தமிழரங்கத்தின் மீது ஒரு சிலர் முன் வைக்கும் குற்றச்சாட்டானது தீப்பொறி, தமிழீழக் கட்சி, மே 18 இயக்கம் தொடர்பாக வரும் அரசியல் விமர்சனங்கள் தொடர்பானதாகும். நாம் இதை ஒரு பரந்த அரசியல் தளத்தில் மேற்குறிப்பிட்ட அமைப்புகளின் தலைமையில் இருந்தஇ இருக்கின்ற நபர்கள் தமிழீழ விடுதலை போராட்டத்திற்கு அன்று புரட்சிகர மக்கள் யுத்த அரசியலை முன் வைத்து செயற்பட்டுவருவதாக கூறி விட்ட தவறுகளையும் ஒரு காலகட்டத்திலே கீழ் அணிகளை இன்று இயங்கக் கூடிய நிலமையில்லை எனக் கூறி
அவர்களை நட்டாற்றிலே விட்டு விட்டு தலைமை மட்டும் ஒழித்து இயங்கியதையும் இன்றும் கடந்தகாலம் பற்றிய எதுவித சுயவிமர்சனமும் இன்றி மீண்டும் அதே பாணி அரசியலை முன்னெடுத்து மீண்டும் ஒரு பேரழிவை நோக்கி மக்களை அழைத்து செல்வதை நிறுத்தக்கோரியும் புரட்சிகர மக்கள் அரசியலை முன்னெடுக்கக்கோரியும் தான் நாம் விமர்சனத்தினை முன் வைக்கின்றோம். இதை அவர்கள் மறுப்பதுடன், அதற்கான பதிலை அரசியல் அடிப்படையில் தரவும் மறுக்கின்றனர். இருப்பினும் தமிழரங்கத்தில் உள்ளவர்களுடன், தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை முன்வைக்கின்றனர் அதற்கான பதிலை நாம் அவர்களுக்கு கொடுத்திருந்த போதும், அப்பதிலை பரந்துபட்ட தளத்தில் முன்வைக்க வேண்டியதன் அவசியத்தையும் உணர்ந்து நிற்கின்றோம்.
எம்மால் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் கற்பனையானவையா! அல்லது உண்மைக்கு புறம்பானவையா! என்று நாம் பார்ப்போமாயின் அவ்வாறல்ல. மாறாக மே 18 மீதான விமர்சனம் அந்த இயக்கத்தின் வெளியீடான வியூகத்தில், இவர்களால் எழுதப்பட்ட ஆசிரியர் தலையங்கத்தின் அடிப்படையில்தான் அமைகின்றது.
அவர்கள் ஆசிரியர் தலையங்கத்தில்
"எமது சுயவிமர்சனத்திற்கான நேரம் வருகிறது. நாம் முன்னேறிய பிரிவினரின் ஒரு பகுதியினர் என்ற வகையில் கடந்தகாலத்தில், போராட்டத்தில் நேர்ந்த தவறுகளில் எமது பாத்திரம் என்ன என்ற கேள்விக்கு பதில் கண்டாக வேண்டியுள்ளது. கடந்தகாலத்தில் பல்வேறு குழுக்களிலும், தனிநபர்களாகவும் செயற்பட்ட பல்வேறு நபர்களும் எம்முடன் இணைந்து கொண்டிருந்தாலும், அரசியல் அமைப்பு என்ற வகையில் தொடர்ச்சியாக இயங்கி வந்தவர்கள் என்ற வகையில் "தமிழீழ மக்கள் கட்சி" இலிருந்து வந்தவர்கள் முக்கிய கூறாக அமைகிறார்கள். மாற்று அமைப்பைக் கட்ட முனைந்தவர்கள் என்ற வகையில் எமது அனுபவங்கள், படிப்பினைகள் இப்போது முக்கியத்துவம் பெறுகிறது. அத்தோடு எமது சுயவிமர்சனமும் ஏனைய முன்னேறிய பிரிவினர் மத்தியில் கட்டாயமாக வேண்டப்படும் ஒன்றாக இருக்கிறது. "தீப்பொறி" குழுவாக எமது தனியான அரசியலை முன்னெடுத்த நாம், பல வருட தலைமறைவு வாழ்க்கையின் பின்னால் 1998 எமது கொங்கிரசை கூட்டி "தமிழீழ மக்கள் கட்சி" எனும் பெயரில் பகிரங்க அமைப்பாக செயற்பட முனைந்தோம். கொங்கிரசை கூட்டி தீர்மானங்களை எடுத்து அவற்றை செயற்படுத்த தொடங்கும் போது அமைப்பினுள் நடைபெற்ற பல்வேறு பிரச்சனைகள் காரணமாக அமைப்பானது 2000 ம் ஆண்டில் கலைந்து போனது."
