தன் வெற்றி பற்றி பீற்றிக்கொள்ளும் பேரினவாதம், தன் சொந்த இனவாத அரசியல் பலத்தின் மூலம் வெற்றி கொள்ளவில்லை. மாபியாவாக சீரழிந்துவிட்ட புலிகள் மூலம் தான், தமிழ் மக்களை பேரினவாதம் வென்றது. பேரினவாத இனவெறியர்கள் தமிழ் மக்களை தோற்கடித்தது என்பது, புலிகள் செய்த துரோகத்தின் அரசியல் விளைவாகும். அதுதான் இறுதியில்  அவர்களையே அழித்துவிட்டது. ஆனால் புலிகளோ இல்லையென்கின்றனர்.

 

ஆனால் ஒரு இனம் அழிக்கப்பட்டிருக்கின்றது. சிதைக்கப்பட்டு இருக்கின்றது. சரி இது எப்படி சாத்தியமானது? இதை பற்றி மாபியாப் புலிகள் என்னதான் சொல்லுகின்றனர்? அரசு தான் இதைச் செய்தது என்கின்றனர். இந்தியா முதல் உலகம் வரை அதற்கு உதவியது என்கின்றனர். இந்த ஒரு உண்மை மட்டுமா! அனைத்தும் தளுவிய பொது உண்மை! இதுதான் உண்மை என்றால், அது ஒரு மாபெரும் பொய். மக்களை ஏய்க்கும் பித்தலாட்டப் பொய். 

 

இந்த ஒரு உண்மை மட்டும், உண்மையல்ல. மாறாக இதற்கு எதிராக யுத்தத்தை நடத்தியவர்களும் கூட, போராட்டத்தை தோற்கடித்தனர். இதுதான், இதன் பின்னணியில் உள்ள மாபெரும் உண்மை. எதிரி இலகுவாக வெல்லும் ஏற்பாட்டை செய்து கொடுத்தபடி, தங்கள் அந்த ஏற்பாட்டை மூடிமறைத்துக் கொண்டு எதிரியை மட்டும் குற்றம்சாட்டுவது அயோக்கியத்தனம். தங்கள் துரோகத்தையும், அயோக்கியத்தனத்தையும் மூடிமறைக்க, எதிரியை மட்டும் குற்றம் சாட்டுவது, கபடதாரிகளின் அரசியலாகும்.

 

புலி மாபியாக்கள் கூறுவது போல், எதிரி தான் தன்னந்தனியாக உங்களை வென்றான்   என்று வைப்போம்;. இதுதான் உண்மை என்றால், நீங்கள் யார்? உங்கள் பாத்திரம் தான் என்ன? எதிரி இதைச் செய்வான் என்பது, அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. அவர்கள் தயவிலா, நீங்கள் தோற்காத ஒரு விடுதலை போராட்டம் நடத்த எண்ணியிருந்தீர்கள்? அவர்களை எதிர்கொண்டு போராடுவதுதான் போராட்டம். இப்படியிருக்க இதை சரியாக எதிர்கொண்ட போராடாமல், இனத்தைக் காட்டிக் கொடுத்து அழித்தவர்கள் யார்? நீங்கள் தானே. அதற்கமைய துரோகத்தை செய்தது புலிகள். போராட்டம் தோற்கடிக்கப்பட்டது, புலிகளால் என்பது தானே உண்மை. தோற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும். தோற்றவர்கள் முழுப்பொறுப்பை ஏற்று பதில் சொல்லவேண்டும். எதிரியை குற்றம் சாட்டுவதல்ல. நீங்கள் வலிந்து துரோகியாகிவர்களை குற்றம் சாட்டுவதல்ல. இது நீங்கள் தெரிவு செய்தது. இதுதான் உங்கள் எதிர் அரசியலாக இருந்தது. போராட்டத்தை தோற்கடித்ததிற்கான பொறுப்பு, முழுக்கமுழுக்க உங்களுடையதாக இருந்தது. போராட்டத்தை தோற்கடிக்க செய்த சதிகளும்,  துரோகமும், காட்டிக்கொடுப்பும் தான், இன்றும் உங்கள் பின் தொடரும் அரசியலாக இருக்கின்றது.

