சுத்த இராணுவக் கண்ணோட்டத்துடன், முன் கூட்டியே தீர்மானித்த வன்மத்துடன் விசாரணை தொடங்கியது. மாற்று இயங்கங்களுடன் தொடர்புபற்றி விசாரணை நடந்தது. இதற்கு பின்னர், எவரும் எம்மை அடைத்து வைத்திருந்த அறைக்குள் வரவில்லை. இதில் பலராலும் நம்பமுடியாத ஒரு விடையம் கூட நடந்தது. எம்மை விசாரிக்க சங்கிலியோ, மொட்டை மூர்த்தியோ வரவில்லை. இதற்கு என்ன காரணம் என்று, அன்று எமக்கு புரியவில்லை.

பின்னாளில் எம்மை முதலில் விசாரித்த மீரான் மாஸ்டரை சந்தித்த போது, இது தொடர்பாக விசாரித்தேன். அவர் அதற்கு, எமது மகஜர் தொடர்பாக இரண்டுபட்ட கருத்துக்கள் இருந்ததாகவும் (நீங்கள் நினைக்க வேண்டாம் மகஜர் அனுப்பியது சரி என்ற கருத்து இருந்தது என்று), அதனால் தான் விசாரணைக்கு சங்கிலி வரவில்லை என்றார். இதனால் தான், இந்த விசாரணையின் தான் ஆரம்பித்தாக குறிப்பிட்டார்.

 

இதன் பின் எம்மை மீண்டும் வண்டியில் ஏற்றினார்கள். அவ்வண்டியில் பின்புறத்தின் நான்கு மூலையிலும், நான்கு பேர் ஏ.கே 47 யுடன், நாம் தப்பிச் செல்லாது பாதுகாப்பிற்காக நின்றார்கள். இவர்கள் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி முடித்து வந்தவர்கள். வண்டியின் முற்பகுதியில் இருவர் இருந்தனர். அதில் ஒருவர் மாணிக்கதாசன். இவரும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் ஒன்றில் பயிற்சி பெற்றவர்தான்.


பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களில் சிலர், கழகத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்காலத்தில் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தில் பயிற்சி முடிந்த பலரை, ஒரு முகாமில் எதுவும் செய்யவிடாது வைத்திருந்தனர். அக்காலத்தில் உத்தரப் பிரதேசத்தில் இந்திய இராணுவத்தால் பயிற்சி எடுத்துவிட்டுத் திரும்பிய பலர் தான், பயிற்சி முகாம்களில் முகாம் பொறுப்பாளர்களாக இருந்தனர். இதனால் இதுவே “இகோ” பிரச்சனையாக  அமைப்பினுள் உருவெடுத்தது. இதை தணிக்கும் வகையில் பல முகாம்களில் முகாம் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் மாற்றப்பட்டு, பாலஸ்தீனத்தில் பயிற்சி எடுத்தவர்கள் முகாம் பொறுப்பாளராக அமர்த்தப்பட்டனர்.
இதில் இன்னும் ஒரு விடையத்தை கவனிக்க வேண்டும். இந்திய இராணுவத்தின் பயிற்சிக்கு கழகம் பலரை அனுப்பிய போதும், வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தையும் வெளியிட்டது. இது ஒன்றுக்கு ஒன்று முரணானது. தனது கொள்கை அளவில் ஒரு கருத்தை வைத்திருந்தபோதும், செயற்பாட்டளவில் அதற்கு முரணாகவே இயங்கியதற்கு இதுவும் ஒரு நல்ல உதாரணம். ஏன் வங்கம் தந்த பாடம் என்ற புத்தகத்தை, புலிகளால் இந்திய அரசின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டு கழகத்தை அவர்களிடம் இருந்து அன்னியப்படுத்தியதாகவும் ஒரு செய்தி உண்டு (இதன் உண்மையோ எனக்கு தெரியவில்லை)


வாகனத்தில் ஏற்றப்பட்ட எம்மை, நீண்ட நேர ஒட்டத்தின் பின்பு ஒரு முகாமுக்கு கொண்டு சென்று அடைத்தனர். அங்கே எமக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு கூடாரத்திற்குள் கொண்டு செல்லப்பட்டோம். இக் கூடாரம் அந்த முகாமில் இருந்து சற்று ஒதுக்குப்புறமாக (அந்தமுகாமின் கிணற்றுக்கு அப்பால்) இருந்தது. இரவுநேரம் என்பதால் முகாம் அமைதியாகவே இருந்தது. அங்கே தான் தோழர் தங்கராஜாவும், கைது செய்யப்பட்டுள்ளார் என்பதை அறிந்தோம். தோழர் தங்கராஜாவையும் சேர்த்தால் தற்போது நாம் பத்துப்பேர். எல்லோரும் அந்த கொட்டிலுக்குள் சென்றதும், ஒருவரோடு ஒருவர் கதைக்ககூடாது என்றனர். அப்படி கதைத்தால் கடும் தண்டனை கிடைக்கும் என மாணிக்கதாசன் மிரட்டினான். வெளியே கொட்டிலைச் சுற்றி பாதுகாப்புக் கடமையில் நின்றவர்களிடம், இவங்கள் ஏதாவது தங்களுக்குள் கதைத்தால் எனக்கோ அல்லது முகாம் பொறுப்பாளருக்கோ உடனே கூறும்படியும் கூறினான். நீங்கள் எவரும் இவர்களுடன் கதைக்கக்கூடாது என்றான். இதை மீறி அப்படிக் கதைத்தால், கடும் தண்டனைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறிவிட்டு, வண்டியில் ஏறிச் சென்றார். நாம் அந்த கூடாரத்துக்குள், எதுவும் இல்லாது மண்ணில் உறங்க முற்பட்டோம். ஆனால் முடியவில்லை. காரணம் பயம்தான்.

