எமது பிரச்சனைகளை மகஜராக அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது அது எவ்வாறு தயாரிப்பது என்றும் அதை யார் யாருக்கு அனுப்புவது என்ற விவாதமும் ஆரம்பமானது. எனது நினைவுக்கு எட்டியவரை, ஒருநாளில் இவ்விவாதங்கள் முடியவில்லை. மாறாக மறுநாளும் இது தொடர்ந்தது.

 

இறுதியில் முகாமில் நிரந்தரமாகத் தங்கியவர்கள் ஏழு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். அக்குழுக்கள் தமக்குள் விவாதங்களை நடத்தி, தாம் முன்மொழியும் விடயங்களை அறிக்கையாக எழுதி சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவ்வறிக்கைகள் குறிப்பிட்ட தினங்களில் முகாமின் ஒன்றுகூடலின் போது வாசிக்கப்பட்டு, அவற்றைத் திருத்தி, அதில் எவை முக்கியமானவை என்று எல்லோராலும் முடிவெடுக்கப்படும் பட்சத்தில் அவற்றை மகஜராக தயாரித்து அனுப்புவது என்று முடிவெடுக்கப்பட்டது.

 

தனியாக அமைக்கப்படட் ஏழு குழுக்களும் பல விவாதங்களை நடத்தினர். இதில் நான் இருந்த குழுவில் என்னால் இரண்டுவிடயங்கள் முன்வைக்கப்பட்டன. அவையாவன

 

1. தமிழீழம் இலங்கை இராணுவத்தால் எரிக்கப்படுகின்றது இதற்கு நாம் என்ன செய்யவேண்டும், எற்கனவே பயிற்சி முடித்தவர்களை நாட்டுக்கு அனுப்பி, தமிழீழத்தை பாதுகாக்க வேண்டும். இவ்வாறு செய்யாமல் “ரோம் நகரம் பற்றி எரியும் போது அந்த நாட்டு மன்னன் பிடில் வாசித்தது போல, தமிழீழம் பற்றி எரியும் போது உமாமகேஸ்வரன் என்ன மனிசியோடு இருக்கிறாரா” என்று அதில் கேட்டேன். (இந்தக் கேள்விக்கு பதில் எப்படி இருந்தது என்று இனிவரும் தொடர்களில் பார்க்கலாம்)

 

2. அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று, எமது சின்னத்தில் இருக்கின்றது. ஆனால் இங்கு நாம் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகின்றோம்.

 

 
இதைக் கூற எமது குழுவில் இருந்த சண் என்பவர், அதை இன்னமும் விளக்கமாக அனைத்து அடக்குமுறைகளையும் உடைத்தெறிவோம் என்று போட்டது, இங்குவரும் தோழர்களை உடைத்து எறிவும் வேலையைப் பார்க்கின்றார்கள் என்றும் இன்னும் அதை மெருகூட்டினார். அவரையும் பின்னர் அவர்கள் நன்றாக மெருகூட்டினார்கள்.

 

இவ்வாறு ஒவ்வொரு குழுக்களும் தமது அபிப்பிராயங்களையும் ஆத்திரங்களையும் கொட்டித்தீர்த்தனர். ஒரு மகஜர் தயாரிக்கப்பட்டது. மகஜர் தயாரிக்கப்படுவதை, ஒரு எதிர்ப்புரட்சி நடப்பதாகவும், இவர்கள் இயக்கத்தை உடைக்கப் போகின்றார்கள் என்றும், நாளுக்கு நாள் ஒரத்தநாட்டுக்குச் சென்று வந்த ஜிம்மியும் உதயனும் கூறியிருக்கின்றனர் இதில் என்ன வேடிக்கை என்றால், இந்த மகஜர் தயாரிப்பது பற்றிய விவாதங்களில் அவர்களும் எந்தவித எதிர்ப்பும் இன்றி கலந்து கொண்டனர். இவர்கள் எம்மை உளவு பார்க்கின்றனர் என்று எமக்கு தெரியவந்தாலும் கூட, இவர்களைப் பொருட்படுத்தாது நாம் செய்யவேண்டிய வேலைகளில் மும்முரமாக இறங்கினோம். இதனடிப்படையில் தயாரிக்கப்பட் மகஜரை கீழே பார்க்கலாம்.

 

மகஜர் அறிக்கை

 

முகப்பு


பக்கம் ஒன்று

பக்கம் இரண்டு

 

இவ்வாறு நாம் ஏழுநாட்கள் காலக்கெடு கொடுத்து, இதை ஜிம்மி, உதயன் மூலம் அனுப்பிவைத்தோம். ஏழுநாட்களில் பதில் தராது விட்டால் என்ன செய்வது என்றும் எமது முகாமில் விவாதம் எழும்பியது. அப்போது சோசலிசம் சிறியால் இவர்கள் பதில் தராவிட்டால் நாம் மறுநாள் முகாமைவிட்டு வெளியேறி பாதயாத்திரையாக செல்வதுடன், இது தொடர்பாக தமிழக பொலிசிலும் முறையிடுவது என முடிவிற்கு வந்தோம்.

 

7.சாதிக்குடாகவே தீர்வை காணும் வழிமுறையை நாடிய தலைமை - (புளாட்டில் நான் பகுதி - 07)

 

6.நான் தோழர் சந்ததியரைச் சந்தித்தேன் - (புளாட்டில் நான் பகுதி - 06)

 

5.தேச விடுதலை என்றும், பாட்டாளி வர்க்க புரட்சி என்றும் பேசியபடி… - (புளாட்டில் நான் பகுதி - 05)

 

தண்டனை முகாமை எல்லோரும் "நாலாம் மாடி" என்பார்கள் - (புளாட்டில் நான் பகுதி - 04)

 

மூன்றே மாதத்தில் பயிற்சியை முடித்துக்கொள்ளும் கனவுடன்… (புளாட்டில் நான் பகுதி - 03)

 

1983 இல் இயக்கத்தில் இருப்பதென்பது கீரோத்தனமாகும் - (புளாட்டில் நான் பகுதி 2)

 

1.தாம் மட்டும் தப்பித்தால் போதும் என நினைத்த தீப்பொறியினர் - (புளாட்டில் நான் பகுதி - 01)