05312023பு
Last updateபு, 02 மார் 2022 7pm

போலி இலக்கியவாதிகள் குறித்து டால்ஸ்டாய் கருத்து!

"மனிதர்களின் நலன்சார்ந்த தொடர்பில்லாத எவ்விதமான விஞ்ஞானமும், கலையும் போலிகள் அன்றி வேறில்லை. புதிய புதிய கொலை ஆயுதங்களைக் கண்டுபிடிப்பவர்கள், புதிய பயங்கர வெடிகுண்டுகளால் நாசம் செய்பவர்கள் போல் ஆபாசமாக இசை, நாடகங்கள், நாவல்கள், கவிதைகள் எழுதும் இலக்கியவாதிகள் எல்லோரும் போலிகள். சமுதாயத்தின் விஷ விதைகள்... நோய்கிருமிகள்..."

மேட்டுக்குடிகளின் எலும்புகளுக்காக கவ்வி நின்று...

"சுமையோடும், சலிப்போடும், நரப்பு தளர்ந்து போன மனிதர்களுக்கு கிளுகிளுப்பு கொடுத்து வேற்று சிந்தனைக்கு திருப்பிவிடும் தந்திரத்தை செய்யும் போலிகளை அடையாளம் காணுங்கள்" என்று டால்ஸ்டாய் எச்சரிக்கிறார்.

ரஷ்யாவைச் சேர்ந்த டால்ஸ்டாய் புகழ்பெற்ற எழுத்தாளர். மனித நேயவாதியாவார்.

கி.பி 1886-இல் டால்ஸ்டாய் ´இனி நாம் செய்ய வேண்டியது என்ன´ என்னும் நூல் எழுதியிருந்தார். அந்நூல் உலக இலக்கியத்தில் முக்கியத்துமானது.

லெனினுக்கு மிகவும் கவர்ந்த நூல் அது.

சமூகம் யாரால் எப்படி நடத்திச் செல்லப்படுகிறது அல்லது திசை திருப்பப்படுகிறது என்பதில் இருந்து அக்குவேறு ஆணிவேறாக அலசுகிறார் டால்ஸ்டாய்.

"மூளையின் அணுக்கள் அந்த உயிரின் பொது நன்மையை இலக்காக முன்வைத்து செயல்பட்டால் மட்டுமே பலன் உண்டு. அதற்கு மாறாக சொந்த விருப்பு வெறுப்புகளுக்கேற்பவும் தனக்கு தேவையான சலுகைகளுக்காகவும், பணத்திற்காகவும், தன் சுகத்துக்காகவும் செயலாற்றுகின்ற கலைஞர்களும் விஞ்ஞானிகளும் குதிரைப் பந்தய ஜாக்கிகள், விலைமாதர்கள் போன்றவர்கள்" என்கிறார் டால்ஸ்டாய்.

சமுதாயத்தில் மேட்டுக்குடியினருக்கு ஆதரவாக கோஷமிடும் போலிகளை குறித்து டால்ஸ்டாய் சொல்கிறார்:

பாட்டாளி மக்கள் மற்றும் உழைப்பாளர்களைப் பற்றி நாம் ஆய்வு செய்து நிறைய விவாதிக்கிறோமே தவிர, அவர்களுக்காக நாம் ஊழியம் செய்ய வேண்டிய கடமையுள்ளவர்கள் என்னும் உணர்வு அற்றுப்போய்விட்டது.

அறிவு ஜீவிகளாகிய நாம் இதுவரையில் செய்யத் தவறிய காரியங்களை வேறு யார் யாரோ செய்யப் புகுந்துவிட்டார்கள்.

அறிவாளிகள் யாருக்கும் புரியாத வெகு நுணுக்கமான விஞ்ஞானப் பிரச்சினைகளைப்பற்றி ஆய்வு நடத்திக் கொண்டிருந்த பொழுது பொதுமக்களுக்குத் தேவைப்பட்ட ஆன்மீக உணவை சப்ளை செய்து வர்த்தகம் பார்க்கத் தொடங்கிவிட்டனர் வியாபாரிகள்.

இசை, இலக்கியம், கலைத்துறைகளிலும் இருந்த உதவாக்கரைகளும், போலிகளும் மக்களைத் திருப்தி செய்யவும் ஆரம்பித்துவிட்டனர்.

கடந்த நாற்பது ஆண்டுகளில் (டால்ஸ்டாய் வாழ்ந்த காலத்திய கணக்கில்) மில்லியன் கணக்கான புத்தகங்கள் விற்பனையாகி இருக்கின்றன. ஓவியங்களும், இசைகளும், கலைகளும் மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. அறிவு ஜீவிகள் தங்களுக்குள் கலந்துரையாடல் விவாதத்திலே கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறோம். இதில் நம்மை நாம் வீணடித்துக் கொண்டிருந்துவிட்டோம்.

