இதை வலது இடது என்று, பல முரணான அரசியல்தளத்தில் இன்று அடிக்கடி கேட்கின்றோம். நீண்டகாலமாக நிலவிய வலது இனவாத அரசியல் செல்வாக்கு, தொடர்ந்து இடது அரசியலை மேல் செல்வாக்கு வகிக்கின்றது. இதை இரண்டையும் இணைக்கும் வண்ணம், இடையில் நிறம்மாறும் ஓணான்கள் உள்ளனர்.

மறுபுறத்தில் சிங்களமக்களும்;, தமிழ்மக்களும் என்ன நினைக்கின்றனர் என்பது, இவர்களுக்கு எந்த கவலையும் கிடையாது. மாறாக குறுகிய குறுக்குவழி அரசியல் செய்ய "சிங்களவனுடன்; சேர்ந்து வாழவே முடியாது" என்கின்றனர். இன்று சமூகம் மீது தங்கள் செயல்பாட்டைக் கொண்டுள்ளவர்கள் இப்படிக் கூறுவது தான், இன்று அபாயகரமான இனவாத அரசியலாகும். மக்களைப் பிளக்கின்ற, குறுகிய குறுங்குழுவாத இனவாதமாகும்.

 

சிங்களமக்களுடன் சேர்ந்து வாழமுடியாது என்று எவரெல்லாம் கூறுகின்றனரோ, அவர்கள் நிச்சயமாக தமிழ்மக்களுடன் கூட சேர்ந்து போராடவும் வாழவும் மறுப்பவர்கள் தான். உண்மையில் இவர்கள் சிங்களமக்களை எதிரியாகக் காட்டி, தமிழ்மக்களை தமக்கு கீழ் அடக்கியாளவே விரும்புகின்றனர். இதனால்தான் சிங்களமக்களை, தமிழ்மக்களின் எதிரியாக சித்தரிக்கின்றனர்.

 

பேரினவாதம் தமிழ்மக்களை சிங்களமக்களின் எதிரியாக்கி, சிங்களமக்களை அடக்கியாள்வது போன்று தான் இதுவும் இயங்குகின்றது. சாராம்சத்திலும், உள்ளடக்கத்திலும் இதில் எந்த அரசியல் வேறுபாடும் கிடையாது.

 

முதல் நாங்கள் சிங்களமக்களுடன் சேர்ந்து வாழத் தயாராக இருக்கின்றோமா!? நாங்கள் அதற்கு தயாராக இல்லாதவரை, அவர்கள் சேர்ந்து வாழமாட்டார்கள் என்று கூறுவது அரசியல் அபத்தமாகும். இங்கு சேர்ந்து வாழ்வது என்பது, அரசு தரமறுப்பதை குறித்து சொல்லவில்லை. அரசு தமிழ்மக்களுக்கு தரமறுப்பதை, சிங்களமக்களுடன் சேர்ந்து நின்று போராட்ட, நாம் முயன்று இருக்கின்றோமா என்பது பற்றியது.

 

அதற்காக நாம் என்ன முயற்சியை எடுத்திருக்கின்றோம்? சொல்லுங்கள்! தமிழ்மக்களின் வலதுசாரி சிந்தனைமுறையைக் கூட, நாம் மாற்றுவதற்காக உணர்வுபூர்வமாக போராடாதவர்கள் தான் நாம். எம்முடன் புரையோடிக் கிடக்கும்; சாதிய அடிமைத்தனத்தை அடக்குமுறையையும் கட்டிப் பாதுகாக்கும் நாம், சிங்களமக்களுடன் சேர்ந்து வாழ்வதை பற்றி எப்படித்தான் சிந்திக்க முடியும். முஸ்லீம்மக்களை ஒடுக்கிய நாம், எப்படி தமிழ்மக்களை உணர்வுப+ர்வமாக எங்கள் சொந்த ஒடுக்குமுறையில் இருந்து விடுவிக்க போராடியிருப்போம். சொல்லுங்கள். நாங்கள் எங்களுக்கு எதிராக இருந்தோம், இருக்கின்றோம். தாம் கொண்டுள்ள வலதுசாரி இனவாத சிந்தனைமுறைக் கைவிடாமல் இருக்கும்வரை, மற்றைய இனமக்களை எதிரியாக பார்ப்பது, எதிரியாக காட்டுவதும் தான் தொடரும், தொடருகின்றது. இங்கு நாம் இனவாதிகளாக தொடர்ந்து இருக்கின்றோம் என்பதே உண்மை.

