12032022
Last updateபு, 02 மார் 2022 7pm

தமிழ்ப்பகுதியில் தொடரும் கடத்தல், கப்பம், கொலை, கொள்ளை, பாலியல் வல்லுறவுகளை செய்பவர்கள் யார்?

ஒருவரும் அப்படி செய்யவில்லை என்பதே, அரசும் அதன் கூலிக்குழுக்களும் சொல்லும் செய்தி. அவை பிடிபடுகின்ற போது, அவர்கள் தங்கள் உறுப்பினரல்ல என்று, அரச கூலிக் குழுத் தலைவர்களின் அன்றாட செய்தி அறிக்கையாகி விடுகின்றது. தம் மீதான எதிரணியின் அவதூறு என்கின்றனர். புலிகள் இருந்தவரை, புலியின் இது போன்ற நடத்தைகளின் பின் தங்கள் இந்தச் செயல்களை பதுக்கி வைத்துக் கொண்டனர்.

எந்தனையோ கடத்தல்கள், கப்பம், பாலியல் வல்லுறவுகள், இன்று சாதாரண  செய்திக்கே வருவதில்லை. அந்தளவுக்கு "வடக்கின் வசந்தத்தின் பெயரிலும்" "கிழக்கு உதயத்தின் பெயரிலும்" ஜனநாயகம் பூத்துக் குலுங்குகின்றது. கடத்தல்கள், கப்பம், பாலியல் வல்லுறவுகள், வெளியில் தெரிய வரவிடாமல், காதும் காதும் வைத்தாற்போல் செய்வதே, இன்று அரச கூலிக்குழுக்களின் இணக்க அரசியலாக உள்ளது.

 

டக்கிளஸ்சின் ஈ.பி.டி.பி., புளட், கருணா கும்பல், பிள்ளையானின் மக்கள் விடுதலைப் புலிகள் முனைப்பாக இதைத் தொடர்ச்சியாக செய்து வருகின்றது. இதில் சில வெளியில் கசிகின்றது. பிடிபடுகின்ற தங்கள் உறுப்பினர்கள், இந்தக் கட்சியின் உறுப்பினராக அம்பலமாகும் போது, அவர் தற்போது எமது அமைப்பில் இல்லை அல்லது எமது உறுப்பினரேயல்ல என்கின்றனர்.

 

பிடிபட்ட நபர் முந்தைய பல விடையங்களை கக்காமல் இருக்க, அவர்களை போட்டுதள்ளுகின்ற வேலையை பொலிஸ்சே செய்கின்றது. கிழக்கில், வவுனியாவில் இப்படி பல நடந்தேறியுள்ளது. இது எதைக் காட்டுகின்றது. கடத்தல், கப்பம், பாலியல் வல்லுறவு… போன்றவற்றில் ஈடுபடுபவர்கள், அரசுடன் ஏதோ ஒரு வகையில் தொடர்புடையவர்கள் என்பதை இது காட்டுகின்றது.

 

யுத்த காலத்தில் காணாமல் போன பல ஆயிரம் பேரின் கடத்தலுடன், படுகொலைகளுடன் தொடர்புபட்டவர்கள் இவர்கள். இதன் பின்னணியில் கப்பத்துக்காக ஆட்களைக் கடத்துவது முதல், கடத்திச் சென்று பாலியல் பலாத்காரங்களை செய்வது வரை, அரசின் துணையுடன்    தான் நடந்தது. அதாவது அரசு, இதை தொழில் ரீதியாக புலிக்கு எதிரான  ஒரு யுத்தமாகவே நடத்தியது. இதை கேள்வி கேட்ட முடியாது. சட்ட விசாரணைக்கு எவையும் உள்ளாகவில்லை. புலனாய்வுத்துறை என்ற பெயரில் கொலைகார கும்பல், கொல்லும் அதிகாரத்துடன் இதை அரங்கேற்றியது. அதுவே இன்றும் தொடருகின்றது. டக்கிளஸ் கடத்தல்காரின் கோயபல்ஸ் கோமாளியாக மாறி, கடத்துபவரை "புலனாய்வுத்துறையா" என்பதை உறுதிசெய்யக் கோருகின்றார். உடனே தன்னுடன் தொடர்புகொள்ளக் கோருகின்றார்.

