கொடுமையிலும் கொடுமை. போராடச் சென்றவர்களுக்கு நடந்த கதைகள் இவை. மானிடத்தை நேசித்தவர்களுக்கு சிறையும் சித்திரவதையும் மரணமும் பரிசாகக் கிடைத்தது. இதை மூடிமறைத்து விட்டதே எம்மை சுற்றிய கடந்த "முற்போக்கு" வரலாறு. மரணித்தவர்களின் நிழல்கள் கூட மானிடம் தெரிந்து கொள்ள முடியாத வண்ணம் அதை அமுக்கிவிட்டு, மீள புரட்சி மார்க்சியம் பேசும் முன்னாள் புளாட் தலைவர்கள். யாரோ ஒருவன் இந்த கொலைகாரக் கும்பலின் வக்கிரத்ததை, சமூக நோக்குடன் எழுதி வெளியிட்ட ஆவணம் தான் இது.

ஆனால் இது, எதிர்ப்புரட்சி வரலாற்றில் மூடி மறைக்கப்பட்டுக் கிடந்தது. அதை நாம் இன்று புதை இருளில் இருந்து மீட்கின்ற போது, அவர்களுக்கு நடந்ததையையும், அதை மூடிமறைப்பதையும் கண்டு கோபம் எல்லையற்ற உணர்ச்சியாகின்றது. இதற்கு தலைமை தாங்கியவர்கள், இன்றும் கள்ள மௌனங்களுடன் தான், மூடிமறைப்புகளுடன் தான், புதுசாக புரட்சி வே~ங்கள் போடுகின்ற மனித விரோதக் கூத்தையும் நாம் பார்க்கின்றோம்.

 

இன்று இதையும், நாங்கள் தான் வெளிக்கொண்டு வருகின்றோமே ஒழிய அவர்கள் அல்ல. இது போல் பலவற்றை தெரிந்து கொண்டவர்கள், இதற்கு உதவியவர்கள், இதைத் தெரிந்து கொண்டவர்கள், என்றும் எவரும் இதைப் பேசவில்லை. இது போன்ற பல ஆவணங்கள் வெளிவராத வண்ணம், அதை இன்று திட்டமிட்டு புதைக்கின்றனர்.

 

இந்த ஆவணத்தில் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், நடந்;த ஒரு உட்கட்சிப் போராட்டத்தையும் இது உள்ளடக்கியிருப்பதுதான். உட்கட்சிப் போராட்டத்தை நடத்தாது ஓடிப்போன தீப்பொறியைப் போல் அல்லாது, இது தனித்துவமாக ஒரு உட்கட்சிப் போராட்டத்தை நடத்தியது. இதை நடத்தியவர்களுக்கு நடந்த கதியைத் தான் "புளாட்டில் நான்" என்ன தொடரை எழுதும் சீலன் (பார்க்க ) கதையாகும். அவர் இந்த வதைமுகாமில் வதைபட்டதோடு, இன்றும் அதற்காக  தொடர்ந்து மருத்துவம் பெறுகின்றார். தேசபக்தனைச் சேர்ந்த தோழர் ஒருவர் (இந்த ஆவணத்தில் அன்ரன்) உடல் முழுக்க வதையின் துயரங்களோடு. இதற்கு நாம் பெரும் தொகையான நிதியை, மருத்துவ உதவியை முன்னின்று செய்தோம்;. அதற்கு சமூக பொறுப்புடன் நிதி வழங்கியவர்கள் பட்டியலை இங்கு தருகின்றோம். இங்கு இதை அழுத்திப் பார்க்கவும். இந்த நிதி உதவியை கூட செய்ய மறுத்து, அவதூறு பொழிந்து அதைக் கொச்சைப்படுத்தியவர்கள், இந்த வதைகளுக்கு தலைமை தாங்கிய முன்னாள் மத்திய குழு உறுப்பினர்கள் தான்.

