பாசிசம் நாடு தழுவிய அளவில் எப்படி வீங்கிப் போய் உள்ளது என்பதையே, இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றது. தேர்தலுக்கு முன்னும், தேர்தல் அன்றும் ஆளும் கட்சியின் அட்டகாசம் நிரம்பிய தேர்தல் அத்துமீறல்கள் ஒருபுறம் எல்லையற்று வெளிப்பட்டது. மறுபுறம் அரச அதிகாரத்தையும், வன்முறையையும், காடைத்தனத்தையும் பயன்படுத்தி, தங்கள் தேர்தல் வெற்றியை தீர்மானகரமான ஒன்றாக்கியுள்ளனர்.

இது தான் தேர்தல் முடிவு என்பதை, முன் கூட்டியே மகிந்த குடும்ப பாசிசம் தீர்மானித்து இருந்தது. அதற்கேற்ப நடத்திய தேர்தல் தான் இது. இந்த வகையில் முடிவுகள் ஒன்றும் ஆச்சரியமானதல்ல. இதை எந்த வடிவத்தில், எப்படி தங்கள் வெற்றியையும், தங்கள் எடுபிடிகளின் விருப்பு தேர்வையும் தேர்ந்தெடுப்பார்கள் என்பதும் கூட தெரிந்ததுதான். ஆனால் இதை மக்கள் முன் அம்பலமாகாது எப்படி நிலைநிறுத்துவார்கள் என்பது தான், புதிராக இருந்தது. தேர்தலில் தங்கள் பாசிசத்தை எப்படி எந்த வழியில் திணித்து, அதை ஜனநாயகமாக காட்டி, பொது அறிவுமட்டத்தில் இயல்பான ஒரு நடைமுறையாக்கியது எப்படி என்பது தான் இங்கு புதிர் நிறைந்தது.

இந்த வகையில் தேர்தல் என்றால் மோசடிகள் நிறைந்தது தான் என்ற உணர்வை ஏற்படுத்தினர். இது உள்ளடங்கியது தான் ஜனநாயகம் என்ற மனநிலையையும் உருவாக்கினர். சாதாரண மக்களின் மனநிலையில், ஜனநாயகத்தின் அனைத்து அடிப்படையையும் இல்லாததாக்கினர். இதன் மூலம், பாசிசத்தை தேர்தல் நடைமுறையாக்கி, அதையே ஜனநாயகமாக நிலைநாட்டியுள்ளனர். முன்பு புலிப் பாசிசம் தேர்தல் பகிஸ்கரிப்பு முதல் வாக்களிப்பு வரை, எப்படி எந்த வழியில் நிலைநாட்ட முடிந்ததோ, அதையே இங்கும் அரசு கையாண்டது.

இப்படிப் பாசிசம் நிலவும் நாட்டில், பாசிசத்தை மனித உணர்வாக்கி அதைக்கொண்டு மிகப்பெரும்பான்மையின் ஆதரவைப் பெற்று ஒடுக்குவது தான், தனிச்சிறப்பான பாசிச அமைப்பு முறையாகும். பௌத்த பேரினவாதத்தை முன்னிறுத்தி பெரும்பான்மை மூலம், பாசிசத்தை உருவேற்றி அதையே வெற்றியாக்கியுள்ளது.

பாசிசம் நிலவும் நாட்டில், மக்கள் தங்கள் சமூக பொருளாதார மனநிலையின் அடிப்படையில் கூட சுதந்திரமாக வாக்களிப்பது கிடையாது. மாறாக பாசிசத்தின் எடுபிடிகளாக, அவர்கள் மலடாக்கப்பட்டு வாக்களிக்க வைக்கப்படுகின்றனர். இப்படித்தான் இந்தத் தேர்தல் நடத்தப்பட்டது, வெல்லப்பட்டது. முன் கூட்டியே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டது.

