10012023ஞா
Last updateபு, 02 மார் 2022 7pm

உமாமகேஸ்வரன் ஊர்மிளா தொடர்பு – புதிய முரண்பாடுகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 15) : ஐயர்

இந்தியா சென்ற எமது உறுப்பினர்கள் முதலில் மதுரைக்குச் சென்று மதுரையில் சில நாட்கள் தங்கியிருந்த பின்னர், செஞ்சி ராமச்சந்திரனின் உதவியுடன் எம்.எல்.ஏ விடுதியில் தங்கியிருந்தனர். அங்கு ஏனையோரும் தங்கியிருந்தனர். அங்கு (திராவிடர் கழகம்) தி.க விலிருந்த பலர் எமது இயக்கத்திற்கு அறிமுகமாகின்றனர்.

தமிழ்த் தேசியம் என்பது தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களுடன் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது. திராவிடக் கொள்கையின் மறு முகம் தமிழ்த் தேசியமாக அமைந்திருந்தது. தமிழ் நாட்டைப் பொறுத்தவரை இது திராவிடக் கட்சிகளின் வாக்கு வங்கியாகக் கூடச் செயற்பட்டது. திராவிடக் கொள்கையின் தலித்தியக் கூறுடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எந்த பொதுத் தளமும் இருந்ததில்லை. ஆனால் எம்மைப் பொதுவாக அவர்கள் சமூகப் போராளிகளாகவே கருதினர். பல திராவிட இயக்கத் தொண்டர்கள் எம்மோடு இணைந்துகொள்ள விரும்பினர்.

 

எமது உறுப்பினர்கள் தங்கியிருந்தது செஞ்சி ராமச்சந்திரனின் விடுதி என்பதால் அங்கு அனைவரும் தங்கியிருக்க வசதியீனம் காணப்பட்டதால் தண்டையார்பேட்டையில் ஒரு வீடு ஒன்றை வாடகைக்கு அமர்த்திக் கொள்கின்றனர். பூபதி என்ற சேலத்தைச் சேர்ந்த எமது ஆதரவாளர் மூலம் அந்தவீடு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளப்படுகிறது. அதன் பின்னர் எம்.எல்.ஏ விடுதியிலும் வாடகை வீட்டிலும் மாறி மாறித் தங்கியிருக்க ஆரம்பித்தனர்.

 

1979 இன் ஆரம்பக் காலப்பகுதியில் நடந்த இச்சம்பவங்கள் குறித்த தகவல்களைப் பெரும்பாலும் இலங்கையிலிருந்த எனக்கு கடித மூலமும் நேரடிச்சந்திப்புகள் மூலமும் தெரிவித்துக்கொள்வார்கள். அப்போது தமிழ் மன்னன் என்ற சென்னைத் தமிழர் ஒருவர் எமக்கு நிறைய உதவிகள் செய்வார்.தவிர மேகநாதன் என்ற தமிழ் உணர்வாளரும், தி.கவின் உறுப்பினருமான ஒருவர் முழு நேர ஊழியராக எமது இயக்கத்தில் இணைந்து கொண்டார் சில காலங்களில் வீரமணி என்ற ஒருவரும் இந்தியாவிலிருந்து பகுதி நேரமாக எம்மோடு இணைந்துகொண்டார்.

 

உறுப்பினர்களின் தொகை அதிகரிக்கவும் ,தேடப்படுபவர்கள் இலங்கையில் இருந்து இந்தியா நோக்கி வரவும் இருப்பிடத்திற்கான தேவை அதிகரிக்கிறது. இதன் காரணமாக தஞ்சாவூரிலும் ஒரு வீட்டை வாடகைக்கு அமர்த்திக்கொள்கின்றனர். ஈழத்திற்கு தேவையான தளபாடங்களைச் சேர்த்து அனுப்பவும், அங்கிருந்து வருகின்றவர்களை தற்காலிகமாகத் தங்க வைப்பதற்காகவும் இந்த வீடு பயன்படுத்தப்படுகிறது.

 

இலங்கையிலிருந்து பிரபாகரனும் அவரோடு புறப்பட்ட மூவரும் சென்னையிலிருந்த தண்டையார்பேட்டை வீட்டிற்கே வந்து சேர்கின்றனர்.

 

அவ்வேளையில் இங்கிலாந்திலிருந்து அன்டன் பாலசிங்கம் தனது மனைவி அடேல் பாலசிங்கத்துடன் சென்னையில் எம்மைச் சந்திப்பதற்காக வந்து சேர்கிறார். அவர் வந்ததுமே புலிகளின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரன் மற்றும் பிரபாகரன் உட்பட அனைவருடனும் பேசுகிறார். மார்க்சிய அரசியல் வகுப்புகளும், வெளியீடுகளும் அவசியமானவை என்று கூறுகிறார்.

