மே 18 ஜச் சுற்றி, வரலாற்று திரிபு புனையப்படுகின்றது. மே 16 இல் அரங்கேறிய துரோகத்தை மூடிமறைக்க, மே 18 துரோகிகளால் கொண்டாடப்படுகின்றது. புலிகளின் கதை மே 18 இல் தான் முடிந்ததாக, புனையப்படுகின்றது. ஒரு துரோகத்தின் மூலம் மே 16 இல் சரணடைய வைத்தவர்கள், மே 18 இல் வீரமரணமடைந்ததாக இட்டுக் கட்டுகின்றனர்.
மே 16 இல், புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு, முற்றாக சரணடைந்திருந்தனர். இதையே மே 16 அன்று, புலிகள் உத்தியோகபூர்வமாக கே.பி பத்மநாதன் மூலம் அறிவித்திருந்தனர்.
"துப்பாக்கி பயன்பாடுகளை நிறுத்தப்போவதாக விடுதலைப் புலிகள் முடிவு"
பிரபாகரன் உட்பட அனைவரும் அன்று சரணடைந்திருந்தனர். சரணடைந்ததை அடுத்து, மகிந்த ராஜபக்ச ஜோர்டானில் வைத்து இதை அறிவித்தார். 17ம் திகதி காலை
"பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட தாய்நாட்டிற்கு ஜனாதிபதி திரும்பினார்"
இப்படி உண்மை எங்கும் வெளிப்படையாக இருக்கின்றது.
இவர்கள் யாரிடம் சரணடைந்தனர் என்பது மட்டும் இன்னும் மர்மமாக உள்ளது. இதில் மூன்றாம் தரப்பு, நிச்சயமாக சம்பந்தப்பட்டு இருந்தது. இவர்கள் யார், இவர்கள் செய்த சதி எப்படிப்பட்டது என்ற விபரங்கள் இன்னும் வெளிவரவில்லை. இந்த சரணடைவை ஏற்பாடு செய்த புலத்துப் புலி மாபியாக்களுக்கு இவை நன்கு தெரியும்;. அதை அவர்கள் தங்கள் எஜமான விசுவாசத்துடன், தங்கள் சதிகள் துரோகங்கள் அம்பலமாகாது இருக்க அதை மூடி மறைத்து வருகின்றனர்.
தாங்களும் சேர்ந்து கூடி நடத்திய சூழச்சி அம்பலமாகாது இருக்க, மே 18 வரை கற்பனையில் ஒரு யுத்தத்தை புலத்தில் நடத்தினர். இதன் மூலம் 16ம் திகதி சரணடைந்த தலைவர்களுக்கு, துரோகம் செய்தனர். 16ம் திகதி சரணடைந்தவர்களை கொன்றதன் மூலம், பேரினவாதம் நிகழ்த்திய போர்க்குற்றத்தை மே 18 மூலம் ஏதுவுமற்றதாக்கியுள்ளனர். அவர்கள் 16ம் திகதி சரணடைந்த பின் கொல்லப்படவில்லை, 18ம் திகதி சண்டையில் தான் மரணித்ததாக பீற்றிக்கொண்டனர். இதன் மூலம் கொலைகார அரசுக்கு உதவினர். சரணடைந்த தங்கள் தலைவர்களை, அரசு கொல்லவில்லை, அவர்கள் சண்டையில் தான் மரணித்தனர் என்று புலத்துப் புலிகள் உலகறிய அரசுக்கு சார்பாக பொய்ச்சாட்சியம் அளித்து வருகின்றனர். இப்படி அரசுக்கு சார்பாக விலை போன புலத்து புலி மாபியாக்கள், மே 18 ஜ தன் துரோகத்தை மூடிமறைக்கும் குறியீடாக கொண்டு உறுமுகின்றது.