இந்தத் தேர்தலில் தனிச்சிறப்பு, தமிழ் பகுதிகளில் பாசிசம் நிலைநிறுத்தப்பட்ட வடிவம் தான். பௌத்த பேரினவாதத்தை அடிப்படையாக கொண்ட அரசு, தமிழ்ப் பகுதிகளில் தங்கள் எடுபிடிகளைக் கொண்டு அடாவடித்தனங்கள் மூலம் தங்களை அங்கும் நிலைநிறுத்தியுள்ளது. இதன் மூலம் கணிசமாக பௌத்த பேரினவாதத்துக்கு, அங்கு ஆதரவு கிடைத்துள்ளதாக காட்டிக் கொள்ளவும் முனைந்துள்ளது.

பௌத்த பேரினவாதத்தை எதிர்த்து தமிழினவாத துரோக சந்தர்ப்பவாதிகளின் முகமூடிகளைக் கூட, தமிழ் மக்கள் ஆதரிக்க முன்வரவில்லை. மக்கள் இவற்றை இனம்கண்டு, தமிழ்மக்கள் பெருமெடுப்பில் வாக்களிப்பை புறக்கணித்துள்ளனர். இது உணர்வுபூர்வமானதல்ல என்ற போதும், இந்தத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அம்சம். இதன் மூலம் தமிழ் மக்கள் முழு சந்தர்ப்பவாதிகளையும் இனம் காட்டி அம்பலப்படுத்தியுள்ளனர். இப்படி தமிழ் மக்களின் மனநிலை, வாக்களிப்பை புறக்கணித்ததின் மூலம் இங்கு வெளிப்பட்டுள்ளது.

மகிந்தாவின் வேட்டியின் தலைப்பைப் பிடித்து தொங்கிய தலித்துக்கள் முதல், மகிந்தாவுக்கு ஜனநாயகத்துக்கு சாமரை வீசி தேர்தல் துதிபாடிய புதிய ஜனநாயக கட்சியின் புரட்சி வரை இங்கு அம்பலமாகியுள்ளது. இதையே தேர்தல் முடிவுகளும், அதைப் புறக்கணித்த மக்களின் மனநிலையயும், மிகத் தெளிவாக அம்மணமாக்கி விடுகின்றது.

இதை ஆதரித்து புலத்தில் கொடிபிடித்த தலித் முன்னணி, மே 18 கும்பல், இனியொருவும் புதுக்குரலும், அடாவடி செய்த பிள்ளையான் எடுபிடிகள் வரை அம்பலமாகின்றனர்.  மக்களை தங்கள் குறுகிய சுயநல அரசியலுக்கு வழிகாட்டிப் பிழைக்க முனைந்த அரசியல் அம்பலமாகியுள்ளது.

இதற்கு வெளியில் இந்தத் தேர்தலில் புரட்சி பேசும் ஜே.வி.பி வரலாற்று முடிவையும் இது வெளிப்படுத்துகின்றது. பௌத்த பேரினவாத அரசுக்கு முண்டு கொடுத்த ஜே.வி.பி. இனவாதம் மூலம், தங்களை பலப்படுத்த இனவாதத்தையே கடந்த காலத்தில் கக்கியது. அதன் அறுவடையை முழுமையாக செய்தது பௌத்த பேரினவாத அரசு. ஜே.வி.பி.யிடம் புரட்சி வசனம் மட்டுமே எஞ்சி, இன்று அதுவும் கூட கந்தலாகிப் போனது.

இலங்கை கொந்தளிப்பான பாசிசத்தின் கெடுபிடிக்குள் மேலும் இறுகியுள்ளது. மக்கள் அநுபவிக்கும் என்றுமில்லாத வண்ணமான ஒடுக்குமுறையையும், சொல்லொணாத் துன்பத்தையும் தான் இந்த தேர்தல் முடிவுகள் வழிகாட்டுகின்றது. மக்கள் போராட்டத்தையும் தான் தங்கள்  எதிர்காலத்தின் வாழ்வாக பெறுவர் என்பதை, இந்த தேர்தல் மூலமும் அரசு தன் முன் கூட்டிய தேர்தல் முடிவுகள் மூலமும் தெளிவாக உறுதிசெய்துள்ளது.

பி.இரயாகரன்
09.04.2010