என்று குறிப்பிடுகின்றனர்.
இந்தவகையில் தீப்பொறி, தமிழீழ மக்கள் கட்சி தொடர்பாக மே 18 மீதான விமர்சனமாக மாறுகின்றது. இது தொடர்பாக பல கேள்விகளையும், பல விமர்சனங்களை நாம் கொண்டிருந்தமையால், அவற்றை நாம் நேரடியாக மக்கள் தளத்தில் முன்வைக்கின்றோம். தமிழ்மக்களின் விடிவு தொடர்பாகவும், உழைக்கும் மக்களின் விடிவு தொடர்பாகவும், சிந்திக்கும் அனைவரும், தமது அபிப்பிராயங்களையும் கேள்விகளையும் அந்தத் தளத்திலேயே முன்வைப்பது ஒரு நேர்மையான அரசியல் பாதைக்கு முன்வகுக்கும். அல்லாவிடின் பம்மாத்து அரசியல், மக்கள்விரோத அரசியலுக்கே வழிகோலும். பொதுவான இந்த விடையம் மீதான சுயவிமர்சனம், விமர்சனம் என்பவற்றை, தமக்குள்ளேயே கொண்டிருப்பதாக கூறுவது அதை மூடிமறைத்தலாகும்;. தமது தவறுகளையும், தாம் கொண்டிருக்கும் அரசியல் கட்சியின் தவறுகளையும், மக்கள் அறிய முடியாது மூடிமறைப்பதன் மூலம், மீண்டும் மீண்டும் ஏற்கனவே செய்த தவறுகளை செய்தபடியே இருக்கவே வழிகோலும்.
தீப்பொறி
1985ல் புளட்டில் இருந்து தப்பியோடிய குழு ஒன்றால், உருவாக்கப்பட்டதே தீப்பொறி. இவர்களின் செயற்பாடுகள் ஓரளவு மக்கள் சார்ந்து இருந்தமையாலும், புளட்டை அம்பலப்படுத்துவதற்கான ஆயுதமாக மற்றைய இயக்கங்கள் இவர்களைப் பயன்படுத்தியது. இதனால் குறுகியகாலத்தில் மிகவும் பிரபல்யமானார்கள். இவர்கள் தமது செயற்பாடுகளை என்.எல்.எவ்.ரீ யின் உதவியுடன் தான் முன்னெடுத்தனர். தாம் எவ்வாறு புளட்டில் இருந்து தனித்து தப்பியோடினோம் என்பதையோ, இதனால் அதே கருத்தைக் கொண்ட நண்பர்களுக்கு அங்கு என்ன நடந்தது என்பதைப்பற்றியோ, எதையும் இன்றுவரை வெளியிடவில்லை. தொடர்ந்தும் அதே அரசியலை நடத்துகின்றனர். இவர்களின் வெளியீடுகளை மற்றைய இயக்கங்கள் விநியோகித்ததனால், மக்கள் மத்தியில் தமது சுய அறிமுகத்தை கைவிட்டனர். தமது சக தோழர்களில் பலர் தாம் கொண்ட அரசியலில் இருந்த போதும், அவர்களை கூட அழைத்துச் செல்லாது சிறு குழுவாகவே அன்று தப்பிச் சென்றனர். பின்தளத்தில் இது நடந்தது என்றால் தமது பாதுகாப்புக்கருதி என்று கூறமுடியும். ஆனால் தளத்திலும் இதுவே நடந்தேறியது. இவர்களை பாதுகாத்தவர்கள் அன்று புளட்டில் இயங்கியவர்களே. அவர்கள் நேர்மையையும் அரசியலையும் கண்டறிந்த இவர்கள், அவர்களை தமது குழுவிற்குள் இணைக்கவில்லை என்றதையும் இன்றுவரை மறைத்தே வருகின்றனர். அவர்கள் தீப்பொறியை கலைத்துவிட்டதாக அவர்களுடன் இருந்தவர்களுக்கு கூறியிருந்தனர்.