 

மறுநாள் காலை முகம் கழுவுவதற்காக வந்தவர்கள், எங்களை விசித்திரமாக பார்த்தார்கள். அவர்களின் பார்வையில் எம்மீது ஒரு கோபம் இருந்தது. ஆரம்பத்தில் அவர்களின் அந்தப் பார்வை ஏனென்று எமக்குப் புரியவில்லை. ஒருசில கிழமைகளில் நாம் அதைப் புரிந்துகொண்டோம்.. அவர்கள் எம்மைப் பார்த்து கேட்கிறார்கள், நீங்கள் எமது இயக்கத்தை அழிக்க முயற்சித்தவர்கள் என்றனர். இயக்கத்தை பிளவுபடுத்த வந்தவர்களா என்றனர். இவ்வாறு தான், அந்த முகாமில் எம்மை பற்றி பிரச்சாரம் செய்திருந்தனர். அமைப்பின் தவறைச் சுட்டிக் காட்டியவர்களுக்கு கொடுக்கப்பட்ட பெயர், அமைப்பை உடைக்கவும் அழிக்கவும் வந்தவர்கள் என்பதுதான். நாம் மலம் கழிக்கவோ அல்லது சிறுநீர் கழிக்கப் போனாலும், எம்முடன் நால்வர் பாதுகாப்பிற்கு வருவார்கள். அதுவும் ஒருவர் மட்டும் தான் போகவேண்டும். போகும்போது முன்னால் இருவர், பின்னால் இருவர் வருவார்கள். எமக்கு பாதுகாவலர்களாக வருபவர்களுக்கு கட்டளை, நாம் மலம் கழிப்பதற்கு சென்றால், நாம் மலம் கழிக்கும் போது எமக்கு மிக அருகாமையில் காவல் புரியும்படி. ஆதலால் அவர்கள் எமக்கு அருகாமையிலேயே எப்போதும் நிற்பார்கள். அப்போது அத்தோழர்களை பார்க்கும் போது நாம் மிகவும் கவலை அடைவோம். எமக்கான உணவைத் தரும்போது கூட, ஒரு வெறுப்புடனேயே தந்தார்கள். அன்று பகல் முழுவதும் எம்மை எவரும் சந்திக்க வரவில்லை.

 

இந்த இடைவெளியில் எமக்கிடையே அமைதியான சம்பாசணைகள் நடந்தன. தோழர் தங்கராஜா தனது உயிருக்கும், எமது உயிருக்கும் ஏதாவது ஆபத்து நடக்கலாம் என்ற ஐயத்தினை வெளிப்படுத்தினார். எம்மில் யாராவது உயிருடன் தப்பித்தால், எமக்கு நடந்ததை மற்றவர்களுக்கு கூறும்படியும், உறவினர்களுக்கு அறியப்படுத்தும் படியும் தெரிவித்தார். அதன் அடிப்படையில் எம்முடைய முழு விபரங்களையும் (உண்மையான பெயர், ஊர்) என்பவற்றை எல்லாம் எமக்குள்ளேயே பரிமாறிக் கொண்டோம். அப்போது அந்த முகாமின் பொறுப்பாளராக இருந்தவர் வளவன். இவரும் உத்தரப்பிரதேசத்தில் பயிற்சி எடுத்தவர் தான். இவர் இந்தியன் ஆமி இலங்கையில்; நிற்கும் போது, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய பொறுப்பில் இருந்து இந்தியன் ஆமிக்கு எதிராக போரிட்டவர்.


இவரைப் பற்றி நான் விசாரித்ததில், இவர் புலியின் உளவாளி என்றும், அக்கடமையை செய்வதற்காகவே கழகத்தில் இணைந்தார் என்றும் பலர் கருதினர். இதை என்னால் உறுதிசெய்ய முடியாவிட்டாலும், இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பில் தளத்தில் நின்றதை நான் நேராகக் கண்டவன். ஏற்கனவே ஒரு இயக்கத்தில் இருந்தவர்களை, புலி உடனடியாக முக்கிய பொறுப்பில் அமர்த்தாது என்பதை வைத்து பார்க்கும்போது, இவர் ஒரு புலி உளவாளி என நானும் நம்புகின்றேன்.


ஒரு அமைப்பின் தவறை, அதன் கட்டமைப்பிற்குள்ளேயே நேர்மையான வழியில் சுட்டிக்காட்டப் புறப்பட்ட நாம் துரோகியாக, அமைப்பை அழிக்க வந்தவர்கள் என்றனர். ஆனால் தனது கடமைக்காக தனக்கு கொடுத்த வேலையை செய்வதற்காக, எல்லோரையும் “காக்கா” பிடித்து எல்லோருக்கும் நல்லவனாக காட்டிய ஒரு துரோகி நல்லவனாகவும் அமைப்பிற்கு விசுவாசியாகவும் காணப்பட்டான்.


அன்று இரவும் எவரும் எம்மை சந்திக்க வரவில்லை. மறுநாள் பகல் முழுவதும் எவரும் சந்திக்க வரவில்லை.


தொடரும்

 

9.புளாட் அமைப்பை விமர்சித்த எங்களை புலி என்றனர், துரோகி என்றனர் - புளாட்டில் நான் பகுதி - 09)

 

8.மகஜர் அனுப்பி தலைமையுடன் போராட்டம் - (புளாட்டில் நான் பகுதி - 08)

 

7.சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

 

6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

 

5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

 

4.தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

 

3.மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)

 

2.1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

 

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)