05262022வி
Last updateபு, 02 மார் 2022 7pm

புலிகளின் ஆள்தான் தீப்பொறி இளங்கோ என்று தெரிந்தவுடன் ..

1992களில் இங்கிலாந்தில் இயங்கிய தீப்பொறி குழுவினருடன் எனக்கு தொடர்பு ஏற்பட்டது.  அவர்களுடன் சிலகாலம் வேலை செய்த அனுபவங்களை இங்கு பகிர்வதன் மூலம், இன்று அதன் தொடர்ச்சியென கூறி இயங்கும் மே-18 இயக்கத்தினரிடம் கடந்த காலத்தின் செயல்பாடுகளிற்கான பதில்களை எதிர்பார்க்கின்றேன். இதற்கான பதில்கள் கிடைக்குமா?

 
இன்று இவர்கள் பின்னாலும், ஏனைய புதிய அமைப்புகள் பின்னாலும், அணிதிரள்பவர்களையும் இது விழிபுற வைக்கும். தமிழ் மக்களை விழிப்புடன் இருத்தி, மீண்டும் ஓர் பேரழிவுக்கும் காட்டிக்கொடுப்புக்கும் இட்டுச் செல்லாவண்ணம் தடுப்பதில், எனது இந்த அனுபவம் சிறு அளவுக்காவது பங்காற்றுமென திடமாக நம்புகின்றேன்.

 

எனக்கும் தீப்பொறி தோழர்களிற்கும் இடையே நிகழ்ந்த சில சந்திப்புகளைத் தொடர்ந்து,  ஒரு நாள் அழைப்பு ஒன்றுவந்தது. கனடாவிலிருந்து ஒரு தோழர் வந்திருக்கின்றார், அவர் உங்களை சந்திக்க விரும்புகிறார் வரமுடியுமா என அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கே வைத்து எனக்கு இளங்கோ என்ற நபர் அறிமுகம் செய்து வைக்கப்பட்டார். அவர் தீப்பொறி அமைப்புக்காக தான் கனடாவில் வேலை செய்வதாக கூறியதுடன், எனது கடந்த கால இயக்க செயற்பாடு பற்றிக் கேட்டார். அத்துடன் புலிகளிடமிருந்து எவ்வாறு தப்பினீர் என்பதனைக் கேட்டு அறிந்தார். தான் முன்னால் புலி எனவும், கிட்டுவினால் சிறைப் பிடிக்கப்பட்டதாகவும், பின்பு சிறையிலிருந்து தப்பி வெளிநாடு சென்றதாகவும் கூறினார். மேலும் பலர் அங்கு வர, எமது உரையாடலை தொடரமுடியாது போனது.

 

சில மாதங்களின் பின் மீண்டும் அவரை சந்தித்த போது, இளங்கோ என்னுடன் அரசியல் தொடர்பாக ஏதுவும் கதைக்கவில்லை. மாறாக நான் இருந்த இயக்கத்தின் முக்கிய தோழர் ஒருவருடன் தனக்கு மிக நெருங்கிய தொடர்பு இருப்பதாக கூறினார். அத்துடன் பல தடவை அவருடன் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும் கூறியதோடு, ஏனைய முக்கிய தோழர்களின் செயற்பாடுகள் பற்றிக் கேட்டார். அத்துடன் அவர்களின் இருப்பிடங்களை அறியும் நோக்கிலேயே, அவரது உரையாடல் தொடர்ந்து இடம் பெற்றது.

 

இளங்கோ தான் தொடர்பில் இருப்பதாக கூறிய தோழருடன், நான் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டேன். இளங்கோ பற்றியும், அவன் எனக்கு கூறிய விடயங்களையும் பற்றி வினவினேன். இந்த நபரை பற்றி தான் கேள்விப்பட்டதாகவும், கனடாவில் வதிவதாகவும் தான் ஒரு போதும் அவனுடன் கதைத்தது இல்லை என்று அந்தத் தோழர் கூறினார். அவன் உனக்கு என்னை தெரியும் என குளிசை போட்டு, எல்லா விடயங்களையும் அறிய முனைகிறான் என எச்சரித்தார். அத்துடன் புலியின் உளவாலியாக இருக்கலாம், கவணம் எனவும் எச்சரித்திருந்தார்.

