தன் தலைவரையே காட்டிக் கொடுத்த எட்டப்பர் கூட்டம் இது. சர்வதேச தலையீட்டைக் காட்டி, அவரையே சரணடைய வைத்த கூட்டம். இறுதியில் அவரைப் போட்டுத்தள்ளிய கூட்டம். இன்று வரை இதற்கு எந்த சுயவிளக்கமும் கூட கிடையாது. ஆனால் தலைவர் உயிருடன் இருப்பதாக கூறி, ஓட்டுமொத்த சமூகத்தையும் முட்டாளாக்குகின்ற மாபியாக் கூட்டம்.

அனைத்து உண்மைகளையும் புதைத்த கூட்டம். துரோகத்தை தியாகமாக பசப்பும் கூட்டம். புலிச் சொத்தை அபகரித்த கூட்டம் வட்டுக்கோட்டை என்கின்றது, நாடு கடந்த தமிழீழம் என்கின்றது. தம்மை மூடிமறைக்க, வேசங்களுக்கு மட்டும் பஞ்சம் கிடையாது.

 

வட்டுக்கோட்டைக்கும், நாடு கடந்த கூட்டத்துக்கும் என்ன தான் கொள்கை வேறுபாடு? எதற்காக மோதுகின்றனர்? ஆளுக்காள் ஏன் சதி செய்கின்றனர். ஆளையாள் எதற்காக கவிழ்க்கின்றனர்? இரண்டு தரப்பின் கீழ் இருக்கும் அணிகளும், ஒன்று என்பது தான் இதில் உள்ள வேடிக்கை. சரி எல்லாம் எதற்காக? நடப்பது புலத்து மாபியாப் புலிகளின் மேல்மட்டத்தில் நடக்கும் சொத்துச் சண்டை. தங்கள் அடியாட்களைத் தேர்ந்தெடுக்கவும், பிரிக்கவும் நடப்பது தான் தேர்தல்.  

 

இந்த பின்னணியில் தான் புலி மாபியாக்களுக்கு இடையிலான மோதல்கள் தொடருகின்றது, சொத்துகள் கைமாறுகின்றது. இதன் தொடர்ச்சியில், நாடு கடந்த தேர்தலையே முழுங்கி ஏப்பம் விட்டுள்ளனர். நாடு கடந்த தமிழீழ மாபியாக்களை ஓழித்துக்கட்ட, அவர்கள் நடத்திய தேர்தலையே  எதிர்த்தரப்பினர் மோசடி செய்தனர். வாக்குப் பெட்டியை மாற்றினர். கள்ள வாக்குகள் போட்டனர். வாக்களிக்கவிடாமல் தடுத்தனர். மந்தைகளை மேய்த்துக் கொண்டு வந்து வாக்கை தமக்கு போடப்பண்ணினர். இப்படி அனைத்துவிதமான, ஜனநாயகப் படையல்களையும் செய்தனர். மக்களை ஏய்க்க, எல்லாவிதமான மோசடிகளையும், சுத்துமாத்துகளையும் செய்தனர். தோற்கடிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ மாபியாக்கள், மறுதேர்தல் பற்றி அறிவிக்கின்றனர். மகிந்தாவின் வாரிசுகள், இப்படியெல்லாம் அம்பலமாகின்றனர்.

 

புலி மாபியாக்களுக்கு இடையிலான சொத்துச் சண்டை, இப்படி நாறுகின்றது. மக்களின் பெயரில் அதை அபகரிக்கும் கூத்துத்தான், இந்தத் தேர்தல் நாடகம். மண்ணில் புலிகளின் ஜனநாயகமோ இராணுவ உடுப்புக்கு பதில் வெள்ளை சேட்டு போட்டு பொக்கற்றுக்குள் பேனாவை வைத்துக் கொண்டு திரிவதுதான்;. புலத்தில் ஜனநாயகம் என்பது, மேலதிகமாக ரை கட்டிக் கொண்டு திரிவது தான். மற்றப்படி இவர்கள், மக்களை தூக்கில் போடும் அலுகோசுகள்தான். 

