இலங்கை தொழிலாளர் வர்க்கத்தின் பணி, தொழிலாளர்களின் வர்க்கக் கட்சியைக் கட்ட போராடுதல் தான். இதுவே இன்றைய உடனடியான அரசியல் பணி. இதுவின்றி இலங்கை தொழிலாளர் வர்க்கம் என்றும் விடுதலை பெற முடியாது. இலங்கையில் ஓடுக்கப்பட்ட மக்கள், தங்கள் தொழிலாளர் வர்க்கத் தலைமை பெறாமல், தங்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக போராட முடியாது. ஏன் பேரினவாதத்தைக் கூட, அது எதிர்கொள்ள முடியாது. ஒடுக்கப்பட்ட தமிழ் தேசியம் கூட, தன் விடுதலையைப் பெறமுடியாது.

 

 

ஒடுக்குகின்ற, சுரண்டுகின்ற வலதுசாரிய பிற்போக்கு சக்திகள் மக்களை தொடர்ந்தும் ஒடுக்குகின்ற அதே நேரம், ஒடுக்கப்பட்ட மக்களின் தலைமையாகவும் தம்மை காட்டி வருகின்றது. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் தலைமையை உருவாக்காத வரை, ஒடுக்கும் வர்க்கங்கள் தான் அனைத்தையும் தீர்மானம் செய்கின்றன. மக்கள் தொடர்ந்து சொல்;லொணாத் துயரத்தை அனுபவிப்பது மட்டுமின்றி, வலதுசாரிப் போராட்டத்தின் பெயரில் அவர்களது துயரங்கள் தவறாக வழிநடத்தப்பட்டு அழிக்கப்படுகின்றது.

 

இந்தவகையில் ஜே.வி.பி முதல் புலிகள் வரை ஒடுக்கப்பட்ட மக்களின் தொழிலாளர் வர்க்க  தலைமைக்கு எதிராக, தங்கள் வலதுசாரிய தலைமைகளை நிறுவின. இவர்கள் வௌ;வேறு போராட்டத்தின் மூலம், கடந்த 40 வருடத்தில் 5 இலட்சம் பேரைப் பலிகொண்டனர். இந்த போராட்டங்கள் மக்களின் எந்த உரிமையையும் பெற்றுத்தரவில்லை. இருந்த உரிமைகளைப் பறித்து, தம்பங்குக்கு அதை அழித்தனர். அத்துடன் ஒடுக்குபவன் மக்களின் உரிமைகளைப் பறித்தெடுக்கும் வண்ணம், காட்டுமிராண்டித்தனமான மக்கள்விரோத பாசிச பயங்கரவாதத்தைக் கையாண்டனர்.

 

சாதாரண மக்கள் இவர்களிடம் தங்கள் கருத்து எழுத்து பேச்சுரிமையை இழந்ததுடன், இரண்டு பக்க ஒடுக்குமுறைகளையும் எதிர் கொண்டனர். விடுதலையின் பெயரிலான மக்கள் விரோத பயங்கரவாதத்தையும், அரச பயங்கரவாதத்தையும் ஒரே தளத்தின் எதிர் கொண்டனர். மக்களுக்கான போராட்டம் என்பது, இப்படி வலதுசாரிப் பாசிசத்தின் பிடியில் சிக்கி, அவை சிதைக்கப்பட்டது. தங்கள் வலதுசாரியத்தை மூடிமறைக்க, மார்க்சியத்ததை பயன்படுத்தியது  முதல், சகல ஒடுக்குமுறைகளைப் பற்றிப் பேசினர். ஜே.வி.பி முதல் புலிகள் வரை, அதை விதவிதமாக முன்வைத்தனர். அதேநேரம் ஒடுக்கப்பட்ட தொழிலாளர் வர்க்க அரசியலை கண்ட மாத்திரத்தில், அவர்களை அழித்தனர். இதன் மூலம் தங்கள் பாசிசத்தை அடிப்படையாக கொண்ட மக்கள் விரோதக் கூறுகளையே, விடுதலைக்கான வழியாகக் காட்டினர்.

