01312023செ
Last updateபு, 02 மார் 2022 7pm

நாம் அமைப்பானால் தான் மக்களை அணிதிரட்ட முடியும். எமது அரசியல் நெருக்கடிகள்

ஒருபுறம் அரசும் புலியும் மக்களை ஆட்டுகின்றனர், ஆட்டுவிக்கின்றனர். நாங்கள் இதை மாற்ற வேண்டும் என்றால், நாங்கள் மாற வேண்டும்;. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதுவே எம்முன் உள்ள உடனடிக் கேள்வியாகும்.

தோழர்களே!, சமூக அக்கறையாளர்களே!! நண்பர்களே!!!

 

மக்களின் விடுதலைக்காக நீங்கள் சிந்திக்கின்றீர்களா? வலதுசாரியத்துக்கு (புலிக்கு) மாற்றாக ஒரு மக்கள் திரள் அமைப்பை உருவாக்குவது அவசியம் என்று கருதுகின்றீர்களா.? இதைச்  செய்வதற்கு உங்களுக்கு என்ன தடைகள் உண்டு? ஏன் இதை உருவாக்க உங்களால் முடியவில்லை? இதற்காக தான் நீங்கள் முனைகின்றீர்கள் எனறால், என்ன தடைகள் உள்ளன? இது தீர்க்கப்படாத வரை, மாற்று அமைப்பை உருவாக்க முடியாது. இதை யாரும் உருவாக்கி எங்களுக்கு தரமாட்டார்கள், நாங்கள் தான் உருவாக்க வேண்டும். மக்கள் நலன் என்று அறைகூவிய நாங்கள்தான், அதை உருவாக்க வேண்டும். 

 

இந்தவகையில் மாற்று அமைப்பு உருவாவதற்கு தடையாக நாங்களே இருக்கின்றோம்;. நாங்கள் அமைப்பாகாது விட்டால், வலதுசாரி இனவாதிகளுக்கு எதிராக மாற்று மக்கள்திரள் அமைப்பை உருவாக்க முடியாது.

 

எம்மிடத்தில் உள்ள குறைபாடுகள் தான், இதை உருவாக்க முடியாமைக்கான முதன்மைக் காரணமாக உள்ளது. கடந்த 25 வருட அரசியலில் நாம் வகித்த தனிநபர் பாத்திரம் தான், இதற்கு முதன்மைத் தடையாக உள்ளது. நாம் எம்மைக் கடக்கவில்லை. நாம் எம்மை அமைப்பாக்க மறுக்கின்றோம். நாம் அமைப்பாகாமல், எப்படி மக்களை அணிதிரட்ட முடியும். முதலில் மாற்றம் என்பது, நாம் அமைப்பாவதாகும். இது நடந்தால் தான், மக்கள் திரள் அமைப்பாக்குவது நடக்கும். 

 

மே 16 இல் புலிகள் சரணடைய முன், அரசியல் என்பது தனிநபர்களைச் சுற்றித் தான் இயங்கியது. கடந்த 25 வருடமாக புலியல்லாத அரசியல் தளத்தில், இதுவே காணப்பட்டது. இதுதான் மே 16 இன் பின்னான அரசியல் சூழலை மாற்றுவதில், எதிர்நிலை அரசியல் பாத்திரத்தை வகிக்கின்றது. நாம் என்ற அடையாளத்தையும், எம்மில் உள்ள பிரமுகர்தனத்தையும், எமது குட்டிப+ர்சுவா மனப்பாங்கையும் களைய மறுக்கின்றோம். எம்மை முதன்மைப்படுத்தி, அமைப்பாவதை சிறுமைப்படுத்துகின்றோம். இங்கு இதே தளத்தில்தான் மக்கள் திரள் அமைப்பு வடிவத்தை கோட்பாட்டு ரீதியாக மறுக்கும், அடையாள அரசியலும் இயங்குகின்றது. அடையாளத்தை பதிய முன்வைக்கும் அராஜகவாத (அனார்கிஸ்ட்)  கருத்து மூலம், தமது தனித்துவத்தை அடையாளப்படுத்தும் பிரமுகர்தனமும் கூட இங்கு தான் தன்னை தக்கவைக்கின்றது. இது தன்னை அமைப்பாக்குவதையும், மக்களை அணிதிரட்டுவதையும் கூட மறுக்கின்றது. இதனுடன் தான், நாம் பயணிக்க முனைகின்றோம். 25 வருடம் எந்த வேறுபாடுமற்ற, அரசியல் கலைப்புவாதத்துக்குள் எல்லாம் சங்கமித்துக் கிடந்தது. அதைக் களைந்து, மக்களை அணிதிரட்ட நாம் அமைப்பாவதை மறுக்கின்றோம்.