 

தலைவரையே போட்டுத்தள்ளிய பின், இன்று நடப்பது புலிக்குள் இடையிலான சொத்துச் சண்டைதான். வட்டுக்கோட்டை கொள்கைக்கும், நாடு கடந்த தமிழீழ கொள்கைக்கும் இடையிலானது, அரசியல் முரண்பாடல்ல. ஓரே கூட்டத்திற்குள் சதிகளும், கவிழ்ப்புகளும் தொடர்ச்சியாக நடக்கின்றது. இது இன்று பல முனையில், முரண்பாடாக மாறி வருகின்றது. ஒருவரை ஒருவர் அரச கைக் கூலிகளாகக் கூறுவது முதல், பேரினவாத அறிக்கைகளைக் காட்டி இது தான் அவர்கள் என்கின்றது எதிர்த்தரப்பு.

 

புதுத் துரோகிகள் பட்டியலை உருவாக்க, ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டுகின்றர். தாங்கள் திருடிய சொத்தை மறைக்க, ஜனநாயகம், தேர்தல் என்கின்றனர். இறுதியில் அதை தங்கள் சொந்த மோசடிகளில் இருந்துமட்டுமல்ல, அதன் கழுத்தைக் கூட அறுத்து விட்டனர். 

 

தமிழ் மக்கள் தம்மை முழுமையாக ஆதரித்ததாக கூறும் இவர்கள், ஒரு குறிப்ப்பிட்ட நாட்டில் எத்தனை தமிழ் மக்கள் இருக்கின்றனர் என்பதையோ, அதில் எத்தனை பேர் தமக்கு வாக்களித்தனர் என்ற எந்த விபரத்தையும் வெளியிடுவது கூட கிடையாது. மோசடிகள் மூலம் தம்மை 99.99 சதவீதமான மக்கள் ஆதரிப்பதாக கூறி, தங்கள் மாபியாத்தனத்தை போர்த்தி மூடுகின்றனர்.

 

கடந்தகாலத்தில் தமிழ்மக்கள் தங்கள் சொந்த பந்தங்களுக்காக சுதந்திரமாகவும், சுயசிந்தனையுடன் போராடுவதை தடுத்து வந்த மாபியாப் புலிகள், இன்றும் அதையே செய்கின்றனர். அன்று மக்களைப் பணயம் வைத்து, அவர்களைக் கொன்று, இறுதியில் தங்கள் தலைவர்மாரையே சரணடைய வைத்தவர்கள் தான், இன்று வட்டுக்கோட்டை முதல் நாடு கடந்த தமிழீழம் வரை வேசம் போட்டு குலைக்கின்றனர்.

 

மக்கள் பணத்தை சூறையாடியவர்கள், தொடர்ந்து மக்களை ஏய்த்துக் கறக்க ஜனநாயகம் தேர்தல் என்று புது வேசம் போடுகின்றனர்.

 

இந்தப் புது ஜனநாயக வேசம் போடும் கும்பல், புலிகளின் கடந்தகால மக்கள் விரோதச் செயல்கள் எதையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை. அந்த அமைப்பின்  சொத்துக்களை இட்டு, எதுவும் இன்று பேசுவது கிடையாது.

 

இங்கு இந்த தேர்தலில் நிற்பவர்கள் கூட பினாமிகள் தான். அதிகாரம், வியாபாரம், விளம்பரம், எலும்புத் துண்டுக்கு அலைகிற கூட்டம் தான், இன்று வெளிப்படையாக இந்த தேர்தலில் இயங்குகின்றது. இதன் பின்னணியில் தான், உண்மையான கிரிமினல் மயமான மாபியாக்கள் இயங்குகின்றனர். அவர்களின் பெயரில்தான் தமிழ்மக்கள் சொத்துகள் உள்ளது.   

     

இந்த மாபியாக் கூட்டத்தை மக்கள் இனம் காணாதவரை, நியாயமான எந்தப் போராட்டத்தையும் தமிழ் மக்கள் தமக்காக, தம் சொந்த பந்தங்களுக்காக ஒருநாளும் நடத்த முடியாது.

 

பி.இரயாகரன்
07.05.2010