 

கடந்தகாலத்தில் தமிழ்மக்களை பிளந்தார்கள். நண்பர்களை எதிரியாக்கினார்கள். எதிரியை நண்பர்களாக்கினார்கள். இப்படி போராட்டத்தை தோற்கடிக்க, இவர்கள் தமிழ் மக்களுக்கு எதிராக செய்த துரோகங்கள் சிலவற்றை குறிப்பாகப் பார்ப்போம்.  

 

1. தாமல்லாத மாற்று இயக்கங்களை தடைசெய்து, அவர்களை தேடி தேடிக் கொன்றனர். இப்படி அவர்களை அரசுக்கு பின் அணிதிரள வைத்தனர். ஒன்றுபட்டு போராடிய தமிழ் சமூகத்தை பிளந்து, அவர்களை தமது எதிரியாக்கினர். இதன் மூலம் அவர்களை அரசின் பின் பலாத்காரமாக அணிதிரள வைத்தது புலிகள்தான். அவர்களாக அதைச் செய்யவில்லை. 

 

2. முஸ்லீம் மக்களை கிராமம் கிராமமாக படுகொலை செய்தனர். அவர்களை அவர்கள் வாழ்விடங்களில் இருந்து விரட்டினர். அவர்கள் உழைப்பிலான சொத்துகளை அபகரித்தனர்.  இப்படி முஸ்லீம் மக்களை தங்கள் எதிரியாக்கி, அவர்களையும் அரசின் பின் நிற்க வைத்தனர். இதுமட்டும் தான், புலியிடம் இருந்து பாதுகாப்பாக மாற்றியதன் மூலம், மற்றொரு சிறுபான்மை இன மக்களை எதிரியாக உருவாக்கினர். 

 

3. சிங்கள கிராமப்புற மக்களையும், அப்பாவி சிங்கள மக்களையும் கொன்றனர். வில்லங்கமாகவே அரசின் பின் அவர்களை அணிதிரள வைத்ததுடன், அவர்களை புலிகளுக்கு எதிராக ஆயுதபாணியாக்கினர்.

 

4.சொந்த தமிழ் மக்களின் ஜனநாயகத்தை பறித்தனர். அவர்களை உயிரற்ற சடலங்களாக மாற்றி, அவர்களை கொன்று, அவர்களின் பிணத்தைக் காட்டி வக்கிரமான இழிவான பிண  அரசியல் நடத்தினர். மக்களை போராட்டத்தில் இருந்து ஓதுங்கி மந்தைகள் போல்  வாழவைத்தனர்.

 

5.ஏகாதிபத்தியம் முதல் இந்தியா வரை தமிழீழத்தின் தோழனாக காட்டினர். மக்களுக்கு எதிராக, அவர்கள் தயவில் போராட்டத்தை நடத்தினர். மக்களைக் காட்டிக் கொடுத்து, அவர்கள் தயவுடன் மக்கள் போராட்டத்தை அழித்தனர். இன்று இவர்கள்தான் போராட்டத்தை அழித்த கூறும் இவர்கள், அவர்களின் தங்கள் நண்பராகவே இன்றும் காட்டிக் கூடிக் குலாவுகின்றனர்.

 

6. தாம் அல்லாத அனைத்தையும் துரோகமாக முன்னிறுத்தினர். அவர்கள் அரசின் பக்கத்தில் இருப்பதாக கூறி, தம்மை தாம் தனிப்படுத்திக்கொண்டனர். அவர்களை அழித்ததுடன்,  இனத்தையும் அழித்தனர்.

 

7. பிரதேசவாதம், சாதியம், ஆணாதிக்கம், .. என்ற அனைத்து சமூக பிற்போக்கு சமூக விழுமியங்களை முன்னிறுத்தி, அதை பாதுகாத்துக் கொண்டு அதன்பால் மக்களை ஓடுக்கினர். இதை நிலைநிறுத்த அவர்கள் மேல் சர்வாதிகாரத்தைத் திணித்து, தம்மைத்தாம் தனிமைப்படுத்திக் கொண்டு மக்கள் போராட்டத்தை அழித்தனர். 

