Language Selection

தேவன்
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

சிங்களஅரசினை மூச்சுக்கு மூச்சு பேச்சிலும், எழுத்திலும் இனவாத அரசு என்று குற்றம் கூறிக் கொண்டிருக்கும் தமிழ்கட்சிகளும், தமிழ் அரசியல்வாதிகளும் இனவாதம் பேசியே அப்பாவி மக்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்திக் கொள்கிறார்கள். ஈழத்திலும், புலம்பெயர்ந்த நாடுகளிலுமுள்ள தமிழ் அரசியல்வாதிகள் வெறும் இனவாதத்தினை வைத்தே தங்கள்    அரசியலை ஓட்டுகிறார்கள். மக்களுடைய அடிப்படைப் பிரச்சனைகளை மறைத்து அவர்களை ஏமாற்றி தங்கள் அரசியற் பிழைப்பினை நடாத்த இந்த இனவாத அரசியலை  பயன்படுத்துகிறார்கள்.

தங்களை கல்விமான்களாகவும், புத்திஜீவிகளாகவும் மக்கள் மத்தியில் காட்டிக் கொள்ளும் பல படித்த முட்டாளும் இந்த இனவாதத்தினை தூண்டுவதில் பெரும்பங்கினை வகிக்கிறார்கள். இந்த இனவாத அரசியல் இன்று நேற்று அல்ல ஆரம்பகாலங்களில் இருந்தே சில தமிழ்க்கட்சிகளாலும், தமிழ் அரசியல்வாதிகளாலும் மக்களை இலகுவாக கவருவதற்காக கையாளப்படும் முற்றிலும் தவறான அரசியற் போக்காகும். சிங்கள இனவெறி அரசு சிங்கள அப்பாவி மக்களை ஏமாற்றி, சிங்களக் காடையர்களை அப்பாவித் தமிழ்மக்களுக்கு எதிராக தூண்டிவிட்டு அந்த அப்பாவி தமிழ்மக்களை அழித்தொழிக்கும் போக்கினைத் தான், தமிழ் அரசியல்வாதிகளும் முன்னெடுக்கிறார்கள். அவர்களிடம் பலம் போதாமையால் சிங்கள மக்கள் தப்பிப் பிழைத்திருக்கிறார்கள். இந்த இனவாத தமிழ் அரசியல்வாதிகளிடம் பலமிருந்தால் சிங்கள அப்பாவி மக்களுடைய வாழ்க்கை அதோ கதிதான்.

 

ஆரம்பத்திலிருந்து தமிழரசுக்கட்சி, மற்றும் தமிழ்கட்சிகளாலும் தமிழ் அரசியல்வாதிகளாலும் வளர்ந்தெடுக்கப்பட்ட இந்த இனவாத அரசியல் பின்னர் புலிகளால் முன்னெடுக்கப்பட்டது. சிங்கள அப்பாவி மக்கள் மீதான தாக்குதல், பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த மண்ணைவிட்டு அப்பாவி முஸ்லீம் மக்கள் விரட்டியடிக்கப்பட்டது புலிகளின் இனவாத அரசியலின் வெளிப்பாடே. இன்று புலிகளின் போராட்டத் தோல்விக்கு புலிகளின் இந்த இனவாதப் போக்கு முக்கிய பங்கினை வகிக்கிறது. சிங்கள, முஸ்லீம் மக்களின் ஆதரவினை புலிகள் பெறமுடியாது போனதிற்கு இந்தப் போக்குத்தான் காரணம். முஸ்லீம் மக்கள் மற்றும் சிங்கள மக்கள் எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை என்றால் அது அரசியலை முன்னெடுத்தவர்களின் தவறே. இதை திரிபுபடுத்தி மக்களை எதிரிகளாகக் காட்டி மக்கள் மீது பழியைப் போட்டு இனங்களிற்கிடையே முரண்பாட்டினை ஏற்படுத்தி தங்களுக்கு அரசியல் இலாபம் தேடுவதே இந்த இனவாத அரசி;யலின் நோக்கமாகும்.

 

இந்த இனவாத அரசியல் முன்னெடுப்பினையும், கொள்கையினையும் தான் இன்று புலம் பெயர்ந்து வாழும் அரசியல்வாதிகளும் மக்களை ஏமாற்றிப் பிழைக்க கையாளுகின்றார்கள். ஆரம்பத்தில் இனவாத அரசியலை தீவிரமாக முன்னெடுத்த புலிகள் தங்களின் இறுதிக் காலகட்டத்தில் அதனைக் கொஞ்சம் தளர்த்திக் கொண்டார்கள். அதற்கு புலிகள் மக்கள் மேல் கொண்ட கரிசனை காரணமல்ல. வெளிநாடுகள் தங்களை பயங்கரவாத இயக்கமென்று மேலும் ஒரம் கட்டித் தள்ளி விட்டு விடுவார்களே என்ற அவர்களின் பயமே அதற்குக் காரணமாகும். துப்பாக்கிகளின் மேலிருந்த நம்பிக்கை தளரத் தொடங்கியவுடன் வெளிநாடுகளை முற்றிலும் எதிர்பார்க்க வேண்டிய நிலைக்கு புலிகள் தள்ளப்பட்டார்கள். முஸ்லீம் மக்களுக்கு தாங்கள் செய்தது தவறு தான் என்று பாலசிங்கம் மூலம் ஒப்புவிக்க முயற்சித்ததும் இதனால் தானே ஒழிய முஸ்லீ;ம் மக்கள் மீது கொண்ட அக்கறை இதற்குக் காரணமில்லை.
 
புலிகள் ஆயுதத்தையும், வெளிநாடுகளையும், தமிழ் நாட்டு பொறுக்கி அரசியல்வாதிகளையும் நம்பியளவிற்கு தங்களோடிருந்த மக்கள் சக்தியை நம்பியதில்லை.

 

நியாயமான போராட்டத்திற்கு ஒடுக்கப்படும் மக்கள் ஒரு போதும் எதிரானவர்களாக இருக்க மாட்டார்கள். எந்த இனமக்களாக இருந்தாலும் இதுதான் உண்மைநிலை. மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலை முன்னெடுப்பது கையாலாகாத அரசியல்வாதிகள் முன்னெடுக்கும் கீழ்த்தர அரசியல் நடவடிக்கையாகும். மக்களின் உணர்வினை தூண்டி மக்களை இலகுவாக ஏமாற்றிப் பிழைப்பு நடாத்தக் கூடியது தான் இந்த இனவாத அரசியல். ஒரு சிறுபான்மை இனத்தின் தேசிய இனப்பிரச்சனையினை இனவாத  அரசியலினால் தீர்த்து வைக்க முடியாது. மக்களாகிய நாங்கள் இதைப் புரிந்து கொள்ளாது விட்டால் காலம் பூராகவும் நாங்கள் ஏமாளிகளாக தான் இருக்க வேண்டும்.

 

எங்களுடைய எதிரி பேரினவாத அரசே ஓழிய பொதுமக்களல்ல. ஒடுக்கப்படும் எல்லா மக்களையும் ஒன்றிணைத்துக் கொள்வதன் மூலம் தான் இனவாத அரசினை எதிர் கொள்ள முடியும். எங்கள் பிரச்சனைக்கும் தீர்வு காண முடியும். 

 

  - தேவன்.