங்க அனுமதி! அதற்காக அனைத்து வசதிகளையும் நட்டஈட்டையும் கொடு!

 

10.காயப்படுத்திவர்களுக்கு நட்டஈட்டை வழங்கு!

 

11.அங்கவீனமானவர்களுக்கு நட்ட ஈட்டையும், ஆயுள் பூராவும் பராமரிக்கும் ஏற்பாட்டையும் வழங்கு!

 

12.அனாதைகள், விதவைகள், வாழ வழியற்றவர்களுக்கான நட்டஈட்டை வழங்கு!

 

13.அப்பாவி மக்களை யுத்த சூனியப் பிரதேசத்தில் வைத்து கொன்று, காயப்படுத்திய குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்து!

 

14.எல்லா கூலிக்குழுக்களிடமிருந்து இந்த மக்களை விடுவி! இராணுவக் கண்காணிப்பில் இருந்து மக்களை விடுவி!

 

15.பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாட, ஊடகச் சுதந்திரத்தை அனுமதி!

 

முடிவாக

 

மக்களின் அடிப்படைத் தேவையும், அவர்களின் வாழ்க்கையுமே ஒரு தேசத்தின், தேசியத்தின் அடிப்படையான விடையமாகும். மக்களின் வாழ்வைப் பற்றி, அவர்களின் மகிழ்ச்சியான வாழ்வையிட்டு அக்கறைப்படாத அனைத்தும், மக்களை சூறையாடுவதுதான். இது சிறுபான்மை பிரிவின் நலன்களுடன் தொடர்புடையதாக, உலகமயமாதல் விரிவாக்கத்துக்கு உட்பட்டதே. இதை யாரும் மறுக்க முடியாது.

 

இடைக்கால தீர்வு, படிப்படியான தீர்வு, உள்ளுர் விசாரணை என்று காட்டும் எல்லாவகையான மோசடியும் மக்களுக்கு எதிரானதே. அதேபோல் ஒரே நாளில் தீர்வும் என்பதும் மோசடியே. உழைக்கும் மக்கள் தமது பிரச்சனையை தாமாகவே தீர்க்கும் ஒரு வரலாற்றுப் பாதையில், பல படிகளைக் கடக்கலாம். ஆனால் அது நிச்சயமாக உழைக்கும் மக்களின் ஆட்சியாக மட்டுமே இருக்கமுடியும். உழைக்கும் மக்கள் அல்லாத எந்த ஆட்சியும், முன்வைக்கும் படிநிலை தீர்வுகள் எப்போதும் உழைக்கும் மக்கள் மேலான படிமுறை அடக்குமுறைதான். இது எப்போதும் தேசத்தை, தேசியத்தை, தேசியவளத்தை, இயற்கையை, உழைப்பை, உழைப்பின் வளத்தை, உழைப்புத்திறனை, பண்பாட்டை, கலாச்சாரத்தை அழித்து ஏகாதிபத்திய உலகமயமாதலுக்கு சேவை செய்வதாகவே இருக்கும். இதை நாம் அனுமதிக்க போகின்றோமா! இதை எதிர்த்து நாம் என்ன செய்யப் போகின்றோம்! சரணடைவா! போராட்டமா! நீ நிச்சயமாக இதில் ஒன்றை தெரிவு செய்தாக வேண்டும்.

 

மக்களுக்காக நிற்போம்! மக்களின் எதிரிகளை எதிர்ப்போம்!


உண்மைக்காகவும் நீதிக்காகவும் போராடுவோம்! பொய்களையும் அநீதிகளையும் எதிர்ப்போம்!


மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம்! இதற்கு எதிரானவர்களுக்காக எதிராக போராடுவோம்!


தேசியத்தை பாதுகாப்போம்! ஏகாதிபத்தியத்தை எதிர்ப்போம்!


சர்வதேசியத்தை பாதுகாப்போம்! உலகமயமாதலை எதிர்ப்போம்!