ஒரு காலத்தில் சர்ச்சு ரஷ்ய மக்களின் ஆன்மீக வாழ்வை நெறிப்படுத்தி வந்தது. ஆனால் தற்போதோ சர்ச்சு ஊழியர்கள் உடலுழைப்புக் கட்டாயத்தில் இருந்து விலகிவிட்டனர். சோம்பேறி வாழ்க்கையை ஆரம்பித்துவிட்டனர். பிறர் உழைப்பை தின்று வாழ்கின்றனர்.

அதேபோல் அரசு மக்களுக்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதிலும் மக்களுக்கு தேவையான பணிகளை செய்வதற்காக அரசு அதிகாரிகளில் இருந்து உடல் உழைப்பு கடமையில் இருந்து விலகினர். சமயத் தொண்டர்கள் போல் அரசு அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் சொகுசு வாழ்க்கை.

இலக்கியவாதி விடுதலை உணர்வு கொண்ட தனிமனிதனாகப் போலித் தத்துவம் பேசி முழங்கி விட்டு விலைமிக்க உணவுகளை உண்டு, சிகரெட், சுருட்டு பிடித்து நண்பர்களோடு அரட்டைகளில் ஈடுபட்டு போதைக்கு குடித்து நடனம் நாடகம் அரங்குகளில் பொழுதை வீணடித்துக் கொண்டிருக்கிறான். தத்துவம் பேசும் கலைஞன் தங்கள் வாழ்நாட்களை குடிபோதையிலும், சீட்டாட்டத்திலும், விபச்சாரிகள் சகவாசத்திலும் பல கலைஞர்கள் மேட்டுக் குடிகளுக்கு கையாள்களாக இருப்பதையும் கண்டு சாதாரண மக்கள் அதிருப்தி காட்டுவதில்லை.

விஞ்ஞானமும், கலைகளும், இலக்கியங்களும் அழகான வஸ்துக்கள் தான். ஒத்துக் கொள்கிறோம். அதற்காக அவற்றோடு இழிதன்மையான ஒழுக்கக்கேட்டைப் பிணைத்துவிடக்கூடாது.

விஞ்ஞானத்தையும், கலைகளையும், இலக்கியத்தையும் படைப்போர் மக்களுக்காக பங்களிக்க வேண்டிய கடமையை மறந்துவிடக்கூடாது.

இலக்கியத்தில் சாதாரண மக்களை பக்குவப்படுத்தி தெளிவடையச் செய்யக் கூடிய படைப்புகளை யாரும் தரவில்லை. பெரிய எழுத்தாளர்களாக கருதப்படுபவர்களின் நூல்களை தூக்கி வைத்துக் கொண்டு விமர்சனம் விவாதம் என்று காலந்தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். மக்களுக்குத் தேவையான சமுக உயர்வுக்கான பயன்தரக்கூடிய நூல்கள், ஓவியங்கள், இசைகள், இலக்கியங்கள் இல்லை.

இப்போது வெளியிடப்படும் நூல்களிலும் சித்திரம் இசை இலக்கியங்களின் படைப்புகளும் மக்களுக்கு தீங்குதரக்கூடியதாகவே இருக்கிறது.

நம்முடைய எழுத்தாளர்கள் அனைவரும் பொதுமக்களின் வாழ்வின் முன்னேற்றத்திற்கு தேவையான சிந்தனைகளை பகிர்ந்திருக்கலாம். ஆனால் இதுவரை செய்யாமல் இருப்பது வியப்புதான்.

எழுத்தாளர்கள் அரசு தரும் வசதி, சலுகைகளுக்கு காத்திருக்காமல் எளிய வாழ்க்கையை மேற்கொண்டு கிராம மக்களுக்கும், உழைப்பாளிகளுக்கும் தேவையான அறிவுக்கருத்தை படைக்க முன்வரவேண்டும்.

அறிவாளிகளும், விஞ்ஞானிகளும், கலை வல்லுநர்களும், எழுத்தாளர்களும் கிராமப்புறங்களில் இருக்கும் மக்களோடு மக்களாக வாழ்ந்திடும் போதுதான் மக்களுடைய மனநிலை கண்ணோட்டம் குறிக்கோள் வாழ்க்கை பற்றிய உணர்வுகளை புரிந்து கொள்ள முடியும்.

மக்களிடம் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தங்கள் சேவைகளை மக்களுக்கு சமர்ப்பிக்க வேண்டும். மக்கள் ஏற்றுக்கொள்வதோ ஒதுக்கிவிடுவதோ மக்களின் உரிமை. ஆனால் மக்களுக்கான சேவை செய்ய வேண்டியது இலக்கியவாதிகளின் கடமை.

இதை நாம் அலட்சியப்படுத்தும் பட்சத்தில் போலிகள் மக்களையும், சமூகத்தையும் நாசம் செய்துவிடுவார்கள்.

தமிழச்சி
21.04.201

 

 

 

0

http://tamizachi.com/index.php?page=echoarticle&rubrique=02&article=2054


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்