05252022பு
Last updateபு, 02 மார் 2022 7pm

“சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” – மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன் மற்றும் வை. வன்னியசிங்கம்

இலங்கையின் தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது-மதுரைக் கருத்தரங்கில் ந. இரவீந்திரன்

இலங்கையில் ஆரம்பத்தில் இருந்து ஏகாதிபத்திய நலனுடன் கூட்டமைத்த, ஆளும் சாதித் தேசியமான தமிழ்த் தேசியம் எப்போதும் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்து வந்துள்ளது.

 

மேற்கண்டவாறு தமிழ்நாடு  மதுரை  இறையியற் கல்லூரியில்  “சாதிய சமூகத்தில் தேசிய இனப் பிரச்சினை” எனும் தலைப்பில்  நடைபெற்ற கருத்தரங்கில்  இலங்கையில்   இருந்து   வருகை   தந்திருந்த    கலாநிதி   ந. இரவீந்திரன் அவர்கள் உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தார்.  தமிழ்நாடு இறையியற் கல்லூரியின்  பேராசிரியர் அறிவர். டேவிட்  இராஜேந்திரன்  தலைமையில் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் தொடர்ந்து பேசுகையில், இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் மிக வீறுடன் முன்னெடுக்கப்பட்டது. அதன் பேறாக இந்தியா விடுதலையடைந்த போது  இலவச  இணைப்பாக இலங்கைக்கும் சுதந்திரம் வழங்கப்பட்டது.  அரைக்காலனித்துவ நீடிப்புக்கு எதிராக பின்னர் தேசிய விழிப்புணர்வு ஏற்பட்டது. ஐ.தே.கட்சியில்  இருந்து பிரிந்து உருவாகிய சிறிலங்கா சுதந்திரக்கட்சி சிங்கள தேசிய முதலாளித்துவக் கட்சியாக தோற்றம் பெற்றது. அகில இலங்கை தமிழ்காங்கிரசில் இருந்து உருவாகிய செல்வநாயகம் தலைமையிலான  தமிழரசுக்கட்சி ஆரமபத்தில் தமிழ்த்தேசிய முதலாளித்துவ நலன்களை பிரதிநிதித்துவப்படுத்தியது.  பின்னர் பெருமுதலாளிய வர்க்க நலனை வெளிப்படுத்தி  ஐ.தே.கட்சியுடன் கூட்டுச் சேர்ந்தது. இலங்கையில் உருவான இரு கட்சிகளும் தமிழ்-சிங்கள இனவாதத்தின் அடிப்படையான தந்திரோபாயங்களை முன்வைத்து  தேர்தல் வெற்றிகளை ஈட்டின.

ஆயினும் இலங்கைத் தமிழ்த்தேசியம் பிரதான செல்நெறியாக இருந்தது. குறிப்பாக கம்யூனிஸ்ட்டுக்கள் தனிச்சிங்களச் சட்டத்தை எதிர்ப்பது உட்பட, தேசிய இனப்பிரச்சினைக்கு ஆரோக்கியமான தீர்வுகளை திட்டங்களை முன்வைத்தனர்.  60-களில் கம்யூனிஸ்ட் கடசியின் (சண்தலைமை) வழிகாட்டலில் தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் சாதியத் தகர்ப்புப் போராட்டங்களை முன்னெடுத்தது. யாழ்ப்பாணத்தில் அனைத்து சாதியினரையும் ஐக்கியப்படுத்தியது போன்றே, முழு இலங்கை சார்ந்த ஐக்கியத்தையும் கட்டியெழுப்பிற்று. அந்தவகையில் தலித்மக்களின் விடுதலைப்போராட்டம் இலங்கைத் தேசியத்தின் பகுதியாக இருந்தது. அப்போது தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்தோர், அதற்கு எதிராகவே செயற்பட்டனர். அவர்கள் பிரிவினையை முன்வைத்தபோது, தலித்மக்களின் முன்னேறியோர், மற்றும் கம்யூனிஸ்ட்டுக்கள் அதனை நிராகரித்தனர். உயர்சாதித் தேசியத்திற்கு எதிரானதாக தலித்தேசியம் இலங்கையில் அமைந்தது.