மே 16 சரணடைந்தவர்களை படுகொலை செய்த பேரினவாத அரசு, மே 18 தான் அவரின் உடலை தாம் கைப்பற்றியதாக அறிவித்தனர். இந்தத் திகதியைத்தான், புலிகள் தங்கள் துரோகத்தின் குறியீடாக மாற்றியுள்ளனர். மே 16 இல் சரணடைந்தது முதல் புலித்தலைவர்கள் பலத்த சித்திரவதைகளையும், அவமானங்களையும் சந்தித்தனர். பிரபாகரனை நிர்வாணமாக்கியதுடன், பல கோணத்தில் அவரை படம் எடுத்தனர். முல்லைக் கடற்கரையில், விரட்டி விரட்டி அடிக்கப்பட்டார். அரசுடன் சேர்ந்து இயங்கிய துரோகக் குழுக்களைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து இதைச் செய்துள்ளனர். அங்கு நடந்த அனைத்தும் றோவின் உத்தரவுப்படி தான் நடந்தது. பிரபாகரனை கொழும்புக்கு கொண்டு வந்தால், மேற்கத்தைய ராஜதந்திரிகளுக்கு கசிந்து விடும் என்பதால், பிரபாகரனை அனுராதபுரம் முகாமுக்கு கொண்டு வருமாறு றோ உத்தரவிட்டது. அங்கு தான் அவசரமாக இந்தியாவில் இருந்து வந்த இரண்டு றோவின் உயர் அதிகாரிகள், பிரபாகரனை விசாரணை செய்தனர். இதன்பின் அவரைக் கொன்று வீசும்படி உத்தரவையும் அவர்கள் வழங்கினர்.
இப்படி கொல்லப்பட்ட பிரபாகரனை, மே 18 கண்டு பிடித்ததாக உலகுக்கு அரசு அறிவித்;தது. இது தான் உண்மை என்கின்றது புலி. இப்படி தாங்கள் படுகொலை செய்த உடலை, கண்டு பிடித்தாக உலக்குக்கு அரசு காட்டியது. புலிகள் அதற்கு அரோகராப் போடுகின்றனர். அப்படி அரசால் காட்டப்பட்ட பிரபாகரனுக்கு, அணியப்பட்ட இராணுவ சீருடை கூட இலங்கை இராணுவத்தினுடையது. அவரின் உடுப்பை 16ம் திகதியே களைந்த பின், அவரை உலகுக்கு காட்ட அவசரமாக ஒரு உடுப்பு தேவைப்பட்டது. இராணுவத்தின் உடுப்பையே அவருக்கு அணிந்துவிட்டனர். உலகுக்கு காட்டிய அவரின் உடலின் அருகில், காட்சிக்காக சிலரை சுட்டுப் போட்டு இருந்தனர். அவர்களோ உள்ளாடையுடன், முழு நிர்வாணமாக இருந்தனர். இதற்கு முன்னமே பிரபாகரனுக்கு கோவணம் கட்டியது முதல் பலவிதமாக நிர்வாணமாக்கிய பலவிதமான படங்கள் கிடைத்துள்ளது. இவை அனைத்தும் தொடர் சித்திரவதையைiயும், கொன்ற பின் அவர் உடல் பல மணி நேரம் பல கோணத்தில் அவமானப்படுத்தி வக்கரித்ததையும் எடுத்துக் காட்டுகின்றது.
இதை எல்லாம் இன்று மூடிமறைத்த அரசுக்கு, புலிகள் அரோகரா போடுகின்றனர். அரசு மே 18 உடலை எடுத்ததாக சொன்ன திகதியை, தங்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு தம் துரோகத்தை மூடிமறைக்க கொண்டாடுகின்றனர்.
இவர்கள் தான் இப்படி என்றால், மார்க்சியம் பேசும் மே 18 கூட்டம் இதையே தன்தலையில் தூக்கி வைத்தாடுகின்றது. அந்தத் திகதியை தங்கள் அடையாளமாக கொண்டு, மீண்டும் புற்றைவிட்டு இவர்கள் வெளிவந்துள்ளனர். இப்படி மே 18 இயக்கத்தின் உள்ளடக்கமும், இந்த திகதியில் இருந்துதான் தொடங்குகின்றது.