தீப்பொறி அமைப்பின் ஸ்தாபகர்களில் ஒருவரான கோவிந்தன் புலிகளால் கடத்திச் சென்று படுகொலை செய்யப்பட்ட போதும், அவர் எவ்வாறு எந்தநிலையில் வைத்து கடத்தி படுகொலை செய்யப்பட்டார் என்பதையும் முன்வைக்கவில்லை. அதன் பின் பலர் இவ்வமைப்பில் இருந்து பிரிந்து சென்ற போதும், ஏன் எதற்காக பிரிந்தார்கள் என்று கூட மக்கள் முன் வைக்கவில்லை. பிற்காலத்தில் தீப்பொறிக்கு என்ன நடந்தது என்ற சுய பார்வையைக் கூட, இதுவரை வெளியிடாது பாதுகாத்து வருவதன் மூலம் மீண்டும் மக்களை ஏமாற்ற முற்படுகின்றனர். (தீப்பொறி தொடர்பாக முழு ஆய்வினை முன்வைக்க உள்ளோம்)
உயிர்ப்பு :
இது ஒரு அரசியற் சஞ்சிகையாக மூன்றாவது நிலையை நோக்கி வெளிவந்தது இருப்பினும். தம்மை ஒரு குறுங்குழுவாக அமைத்து, மார்க்சியத்தை திரித்தபடி வெளியான சஞ்சிகை. ஏழு இதழ்களுடன் தனது அடுத்த கட்டத்தை நோக்கி நகர ஆரம்பித்தது. அன்றைய காலகட்டத்தில் புலிகள் தேசியசக்திகள் என்றும், அவர்களின் போராட்டம் தேசியவிடுதலைப் போராட்டம் என்று அதை நியாயப்படுத்திக் கொண்டு வெளிவந்தது.
தமிழீழ மக்கள் கட்சி:
இது புலிகளுக்கு அப்பால் புலம்பெயர் சமூகத்தில் இருந்த பல “முற்போக்கு” சக்திகளை உள்வாங்கிக் கொண்டிருந்த அமைப்பு. இவ்வமைப்பு தொடர்பாக எம்மால் பல சந்தேகங்கள் எழுப்பப்பட்ட போதும், அது தொடர்பாக எவரும் எங்கேயும் பதில் தர முயற்சிக்கவில்லை. சில வேளைகளில் இவர்கள் யார், நாம் எதற்கு இவர்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என்ற பார்வை இருந்ததோ தெரியவில்லை.