          

8.தமிழ் மக்களை சுரண்டி வாழ்ந்த சுரண்டும் வர்க்கத்துடன் கூடி, தம் பங்குக்கும் மக்களை சுரண்டினர். மக்களின் வாழ்வை சூறையாடி, அதை நாசமாக்கியதன் மூலம், தமிழ்மக்களை  கையேந்தி வாழ வைத்தனர். இதன் மூலம் தம்மைச் சுற்றி உயர்வான வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்திக்கொண்டு, மக்களில் இருந்து தனிமைப்பட்டு போராட்டத்தை குட்டிச்சுவராக்கினர்.

 

9. அடிமட்ட போராளிகளை தங்கள் அடாவடித்தனத்துக்கு ஏற்ற எடுபிடிகளாக மாற்றி, போராட்டும் உணர்வுகளை நலமடித்தனர். இதன் மூலம் போராட்டத்தையும், இலட்சியத்தையும், இயக்கத்தில் இல்லாததாக்கி எடுபிடித்தனத்தை அடாவடித்தனத்தையும் போராட்டமாக்கினர்.  

 

10. போராட்டத்தின் பெயரில் கட்டாய பயிற்சி முதல் சண்டையில் எந்த பயிற்சியுமற்ற அப்பாவிகளை கொண்டு சென்று நிறுத்தினர். இதற்காக அவர்களின் பெற்றோரை அடித்து துவைத்ததுடன், சிலரை அவர்கள் கண்முன் கொன்றனர். சிலர் தற்கொலை செய்தனர். இதற்கு எதிராக, புலியை திட்டித் தீர்த்தபடி கிராமமே கதறியழுதது. தேசியம் சார்ந்த போராடும் உணர்வையும், ஆற்றலையும் இது இல்லாதாக்கியது. போராட்டத்தையே கொச்சைப்படுத்தி, அதை புலித் துரோகிகள் அழித்தனர்.

 

11.தமிழக பிழைப்புவாதிகளை கொண்டு, தமிழக மக்களின் உணர்வுளை விலை பேசிவித்தனர்.

 

இப்படி போராட்டத்தை அழித்த புலித் துரோகத்தை பக்கம் பக்கமாக பட்டியலிட முடியும்.  அதன் மக்கள் விரோத பக்கங்களே எம்முன் வரலாறாக உண்டு.  

      

இப்படியிருக்கிறது உண்மை. போராட்டத்துக்கு புலி செய்த துரோகம் தான், போராட்டத்தை அழித்தது. இனத்தை அழித்தது. எந்தவொரு சரியான போராட்டத்தை யாரும் அழிக்க முடியாது. தவறான போராட்டத்தை யாரும் இலகுவாக அழிக்க முடியும்.

 

இந்தப் புலிகள் சரியான போராட்டத்தை முன்னெடுத்தார்கள். இந்த புலித்தலைமை சரியான போராட்டத்தை வழிநடத்தினார்களா? இல்லை என்பது வெளிப்படையானதும், அனைவருக்கும் தெரிந்த ஒரு உண்மை. 

 

சரியாக போராட்டத்தை நடத்தியிருந்தால், எந்தவொரு சக்தியை எதிர்கொண்டு போராடியிருக்க முடியும். இங்கு புலிகளின் போராட்டப் பாதைதான், எம்முன் தவறாக இருந்துள்ளது. இதை மகிந்த சிந்தனையிலான பாசிசம், மிக இலகுவாக வெற்றிகொண்டது.

 

மகிந்தாவின் சிந்தனையிலான பாசிசத்தை வெற்றிகொள்ள, புலிகளின் தொடர்சியான தவறான பார்வை மறுக்கப்படவேண்டும். இதுவன்றி புலிகளின் தவறான பார்வை, தொடர்ந்து தமிழ் மக்களை அழிக்கும். இதுதான் கடந்தகால வரலாறு என்றால், எதிர்கால வரலாறும் இதுவாகத்தான் இருக்க வேண்டுமா என்பதை நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும். தொடர்ந்தும் தமிழ்மக்களை அழிக்க புலியைப் பின்பற்றுவதா அல்லது தமிழ்மக்களுக்காக போராட மாற்று வழி உண்டா என்பதை சுயசிந்தனையுடன் சிந்திக்க கோருகின்றோம்.

 

பி.இரயாகரன்
17.05.2010