 

பாலசிங்கம் தமிழ் நாட்டிற்கு வந்த சில நாட்களிலேயே துண்டுப்பிரசுரம் ஒன்றைப் புலிகளின் பேரில் நாடு முழுவதும் வினியோகிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறார். ‘சோசலிசத் தமிழீழத்தை நோக்கி…’ என்ற தலைப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப்பிரசுரம் பாலசிங்கத்தால் எழுதப்பட்டு இந்தியாவில் அச்சிடப்படுகிறது. அதன் பிரதிகள் இலங்கையில் வினியோகம் செய்யப்படுவதற்காக எனக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. துண்டுப் பிரசுரம் எமக்குக் கிடைத்ததும் நாம் வேறுபாடுகளை மறந்து புதிய உற்சாகத்துடன் செயற்பட ஆரம்பிக்கிறோம்.

 

இதே காலப் பகுதியில் இலங்கையில் இனவாதத்தை வெளிப்படையாகவே பேசிய சிங்கள அரசியல் வாதிகளில் இலங்கை அமைச்சர் சிறில் மத்தியூ மிகப்பிரதானமானவர்.

 

சிங்கள பௌத்த மேலாதிக்க வாதத்தை மேலும் நஞ்சூட்டிய குறிப்பிடத்தக்க தலைவர்களில் சிறில் மத்தியூவும் ஒருவர். இவர் ‘சிங்களவர்களே! பௌத்தத்தைப் பாதுகாக்க எழுச்சி கொள்ளுங்கள்’ என்ற நூலை எழுதியவர். ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் அரசில் அரசவை அமைச்சராகப் பணிபுரிந்தவர். ‘யார் புலிகள்’ என்ற 1979 இல் இவர் தபால் தலைப்புடன் அனைத்து பொது அமைப்புக்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. ‘தமிழர்கள் இலங்கையை அழிக்க வந்தவர்கள்’ என்று வெளிப்படையாகவே பேசிவந்தவர். இவரது மகன் நத்தா மத்தியூவும் பல அமைச்சரவைப் பதவிகளை வகித்தவர் என்பதோடல்லாமல், மகிந்த ராஜபக்ச அரசில் ஊவா மாகாணத்தின் ஆளுனராகவும் கடமையாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

குமணன் மனோமாடர் போன்ற ஏனைய உறுப்பினர்களுடன் இணைந்து நாமும் சிறில்மத்தியூவின் அதே தபால் தலைப்பைப் பயன்படுத்தி துண்டுப்பிரசுரத்தை அரச திணைக்களங்களுக்கும் அதன் மையங்களுக்கும் அனுப்பிவைப்பதாகத் தீர்மானித்து அவரின் இலச்சினை பொறிக்கப்பட்ட தபால் உறையை பிரசுரித்துக் கொள்கிறோம். இது அரச திணைக்களங்களுக்கு கிடைக்கும் அதே வேளை குறித்த நேரத்தின் அனைத்து வாசிக சாலைகள் பொது மையங்கள் பாடசாலைகள் போன்ற இடங்களுக்கு இருவர் கொண்ட அணிகளாகப் பிரிந்து தமிழ்ப் பகுதிகளில் வினியோகம் செய்வதற்காக பண்ணையிலிருந்தவர்களைத் தயார் செய்கிறோம். திட்டமிட்டபடி பிரசுரம் பெரியளவில் அனைத்து மட்டங்களையும் சென்றடைகிறது. ஒரு ‘அதிரடி’ நடவடிக்கை போன்று அமைந்த இந்த நிகழ்வின் பின்னர் புலிகள் குறித்து தமிழ் மக்கள் பரவலாகப் பேசிக் கொள்வதையும் அவர்களிடம் புதிய நம்பிக்கை துளிர்விட்டதையும் காணக்கூடியதாக இருந்தது.

 

பிரசுரம் பரவலாகக்ச் சென்றடைந்த சில நாட்களில் அது குறித்து இலங்கை உளவுப் பிரிவு மிகுந்த அச்சம் கொள்கிறது. குறைந்தது ஆயிரம் பேர் இணைந்து திட்டமிட்டுத் தான் இப் பிரசுரம் வெளியிடப்பட்டிருக்க வேண்டும் என்று கணிப்பிட்ட இலங்கை இரகசியப் பொலீசாரின் அறிக்கையை இலங்கையின் அனைத்து நாளிதழ்களும் பிரசுரிக்கின்றன.