 

இந்தநிலையில் தமிழ்மக்களின் தப்பபிராயங்களை நீக்காமல், சிங்களமக்களின் தப்பபிராயங்களை எம்மால் நீக்க முடியாது. இவையிரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. சிங்கள பேரினவாதம் சிங்களமக்களை இனவெறியூட்டி, தமிழ்மக்களின் ஜனநாயக உரிமைகளை மறுக்கவைக்கின்றது. இதுதான் பேரினவாத அரசியல் நிகழ்ச்சிநிரலும்,  அதன் அரசியல் உள்ளடக்கமுமாகும்.

 

நாங்கள் இதை சிங்களமக்களுக்கு முன் அம்பலப்படுத்தி அவர்களை விழிப்புற வைக்காத வரை, அவர்களை பேரினவாத சேற்றில் தள்ளிவிடும் தொடர் அரசியல் வேலையைத்தான் எமது இனவாதமும் செய்யும். நாங்கள் இனவாதிகள் அல்ல என்றால், என்ன செய்வோம்.

 

சிங்களமக்கள் முன் எமது ஜனநாயகக் கோரிக்கையை முன்வைத்து, அதை விளக்கி அவர்களை ஏற்க வைக்கவேண்டும். இதை நாம் செய்யாது, "சிங்களவனுடன் சேர்ந்து வாழமுடியாது" என்று கூறும் எமது இனவாதக் கண்ணோட்டத்தை, முதலில் நாம் களைந்ததாக வேண்டும். இதன் மூலம் தமிழ் இனவாதத்தை, அம்பலப்படுத்த வேண்டும். தமிழ்மக்களின் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கை வேறு, தமிழினவாதம் வேறு என்பதை நாம் முதலில் புரிந்துகொள்ளவேண்டும். அதை வேறுபடுத்தி பார்க்கவும், அதைத் தொடர்ந்து அம்பலப்படுத்தி போராட வேண்டும். அத்துடன் சிங்களமக்கள் மத்தியிலும், அதை எடுத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் இரண்டு வேறுபட்ட நேரெதிரான அரசியல் கூறுகளையும், சிங்களமக்களுக்கு விளக்கி, அதை தெளிவுற வைக்க வேண்டும்;. இதன் மூலம் எமது ஜனநாயகக் கோரிக்கைகளை சிங்களமக்கள்  ஏற்றுக்கொள்ளும் வண்ணம், நாம் முன்முயற்சியுடன் செயல்பட வேண்டும்.

 

மறுபக்கத்தில் சிங்களமக்களின் ஜனநாயகக் கோரிக்கைக்காக, எமது கரத்தை அவர்களுக்காக உயர்த்துவதுடன், அவர்களுக்காக நாம் அவர்களுடன் சேர்ந்து போராட வேண்டும். நிச்சயமாக சிங்களமக்கள் போராடுவது, அதே பேரினவாத அரசுக்கு எதிராகத்தான் என்பது வெளிப்படையான ஒரு பொது உண்மை. இதன் பின் "சிங்களவனுடன் நாம் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்லத்தான் முடியுமா? சொல்லுங்கள்!

 

தமிழ்மக்களின் ஜனநாயகக் கோரிக்கை தமிழ் இனவாதத்தில் இருந்து வேறுபட்டது என்பதை சிங்களமக்களிடம் எடுத்துச் செல்லவேண்டும்;. இந்த வகையில் மக்களின் பொது எதிரி அரசு என்பதை விளக்கவேண்டும். நாம் எமது பலத்தின் அடிப்படையில், இதை சிறியளவில் தொடங்கி தொடர்ந்து முயன்று வருகின்றோம்;. விரைவில் அதை பரந்ததளத்தில், பலர் அதில் பலரும் விவாதிக்கும் வண்ணம் எடுத்துச் செல்லவுமுள்ளோம்.

 

நாம் சேர்ந்து வாழ முடியாது என்று வலதுசாரி சிந்தனைமுறைக்குள் தமிழ் இனவாதியாக நிற்காது, சிங்களமக்களுடன் உரையாடுவதன் மூலம் எம்மை நாம் ஜனநாயகப்படுத்தி செயல்பட முன்வருமாறு கோருகின்றோம். மக்களை அவர்களின் முரணற்ற அரசியல் கோரிக்கைகள் ஊடாக, ஜக்கியப்படுத்த முன்வாருங்கள். நாம் முரணற்ற ஜனநாயகக் கோரிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம், உலகை எம்முடன் அணிதிரட்ட முடியும். நானும் நீயும் இணைந்து அதை செய்யும் போது, வெல்வதற்கு எம்முன் ஒரு உலகமே உள்ளது.

 

பி.இரயாகரன்
30.05.2010