 

நாம் அனைத்தையும் அரசியல் நீட்சியாக புரிந்துகொள்ள வேண்டும். யார் அவர்களுடன் தொடர்ச்சியாக நின்றார்கள் என்பதைத் திரும்பிப் பார்க்கவேண்டும். கடந்தகாலத்தை மூடிமறைத்தபடி, இன்று திடீர் புரட்சி பேசுவது பம்மாத்து பேர்வழிகள். வரலாற்றில் மக்களுக்காக நின்றவர்களை, அவர்களுடன் தொடர்ந்து போராடியவர்களையும் இனம் காண்பது எதிர்காலத்தின் சரியான அரசியல் வழிக்கு உதவும். 

 

காணாமல் போனவர்கள், கடத்திச் சென்று காணாமல் போனவர்கள், கைது செய்த பின் காணாமல் போனவர்கள் என்ற பல ஆயிரம் பேரின் வரலாறே இன்று எம்மோடு புதையுண்டு கிடக்கின்றது. உறவினர்கள் தம் உறவுகளைத் தேடி அலைந்து களைத்துப் போய், மனதுக்குள்ளாகவே புதைத்து வைத்துக்கொண்டு அழுகின்றனர். கனவு கண்டு புலம்புகின்றனர்.

 

1987ம் ஆண்டு இனம் தெரியாத நபர்களாக மாறிய புலிகள், என்னைக் கடத்திச் சென்றபோது, என் தாய் உலகறிய கதறினாள். என் தாய், என் உறவினர் அலையாத, சந்திக்காத "பெரிய" மனிதர்கள் கிடையாது. புலித் தலைவர்களின் காலில் வீழ்ந்து கதறியழுதனர். இதன் போது புலிகளின் அன்றைய யாழ் மாவட்ட தளபதியாக இருந்த ராதாவின் காலில் வீழ்ந்த போது, அந்த நாய் என் அம்மாவின் முகத்தில் காலால் உதைந்து விட்டே சென்றது. அப்படிச் சென்றவன்தான், அன்றே மரணமானான். இதுபோல் இராணுவ ஊடுருவல் தாக்குதலில்; கொல்லப்பட்ட சங்கர் என்ற பொறுக்கி, என் அம்மாவை "வேசை" என்று திட்டித் நாயைப் போல் துரத்தியடித்தவன்தான்.

 

இப்படி புலிகள், அரசு, இயக்கங்கள் நடத்திய வெறித்தனமான மக்கள் விரோத செயல்கள் சொல்லிமாளாது. காணாமல் போனவர்களும், அவர்களைத் தேடி அலைந்த உற்றார் உறவினர்கள் சந்தித்த அவமானங்கள், அவலங்கள், துன்பங்கள் எல்லையற்றது. எம் வரலாற்றில் இவை  தெரிந்து கொள்ள முடியாத வண்ணம், இருட்டில் புதைந்து கிடக்கின்றது. அன்றும் சரி இன்றும் சரி இந்த அவலத்தை சந்தித்தவர்கள், எல்லையற்ற மனித துயரத்துக்குள்ளானவர்கள்.  அன்று இதைத் தெரிந்து கொண்ட தோழர்கள், தன் நண்பனுக்கும் தன் தோழர்களுக்கும் நடந்த சிலவற்றை பதிவாக்கினர். இப்படி சிலரின் துணிச்சல் மிக்க சமூகப் பொறுப்புள்ள செயல்கள் அனைத்தும், பிந்தைய சமூகப்பொறுப்பற்ற "முற்போக்கு" புல்லுருவிகளால் அழிக்கப்பட்டன. எதுவும் நடவாத கபட வே~ங்களுடன், கபடதாரிகளாக மாறி, கடந்த வரலாற்றையே குழிதோண்டிப் புதைத்து அனைத்தையும் அழித்துவிட்டனர்.

 

இந்த நிலையில் பல தோழர்கள் சேர்ந்து, கடந்தகால வரலாற்றை நாம் ஆவணப்படுத்த முனைகின்றோம். அதை சமூகத்துக்கு முன்கொண்டு செல்லும் அவசியத்தையும், அதன் அரசியல் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தி ஒரு "தமிழ் தேசிய ஆவணச் சுவடிகள்" www.tamilarangam.net "  என்ற இணையத்தைத் தொடங்கினோம். இதுதான் இந்த ஆவணத்தையும் மீட்டது.