 

மீண்டும் சில மாதங்களின் பின்பு, இளங்கோவையும் ஏனைய இருவரையும் தீப்பொறி தோழர் ஒருவரின் வியாபார ஸ்தலத்திற்கு சென்றிருந்த போது சந்திக்க நேர்ந்தது. இளங்கோவின் வேண்டுகோளின் படி, அவனுடன் வந்திருந்த ஒருவர் என்னைப் படம் பிடிக்க முனைந்தார். அதற்கு நான் மறுத்த போது, ஒரு ஞாபகத்திற்கு தான் எனக் கூறி எனது தோளில் இளங்கோ கை போட்டு படம் பிடித்துக் கொண்டான். அத்துடன் தொடர்பு கொள்ள வீட்டு தொலைபேசி இலக்கத்தினையும், விலாசத்தினையும் வற்புறுத்தி பெற்றுக் கொண்டனர். இளங்கோ மீது எனக்கு சந்தேகம் இருந்த போதும், தீப்பொறி அமைப்பில் இயங்கும் நபர் என்ற ரீதியில் அரை விருப்புடனேயே என்னைப் பற்றிய விபரங்களைக் கொடுத்தேன்.

 

இதன் பின்பு முற்று முழுதாக தீப்பொறி தோழர்களை சந்திப்பதனை நிறுத்திக் கொண்டேன். அவர்கள் நடமாடும் இடங்களிற்கு போய் வருவதனையும் முற்றாக தவிர்த்துக் கொண்டேன்.  இந்த படம் எடுத்தல், தொலைபேசி, இருப்பிட விலாசங்களை சேகரித்தல் என்பது இளங்கோவினால் மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டுயிருகின்றது. ஏனைய நண்பர்களுடன் கதைத்த போது, இது தெரியவந்தது. இது எனக்கு ஒன்றும் ஆச்சரியத்தினை ஏற்படுத்தியிருக்கவில்லை. ஏற்கனவே நான் இவன் புலிகளின் ஆள்தான் எனத் திட்டவட்டமாக முடிவு செய்ததனால், இவன் உட்பட தீப்பொறியின் தொடர்புகளை முற்று முழுதாக துண்டித்தும் இருந்தேன்.

 

தீப்பொறியானது தமிழீழ கட்சியாக மாற்றம் பெற்று, புலம்பெயர் தேசங்களிலும் இந்தியா மற்றும் இலங்கையிலும் பல அங்கத்தவர்களை உள்வாங்கியது. குறிப்பாக மூன்றாம் நிலையினை (புலி மற்றும் அரச எதிர்ப்பு – மாற்று தேடல்)  கொண்டிருந்த பலர,; தமிழீழக் கட்சியில் இணைந்திருந்தனர். இளங்கோ தமிழீழக் கட்சியில் மிகவும் முக்கியமான நபராகவும் மத்திய கமிட்டி உறுப்பினராக இருந்ததாகவும் அறியப்படுகின்றான். இளங்கோ எல்லா இடங்களிற்கும் போய், கட்சியில் இருந்த அனைவருடனும் நேரடித் தொடர்புகளை பேணியும் உள்ளான்.

 

குறிப்பாக சரிநிகர் பத்திரிக்கை அலுவலகத்தில் வேலை செய்த பலர் (எல்லோருமல்ல) தமிழீழ கட்சியில் அங்கத்தவராக இருந்திருந்தனர். இவர்களுடன் நேரடி தொடர்புகளை இளங்கோ கொண்டிருந்தற்கு அப்பால், அங்கே வேலை செய்த பெண் ஒருவரை காதலித்து திருமணமும் செய்துள்ளான். அந்த திருமணத்தின் போது இளங்கோ விதித்திருந்த நிபந்தனைகளும், பெண் வீட்டாரிடமிருந்து எதிர்பார்த்தவையும் மிகவும் கேவலமானதாக இருந்தது. இதை சரிநிகரில் இருந்த நண்பர் ஒருவர், நீண்ட நாட்களின் முன் என்னோடு பேசிய போது கூறினார்.

 

மேலும் ஜயரும் இந்த தமிழீழ கட்சியில் இருந்திருக்கலாமென கருதுகின்றேன். ஏனெனில் அவரிடமிருந்தும் கணிசமானளவு பணத்தினை (என்.டில்.எவ்.ரிஇன்) இளங்கோ சுருட்டியுள்ளதாகவும் நம்பகமான இடங்களிலிருந்து அறிய முடிகின்றது.

 

தீப்பொறி,  தமிழீழ கட்சியின் தொடர்ச்சியே தாமெனக் கூறிக்கொள்ளும் மே-18 இயக்கத்தின் தலைமையை (கீழ் உறுப்பினரை அல்ல. ஏனெனில் புரட்சிகர வார்த்தை ஜலாங்களை நம்பினர். என்னை மாதிரி ஏமாறும் பலர் இன்னமும் இருப்பதால் தான் இவர்களின் பிழைப்பு தொடர்கின்றது) நோக்கியே எனது முக்கியமான கேள்விகளுக்கு பதிலை எதிர்பார்க்கின்றேன். இளங்கோ என்ற நபரை நோக்கி, உங்கள் கையை காட்டி விட்டு தப்ப முயற்ச்சிக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.