ஆரம்பத்திலிருந்து ஏகாதிபத்திய  நலனுடன்  கூட்டமைத்த ஆளும் சாதியத் தேசியமான-தமிழத்தேசியம் மக்கள் விடுதலை நாட்டம் அற்றதாகவே இருந்தது. அவ்வகையில் 30-வருட யுத்தமும்  ஏகாதிபத்திய நலன் கொண்டமைந்து  இறுதியில் தோல்விக்கே சென்றடைந்தது. ஆனால் எதிர்காலத்தில் தமிழ்மக்களின் விடுதலையானது புரட்சிகர வெகுஜனப் போராட்ட மார்க்கத்திற்கு ஊடாக, முழு மனிதகுல விடுதலையுடன் இணைந்த தனது விடுதலையைக் கண்டடையும்.

இவ்வுரை மீது ஏற்பும் மறுப்புமான காத்திரமான கருத்தாடல் இடம்பெற்றது.  “வீரம் செறிந்த முப்பது வருடப் போரை”  சரியாக வெளியிடவில்லை என்ற ஆதங்கம் பிரதானமாகத் தொனித்தது.இதற்கு பதிலளித்து தொகுப்புரை வழங்கிய இரவீந்திரன்,  புலிகளின் கடந்த 30-ஆண்டுகாலப் போர்,  அதன் ஊடான போராளிகளின் தியாகத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை.  அத்தியாகத்தை நான் மதிக்கின்றேன்.  அவர்கள் மாவீரர்கள்தான்.  ஆனால் நான் அதை ஓர்  தேசிய விடுதலைப் போராக கணிக்கவில்லை என்றார்.  ஆரம்பத்தில் தமிழ்த்தேசியத்தை நிராகரித்த இந்தியா 1977-ன் பின்னர் ஜே.ஆர். அமெரிக்காவிடம் இலங்கையைக் கையளிக்க முயன்றபோது தமிழ் இளைஞர் இயக்கங்களையும், போராளிகளையும் வளர்த்தெடுத்தது. அதன் பின்னரான முப்பது வருடச் செல்நெறி, இலங்கையை இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் போக்கிலேயே அமைந்தது. 1987-வரை நடந்த போராட்டத்தின்  பேறாக  ராஜீவ்-ஜே.ஆர்.  உடன்பாடு நிறைவாக்கப்பட்டு   இலங்கை அரசியல், பொருளாதார ரீதியில் இந்தியாவினால்  கட்டுப்படுத்தப்பட்டது. பிந்திய 20-வருடங்களில் புலிகளின் வளர்ச்சியை அனுமதித்தபோது, சிங்கள-அரசு இந்தியாவை நாட நீர்ப்பந்திக்கப்பட்டது. சிங்கள மக்களுக்கு இந்திய அனுசரனையின்றி  இலங்கை அரசியலில் எதுவும் செய்ய முடியாதென்ற உணர்வு நிலையை ஏற்படுத்தி, அதன்பின் புலிகளுக்கான சகல வழங்களையும் புலிகள் பெற முடியாமல் ஆக்கப்பட்டு, சென்ற ஆண்டின் மேமாத நடுப்பகுதியில் அவர்கள் முற்றாக முறியடிக்கப்பட்டனர்  எனக் குறிப்பிட்டார்.