 

கடந்தகாலத்தில் இலங்கையில் ஆயுதம் ஏந்தி, எம்மைச் சுற்றி நடந்த எதிர்ப்புரட்சி அரசியல் வரலாறு இதுவாகும்.

 

சண்முகதாசன் தலைமையிலான கட்சி, ஒரு தொழிலாளர் வர்க்க தலைமையை அடிப்படையாக கொண்டு உட்கட்சிப் போராட்டத்தின் பின் 1960 களில் தோற்றம் பெற்றது. 1970 வரையான இதன் அரசியல், வர்க்கத் தலைமையையும் வர்க்கப் போராட்டத்தையும் முன்னெடுக்கத் தவறியது. இதனால் இது ஒரு வர்க்கக் கட்சியாக, இலங்கையின் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக தன்னை உருவாக்க முடியாமல் போனது.

 

இதனால் ஜே.வி.பியும், தமிழ்த்தேசிய இயக்கங்களும், இதற்கு உள்ளிருந்தும் வெளியிலும் தோன்றியது. இலங்கையின் வர்க்க முரண்பாட்டையும், சமூக ஒடுக்குமுறையையும் சண் கட்சி நிராகரித்த போது, அதற்கு கட்சி தலைமை தாங்க முடியவில்லை. அவை தனக்கான புதிய அரசியல் தலைமைகளைத் தேடிக்கொண்டது. சண்னின் கட்சி, ஒரு வர்க்க கட்சியாக வரலாற்றில் நீடிக்க முடியவில்லை.

 

மறுதளத்தில் ஜே.வி.பியும், தமிழ்தேசிய இயக்கங்கள் அனைத்தும் மார்க்சியத்தைப் பேசியபடிதான், தம் தலைமையை நிறுவிக்கொண்டனர். இதன் மூலம் துயரமான அழிவுகரமான போராட்டங்கள் உருவாதற்கு காரணமாகியது. இதற்கு சண் தலைமையிலான கட்சியின், வர்க்க தலைமையற்ற போக்குத்தான் காரணமாகியது.. இதன் பின் இதில் இருந்து பிரிந்த, இன்றைய புதிய ஜனநாயகக் கட்சிகள் கூட வர்க்க தலைமையை உருவாக்கவில்லை. கட்சியின் பெயரில் மார்க்சியம் பேசும் பிரமுகர்களையே அது உருவாக்கியது.

 

ஜே.வி.பி. மற்றும் தமிழ்தேசியத்துக்குள் இருந்தும், வெளியில் இருந்தும் உருவான புரட்சிகரமான தொழிலாளர் வர்க்கத் தலைமைகளை, இந்தக் குழுக்களை காலத்துக்குகாலம் இனம்கண்டு அழித்தனர். இப்படி வர்க்கத் தலைமை என்பது இலங்கையில் இல்லாமல்போனது.

 

இன்று இலங்கையில் வலதுசாரி அரசியலுக்கு வெளியில், தொழிலாளர்களை அணிதிரட்டும் வர்க்க கட்சியும், அதற்கான தலைமையும் கிடையாது. ஜே.வி.பி இனவாத கட்சியாக மட்டுமின்றி வர்க்கத் தலைமையை கருவறுக்கும் தேர்தல் கட்சியாகவே உள்ளது. சதிகள் மூலம் அல்லது வலதுசாரி ஆட்சியாளர்களுடன் சேர்ந்து ஆட்சியைக் கைப்பற்றும் சதியை, புரட்சியாக நம்பும் ஒரு கட்சி. இதை மார்க்சியத்தின் பெயரில் அது செய்ய முனைகின்றது.