 

இன்று வலதுசாரிய அரசியலுக்கு வெளியில், மக்களை அணிதிரட்ட எமக்கு முக்கியமான இரண்டு பிரதான விடையங்களுக்கு தீர்வு கண்டாகவேண்டும்.

 

1.அரசியல் ரீதியாக ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டு அதனடிப்படையில் வேலை செய்தல்.

 

2. அரசியல் திட்டத்தின் அடிப்படையில், நாம் ஸ்தாபனமாக வேண்டும். நாம் ஒவ்வொருவரும் ஸ்தாபராக மாற வேண்டும்.

 

இவ்விரண்டையும் செய்யாமல், மக்களை வெற்றிட்டத்தில் அணிதிரட்ட முடியாது. நாங்கள் முதலில் அமைப்பாகாமல், மக்களை அமைப்பாக்க முடியாது. நாங்கள் ஒரு திட்டத்தை ஏற்றுக் கொண்டு செயல்பட்டால்தான், மக்களை அதன்பால் திரட்ட முடியும். இதை நிராகரித்த தனிநபர் பாத்திரம் என்பது, மக்களுக்கு எதிரானதாகவே மாறிவிடுகின்றது.

 

நாங்கள் அமைப்பாக மாறுவதில் உள்ள தடையே, இன்று மிக முக்கியமான அரசியல் நெருக்கடியாக எம்முன் உள்ளது. நாம் உருவாக்கிய பு.சி.மை உட்பட, இதுவே அனைத்தும் தளுவிய ஒரு பிரச்சனையாக உள்ளது. இது புலம்பெயர் சமூகம் முதல் இலங்கை வரை உள்ள பிரச்சனையும் கூட. நாம் வரிந்து கொண்டுள்ள கொள்கைகளும், கோட்பாடுகளும், விருப்பங்களும் தனிநபர்களாக முன்வைக்கின்ற போக்கு, படிப்படியாக தம்மை ஸ்தாபனமாக்குவதை தொடர்ந்து மறுக்கின்றது. 25 வருட பழக்கம், இதற்கு ஒரு காரணம். இங்கு நாம் பிரமுகர்களாக, தத்துவம் தெரிந்த உதிரிகளாக இருப்பதுடன், தம்மை முதன்மைப்படுத்தும் போக்கு தொடர்ந்து முதன்மை பெற்றுவிடுகின்றது. ஸ்தாபனத்துக்கு தனிநபர்களின் செயல்கள் என்ற போக்குக்குப் பதில், தனிநபர்களுக்கு தான் ஸ்தாபனம் என்ற போக்கு முதன்மை பெறுகின்றது. இந்தப் போக்குத்தான், மக்களை ஸ்தாபனப்படுத்துவதில் பாரிய ஒரு தடையாக மாறியுள்ளது.

 

மே 16 இல் பிரபாகரன் சரணடைந்த பின் ஏற்பட்ட மாற்றத்தை, ஒரு மாற்று அரசியல் மூலம் அமைப்பாக்குவதற்கான போராட்டத்தை நடத்துவது பிரதானமான மையமான அரசியல் கூறாகும்;. இங்கு நாங்கள் ஸ்தாபனமாக அணிதிரண்டால் தான், மக்களை அணிதிரட்ட முடியும். இதை நாங்கள் செய்கின்றோமா? அதை உணருகின்றோமா? புலம்பெயர் சமூகம் முதல் இலங்கை வரை, புலியல்லாத மாற்றுஅரசியல் தளத்தில் கருத்தை முன்வைத்து செயல்பட்டவர்கள், இதை முதன்மையான ஒரு அரசியலாக இன்று செய்யவில்லை. அதைச் செய்ய இன்று முன்வருவதில்லை. தொடர்ந்து பிரமுகராக, அடையாள அரசியல் செய்ய முற்படுகின்றனர்.

 

தொடர்ந்து ஒரு பிரமுகராக இருக்கின்ற ஒரு அரசியல் தளத்தில், தம்மை தக்கவைக்கவே முனைகின்றனர். அவர்கள் ஸ்தாபனமாவதையும், ஒரு திட்டத்தை ஏற்றுக்கொண்டு வேலை செய்வதையும் மறுக்கின்றவர்களாக மாறிவிடுகின்றனர்.