 

சிறி லங்கா அரசின் திட்டமிட்ட குடியேற்றங்களும், இன அடக்கு முறையும் இராணுவ வடிவங்களாக உருவாகிக்கொண்டிருந்த வேளையில் பிரசுரம் மக்கள் மத்தியில் புதிய நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது.

 

அவ்வேளையில் முகுந்தன் (உமாமகேஸ்வரன்), நாகராஜா போன்றோர் மிகத் தீவிரமாக இயங்கிக்கொண்டிருந்தனர். அவர்கள் உறங்குவதற்காக மட்டுமே தங்குமிடங்களுக்கு வருகின்ற அளவிற்கு மிகவும் தீவிர இயங்கு சக்திகளாகத் தொழிற்பட்டனர். உமாமகேஸ்வரன், நாகராஜா ஆகிய இருவருமே மிகுந்த அர்ப்பண உணர்வோடு செயலாற்றுபவர்கள். இவர்கள் சென்னையில் ஆரம்பித்து தமிழ் நாட்டின் பலபகுதிகளிலும் இயக்கத்தின் தேவைகளுக்கான பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டனர். அந்த வேளையில் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பு உமாமகேஸ்வரனிடம் இருந்ததது.

 

பிரபாகரன் சென்னைக்கு வந்த பின்னர் தளத்தில் பண்ணைகளை நிர்வகிப்பதிலிருந்து அனைத்து இயக்க வேலைகளும் நான் மட்டுமே கவனிக்க வேண்டிய சுமை எனது தோளகளில் விழுகிறது. எனக்கு உதவியாக ஏனைய போராளிகளும், குறிப்பாக குமணன் மனோ மாஸ்டர் போன்றோர் ஒத்துழைக்கின்றனர். மத்திய குழு உறுப்பினர்களும் பிரபாகரனும் களத்தில் இருந்து வெளியேறியதன் சுமையை உணரக் கூடியதாக இருந்தது. தனியே முடிபுகளை மேற்கொண்டு வேலைகளைச் செய்வது இது முதல் தடவை அல்ல. ஆனால் முன்னைய சந்தர்ப்பங்களைப் போல இலகுவானதாக இருக்கவில்லை. போராளிகளதும் பண்ணைகளதும் தொகை அதிகரித்திருந்தது. அத்தோடு கூடவே புதிய பிரச்சனைகளும் அவற்றிற்குத் தீர்வுகாணவேண்டிய பழுவும் அதிகமானது.

 

இலங்கையில் பிரபாகரன் பயிற்சி முகாமில் இருந்தவர்கள் மீது தன்மீதான அதிர்ப்தியை விட்டுச்சென்றிருந்தார். பிரபாகரனின் தன்னிச்சையான நடவடிக்கைகள் குறித்து பல உறுப்பினர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் குரலெழுப்பினர். வீரவாகு ரகு தொடர்பான பிரசனைகளை தொடர்ந்தும் சலசலப்பிற்கு உள்ளாகியிருந்தது. இவற்றையெல்லாம் சமாதானப் படுத்தி உறுப்பினர்களை ஒழுங்கிற்குக் கொண்டுவரவேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

 

பிரபாகரன் தமிழகம் சென்றதும் இயக்கதினுள் புதிய பிரச்சனை ஒன்று தலை தூக்குகிறது. பொதுவாக அனைவரும் சென்னையில் தண்டையார் பேட்டை வீட்டில்தான் தங்கியிருப்பது வழமை. அங்கே போராளிகள் அனைவரும் இரவு நீண்ட நேரம் இயக்க நடவடிக்கைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கச் செல்வார்கள். அவ்வேளையில் ஊர்மிளாவும் அங்குதான் தங்கியிருந்தார். அவர் பேசிக்கொண்டிருந்த பின்னர் மொட்டை மாடியில் சென்று உறங்குவார். முகுந்தனும் (உமாமகேஸ்வரன்) பேசிக்கொண்டிருந்த பின்னர் உறங்கும் வேளையில் அவரும் மொட்டைமாடிக்குச் சென்றுவிடுவார். உமாமகேஸ்வரனின் இந்த நடவடிக்கை குறித்து கலாபதிக்கு சந்தேகம் ஏற்படுகிறது.