 

இந்த ஆவணச் சுவடிகள் என்ற முயற்சிக்கு எதிராக பல அவதூறுகள். முன்னாள் கொலைகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள், கடந்த வரலாற்றை இன்று வரை மூடிமறைத்தவர்கள் முதல் பலர், இதற்;கு எதிராக வி~மப் பிரச்சாரத்தை ஒருபுறம் கட்டமைக்கின்றனர். மறுபக்கத்தில் எதிர்பாராத வண்ணம், பல தளத்தில் இருந்து ஆதரவு தொடர்ந்து கிடைக்கின்றது. பல கிடைத்தற்கரிய முன்னைய ஆவணங்கள், தொடர்ந்து கிடைத்து வருகின்றது.

 

இந்த வகையில் புளாட்டின் வதைமுகாமில் நடந்த சில விடையங்கள், அதைச் செய்தவர்கள் யார் என்ற விபரங்கள், பாதிக்கப்பட்டவர்கள் விபரங்கள் உள்ளங்கிய 17 பக்க இந்த ஆவணமும் கிடைத்தது.

 

இதை நாம் வாசித்த போது அதிர்ந்து போனோம்;. யாரும் பேசாத ஒரு செய்தி. இந்த வதை செய்வதில் நேரடியாக சம்பந்தப்பட்ட சிலர், இன்று ஐரோப்பாவில் உள்ளனர் என்ற விடையம் இதன் மூலம் மேலும் தெரியவந்தது. குறிப்பாக கவிதா என்ற பெண் தன் தந்தைக்கு என்ன நடந்தது என தேடி எழுதும் குறிப்புகள் சிலவற்றை அண்மையில் எழுதி வந்தார். அவரின் தந்தை தன் தம்பிக்கு என்ன நடந்தது என்று தேடிச்சென்ற போதுதான் அவரும் காணாமல் போனர்.

 

அவரின் தம்பிக்கு என்ன நடந்தது என்பது, இந்த ஆவணத்தில் மிக விரிவாக எழுதப்பட்டுள்ளது. நடந்த திகதி, இறுதியாக அவர் இல்லாமல் போன திகதி என அனைத்தும் இதில் உள்ளது. அவர் எப்படிப்பட்ட சித்திரவதையைச் சந்தித்தார் என்பதை இது தெளிவாக கொண்டு வருகின்றது.

 

தன் தந்தைக்கு இந்தக் கொலைகார புளாட் என்ன செய்திருக்கும் என்பதை, இதன் மூலம் கவிதாவும், அவரின் தாயும் மிகத் தெளிவாக ஊகிக்க முடியும். இதில் சம்பந்தபட்டவர்களை இனம்கண்டு, அவர்கள் மூலம் இதைக் கண்டறிய முடியும். அதை அவர்கள் ஆவணப்படுத்தி அதைச் சமூகம் முன்கொண்டு வரவும் முடியும்.

 

இந்த அமைப்புக்கு அன்று பொறுப்பாக இருந்தவர்கள், தளத்திலும் பின்தளத்திலும் இதை வழி காட்டியவர்கள், இவற்றை எல்லாம் மூடிமறைத்துக் கொண்டு தான் இன்று புது அரசியல் வே~ம் போடுகின்றனர். இதற்காக அவர்களிடம் விளக்கத்தைக் கோர முடியும். அன்று இது போன்ற கொலைகளுக்கும், மக்கள் விரோத செயலுக்கும் எதிராக போராடிய குருபரன் (இன்று உலகச் தமிழ் செய்திகள் இணையம் வைத்திருக்கின்றார்), சிவகுமார் (இன்று ஊடகவியலாளர், சரிநிகர் ஆசிரியர்களில் ஒருவர்) போன்ற பலர், இன்று வரை, இவற்றை மக்கள் முன் பதிவாக்கவில்லை. இவர்கள் அன்று யாரை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்கள் இன்று இவர்களின் தோழர்களாக நண்பர்களாக புதிய அரசியல் கூட்டாளிகளாக இருக்கின்ற நிலையில், இதைப் பற்றி எல்லாம் மக்களுக்கு சொல்வார்களா என்பது கேள்விக்குரியது தான். இன்று இவர்களின் அரசியல் நிலை, இதை மறுதலிக்கின்றது. இப்படிப் பலர். அன்றைய குற்றங்களையும், அதற்கு துணை நின்றவர்களையும், அதை மூடிமறைத்தவர்களையும், அன்று எதிர்த்தவர்கள் இன்றோ மூடிமறைக்கின்ற புதிய சந்தர்ப்பவாத அரசியலே இன்று வேசம் கட்டி ஆட்டம் போடுகின்றது.

