வடக்கு தமிழ் வர்த்தகர்களும், சர்வதேச மாபியா புலிகளும், யாழ் குடாவில் வர்த்தகம் செய்யும் சிங்கள வியாபாரிகளை பேரினவாதத்தின் அடையாளமாக காட்டுகின்ற வண்ணம் கருத்துகளை பரப்பிவருகின்றனர்.

உண்மையில் சிங்கள வியாபாரிகள் யாழ் சந்தையில் பொருட்களை மலிவாக விற்பதே, இதற்கான அடிப்படைக் காரணமாகும். இதை பேரினவாதத்தின் ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக காட்டுவது, புலியிசமாகும். கடந்தகாலத்தில் தமிழ் வர்த்தகம் யுத்தத்தைப் பயன்படுத்தியும், இயக்கங்களின்; அடாவடித்தமான வரிகளை பயன்படுத்தியுமே கொழுத்தது. தன் பங்குக்கு அறாவிலையில், பொருட்களை விற்று கொழுத்தும் வந்தது.

 

யுத்தம் முடிவடைந்த பின் யாழ்குடாவில் பொருட்களின் விலைகள், மற்றைய பிரதேசங்களுடன் ஓப்பிடும் போது மிக அதிகமாக காணப்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்தி, சிங்கள வர்த்தக சமூகம் மலிவாக சந்தையில் பொருட்களை விற்கத்தொடங்கியது. இதை முறியடிக்கவே, தமிழ் வர்த்தக சூதாடிகள் புலியிசம் மூலம் இந்த நடவடிக்கையை பேரினவாதமாக காட்டத் தொடங்கியுள்ளனர். புலத்து புலி மாபியாக்களோ, அதை மேலும் ஊதிப்பெருக்குகின்றனர். இப்படி சூதாடிகள் கூட்டம், இதை அரசியலாக்க முனைகின்றது.

 

தமிழ் வர்த்தகர்களும், சிங்கள வர்த்தகர்களும் இன்று ஓரே சந்தையில் தான் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர், விற்கின்றனர் என்பது தான் உண்மை. விலையில் ஏற்றத் தாழ்வுக்கு இடமில்லை. கடந்த காலத்தில் விரும்பியவாறு தாறுமாறாக விற்றுக் கொழுத்த தமிழ் வர்த்தக சூதாட்டம், சிங்கள வர்த்தகர்களால் தொடர்ந்தும் கொழுக்க முடியவில்லை என்ற ஆத்திரம், சிங்கள வர்த்தகத்தை இனவாதமாக ஊதிப்பெருப்பிக்கின்றனர்.

 

உண்மையில் சிங்கள் வர்த்தகர்கள் பொருட்களை விற்கும் விலையில், தமிழ் வர்த்தகர்கள் பொருட்களை விற்றால் அவர்கள் விற்பதை நிறுத்திவிடுவார்கள் என்பது தான் உண்மை. இதற்கு மாறாக இந்த உண்மையை மறைத்து, புலியிசத்தின் வழியில் இனவாதமாக காட்டுவ, தொடர்ந்தும் கொள்ளையடிக்கும் கூட்டத்தின் வர்த்தக சூதாட்டமாகும். இதை அரசியல் சூதாட்டமாக்க முனைகின்றனர். 

 

இந்த தமிழ் வர்த்தக சூதாடிகள் உருவாக்கும் புலியிச இனவாதம் மூலம், சிங்கள வர்த்தக பிரிவினருக்கு தங்குமிடம் உட்பட விற்பனை மையங்களையும் மறுத்து வருகின்றனர். இது இயல்பாக இனவாத அரசின் தலையீட்டுக்குள், புறநிலையான இனவாத விளைவுகளை உருவாக்குகின்றது. அரசோ திட்டமிட்ட இனவாத நடத்தையை அடிப்படையாகக் கொண்டது. வர்த்தக சமூகம் வர்த்தகத்;தை அடிப்படையாகக் கொண்டது.

 

தமிழ் மக்கள் கொழும்பு உட்பட சிங்களப் பகுதியில் வர்த்தகம் செய்ய முடியும் என்கின்ற போது, சிங்கள மக்கள் தமிழ் பகுதியில் வர்த்தகம் செய்யும் உரிமை உண்டு. இதை தடுப்பது குறுந்தேசிய புலியிசம் விதைத்த பச்சை இனவாதமாகும்.

 

சிங்கள மக்களை தமிழ் பகுதியில் இயல்பாக வாழும் உரிமையை அங்கீகரிப்பதன் மூலம் தான், திட்டமிட்ட இனவாதத்தை அம்பலப்படுத்தி தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை பெற முடியும். சிங்கள மக்கள் தமிழ் மக்களின் எதிரியல்ல. இனவாதிகள் தான் தமிழ் மக்களின் எதிரி. இதை மறுத்து வர்த்தக சூதாட்டத்தை தொடர விரும்பும் தமிழ் வர்த்தக சூதாடிகள், சிங்கள வர்த்தகர்களை புலியிசம் மூலம் ஒடுக்க விரும்புவது பேரினவாதத்துக்கு நிகரான குறுந்தேசிய வக்கிரமாகும்.

 

யாழ்குடாவில் இன்று கூலித் தட்டுப்பாட்டால் அதிகரித்து வரும் கூலி, சிங்கள கூலிகளை விரைவில் அங்கு வரவைக்கும். யுத்த மீள்கட்டுமானம் இதை பல மடங்காக்கும். இவை இனவாத கூலியோ, குடியேற்றமோ அல்ல. இந்த வகையில் இதைப்புரிந்து கொள்ளவும், இனவாதத்தை பிரித்து பார்க்கவும், புலியிசத்தில் இருந்து விடுபடவும் கற்றுக்கொள்வது அவசியம். இதன் மூலம் தான், இனவாதத்தை இனம்கண்டு போராட முடியும்.

 

இன்று அரசு திட்டமிட்டு நடத்தும் குடியேற்றங்கள், தமிழர் வாழ்விடத்தை அபகரிக்கும் பேரினவாத ஆக்கிரமிப்புகள், திட்டமிட்டு உருவாக்கும் புதிய பௌத்த விகாரைகள் முதல், தமிழ் மக்களின் சுயநிர்ணயத்தை மறுத்து நடைமுறைப்படுத்தும் அனைத்தும் பேரினவாதமாகும்.

 

இந்த வகையில், இதை வேறுபடுத்தி சிங்கள மக்களுடன் ஜக்கியத்தைக் கட்டி, பேரினவாதத்தை எதிரியாக இனம்காட்டியும் போராடவேண்டும். இந்த வகையில் நாம் சமூகத்தைக் கற்று, கற்றுக்கொடுப்பது இன்று அவசரமான அரசியல் பணியாகும். இனவாத புலியிசத்தில் இருந்து விடுபடுவதன் மூலம் தான், சுயநிர்ணயத்தை அடையமுடியும். 

 

பி.இரயாகரன்
02.04.2010