 

பலருக்கும் உமாமகேஸ்வரன் – ஊர்மிளா குறித்த சந்தேகங்கள் நீண்டகாலமாகவே இருந்துவந்தது. உமாமகேஸ்வரன் பலஸ்தீன இராணுவப்பயிற்சிகுச் செல்கின்ற வேளையில் விமான நிலையத்தில் அவர்கள் காதலர்கள் போல நடந்துகொண்டதாக அவ்வேளையில் விமான நிலையத்திலிருந்த நாகராஜா பிரபாகரனிடம் கூறினார். நாகராஜா வழமையாகவே சந்தேகப்படும் சுபாவம் உடையவராதலால், பிரபாகரன் அவரைத் திட்டியிருக்கிறார். தவிர அவர்களுடைய உடல் மொழி குறித்து வேறு உறுப்பினர்களும் கூடப் பேசியிருக்கின்றனர். குறிப்பாக பிரபாகரனிடம் இவை குறித்து முறையிட்ட போதிலும் பிரபாகரன் முகுந்தன் மீது சந்தேகம் கொள்ளவில்லை.

 

இவ்வாறான சந்தேகங்கள் ஏற்கனவே பேசப்ப்ட்டதால் நாகராஜாவும் கலாபதியும் ஒரு நாள் அனைவரும் உறங்கச் சென்றபின்னர் மொட்டைமாடிக்குச் சென்றிருக்கின்றனர். அங்கே ஊர்மிளாவும் உமாமகேஸ்வரனும் ஒன்றாக உறங்குவதைக் கண்டிருக்கிறார்கள். மறு நாள் காலை இவர்களிருவரும் பிரபாகரனிடம் இது குறித்துக் முறையிட்டிருக்கிறார்கள்.

 

பின்னதாக நாகராஜாவும் பிரபாகரனும் உமாமகேஸ்வரனை அழைத்து இது தொடர்பாகக் கேட்டிருக்கிறார்கள். உமாமகேஸ்வரன் பெரிதாக எதுவும் உடனடியாகச் சொல்லவில்லையெனினும் இதுதவிர நான் வேறு ஏதாவது தவறிழைத்திருக்கிரேனா என அவர்களைக் கேட்டிவிட்டுச் சென்றுவிட்டார்.

 

உமாமகேஸ்வரனின் நடவடிக்கையும் அதற்கான பதிலும் உறுப்பினர்களிடையே பெரும் கொந்தளிப்பையும்,கோபத்தையும் ஏற்படுத்துகிறது. நாம் அனைவருமே அரசியலைத் தனிமனிதத் தூய்மைவாததிலிருந்து தன் புரிந்துகொண்டவர்கள். அதிலும் தலைமைப் பொறுப்பிலிருந்த உமாமகேஸ்வரனின் இந்தப் பதில் அவரின் உறவை உறுதிப்படுத்துவதாக அமைந்திருந்தது. இந்த நடவடிக்கைகள் தூய்மையான, கட்டுக்கோப்பான இராணுவ அமைப்பை உருவாக்குவதற்கான கனவில் ஈடுபட்டிருந்த எம்மவர்களை அதிர்ச்சிக்கு உள்ளாகுகிறது.

 

ஒழுக்கமான இரணுவ அமைப்பில் இவ்வாறான பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் என்பது அனுமதிக்கப்பட முடியாத குற்றமாகவே கருதினர். அதுவும் தலைமைப் பதவியிலிருக்கின்ற ஒருவர் மீதான குற்றச்சாட்டுக்களை மிகுந்த கோபம்கலந்த வெறுப்புடனேயே நோக்கினர்.

 

சில மணி நேரங்களில், ஊர்மிளாவுடன் பேசிவிட்டுத் திரும்பி வந்த உமாமகேஸ்வரன், அனைத்தையும் மறுக்கிறார்.இது தன்மீது திட்டமிட்டு சுமத்தப்படும் குற்றச்சாட்டு என்று கூறுகிறார். உமாமகேஸ்வரன் சாட்சிகளுடன் கூடிய சம்பவம் ஒன்றை மறுத்த போது அது மேலும் அவர்மீதான வெறுப்புணர்விற்கு வித்திடுகிறது. பொதுவாக அங்கிருந்த அனைத்து உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனுக்கு எதிரானவர்களாக மாறுகின்றனர்.

