இலங்கைத்தமிழர்களின் போராட்டம் பேரவலமான கடைசிக்கட்ட இனப்படுகொலையின் மூலம் முடக்கப்பட்டதன் பிறகான இந்த ஓராண்டில், இடைத்தங்கல் முகாம்கள் எனும் பெயரிலான முட்கம்பி சிறைகளின் பின்னே எந்த வசதியுமற்று தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நிலை மாறாதிருக்கையில்; பயங்கரவாதிகளை வென்றுவிட்டோம் என இலங்கை அரசும், பயங்கரவாத அச்சுறுத்தல் இல்லாததால் அமெரிக்கர்கள் இனி இலங்கைக்கு பயமின்றி செல்லலாம் என அமெரிக்கா அதையே அங்கீகரித்திருப்பதும் இலங்கை வளர்ச்சியை நோக்கி முகம்திருப்பியதைப்போல் சித்தரிக்கின்றன.

நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுக்கொண்டிருப்பதாகவும் இன்னும் மூன்று மாதங்களில் மீள் குடியேற்றம் நிறைவடைந்துவிடுமென்றும் அரசு அறிக்கை விட்டுக்கொண்டிருக்கிறது. எப்போதெல்லாம் இலங்கை அரசுக்கு இது விசயத்தில் அழுத்தம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதுபோல் அறிக்கை வெளியிடுவது வாடிக்கையாகியிருக்கிறது. ஆனால் முல்லைத்தீவு பகுதிகளுக்கு தமிழர்கள் யாரும் செல்லக்கூடாது என இலங்கை ராணுவம் வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறது. தமிழர்களின் குடியிருப்புகளும் விளை நிலங்களும் ராணுவத்தாலும் சிங்களவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்றன என்று இலங்கை பாரளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிடுகிறார். புத்த சிலைகள் நிறுவப்பட்டு, வைசாக் தினம் பொதுப்பண்டிகையாக முன்னிருத்தப்படுகிறது. இவைகளெல்லாம் திட்டமிட்ட இனப்படுகொலையின் பின்னே மீதமிருக்கும் தமிழர்களை நிரந்தரமாக அச்சத்திலேயே இருத்திவைக்கும் விதத்தில் கட்டியமைக்கப்பட்டு வருகின்றன.

 

மறுபுறம், பிரபாகரன் இறக்கவில்லை. அவர் மீண்டும் வந்து போராட்டத்தை தொடர்வார் என்பது தொடங்கி நாடுகடந்த தமிழீழம் என்பது வரை கடந்த காலங்களிலிருந்து எந்தப் படிப்பினையையும் பெறாமல், பெறவிடாமல் மக்களை ஒரு மோன நிலையில் ஆழ்த்தி வைத்திருக்கும் தமிழீழக்குழுக்கள். தமிழ் மக்களை தங்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை நடத்தும் முனைப்பை மழுங்கடித்து அனுதாப உணர்விலேயே காலத்தைக் கடத்தும் கருவிகளாக இவை செயல் படுகின்றன. பிரபாகரன் முடிந்துவிட்ட கதை என்பதை உணர்வதே மாற்றத்தின்முதல் அறிகுறியாக இருக்கும். ஆனால் உயிர்த்தெழும் ஏசு குறித்த நம்பிக்கையைப் போல் பிரபாகரன் குறித்த நம்பிக்கையும் விதைக்கப்படுகிறது. புலம் பெயர் தமிழர்களிடையே ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும் சவுதி போன்ற மத்திய தரைக்கடல் நாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தமிழர்களிடையே தங்களின் போராட்டம் ஏன் தோற்றது என்பதைவிட சுறா (விஜயின் அன்மை திரைப்படம்) வெற்றியா தோல்வியா என்பதில் இருக்கும் ஈடுபாடு கண்டு மனம் அயற்சியுறுகிறது.

 

கடந்த ஓராண்டாகவே இலங்கையின் போர்க்குற்றம் குறித்து அவ்வப்போது சர்வதேச அரங்கில் எழுப்பப்பட்டு வருகிறது. இனப்படுகொலை நடந்துகொண்டிருந்த போது அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஐ.நா இப்போது போர்க்குற்றம் குறித்து விசாரிக்க விசாரணைக்குழு அமைக்கப்போகிறதாம். இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம் நாங்களே விசாரித்துக்கொள்கிறோம் என்கிறது இலங்கை அரசு. இலங்கை விராரணை செய்தால் அது போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவருமா இல்லை புதைந்து போகச்செய்யுமா? ஐ.நா விசாரித்தால் அப்போதும் உண்மைகள் வெளிவந்து விடுமா? இலங்கையை மிரட்டி காரியம் சாதிப்பதற்குத்தான் அவை பயன்படுத்தப்படும் என்பதற்கு கடந்த காலங்களில் உதாரணங்கள் இருக்கின்றன. ஆனால் இலங்கையின் போர்க்குற்றங்களோ தொடந்து அம்பலமாகி வருகிறது. குற்றம் செய்த யாரையும் மறைக்கவேண்டிய தேவை எனக்கில்லை என்று சவடால் அடிக்கிறார் பொன்சேகா. ஆனால் மே 16, 18, 19 என்று மாற்றி மாற்றி தேதிகளை அறிவிப்பதிலேயே இவர்களின் நாடகம் அரங்கப்பட்டு விடுகிறது. விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களும் இதை பூசி மெழுகவே விரும்புகின்றனர். ஏனென்றால் புலித்தலைவர்கள் சரணடைந்தனர் என்பதே அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும், உருவாக்க விரும்பும் தோற்றத்திற்கு எதிராக இருக்கிறது.

 

 

 

http://senkodi.wordpress.com/2010/05/28/srilanka-war-crime/

 

நாச்சிகுடா புதை குழிகள் இலங்கை அரசின் கொடூரத்தன்மைக்கும், இனப்படுகொலைக்கும் சாட்சியாய் அமைந்திருக்கிறது. ஆனால் இவைகளை வெறுமனே அனுதாபத்துடன் அணுகுவதும், கோபப்படுவதும் எதிர்காலத்தேவைகளுக்கு உதவாது. ஜனநாயகமற்ற புலிகளின் ஆயுத ஆராதனை இயக்கங்களும், குழுக்களும் இலக்கை அடைய உதவாது என்பது தெளிவிக்கப்பட்டிருக்கும் இக்காலத்தில், புரட்சிகர இயக்கங்களின் பின்னே மக்கள் அமைப்பாய் திரள்வது அவசியமும் அவசரமுமான தேவையாய் இருக்கிறது என்பதையே கடந்த ஓராண்டு உணர்த்துகிறது.