 

மக்களுடன் தங்கள் கடந்தகாலத்தைப் பற்றிப் பேச மறுத்து, அங்கு நடந்ததை வரலாற்றின் முன் வைப்பதை மறுத்து, அதை மூடிமறைத்து செயல்படுவதோ, மக்களுக்கு எதிரானது. மக்கள் கடந்த வரலாற்றை சுயமாக தெரிந்து கொள்வதன் மூலம், சுயமான சமூக விழிப்புணர்வு ஏற்படுத்துகின்ற சமூகப் பொறுப்புணர்வை நிராகரிக்கின்ற அனைத்தும் படுபிற்போக்கானது. மக்கள் தங்களுக்கு ஏன் இப்படி இவை நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள, கடந்தகால ஆவணங்கள் அவசியமானது. புரட்டுத்தனமான திரிபுகளையும் கடந்து, மக்கள் சுயமாக கற்க வேண்டும். இதை "தமிழ் தேசிய ஆவணச் சுவடிகள்" www.tamilarangam.net" செய்து முடிக்கும். அதற்கான உறுதியும், தெளிவான அரசியல் நிலையும் எம்மிடம் உள்ளது. இதற்கு உங்களிடம் உள்ள ஆவணங்களை, உங்கள் நினைவுகளையும் எம்முடன் பகிர்ந்து தொடர்ந்து ஆவணப்படுத்துமாறு வேண்டுகின்றோம். உங்கள் பங்களிப்பையும், ஓத்துழைப்பையும், குறித்த  ஆவணத்தில் பதிவதைக் கூட, சமூகப் பொறுப்புள்ள வரலாற்று பங்களிப்பாக வரலாறு கொண்டு இருப்;பதை உறுதிசெய்யுமாறு வேண்டுகின்றோம்.  

 

போராடச் சென்றவர்களுக்கு, மனிதத்தை நேசித்தவர்களுக்கு நடந்தது என்ன? 17 பக்கங்கள்; கொண்ட இந்த ஆவணமோ வதைகளும், கொலைகளும், போராட்டமும் பற்றியது. இந்த ஆவணத்தை இங்கு அழுத்திப் பார்க்கவும். "பயிற்சி முகாம்கள் அல்ல வதை முகாங்கள்"

           

இப்படி உங்கள் தந்தைமார், தாய்மார், குழந்தைகள், நண்பர்கள், தோழர்கள், உறவினர்களுக்கு நடந்தது பற்றி, உங்களுக்கு தெரிந்ததை எம்மூடாக ஆவணப்படுத்துங்கள். இல்லை என்றால், அதை நீங்களே செய்யுங்கள். கடந்தகாலத்தில் பலருக்கு என்ன நடந்தது என்று எதுவும் தெரியாது போன குருட்டு வாழ்வில், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை தேடுவது எமது போராட்டத்தில் உள்ளடங்கிய அரசியல் தான். எமது மக்களின் முடிவற்றுப் போன தொடர் அவலங்கள் இவை. இதை அந்த மக்களுடன் சேர்ந்து நின்று கண்டறிவதும், நீதி வழங்கக் கோரி போராடுவதும், அடிப்படையான மக்கள் அரசியலாகும். இதை செய்ய மறுப்பது, இன்று எதிர்ப்புரட்சி அரசியலாகும்.

    
 
பி.இரயாகரன்
14.04.2010