தமிழீழ மக்கள் கட்சி என்ற படகில், புலம்பெயர் சமூகத்தில் இருந்த பலர் அவ்வப்போது பயணித்திருக்கின்றனர். ஒருசிலர் ஆரம்பத்திலேயே முரண்பாடு காரணமாக விலகியவர்களும் விலக்கப்பட்டவர்களும் உண்டு. இருந்தபோதும் இக்கட்சி ஒருசில காலங்களின் பின் இயங்காது செயலற்றுப் போனது. இதன் மேல் எம்மால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை பார்ப்போமாயின், இவர்கள் புலிகளிடம் காட்டிக் கொடுத்தார்கள் என்பது மிக முக்கியமானது. ஏன் நாம் இதை முன்வைத்தோம்? இது எந்தளவு உண்மையானது? எதன் அடிப்படையில் இவ்வாறு முன்வைத்தோம்? என்ற விளக்கத்தை தர முயற்சிக்கின்றோம். (தீப்பொறி தமிழீழமக்கள் கட்சி இரண்டிலும் இரண்டுவிதமான அரசியல்போக்கு காணப்பட்டது என்பதையும் குறித்துக் கொள்க)
முதலில் இவர்களின் அரசியல் தத்துவார்த்த ஏடான “தமிழீழம்” என்ற சஞ்சிகையை கவனமாகவும், அவதானமாகவும் பொறுமையாகவும் வாசித்தீர்களானால், அது கருத்தியல் தளத்தில் புலப்படும். ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புலிகளின் சாகசங்களை அரசியல் ரீதியாக வெளிக்கொண்டு வந்த இவர்கள், இதழ் 13 இல் இருந்து புலிகளின் குரலாகவே அது ஒலிக்கத் தொடங்கியது. இவர்களின் இந்த அரசியல்போக்கு என்பது, புலிகளை மார்க்சிய அரசியல் சொல்லாடல் ஊடாக நியாயப்படுத்தும் வடிவில் வெளிப்பட்டது. இதனால் இவர்களுக்குள் பலத்த முரண்பாடுகள் ஏற்பட்டபோதும், இவை அனைத்தையும் இன்று வரை மூடிமறைப்பதன் காரணம் தான் என்ன? எனது தனிப்பட்ட அபிப்பிராயம் உண்மையில், இவர்கள் புலிகளிடம் மற்றைய சக்திகளை காட்டிக் கொடுக்கவில்லை. மாறாக புலிகள் இவர்களுக்கு கொடுத்த வேலையை செய்தார்கள். புலிகளிடம் காட்டிக் கொடுத்தார்கள் என்ற பதம் பிழையானது. புலியின் எந்த நோக்கத்திற்காக இவர்கள் இயங்கத் தொடங்கினார்களோ, அந்த நோக்கம் நிறைவேறியதும் அமைப்பு இயங்காது செயல் இழந்து போனது. இவர்களின் நோக்கம் தான் என்ன? ஆம் மூன்றாவது நிலை எடுக்கக்கூடிய அனைவரின் விபரங்களையும் தமக்கு கீழ் திரட்டுவதுதான். இதுவே நீங்கள் கேட்கக் கூடும், எங்கு திரட்டினார்கள் என்று? இவ்வமைப்பில் முக்கியமான நபர் ஒருவர், யாரைச் சந்திக்கச் சென்றாலும் முதலில் அவருடன் நின்று நிழற்படம் எடுப்பது முதல் அவரைப்பற்றி அறிவதும் தான் அவரின் செயற்பாடாக இருந்தது. இதை இவர்கள் மறுக்க முடியாது. காரணம் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் பலர் உள்ளனர்.
அடுத்து “மா.நீனா” என்பவரால் எழுதப்பட்ட கட்டுரையின் குற்றச்சாட்டு பற்றியும், எம்மை நோக்கி விமர்சனங்கள் முன்வைக்கபட்டது மட்டுமல்லாமல் பின்னோட்டமும் கூட விடப்பட்டது. ஆதாரம் இருக்கின்றதா என்று. சரி இதைப் பார்ப்போம். முதலில் சிவராம் இவர் தமிழீழ கட்சியில் இருந்த ஒருவருடனும் தொடர்பில் இருக்கவில்லையா?