தங்களை தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சியின் தொடர்ச்சி என்று கூறும் மே 18 இயக்கம், மே 16 ஜ மூடி மறைத்தபடிதான் புலிப் புற்றில் இருந்து இறங்கினர். இப்படி திடீரென இறங்கியவுடன், மே 18 இயக்கமாக வெளிவந்தனர். தீப்பொறி கேசவன் மே 17 1991 இல் புலிகளால் கடத்தப்பட்டதை அடிப்படையாக கொண்டு, அவரின் பெயரால் அவரின் அரசியலை மறுக்கவே தமிழீழம் பத்திரிகையில் அவருக்கு ஒரு நினைவுக் குறிப்பை எழுதினர். இங்கு கேசவன் கடத்தப்பட்ட நாளை முன்னிறுத்தியவர்கள், பிரபாகரன் சரணடைந்த நாளை முன்னிறுத்த மறுத்து அரசியல் செய்வது எதனால்!? அன்று புலி வேலைத்திட்டத்துக்கு அமைவாக, தமிழீழ மக்கள் கட்சியின் பெயரால் முற்போக்கு அணிகளை சிதைத்த பின், புலிப் புற்றில் உறங்கிக் கிடந்தவர்கள் தான் இவர்கள். இன்று திடீரென புலியாக மீண்டும் வெளிவந்த போது, மே 18 என்றே தான் வெளிவந்தனர்.
மே 16 புலிகள் கதை முடிந்ததை தங்கள் மார்க்சிய மூலம் ஏமாற்ற, மே 18 ஆக வெளிப்பட்டனர். மே 18 என்பது, மக்களை புலிகள் கொன்றதையும் கொல்லக் கொடுத்ததையும், அதைத் தொடர்ந்து அவர்கள் சரணடைந்ததையும் மூடிமறைக்கும் புலியின் சொந்த பாசிச அடையாளமாகும்.
மே 18 என்ற இயக்கம் தன்னை இன்று, எதன் தொடர்ச்சியாக கூறுகின்றதோ, அந்த தமிழீழ மக்கள் கட்சி புலியின் நோக்கத்தை ஈடு செய்யும்வரை தான் இயங்கியது. அரசு மற்றும் புலிக்கு எதிராக மூன்றாவது அணி ஒன்று தோன்றுவதை தடுக்க, மார்க்சியம் பேசியபடி புலிகள் இயக்கிய அமைப்புத்தான் தமிழீழ மக்கள் கட்சியாகும். அது தன்னைத்தான் மூடிமறைக்க மார்க்சியத்தையும், புலி விமர்சனத்தையும், புலியால் கொல்லப்பட்டவர்கள் பற்றிய நினைவுக் குறிப்பு முதல் சிவகுமாரனின் நினைவுக் குறிப்பு வரை சமச்சீராகவே கொண்டு வந்தனர். வலது இடது என்று இரண்டையும் ஓரே தளத்தில் கொண்டு வந்;து, கேசவனின் வர்க்க அரசியலை மூடிமறைத்து அவரையே மறுத்தனர். கேசவனுக்கு அரசியல் ரீதியான அஞ்சலியை மறுத்ததுடன், அவனின் அரசியலை முன்னெடுக்க அந்த அமைப்பு மறுத்தது. தீப்பொறியின் ஸ்தாபகரில் ஒருவரான கேசவன் முன்வைத்த அரசியலை மறுக்க, அவருக்கு நினைவுக் குறிப்பை எழுதினர். புலிகள் பேசிய வர்க்க விடுதலை போல் தான் இதுவும்.
கேசவன் கடத்தப்பட்ட மே 17 1991 ஜ முன்னிறுத்தி அவரின் அரசியலை மறுத்தவர்கள், பிரபாகரன் சரணடைந்த மே 16 முன்னிறுத்தி அதை அம்பலப்படுத்த மறுப்பது தான், மே 18 இயக்கத்தின் அரசியல்.