 

1.புலியிலிருந்து உளவு பார்க்க என திட்டமிட்டு அனுப்பப்பட்ட ஒருவன், எவ்வாறு உங்களுடன் மிக நீண்டகாலமாக இயங்கி மத்திய குழுவிலும் இடம் பிடித்தான்? உங்களை நம்பி (போலி புரட்சிகர அரசியலை) வந்த எல்லோரையும் பற்றி, புலிக்கு படம் உள்பட அனைத்து விவரங்களையும் வழங்க முடிந்ததுடன் சிலரை நேரடியாக புலியின் வலைக்குள் வீழ்த்தினான். அவர்களை வாய்மூடி மௌனியாக்கி, அவர்களுக்கு வேலை செய்விக்கவும் முடிந்தது?

 

2.உங்களின் முக்கிய உறுப்பினர்கள் இரகசியமாக புலிகளுடன் செய்து கொண்ட கூட்டுச் சதியா இது? இளங்கோவின் செயற்பாடுகள் மற்றும் தோழர் கேசவனை புலிக்கு காட்டிக் கொடுத்தது எல்லாம் எப்படி சாத்தியமானது?

 

3. மே-18 இயக்கத்தின் வியுகம் வெளியீட்டிற்கு நீங்கள் அழைத்திருந்த நபர்களை பாருங்கள். கடந்த கால புலம்பெயர் இலக்கிய பிரமுகர்களும்;, முன்னாள் இயக்கங்களில் இருந்த கொலைகார சமூக விரோதிகளும், இந்திய இலங்கை அரசுகளின் ஒற்றர்களும், புலம்பெயர் தேசங்களிலிருந்த புலிப் பினாமிகனும் தான். இப்படி பலர். இது தான் ஒரு புரட்சிகர விடுதலை அமைப்பினை உருவாக்கும் வழிமுறையோ?

 

4.தவறுகள் செய்யாதோர் யாரும் இல்லை. விட்ட தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு முன்னேறுவதே சரியான அரசியல் வழிமுறை. தீப்பொறி, தமிழீழ கட்சியின் தொடர்ச்சி மே-18 இயக்கம் என கூறும் நீங்கள், உண்மையிலேயே புரட்சிகர அமைப்பாகவும் மக்களின் அனைத்து ஒடுக்கு முறைகளையும் உடைத்தெறிய போராடுபவர்களாகவும் இருப்பின், உங்கள் கடந்த கால செயற்பாட்டின் சரி பிழைகளை நிச்சயம் சுயவிமர்சனத்திற்கு உட்படுத்தியே ஆகவேண்டும். அதனை செய்ய நீங்கள் தயாராக உள்ளீர்களா?


நீங்கள் ஒரு புரட்சிகர இயக்கம், மார்க்சிய லெனிய மாவோசிய சிந்தனையே உங்கள் வழிமுறை என பிரகடனம் செய்வதாலும், உங்களுடன் அணி சேர்ந்திருக்கும் தோழர்கள் உங்கள் பாதை ஒரு புரட்சியினை வெல்லும் என நம்புவதாலும் தான், நான் உங்களை நோக்கி மேலுள்ள கேள்விகளை கேட்க வேண்டியுள்ளது. உங்களின் கடந்தகால அரசியல் என்பது ஒன்றும் புரட்சிகரமானதாக இருந்திருக்கவில்லை. இளங்கோ போன்ற புலி உளவாளிகளும், இந்திய ஒற்றர்களும், பிரமுகர்களும் கொட்டமடித்த, மக்கள் விரோத அரசியல் கூட்டகவே இருந்திருக்கின்றது.

 

இன்று தமிழ் மக்களின் அரசியல் என்பது மிகவும் பாரிய பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளது. அடுத்த தொடக்கத்திற்கு முன், நிரம்பவே கடந்தகாலம் பற்றியும், அதன் தோல்விகளை பற்றி, கேள்விகள் மற்றும் விமர்சனங்கள் மூலம் மறு ஆய்வுக்கு உள்ளாக்க வேண்டியுள்ளது.  இது இன்றைய முக்கிய பணியாகும். இதனை மறுத்து மே-18 இன் புதிய தொடக்கம் என கூறிக் கொண்டு, ஏதாவது மக்களிற்கு செய்தேயாக வேண்டும் என ஆரம்பிப்போமாயின், ஒற்றர்களுடனும், சதிகாரர்களுடனும், மக்களின் விரோதிகளுடனும் கூட்டு சேர்ந்து மீண்டும ஒரு புலியமைப்பினை கட்டியெழுப்பி ஒரு முள்ளிவாய்க்காலில் மீண்டும் முடிவடைவோம்.

 

மயினா 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்