புலம்பெயர் மக்களின் அரசியல் வாழ்வியல்  – வை. வன்னியசிங்கம்

அடுத்து புலம்பெயர் மக்களின் அரசியல் – வாழ்வியல்  பற்றி பிரான்ஸில் இருந்து வருகை தந்திருந்த வை. வன்னியசிங்கம்  உரையாற்றும் போது கடந்த 30-ஆண்டுகளுக்கு மேலான புல அரசியலின் சகல செயற்பாடுகளும்  புலம் பெயர்வில் பிரதிபலித்துக்கொண்டே இருந்தது.  சகல இயக்கங்களும் எப்படிச் செயற்பட்டனவோ, அப்படியே புலம்பெயர்விலும் செயற்பட்டன.  புலிகள் ஏனைய இயக்கங்களை அழித்தபின்னும் அதே வேலைமுறை அங்கும் தொடரப்பட்டது. அதன்பின் புலிகள் இயக்கத்தை விடுதலைப் போராட்ட இயக்கம் என்றதற்கு அப்பால், சர்வதேச நிதிநிறுவனக் கம்பனியாக மாற்றியதில் புலம்பெயர் சமூகத்தின்  பங்கும் பலமானதே.  புலம்பெயர் சமூகத்தின் இச்செயற்பாட்டால், புலிகள் இயக்கத்தின் சர்வதேசத் தலைமை மே 18-ற்குப் பின் இருக்கும் சொத்தை பாதுகாக்கவும், அதை பங்கிடும்  போரிலேயே ஈடுபட்டுள்ளன.  இதைத்  திசை திருப்பவே நாடுகடந்த தமிழ்ஈழம், வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கு வாக்களிப்பு என்ற நடவடிக்கைகளுக்கு ஊடாக புலம்பெயர் சமூகத்தில் வலம் வருகின்றார்கள்.

புலிகளின் முள்ளிவாய்க்கால் அழிவின் பின்  நாடுகடந்த தமிழ்ஈழம் பற்றியோ, வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் வாக்களிப்பு பற்றியோ, தமிழ் மக்கள் கண்டு கொண்டதேயில்லை. கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்மக்கள் இவர்களையும் இவர்களின் போலி அரசியலையும், இனங்கண்டு நிராகரித்துள்ளார்கள். கடந்த தேர்தலில் இவர்களின் தொங்குதசையாக செயற்பட்ட (புலம்பெயர் புலிகளின்) காங்கிரசையும்,  தமிழ்ஈழக்கோரிக்கையும் கடந்தகாலப் பட்டறிவின் ஊடாக தமிழ்மக்கள் தூக்கியெறிந்துளார்கள். சமகால புலம்பெயர் புலிகளின் நாடுகடந்த “தமிழ்ஈழத்தை” ஒட்டுமொத்தப் புலம்பெயர் தமிழ்மக்களின் அபிலாசையாக செயற்பாடாக நான் கருதவில்லையெனகக் குறிப்பிட்டார்.

 

இவ்வுரை மீதும் ஏற்பும் மறுப்புமான காரசாரமான கருத்தாடல் இடம்பெற்றது.  தமிழ்ஈழம்  பற்றியும், அதையொட்டிய கருத்துக்களுக்கும் பதிலளித்து கருத்துரை வழங்கிய வன்னியசிஙகம்,  தமிழ்ஈழம் என்பது முழுத் தமிழ்ப்பேசும் மக்களின் பூகோள-அரசியல்-பொருளாதார அபிலாசைகளின் பாற்பட்ட ஒன்று அல்ல, தமிழ்பேசும் மக்கள் தமிழ்-முஸ்லீம்-மலையகம் என்ற தேசிய இனங்களாகவும், வடபகுதியின் தமிழ்மக்கள் மத்தியில் மூன்றில் ஒரு பகுதியினர்  ஒடுக்கப்பட்ட தலித்மக்களாகவும் உள்ளனர். அத்தோடு கிழக்கு மாகாணம் தேசிய இனப்பிரச்சினையின் குவிமையமாக உள்ளது. இங்கு சிங்கள-தமிழ்-முஸ்லீம் என்ற மூவின மக்கள் வாழ்கின்றார்கள். இதில் புலிகள்  முஸ்லிம் மக்களையும், மலையக மக்களையும் இன்றும் ஓர் தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவேயில்லை. எனவே புலிகளின்தோ அல்லது ஏனைய தமிழ்த் தேசியவாதிகளினதோ  “தமிழ்ஈழம்”  இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது எனவும், புலிகள் எப்போது சமதான ஒப்பந்தத்திற்கு வநதார்களோ, அன்றே அவர்களும் தமிழ் ஈழததைக் கைவிட்டுவிட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.

 

http://www.psminaiyam.com/?p=4972

 


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்