புலியை குளிர்மைப்படுத்தி, அவர்களை எல்லாம் கூட்டியள்ளும் அரசியல். இது தான் கடந்த காலத்தில் நடந்தது. இயக்கங்கள் வீறு கொண்ட 1983 இல், எப்படி கூட்டியள்ளினரோ, அதையே தமிழீழ மக்கள் கட்சியும் மூனறாவது அணியை சிதைக்கும் புலியின் வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செய்தது. அவரவர் வீங்கி வெம்பிய கூறுகளையெல்லாம் அங்கீகரித்து, அவர்களை உள்வாங்கி புலியாக சிதைத்த பின் காணாமல் போனார்கள். மக்கள் அமைப்பாக, மக்கள் நலன் கொண்டு இயங்குவதை உள்ளடக்க ரீதியாக சிதைத்தனர். இதற்கமைய மார்க்சியத்தை பேசி, மார்க்சியமே அல்லாததை முன்தள்ளி கோட்பாட்டு ரீதியாகவே சிதைத்தனர். தேசியம் என்பது புலித் தேசியத்தை முன்னெடுத்து, அதை ஆதரித்து முன்செல்வது தான் என்றனர். இதற்கமைய மார்க்சியத்தை, அதன் தத்துவ மூலத்தில் இருந்தும் சிதைத்தனர்.
இவர்கள் புலியின் வேலைத் திட்டத்தையே சுற்றிவளைத்து முற்போக்கு வேடமிட்டு முன்னெடுத்தனர். அதுவும் புலிக்கு மேல், விமர்சனம் உள்ளதாக காட்டித்தான்; செய்தனர். ஏகாதிபத்திய பணத்தில் இயங்கும் தன்னார்வ நிறுவனங்கள், ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்து ஏகாதிபத்தியத்தைப் பாதுகாத்தல் போன்றதுதான் இதுவும்;. இப்படி முற்போக்கு வேடம் போட்டு, உள்ளிருந்து உளவாளியாக செயல்பட்டனர். மார்க்சிய வேடமிட்டுக் கொண்டு, தாங்கள் புலிகள் அல்ல என்று காட்டிக் கொண்டு வேசம் இட்டனர். புலியின் அரசியலை முன்னனெடுத்தபடி, முற்போக்கு அணிக்குள் புகுந்து கொண்டு காட்டிக் கொடுத்தனர்.
அவர்களின் குறைபாடுகளுடன், அவர்களின் தத்துவங்களுடன், அவர்களை உள்வாங்கி பின் சிதைத்தனர். பலர் ஏதோ செய்யவேண்டும் என்ற ஆவல் காரணமாக, என்ன எதுவென்று தெரியாது பின் சென்ற அப்பாவிகள். பலர் இவர்களின் மோசடியால் விழிப்புற்று, அதில் இருந்து விலகினர். தமிழீழ மக்கள் கட்சி புலியின் தேவையை பூர்த்தி செய்த பின், அந்த அமைப்பு திடீரென காணாமல் போனது. இது புலிப் புற்றுக்குள் சென்று பதுங்கிக் கொண்டது.
இன்று திடீரென மே 18 என்ற பெயரில், புற்றில் இருந்து மீண்டும் வெளிவந்துள்ளது. அது மே 16 ஜ மறுத்தபடி, மே 18 ஆகவே தன்னை மூடி சூட்டியுள்ளது. மே 18 என்ற புலியின் அதே துரோக திருகுதாளத்தை அரசியல் அடிப்படையாகக் கொண்டு, மார்க்சியத்தையும் பேசிக்கொண்டு, மீண்டும் மக்களை ஏய்க்க அது புறப்பட்டு இருக்கின்றது. புலிக்குள் எத்தனை வகையான புலிகள். எல்லாம் ஒரேமாதிரி சிந்திக்கிறார்கள்.
பி.இரயாகரன்
18.05.2010