தங்களது தாய் நாட்டை விட்டு மக்கள் வேறு நாடுகளுக்கு ஓடுகின்றார்கள் என்றால் அதற்குப் பல காரணங்கள் உண்டு. போர், பாசிச சர்வாதிகாரிகளின் அடக்குமுறை, பஞ்சம், பட்டினி, உயர் வருமானம் ஈட்டல் என்ற பல காரணங்கள் உண்டு. இவ்வாறு பெருந்தொகையான மக்கள் தமது சொந்தநாட்டைக் கைவிட்டு வெளியேறும் முதல் 10 நாடுகளில் இலங்கையும் ஒன்றென்பது விசனத்துக்குரியதாகும். முன்னொருபோது இந்து சமுத்திரத்தின் முத்தெனவும், இலங்கைச் சீமை எனவும் வர்ணிக்கப்பட்ட நாட்டை விட்டு சுகாதாரமான இந்தச் சூழலை விட்டு, சந்தோசமான சீதோஷ்ண நிலையை இழந்து மெல்லெனத் தவழும் இளந் தென்றலை மறந்து அந்நிய நாடுகளில் பனிக்குளிரின் மத்தியில் ஒரு அடைத்த வாழ்வுக்கு மூன்றாந்தர பிரசைகளாக அடிமைகளாக வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ளார்கள் என்றால் மிகையாகாது.

இலங்கையின் தரகு முதலாளித்துவ பாசிச அரசின் தமிழ் இன அழிப்பு நடவடிக்கையிலும் பாசிசப் புலிகளின் மற்றும் ஏனைய துரோக இயக்கங்களினதும் படுகொலைகளாலும் சாதாரணமாக ஜந்துலட்சம் தமிழ் மக்கள் அகதிகளாக நாட்டை விட்டு வெளியேறி உள்ளார்கள். இவர்களில் இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். இவர்களில்(200000) இரண்டு இலட்சம் பேர் தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளார்கள். தமிழ் நாட்டில் தஞ்சம் அடைந்தவர்களில் பெரும்பான்மையானோர் மிகவும் வறியவர்கள். இவர்களில் அனேகர் குடும்பங்களாக அகதிமுகாம்களில் அவலவாழ்க்கையில் அல்லலுறுகின்றனர். மீதி 3 இலட்சம் பேர் ஜேர்மனி, சுவிஸ், கனடா, பிரான்ஸ்,.... என்று அகதிகளாக பரவியுள்ளனர். பின்னையவர்கள் அகதிவாழ்வில் பொருளாதார ரீதியில் ஒரளவு வசதியாக வாழ்ந்தாலும் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டே உள்ளனர். ஆனால் முன்னையவர்களின் நிலையே மிகவும் பரிதாபத்துக்குரியது.

 

ஆரம்பத்தில் தமிழ்நாட்டு அரசு தமிழீழ அகதிகளுக்கு சில வசதிகள் செய்த போதும் பாசிட் ராஜீவ் காந்தியின் கொலையின் பின்னர் உதவிகள் நிறுத்தப்பட்டு பொலீஸ் அடக்குமுறை, அதிகாரிகளின் உதாசீனம் என்று பல நெருக்கடிகளுக்குள் தள்ளப்பட்டனர். இவ்வாறான நெருக்கடிகளால் தமிழீழ மக்களின் போராட்ட உணர்வு மழுங்கடிக்கப்பட்டு விரக்தி நிலையின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளனர். மேற்கத்தைய பணக்கார நாடுகளில் குடியேறியவர்களில் பலர் அங்கேயே தங்கி அந்த நாடுகளின் பிரசைகளாக வரலாம் என்ற கற்பனையில் திளைத்துள்ள போதிலும் நடைமுறையில் இது சாத்தியமற்றது என்பது மட்டுமல்ல, புதிய நாசிகளின் தாக்குதல் தொடர்வதைப் பார்த்தால் இவர்களுக்கு அந்நாடுகளை விட்டு ஓடுகின்ற நிலை விரைவில் உருவாகலாம். மீதி 10 இலட்சம் பேரில் 6 இலட்சம் பேர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் செய்கின்றனர். இவர்களில் 60 வீதமானோர் வீட்டு வேலையாட்களாக பல விதமான இம்சைகள், சித்திரவதை, பாலியல் பலாத்காரங்கள் போன்ற நெருக்கடிக்கு மத்தியில் தம்மை இழந்து தமது குடும்பங்களின் உயிர் வாழ்வுக்காக உழைக்கின்றார்கள். மீதி 4 இலட்சம் பேர் திறமைசாலிகளாக இஞ்சினியர்கள், டாக்டர்கள், எக்கவுண்டன்கள், ஆசிரியர்கள், தாதிகள் சேவையர்கள், தொழில்வல்லுநர்கள் என சிதறுண்டு வாழ்கிறார்கள்.