 

அடுத்தது புதிய ஜனநாயக கட்சி, ஒரு வர்க்கக்கட்சியல்ல. மா.லெ.மாவோ சிந்தனையைப் பேசி, மக்களை ஏமாற்றும் பிரமுகர் கட்சி. தேர்தல் சாக்கடையில் மூழ்கி எழும் கட்சி. அண்மையில் தேர்தல் சாக்கடையில் மூழ்கி எழுந்தவர்கள். அவர்கள் தங்கள் கோட்டை என்று சொன்ன நுவரெலியா மாவட்டதில், பெற்ற வாக்கு 235 தான். கடந்த 30 வருடமாக, இவர்கள் வர்க்கப் புரட்சி செய்த மாவட்டம்;. இவர்கள் வடக்கில் (யாழ்குடாவில்) பெற்றது 1038. இந்த வாக்கு எல்லாம் தங்கள் பிரமுகத்தனத்தின் எல்லைக்குள்ளும், பழம் பெரும்சாளிகளின் முகத்துக்கும் கிடைத்த வாக்காகும். இந்த வகையில் மகிந்தாவின் அனுசரணையுடன், திடீர் தலித்தியம் பேசி தேர்தலில் நின்ற தலித் சாதிப் பிரமுகர் மற்றும் பழம் தலித் சாதியப் பெருச்சாளிகள் பெற்ற வாக்கு 1161யாகும். இப்படி புதிய ஜனநாயக கட்சி, தலித்தியப் பிரமுகத்தனத்திற்கு  எந்த வேறுபாடுமின்றி, அவர்கள் அரசியல் வங்குரோத்தைக் காட்டுகின்றது. 1960-1970 களில் சண் கட்சித் தலைமையில் உருவான சாதிய மற்றும் தொழிலாளர் போராட்டத்தின் பின் அது சீரழிந்தபோது உருவான பிரமுகர்கள் மற்றும் பெருச்சாளிகளின் தயவில் தான், இவர்களுக்கு சிறிய வாக்கு கிடைக்கின்றது. இதன் மூலம் மார்க்சியத்தையும் சாதியையும்  வைத்து நக்கிப் பிழைக்கின்றனர்.

 

பிரமுகர் மட்டத்தில் வர்க்க போராட்டம் பற்றி தம்பட்டம் அடிக்கின்றனர். புலத்தில் இருந்து  மே18, இனியொரு, புதுக்குரல்… கோஸ்டிகள் இதற்குள் கானம் பாடுகின்றது. தங்கள் சொந்த பிரமுகத்தனத்தை, இதன் மூலம் அறுவடை செய்ய முனைகின்றனர்.

 

தொழிலாளி வர்க்கம் சுயமாக அணிதிரள்வதற்கும், தன் வர்க்கத் தலைமையை உருவாக்க தடையாக இருப்பது இன்று  எது? "மார்க்சியம்", "முற்போக்கு" "பெண்ணியம்" "தலித்தியம்" முதல் முன்னைய "புலியெதிபுப்பு" அரசியல் வரை, இதற்கு தடையாக மாறி நிற்கின்றது. இவை நாங்களும் நீங்களும் ஒன்று என்கின்றது. புலிக்கு எதிரான கடந்த செயல்கள், வர்க்கம் கடந்து இந்தக் கூத்தை உருவாக்கியது. இதை இன்று தகர்த்தெறியுங்கள். அதை இன்று செய்வது தான், அவசரமான அரசியல் பணி.

 

இன்றைய மே தின அறை கூவல்; என்ன?

 

வர்க்க அரசியல் அடிப்படையில் அணி திரள அறைகூவல் விடுக்கின்றோம். அனைத்து பிரமுகர்களையும், கடந்து சிந்தியுங்கள். மக்களை அணிதிரட்ட, புரட்சிகரமான மார்க்சிய போராட்ட பாரம்பரியத்தை உருவாக்குங்கள். மக்களுக்காக நாம் எப்படி, அவர்களுடன் இணைந்து, எந்த வகையில் போராட முடியும் என்பதை மட்டும் சிந்தியுங்கள். இதற்கு எதிரான அனைத்துத் தடைகளையும் தகர்த்தெறியுங்கள். அதை அம்பலப்படுத்துங்கள்.  

பி.இரயாகரன்
01.05.2010