 

இவ்வேளையில் முன்னர் கென்ட்பாமில் தங்கியிருந்த ரவி, இவர்களிடையேயான தொடர்பு முன்னமே அனைவருக்கும் தெரிந்த ஒரு விடயம் தான் என்று சொல்கிறார். தவிர, கொழும்பில் ஊர்மிளா – முகுந்தன் தொடர்பு என்பது ஓரளவு அறியப்பட்ட விடயம் தான் என்றும் சொல்லப்படுகிறது. இவை அனைத்தையும் அறிந்துகொண்ட பிரபாகரனும் ஏனைய உறுப்பினர்களும் உமாமகேஸ்வரனைத் தலைமைப்பதவியிலிருந்து விலகிக்கொள்ளுமாறு கோருகின்றனர்.சாதாரண உறுப்பினர்களுக்குப் பாலியல் தொடர்புகளிருப்பதைப் பலதடவைகள் நாங்கள் கண்டுகொள்வதில்லை. செல்லக்கிளிக்கு பெண்களுடன் தொடர்புகள் இருப்பதாக அவர் பண்ணைகளில் எம்மிடம் பல தடைவைகள் கூற முனைந்த வேளைகளில் நானும் ஏனையோரும் அதுபற்றியெல்லாம் இங்கு பேசவேண்டாம் என்று தடுத்திருக்கிறோம்.

 

பிரபாகரனுக்குக் கூட இது தொடர்பாகத் தெரியும்.தவிர,செல்லக்கிளி மீது யாரும் கோபப்படுவதில்லை. அவரை துடிப்பான குறும்புக்கார இளைஞனாகவே அனைவரும் கருதினர். ஆக, இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு உமாமகேஸ்வரனை தலைமைப்பதவியிலிருந்து இறங்கி சாதாரண உறுப்பினராகச் செயற்படுமாறு கோருகின்றனர்.

 

அதே வேளை ஊர்மிளாவை பெருஞ்சித்தனார் வீட்டிற்கு மாற்றிவிடுகிறார்கள். உமாமகேஸ்வரன் தண்டையார்பேட்டை வீட்டிலிருந்து எம்.எல்.ஏ விடுதிக்கு மாறுகிறார். கூடவே ஏனைய உறுப்பினர்களுடனான தொடர்புகளை மட்டுப்படுத்திக் கொள்கிறார். இந்த வேளைகளில் அன்டன் பாலசிங்கமும் அவரது மனைவியும் சென்னையில்தான் இருக்கின்றனர். அவர் சென்னைக்கு வந்து சில நாட்களிலேயே இயக்கத்தின் தலைவராகவிருந்த உமாமகேஸ்வரனுக்கு எதிரான குற்றச்சாட்டு அதிர்வலைகளை ஏற்படுத்துகிறது.

 

பாலசிங்கமும் இந்தப்பிரச்சனை தொடர்பாக ஏனையோரிடம் பேசுகிறார். இந்தப் பிரச்சனையைப் பெரிதுபடுத்த வேண்டிய அவசியமில்லை என்பதுதான் பாலசிங்கத்தின் கருத்தாக அமைந்திருந்தது. . இவையெல்லாம் ஒரு புறத்தில் நிகழ்ந்து கொண்டிருக்க தமிழ் நாட்டில் உமாமகேஸ்வரனின் முரண்பாடு கூர்மையடைகிறது. தலைமைப் பதவியிலிருந்து விலகுமாறு முன்வைத்த கோரிக்கையை அவர் நிராகரிக்கிறார்.

 

உமாமகேஸ்வரன் தொடர்ச்சியாக தான் அவ்வாறு எந்தத் தொடர்பையும் ஊர்மிளாவுடன் கொண்டிருக்கவில்லை என மறுக்கிறார். இறுதியில் மத்திய குழு கூட்டப்பட வேண்டும் என்றும், மத்திய குழுவின் முடிவிற்குத் தான் கட்டுப்படுவதாகவும் கூறுகிறார்.

 

மத்திய குழு உறுப்பினர்களில் நான் மட்டும்தான் இலங்கையில் இருந்தேன். உமாமகேஸ்வரன் என்னையும் இணைத்துத் தான் மத்தியகுழு முடிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்க அனைவரும் அதனை ஏற்றுக்கொள்கிறார்கள். ஆக, என்னை இலங்கையிலிருந்து வரவழைத்து அதன் மத்திய குழு ஒன்று கூடலை நிகழ்த்திய பின்பே இறுதி முடிவிற்கு வருவதாகத் தீர்மானிக்கப்படுகிறது.

 

இன்னும் வரும்..

 

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10.நிசப்தம் கிழித்த கொலைகள் ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் ஐயர் பாகம் பத்து

 

11.கொலைகளை உரிமைகோரும் புலிகள்– ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பதினொன்று)

 

12.அடிமைச் சாசனம்- புலிகளின் எதிர்வினை – ஈழப்ப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 12)/p>

 

13.வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட வங்கிக் கொள்ளை-ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் 13)

 

14.பிரபாகரனை எதிர்க்கும் போராளிகள் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் 14) : ஐயர்

 

http://inioru.com


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்