 

இவ்வாறு வெளியேறிய டாக்டர்கள் இலங்கையின் முழு டாக்டர்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறிய மூளைசாலிகளான டாக்டர்கள் 10 இலங்கையருக்கு ஒருவர் என்ற ரீதியில் வெளிநாட்டில் உள்ளனர். தொழிநுட்பவியலாளர்களில் மூன்று இரண்டு பங்கினர் பெரும்பான்மையினமான சிங்கள இனத்தவர்கள். நாட்டை விட்டு ஓடும் பெரும்பான்மையினர் தமிழ் மக்கள் தான். இதேவேளை ஸ்ரீலங்கா இனவெறி பாசிச அரசின் இன அழிப்புக்கு எதிராக போராடுகின்ற தமிழ் மக்களின் போராட்டத் தலைமையை தரகு முதலாளித்துவ, பாசிச புலிகள் வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லீம் மக்களின் மேல் கட்டவிழ்த்து விட்டுள்ள கொலைவெறி, பாசிச நடவடிக்கைகளும் அவர்களைத் தமது வாழ்விடங்களை விட்டு துரத்தி அடித்த போக்கிலித்தனமும் முஸ்லீம் மக்களை தமது சொந்த நாட்டிலேயே அகதிகளாக அலைய வைக்கின்றது. 1992ம் ஆண்டில் அரசின் புள்ளிவிபரத்தின் படி வெளிநாட்டிலிருந்து இலங்கையர்களால் நாட்டுக்கு கொண்டு வரப்பட்ட பணம் 700 மில்லியன் டொலர்களாகும். இதில் 500 மில்லியன் டொலர்கள் அரபு நாடுகளிலிருந்து வந்ததாகும். இலங்கையின் பாசிச அரசு உதவி வழங்கும் ஸ்தாபனத்திடமிருந்து பெறுவது 800 மில்லியன் டொலர்களாகும். எனவே உதவி வழங்கும் நாடுகளின் பணத்தை விட எம்மவர்கள் உதிரம் கொட்டி நாட்டுக்கு அனுப்புவது குறைந்தது அல்ல என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இவ்வாறு பெறப்பட்ட பணம் தரகு முதலாளித்துவத்தால் ஒட்டுமொத்தமாக உறிஞ்சப்பட்டு ஏப்பமிடப்படுகின்றது.

 

தரகுமுதலாளித்துவ இனவெறி அரசின் இருப்புக்காக பாதுகாப்புச் செலவீனம் என்ற பெயரில் எமது நாட்டு மக்களின் பொருளாதாரம் சீரழிக்கப்படுகிறது. விலைவாசி உயர்வு வேலையில்லாத் திண்டாட்டம், ஜனநாயகமறுப்பு பொருளாதார மந்தநிலை என்ற சுமைகள் யாவும் முழு இலங்கை மக்களின் தோள்களை அழுத்துகின்ற பெரும் சுமைகள் ஆகிவிட்டன. ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரை இவற்றுடன் கூட இன அழிப்பு, பொருளாதார தடை என்ற இரு பெரும் சுமைகள் அவர்களை மூச்சு விடக்கூட முடியாத நிலையில் மரண அவஸ்தைப் படவைத்துள்ளது. இன்று தமிழ்மக்களின் போராட்டத் தலைமையை கைப்பற்றியுள்ள பாசிசப்புலிகளால் இம் மரண அவஸ்தைலிருந்து அவர்களை மீட்க முடியாதது மாத்திரமல்ல அவர்களும் தமது இருப்புக்காக பல மக்கள் மேல் சுமைகளை ஏற்றி வந்துள்ளனர். இவை யாவற்றையும் உடைத்தெறிந்து மக்களை அவர்களிடம் இருந்து மீட்க புதிய புரட்சிகரமான தலைமையை உருவாக்க வேண்டிய உடனடியான கடமை தமிழ் புரட்சிகர சக்திகளின் முன்னால் உள்ள பெரும்பணியாகும். உண்மையான மனிதன் வசதியான பாதையை நாடமாட்டான். கடமையுள்ள பாதையையே தேடுவான். அவன்தான் செயல்திறன் உள்ள மனிதன். அவனது இன்றைய இலட்சியங்கள் தான் நாளைய சட்டங்கள்.

 

நாட்டிலும் வெளியிலும்

 

நாடுகள் சனத்தொகை இடம்பெயர்ந்தவர்கள் சனத்தொகையின் வீதம்

 

லெபனான் 2.8 மி 1.0 மி 35.7 வீதம்

போலந்து 38.9 மி 10.0 மி 25.7 வீதம்

சுவீடன் 25.2 மி 4.0 மி 15.8 வீதம்

ஸ்ரீலங்கா 16.9 மி 1.5 மி 8.9 வீதம்

பிலீப்பைன்ஸ் 61.4 மி 1.2 மி 2.0 வீதம்

வியட்நாம் 66.2 மி 1.0 மி 1.5 வீதம்

இந்தியா 843.9 மி 1.5 மி 0.2 வீதம்

 

மேதைக்கு அறிகுறி சராசரி அறிவை விட சற்று அதிகமான அறிவுடையதாகும். ஆனால் மேம்பட்ட அறிவு என்பது ஒரு தனி மனிதனையோ அல்லது ஒரு சில மக்களையோ சார்ந்திருப்பது அல்ல. இது பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப்படையாக விளங்கும் ஒரு கட்சியை சார்ந்திருக்கிறது. ஒரு சரியான அரசியல் வழியையும் மக்களின் ஒட்டுமொத்தமான அறிவையும் சார்ந்திருக்கிறது...

மாவோ.