இந்த முறையும் மே 1க்கு கலந்து கொள்ள வேண்டும் என்பதில் தீர்மானமாயிருந்தேன். முதல் நாள் விழுப்புரத்தில் ஒரு வேலை விசயமாக நண்பரின் இல்லத்தில் தங்கி விட்டேன். மே 1 காலை 10.30 மணிக்கு கிளம்பினேன்.   காலை 10.30 மணியையைப்போலவே இல்லை. இரவெல்லாம் மழை.

 விழுப்புரம் பேருந்து நிலையம் கூட்டமின்றி வெறிச்சோடிக்கிடக்க, பேருந்திற்காக காத்திருந்தேன் வரிசையாய் தனியார் பேருந்துகள். அரை மணி நேரம் கழித்து வந்த அரசுப்பேருந்தில் ஏறினேன். வெளியூர் நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள் அவர்களை போராட்டங்களில் மட்டும் தான் பார்க்க முடிகிறது.

 

கடைசியாய் நாங்கள் தோழர் பசந்தா கருத்தரங்கில் பார்த்ததுதான். அப்புறம் வாய்ப்பே இல்லை. ஒவ்வொருமுறை வாய்ப்பு கிடைக்கும் போதும்  எப்படி இருக்கீங்க என்பதில் தொடங்கி, சுவையான நிகழ்வுகள் என போய்க்கொண்டு இருக்கும்.  இம்முறை முக்கியமாக அங்காடித்தெருவைப் பற்றி பேசலாம் என எண்ணியிருந்தேன். பேருந்து விழுப்புரம் டவுனை கடக்கும் போது ஒரு கண் கொள்ளாக்காட்சியைப் பார்த்தேன்.

 

சிஐடியூ தோலர்கள் கும்பலாக பேனர் பிடித்தபடி பேரணியில் சென்று கொண்டிருக்க, முன்னே பேண்ட் வாத்தியம் சென்று கொண்டிருந்தது. சினிமாப் பாட்டுக்கு தாளம் தப்பாமல் அடித்துக்கொண்டிருக்க, சிஐடியுவோ அதில் வர்க்கப்பார்வையை தேடிக்கொண்டிருந்தது. புதுவையை அடைந்தேன் மணி 12 ஆனது. பேருந்து நிலையத்தில் தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அமைதியாய் பேருந்து நிலையத்தில் உட்கார்ந்தேன்.

 

நண்பர்கள் இருவருக்கும் போன் செய்து கேட்டேன் இருவரும் ஒரே மாதிரி சொன்னார்கள் லேட் ஆயிடுச்சு, எப்புடியும் 3 மணி ஆயிடும். சரி என்ன பண்ணலாம் என்று யோசித்தபடியே  அருகிலிருந்த நபரிடம் பேச்சுக்கொடுக்க, புதுவையில் பீச் இருப்பது தெரிந்தது. சரி பீச்சுக்குத்தான் நடந்து போவோமே என்று கிளம்பினேன். வேடிக்கைப்பார்ப்பதற்கு அல்ல, நேரம் கடக்க ஒரு வழி.

 

பேருந்து நிலையம் விட்டு நேராய் போய்க்கொண்டிருந்தேன், யாரையும் கேட்க வில்லை, ஆங்காங்கே போர்டுகள்பல்லைக்காட்டின” பீச்-க்கு செல்லும் வழி”. செல்லும் வழியில் தெருக்களின் பெயர்களைப்பார்த்தேன். முதலில் தமிழ், பின்பு ஆங்கிலம், பின்னர் பிரெஞ்சு என மும்மொழிகளில் இருந்தன. காலனியின் எச்சங்கள் பெருமையாய் படர்ந்திருந்தன.கடற்கரைக்கென செல்லும் அந்த பிரத்யேகமான அந்த சாலைதான் மினிஸ்டர் ரெசிடென்சியல் ஏரியாவாம். பல புதிய கட்டிடங்கள் கூட பிரெஞ்சுமுறையில் இருந்தன.


அமைதியாக இருந்தது. பீச்சை நெருங்கிய போது மற்றொரு கிளைச்சாலையில் ஏதோ கூட்டமாய் இருந்தது.

 

நெருங்கிபார்த்தேன் அது சினிமா பட சூட்டிங், கொரியாகாரர் போல இருந்த அந்த ஸ்டண்ட் மாஸ்டர் சண்டைகாட்சிகளை தெளிவான தமிழில் இயக்கிக்கொண்டிருந்தார். சூட்டிங்கை பார்த்தேன் ஒரு ஆம்புலன்ஸ் போன்ற வண்டி அதில் சில முகமூடி அணிந்த நபர்கள் , வெயிலில் துணை நடிகர்கள் பைக்கில் நால்வர், எங்கடா  நாயகனைக்காணவில்லைஎன்று தேடியபோது ஜீவா வந்தார். மற்ற துணை நடிகர்களெல்லாம் வெயிலில் நனைந்து வியர்வையில் ஊறிப்போயிருக்க. ஜீவா செயற்கையாக ஒரு டப்பாவிலிருந்து வியர்வையை தெளித்துக்கொண்டிருந்தார்.