 

பாசிட்டுகளுக்கே உரிய கோமாளி. வேடிக்கையாக கடத்தல்காரர்களுக்கே, மாமா வேலை செய்கின்றார். தன்னை புலிகள் கொல்ல அலைந்த காலத்தில், அனைவரையும் வரைமுறையின்றி கண்காணித்து பரிசோதித்தவர். இன்று மக்களைப் பாதுகாக்கும் கூத்தை, இதன் மூலம் விளங்கி கொள்ள முடியும்;. கடத்தல், கப்பம், பாலியல் வல்லுறவு செய்பவர்கள், உங்கள் தயவில் உங்கள் குண்டர்களாக, ரவுடியாக உங்களைச் சுற்றி இருப்பவர்கள் மட்டுமின்றி, அரச புலானாய்வுத் துறையிலும் இருப்பவர்கள் என்பது வெளிப்படையான உண்மை.

 

புலிகள் இருந்தவரை, புலிகளின் இது போன்ற நடவடிக்கைகளின் பின் ஒளித்துக்கொண்டு அனைத்தையும் செய்தவர்கள் நீங்கள். இன்று அதை மூடிமறைக்க புலிகள் இல்லை. எம் உறுப்பினரல்ல அல்லது முன்னாள் உறுப்பினர் என்று அறிக்கை விடுவதும், இது தமக்கு எதிராக இட்டுக்கட்டும் எதிரணியின் அவதூறு என்றும் வாய் கூசாமல் வக்கரிக்கின்றனர்.  இப்படியான சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்று காட்ட, அதை மிரட்டி மூடிமறைப்பதன் மூலம் தங்கள் வெள்ளைவேட்டியின் பின் தங்கள் கட்டிய கோமணத்தை மறைக்க முனைகின்றனர்.

 

அரசும் இந்த கூலிக் குழுக்களும் எந்தப் படுகொலைகளையும், கடத்தல்களையம் தாம் இதுவரை நடத்தியதாக ஏற்றுக் கொண்டதே கிடையாது. இன்று நடக்கும் கடத்தல், கப்பம், பாலியல் வல்லுறவுகளையம் அதே பாணியில் மறுக்கின்றனர். கடத்தல், கப்பம், பாலியல் வல்லுறவு அனைத்தும், கற்பனையில் தங்களைத் தாங்களே செய்து விட்டு தம் மீது பழி போடுவதாக கூற முனைகின்றனர்.

 

இந்த அரச கூலிக்குழுக்களின் கடந்தகால நிலை என்ன? மக்களைக் கண்காணிப்பது, அவர்களைக் காட்டிக் கொடுப்பது, கடத்துவது, கொலை செய்வது, கொள்ளையடிப்பதைத் தான், புலிக்கு எதிரான தங்கள் அரசியலாகச் செயதவர்கள். மக்களுக்கு எலும்புத் துண்டை போட்டு, அதை மக்கள் சேவை என்றனர். இன்று தங்கள் மாமா வேலையை, இணக்க அரசியல் என்கின்றனர்.

 

இந்த மாமாக்கள் முன்வைக்கும் இணக்க அரசியல், மக்களுக்கு எதிரானது. இதன் உறுப்பினர்கள், அரச கொலைக் கும்பலின் எடுபிடிகளாக, குண்டர்களாக, ரவுடிகளாக இருந்தவர்கள். புலிகளின் பெயரில் மக்களை மிரட்டி அவர்கள் உழைப்பை தங்கள் கொலைகார அதிகாரம் மூலம் புடுங்கித் தின்;றவர்கள், பெண்களைப் பாலியல் வல்லுறவு செய்தவர்கள், இன்று அதையே தொடருகின்றனர். மகிந்த குடும்ப சர்வாதிகார பாசிசத்தின் கீழ், இணக்க அரசியல் பேசியபடி இதைத் தொடருகின்றனர். இதை மூடிமறைக்க, புலிகள் இன்று இல்லை. மகிந்த குடும்ப சர்வாதிகாரத்தின் எடுபிடிகளாக உள்ள இவர்களுக்கு, இதை மூடிமறைக்க பதவிகளும், அதிகாரங்களும் தான் உள்ளது. பிடிபட்டவனை போட்டுத்தள்ளுவது முதல் அதை மறுப்பதைத் தவிர வேறு வழியில் இதை மூடிமறைக்க முடியாது.

 

பி.இரயாகரன்
02.05.2010         

 


பி.இரயாகரன் - சமர்