பலர் இவர்களையே, பார்ப்பனர் என்கின்றனர்!? அப்படியாயின் ஏன் இவர்கள் ஆரியராக நீடிக்க முடியவில்லை!? என் பார்ப்பனரானார்கள்!? வரலாற்றில் அப்படி என்ன தான் நடந்தது?

இதை தெளிவாக்குவதன் மூலம், பார்ப்பனியத்தின் கருவை நாம் புரிந்துகொள்ள உதவும். மிகவும் சிக்கல் நிறைந்த விடையம். இதன் மீதான தர்க்க ரீதியான விவாதங்கள், அதையொட்டிய பற்பல கேள்விகள் அவசியமாகின்றது. இது ஒரு தெளிவையும் தர்க்கத்தையும் ஏற்படுத்தும்.

 

1.இந்தியா வரை வெற்றி பெற்று வந்ததாக கருதும் வந்தேறிகளான ஆரியர்கள், எந்தப் பக்கத்தில் எப்படி தமது சொந்த ஆரியர் ஆட்சியை அமைத்தனர்? அல்லது ஏன் ஆரிய ஆட்சியை அமைக்க முடியவில்லை?

 

2.வந்தேறமுன் அவர்களின் பண்பாட்டு வேர் எங்கு, எப்படி இருந்தது? அதற்கான ஆதாரங்கள் எவை? அதன் அடிப்படைகள் என்ன? வந்தேறாத குடிகள் என்றால் கூட, அதன் அடிப்படைகள், ஆதாரங்கள் எங்கே?

 

3. வெளியில் இருந்து வந்து வெற்றி பெற்ற அல்லது இந்த மண்ணில் வாழ்ந்த ஆரியர்கள், ஏன் ஒரு ஆரிய நாட்டு மக்களாக, ஒரு ஆரிய இன மக்களாக தொடர்ந்து வாழ முடியவில்லை? எப்படி?, ஏன்? இந்தியமண்ணில் அவர்கள் காணாமல் போனார்கள். அவர்களின் வேத மொழி (ஆரிய மொழி), ஏன் வெற்றி பெற்ற பிரதேசத்தில் அல்லது வாழ்ந்த பிரதேசத்தில் நீடித்து இருக்கவும், வாழவும், வளரவும் முடியவில்லை?

 

4.அப்படி வந்தேறிகளின் வெற்றி பெற்ற ஒரு ஆட்சி இருந்து இருந்தால் அல்லது இந்த மண்ணில் உருவான ஆரியர் என்றால், அந்த ஆரியர் ஆட்சியை அழித்தது யார்?. எப்படி?, ஏன்?, எங்கே?, எப்போது? அழிக்கப்பட்டது.

 

5.ஆரியர்கள் தான் இன்றைய இரத்த வழி உறவு பார்ப்பனர்கள் என்றால், அதன் சமூக அடிப்படைகள் தான் என்ன? இல்லையென்றால் எப்படி? ஏன்?

 

6.வரலாறு தெரிந்த காலம் முதலே பார்ப்பனர் தனித்து இருந்து ஒரு நாடு அல்லது ஒரு தனி ஆட்சியாக இருந்ததாக எந்த வரலாறும் கிடையாது. அதற்கு முந்திய வேதகாலத்திலும் கூட, அது கிடையாது. அவர்களின் உள்ளான நிர்வாகம் தான் இருந்தது. அப்படியாயின் பார்ப்பனர் மட்டும் பேசும் ஒரு சாதி மொழியாக உருவான சமஸ்கிருத மொழி, எப்படி?, எங்கே?, ஏன்?, எதற்காக? உருவானது. அப்படியாயின் பார்ப்பனன் யார்?

 

7. பார்ப்பனச் சாதி ஒரு பூசாரி பிரிவாக, ஒரு சாதி மொழி பேசுகின்ற ஒரு சாதிப் பிரிவாக முடிந்தது. எந்த சமூக நிலைமை மூலம், இப்படி அவர்களால் நீடித்து நிலைக்க முடிந்தது? முடிகின்றது? அதற்கான சமூக பொருளாதாரக் கூறுகள் என்ன?

 

8. வேதகால மக்களின் வர்க்க சமூக அமைப்பு என்ன? அவர்கள் தந்தை வழி தனிச்சொத்துரிமை வர்க்க அமைப்பு என்பதால், அது எப்படி எந்த நிபந்தனையில் பார்ப்பனியமாக ஒருங்கிணைந்தது அல்லது ஆரிய அடிப்படையின்றி சிதைந்தது?

 

9. இன்றைய சாதிப் பார்ப்பனரின் பார்ப்பனிய மூலத்தை வேதத்தில் தேடினால் காணமுடியாது. அப்படியாயின் அது எங்கிருந்து? எப்படி? உருவானது.

 

10.வேத மக்கள், அதாவது அந்த ஆரியர் வாழ்வு உழைப்பு சார்ந்ததல்ல. கொள்ளையிட்டு வாழ்வதற்காக அவர்கள் நடத்திய யுத்தங்களை செழிக்க கோருவதே, வேதத்தில் முதன்மை பெற்ற மையச் சடங்காக உள்ளது. இதை அடையும் வழியில் தான், அவர்கள் தமது சொந்த சடங்கு வழிபாட்டை பெருமைப்படுத்தி பேசுகின்றனர். இது எப்படி இன்றைய பார்ப்பனியமாக இருக்க முடியும்;? அதன் நீட்சியாக எப்படி எந்த வகையில் இருக்கின்றது?

 

11.பார்ப்பனியம் எந்தக் காலத்துக்கு பிந்தைய கோட்பாடு? இதற்கு முந்தைய வரலாற்றை எப்படி பொருத்துவது அல்லது விலக்குவது?

 

12.பார்ப்பனர் பூசாரிகளாக மட்டும், ஆரியராக அடையாளம் காணப்படுகின்றனர். மற்றவர்கள் என்னவானார்கள்? ஏன்?, எப்படி?, என்ன? நடந்தது.

 

இப்படி பல பத்து கேள்விகளுக்கு விடை காணவேண்டியுள்ளது. இதை அதன் சமூக பொருளாதார எல்லைக்குள் வைத்து, வரலாற்றால் நாம் விடை காணவேண்டியுள்ளது. விடை கண்டதாக கருதப்படுபவையோ, அரூபமாகவேயுள்ளது. பல திரிக்கப்பட்டவை, பல இட்டுக்கட்டப்பட்டவை. பல முன்கூட்டிய முடிவுகளின் அடிப்படையில் முன்வைக்கப்படுபவை. இவை பல சந்தர்ப்பத்தில் இலகுவாக பொடிப்பொடியாக தகர்ந்து போய்விடுகின்றது.

 

தொடரும்


பி.இரயாகரன்

 

2.பார்ப்பனிய இந்துத்துவத்தை முறியடிக்காமல், சாதிய–தீண்டாமையை ஒழிக்க முடியாது : பாகம் - 02


1.பார்ப்பனியம் மீதான போர் : ஆரியம் பார்ப்பனியமாக சிதைந்தது எப்படி? சாதியம் தோன்றியது எப்படி? : சாதியம் குறித்து… பாகம் - 01