 

பார்த்தால் உண்மையான வியர்வைவிட ஜீவாவின் மேல் போடப்பட்ட வியர்வை அதிகமாய் இருந்தது,எப்போதும் போலிகள் தான உண்மைகளைத் தின்கின்றன. அங்கிருந்து கிளம்பி கடற்கரைக்கு சென்றேன், அம்பேத்கார் மணி மண்டபம் இருந்தது. கடற்கரையை இரண்டு ரவுண்ட் சுற்றினே. பிரெஞ்சுகாரர்கள் பலர் அங்கு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்கள். நம்மவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டிருந்தார்கள். நான் நினைத்தேன் “அவனோட ஊர்ல போய் என்னன்னு சொல்லுவான், நம்ம காலனி நாட்டுக்கு போய்ட்டு வந்தேன்னு சொல்லுவானா”

 

மீண்டும் கிளம்பினேன். வரும் வழியில் கம்பன் அரங்கத்தில் விழாவாம், கவர்னர், முதல்வர், எல்லா அமைச்சர்களும் கலந்து கொள்கிறார்களாம். இன்றுதான் திறக்கப்படப்போகிறதாம். அதைக்கடக்கும் போது ஒருவர்என்னிடம் கேட்டார்”இன்னைக்கு திறக்கப் போறாங்களாமா?”   “ஆமா இன்னிக்கே போயிடுங்க அப்புறம் உடமாட்டாங்க” என்ற படியே கிளம்பினேன்.ஆபாசக்கவிஞனுக்கு கோடிக்கணக்கில் அரங்கம், உழைக்கும் மக்களுக்கோ பட்டை நாமம்.

மீண்டும் பேருந்து நிலையத்திற்கு வந்தேன். எதிர்பார்த்த நண்பர்கள் வந்து சேர , பேருந்து நிலையத்தில் திரும்பியபக்கமெல்லாம் சிவப்பு நிறமாயிருக்க, நண்பர்களோடு  பேசிக்கொண்டிருந்தேன். நேரம் போனதே தெரியவில்லை. பசித்தது, எந்த ஹோட்டலிலும் சாப்பாடு இல்லை, இறுதியாக
ஒரு ஹோட்டலி

ல் நுழைந்து ஆளுக்கொரு தோசை சொன்னோம், சாப்பிட ஆரம்பித்த வேளையில் பறைசத்தம் கேட்டது. அப்படியே விட்டுவிட்டு கிளம்பினோம்.

 

தோழர்கள் பறையடித்தவாறே இருக்க, மற்ற தோழர்கள் பேருந்து நிலையத்தில் இரு பக்கங்களையும் முற்றுகையிட்டு  முழக்கமிட்டனர். சுமார் 20 நிமிடம் கழித்து ஒருபக்கத்தை மட்டும் விட்டு மற்ற பக்கத்தை முற்றுகையிட்டு  தங்களது போராட்டத்தை தொடர்ந்தனர். போலீசு பொறுமையாய் வந்தது. அவர்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை போலும். அனைத்து பேருந்துகளும் முடங்கிப்போயின.

 

தோழரின் மைக்கைப் பிடுங்கினார் ஒரு  அதிகாரி,  மைக்கிலிருந்து முழக்கம் வருகிறதென்று நினைத்துவிட்டார் போலிருக்கிறது அந்த மெத்தப்படித்தவர். தோழர்கள் தங்கள் போர்க்குரலைத்தொடர கடுமையான டிராபிக் ஜாம். தோழர்கள் பேருந்து போக்குவரத்தை வரிசைப்படுத்தினர். போலீசு வேடிக்கைப்பார்த்தது. கைது செய்ய வரும் வேனை தோழர்கள் டிராபிக் ஜாமிலிருந்து மீட்டு முன்னே கொண்டு வந்தனர். (என்னன்னவெல்லாம் செய்ய வேண்டி இருக்குது !!!!!)

 

நடுவில் ஒரு சீபீஎம் கொடி கட்டிய ஆட்டோ வந்தது அதில் எம்ஜியார்படத்து வர்க்கப்பாடல்களை ஒலிபரப்பியபடி சென்றார் ஒரு தோலர்.அவர் பார்வையில் அவர் வர்க்கப்போராட்டத்தை சினிமாப்பாட்டுக்கள் மூலம் நடத்திக்கொண்டிருந்தார்.