சரிநிகர் என்ற பத்திரிகை ஒரு குழுவாகவே இயங்கியது. இதில் பலர் இருந்த போதும் இந்தக் குழுவில் இருந்தவர்கள், தமிழீழ மக்கள் கட்சியில் இருக்கவில்லையா? இவர்களில் சிலர் தமிழீழ மக்கள் கட்சியில் இருந்தார்கள் என்று கூறுகின்றோம். அதுபோல் இந்தக் குழுவில் இந்த நபர்களுக்கும், சிவராமுக்கும் தொடர்பு இருந்தது. இங்கும் அங்குமாக சிலர், புலியின் அரசியலை நியாயப்ப்டுத்தி இயங்கினர். இதனடிப்டையிலேயே எமது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
தமிழீழ மக்கள் கட்சி இயங்காது செயலற்றுப் போன பின்பும் கூட, தாம் ஏன் செயலற்று போனோம்? எமக்குள் என்ன நடந்தது என்ற பார்வை முன்வைக்கப்படாமல் உள்ளது. அதே நேரம் அடுத்தகட்டமாக, மே 18 என்ற இயக்கம் உருவாக்கப்படுகின்றது. தாம் தமிழீழ மக்கள் கட்சியின் தொடர்ச்சி என்றும், தமது சுயவிமர்சனம் என்றும் எதையும் பேசாத ஒன்றை வியூகத்தில் வெளியிட்டிருந்தனர். எனவே எமது கேள்விகள் அனைத்தும், மே 18 மீதே முன்வைக்கப்பட்டது. இன்று தமிழீழ மக்கள் கட்சியில் இருந்த அதிகமானோர், மே 18 இல் இல்லாத போதும், மே 18 தாம் தமிழீழ மக்கள் கட்சியின் தொடர்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமல்லாது இன்று மே18 இயக்கத்தின் முன்னணி நபர் ஒருவர், ஏற்கனவே தமிழீழ மக்கள் கட்சியின் முன்னணி நபராக இருந்தவர். இவரை தமிழீழ மக்கள் கட்சி 1999களில் வெளியேற்றப்பட்டதாகவும், தானாக வெளியேறியதாகவும் கூட கூறப்படுகின்றது. இவ்வாறு கடந்தகாலம் மூடுமந்திரமாகவும் மர்மமாகவும் இருக்கையில், நாம் முன்வைக்கும் விமர்சனங்களுக்கு பதில் தராது உள்ளனர். அதேநேரம் வெளிப்படையாகப் பேச முன்வராது, தனிப்பட்ட நபர்களிடையே இதைப்பற்றி பலவற்றை சொல்கின்றனர். தழிழரங்கத்தவர்கள் இவ்வாறு தேவையற்ற விமர்சனங்களை முன்வைக்கின்றனர் என்றும், இவர்கள் கூறும் “கதைகளில்” எந்தவித உண்மையும் இல்லை என்றும், இவர்கள் தனிநபர்கள் மீது தாக்குதல் நடத்துபவர்கள் என்றும் கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.
அரசியலை மக்களுக்காகவும், மக்கள் மத்தியிலும் நடத்தாது, தமக்காகவும் தமது தப்புக்களை மூடிமறைத்து மக்களை ஏமாற்றப் புறப்படுபவர்களுக்கு எதிராக, எமது தளம் என்றும் இயங்கிய வண்ணமே இருக்கும். நாம் மே18 இயக்கத்தினரை எதிரிகளாக பார்ப்பது இல்லை. அவர்களின் அரசியலை அம்பலப்படுத்த முனைகின்றோம் அவ்வளவுமே. இதை விளங்காது, எம்மை எதிர்நிலைக்கு தள்ளுவதற்கு காரணம் அவர்களின் அரசியலே. இவ்வாறே புலிகளை விமர்சித்தவர்கள் எல்லாம் துரோகிகள் என்றதுபோல, இவர்களை விமர்சிப்பவர்கள் எதிரிகள் என்ற நிலைக்கு தள்ளுகின்றனர்.
சீலன்
16.05.2010