 

இதனடிப்படையில் முரண்பாடுகளையும், தனிநபர் முரண்பாடுகளையும் முதன்மைப்படுத்துவதே அரசியலாகின்றது. நாங்கள் மக்களுக்காக ஸ்தாபனமாவதில் உள்ள தடையை, நாம் ஒவ்வொருவரும் எம்மளவில் கடக்காத வரை, அதற்காக முன்னின்று போராடாத வரை, மக்கள் என்று நாம் கூறுவது அர்த்தமற்றதாகிவிடும்;. கடந்த 25 வருடமாக தனிமனித முனைப்பு கொண்டு எம்முடன் நீடித்த அரசியல், மே 16 பின் தொடர்வது என்பது மக்களுக்கு எதிரானதாகவே சாராம்சத்தில் செயல்படும்.

 

புலிகளிடம் அன்று ஜனநாயகத்தைக் கோரியது, தேசியத்துக்காகவும் போராடுவதற்காகவே ஓழிய மகிந்தாவுக்கு குடைபிடிக்கவல்ல. புலியெதிர்ப்போ குடைபிடிக்கின்றது. நாங்கள் மக்கள் அரசியல் பேசியது, மக்களை ஸ்தாபனமாக அணிதிரட்டி போராடவே ஒழிய, நாங்கள் பிரமுகர்களாக நீடிப்பதற்கல்ல.

 

எமக்கு நாமே கொம்புகளை வைத்துக் கொண்டு நீடிப்பது, மக்களுக்கு எதிரானது. நாம் அமைப்பாவதையும், அமைப்பை முதன்மைப்படுத்தி நாம் முன்முயற்சியுடன் இயங்குவதும் காலத்தின் உடனடித் தேவையாகும்;. இதற்கு எதிரான எமது கற்றுக்குட்டித் தனத்தைக் களைந்து, எமது பிரமுகர்தனத்தை கைவிட்டு மக்களுக்காக உழைப்பது உடனடி அரசியல் பணியாகும். மக்களை அணிதிரட்டும் வண்ணம் வேலைகளை இனம்காணுவதும், கூட்டாக உழைத்தல் முதன்மையான உடனடி அரசியல் பணியாகும். மக்களுக்கு எந்தப் பிரமுகர்களும் தேவையில்லை.

 

புலத்தில் இதை தொடங்குவோம் 

 

எது சாத்தியமோ, அதை உடன் செய்வது அவசியம். புலத்தில் செய்வதற்கு பல வேலைகள் எம்முன் உள்ளது. அவை பற்றி தனியாக ஒரு கட்டுரை மூலம், பார்க்க உள்ளோம்;. (இந்த வகையில் சீலனின் குறிப்புகள் இதற்குள் அடங்கும். அதைப் பார்க்க  எம்முன் உள்ள வேலைகளும் கடமைகளும் - சீலன்) வலதுசாரி புலியை முறியடித்து, புலத்தில் வாழும் தமிழ் மக்களை அணிதிரட்டுவதன் மூலம் ஏற்படும் தாக்கம், இலங்கையில் மிகப்பெரிய செல்வாக்கை வகிக்கும்;. சர்வதேசியத்தின் அரசியல் ஆளுமையை, யாரும் குறைத்து மதிப்பட வேண்டிய அவசியம் கிடையாது. இன்று எம்முன்னுள்ள தடை, நாங்கள் எங்களை ஒரு அரசியல் திட்டத்தின் மூலம் அமைப்பாக்கி, ஒரு கூட்டு வேலை முறைக்கு ஊடாக நாம் செயல்படுவதுதான்.

 

தனிமனித முனைப்புக் கொண்ட எமது ஆர்வங்களையும், சமூக நோக்கங்களையும் அமைப்பாக்கி, அதை மக்களிடம் கொண்டு செல்வதுதான். இதை செய்ய முன்வராத எவரும், மக்கள் என்று கூறுவதில் எந்த அர்த்தமுமில்லாமல் போய்விடும். அது அரசியல் ரீதியாக பொய்மையாகிவிடும். மக்களை அணிதிரட்ட, அமைப்பாகு என்ற கோசத்தை உயர்த்திப் பிடியுங்கள். அதற்காக ஒன்றுபட்டு போராடுங்கள். இதுவே இன்று காலத்தின் உடனடி அரசியல் பணியாகும். 

 

பி.இரயாகரன்
20.05.2010                  

 


பி.இரயாகரன் - சமர்