 

போலீசின் வண்டிகள் வரிசையாய் நிரம்பின, அவர்களிடம் போதிய வண்டிகள் இல்லை. தனியார் பேருந்துகளை கொண்டு வந்தனர். ஒவ்வொரு பேருந்துக்கும் அளவுக்கு ஏற்ற தோழர்களை தோழர்களே ஒழுங்கமைத்துக் கொண்டு வண்டியில் ஏறினர்.சீறிய முழக்கம் ஆளும் வர்க்கத்தின் காதை கண்டிப்பாய் கிழித்திருக்கும்.   இப்போது கலைக்குழு தோழர்களிடமிருந்து பறை  வேறு  தோழர்களிடமிருந்தது.

 

அவர்கள் ஆரம்பித்தார்கள். அந்த இசை இறுதிவரை குறையவே இல்லை. அதிலும் மிகவும் ஒரு குட்டித்தோழர் ஆர்வமாக பறையடித்தார். அவரைபார்க்க எனக்குப் பொறாமையாக இருந்தது. இந்த வயதில் நான் என்ன செய்திருப்பேன் என நினைத்தேன்” விளையாடவும் வயிறு முட்டத்தின்னவும் தவிர எதுவும் நினைவில் இல்லை ” வெட்கம் பிடுங்கித்தின்றது.

உன் விரல்களில்  இன்னும்
உரமேற்று  தோழனே
மரத்துப்போன எங்கள்
அடிமைத்தோல்களை
அடித்துக் கிழி


காவல் வண்டியில் ஏற்றவே 6 மணிக்குமேல் ஆனது. தோழர்கள் காவல் பயிற்சிப்பள்ளியில் வைக்கப்பட்டார்கள். அங்கேயே பொதுக்கூட்டம் கலை நிகழ்ச்சியாவும் நடந்தேறியது. 8 மணிக்கு போலீசு விடுதலை செய்தது நாங்கள் கிளம்பினோம், ஆளுக்கொரு திசையாய். மறுபடியும் அடுத்த போராட்டத்தில் தானே பார்க்க முடியும்.

 

மீண்டும் பேருந்தில் ஏறிசென்ற போது வழியில்  பல சிஐடியூ போர்டுகளுக்கு சந்தனம் பொட்டு வைத்திருந்தார்கள்.பூசையெல்லாம் காலையிலேயே முடிந்திருக்கும் போல.அதிமுக  மேதின விழா சாலையில் நடந்து கொண்டிருந்தது. தோலர் குண்டு கல்யாணம்பேசிக்கொண்டிருந்தார். அவர் என்ன பேசுவார் தொழிலாளர் உரிமைகள் செயாவின் சுருக்குப்பையில் இருப்பதை விளக்குவார். ஒருவகையில் புதுவையின் இப்போராட்டம் ஒரு தொடக்கமே. “நம்முடைய ஆயுதத்தை எதிரி தான் தீர்மானிக்கிறான்”

உண்மைதான் புதுவையிலிருந்து 4 கி.மீ தள்ளி உள்ள இடத்தில்  பொதுக்கூட்டம் நடத்த அனுமதி தந்திருந்தால் இவ்வளவு சிரமம் போலீசுக்கே இருந்திருக்காது.  பாசிசம் எவ்வளவு கொடூரமானதாயிருந்தாலும் அது முட்டாள்தனமானது. ஆசான் மார்க்ஸ் சொன்னாரே “முதலாளித்துவம் தன் புதைகுழியை தானே தோண்டிக்கொள்கிறதென்று” எத்துணை உண்மை. இந்த முட்டாள் பாசிசம் தானே நாம் என்ன செய்ய வேண்டுமென்பதை தீர்மானித்தது. அது இதனால் எதை மூடி மறைக்க நினைத்ததோ அது தானாய் வெடித்து விட்டதல்லவா,   “மகிழ்ச்சி என்பது போராட்டமே”, இனி போராட்டங்களை மகிழ்ச்சியாய் தொடர்வோம்.


அடுத்தப்போராட்டத்தில் அந்த குட்டித்தோழரை பார்ப்பதற்கு ஆவலாயிருக்கிறேன். கண்டிப்பாய் வருவீர்களா தோழரே? இன்னமும் எங்கள் தோல்கள் கிழிக்கப்படவில்லையே.

 



 

 

 

 


1.ஒரு பறை… தொடர்ந்து விசில்கள்! மே நாள் போராட்டம் – படங்கள் !!

2.ஈழத்தமிழரை தின்னும் இந்திய தேசியத்தை முறியடிப்போம் ம க இ க மற்றும் அதன் தோழமை அமைப்புகளின் போராட்டம் வெல்க!