Language Selection

பஸ்தியாம்பிள்ளை குழுவினர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை பிரபாகரனுக்குத் தெரிவிக்க உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர். எம் அனைவருக்குமே பிரபாகரன் இது குறித்து மகிழ்ச்சியடைவார் என்பது தெரியும்.

 

உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் சில நாட்களில் திரும்பி வந்த போது பிரபாகரன் அடைந்த மகிழ்ச்சியை வார்த்தைகளால் விபரிக்க முடியாது என்று என்னிடம் கூறினர். தவிரவும், கணேஸ்வாத்தியின் காட்டிக்கொடுத்த துரோகச் செயலுக்கு அவரைக் கொலைசெய்திருக்க வேண்டும் என்று பிரபாகரன் கடிந்து கொண்டதாகவும் கூறினார்கள். அப்போது இருபத்தி நான்கு வயதை எட்டிப்பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் பிரபாகரனின் தூய இராணுவ வழிமுறை மீதான நம்பிகையில் பஸ்தியாம்பிள்ளை கொலை நிகழ்வு ஒரு மைற்கல்.

மக்கள் எழுச்சியைப் பாதுகாக்கவும், அதனை மேலும் உரமிட்டு வளர்க்கவும் ஆயுதப் போராட்டம் பயன்பட்டிருப்பதாக வரலாறுகள் கூறுகின்றன. ஆயுதங்கள் வெகுஜன எழுச்சியைத் தற்காத்துக்கொள்ளும் கேடயங்களாகப் பயன்பட்டிருக்கின்றன. மக்களின் நிறுவன மயப்பட்ட எழுச்சியைத் தூண்டுவதும், அவ்வெழுச்சி உருவாக்கும் சூழலில் மக்கள் மத்தியில் ஆயுதம் தாங்கிய கெரில்லாக்கள் தம்மை வலுப்படுத்துவம் வெற்றியின் இன்னொரு அம்சம். கடந்த அரை நூற்றாண்டு காலம் உருவாக்கிய சிந்தனைப் போக்கு ஈழத்தில் மட்டுமல்ல, அதிகாரமும் அடக்குமுறையும் கோலோச்சுகின்ற எந்த நாட்டிலும் மக்களைச் சாரா ஆயுத அமைப்புக்களே ஆதிக்கம் செலுத்தின. இராணுவ வெற்றிகளின் இறுதியில் இவ்வமைப்புகள் எல்லாம் தோற்றுப் போய் சரணடைந்திருக்கின்றன. சோமாலியாவில், இந்தோனேசியாவில், காஷ்மீரில், பங்களாதேஷில், இலத்தினமரிக்க நாடுகளில், கிழக்காபிரிக்காவில் எல்லாம் இது ஒரு சாபக்கேடு போல மக்களை அழித்துப் போராட்டங்களையும் அழித்துக் காட்டிக்கொடுத்திருக்கிறது.

சமூக உணர்வு கொண்டவர்களும், தேசப்பற்றாளர்களும், ஜனநாயக வாதிகளும் ஆயுதங்களின் மீதும் தூய இராணுவவாதத்தின் மீதும் நம்பிக்கை கொண்டிருந்தவர்களாகவே வாழ்ந்த வரலாறுகள் துன்பகரமானவை. பிரபாகரன் என்ற தேசப்பற்று மிக்க இளைஞனின் ஒட்டுமொத்த சிந்தனையும், செயற்பாடும் போராட்டத்தை நோக்கியே ஒருமுகப்பட்டிருந்தது. தனது சுய லாபத்தையோ, சுய விளம்பரத்தையோ அனறு அவர் முதன்மைப்படுத்தியதில்லை.

70 களின் சூழல் வடகிழக்கில் பொருளாதார அபிவிருத்தியும் அதனோடு கூடவே இயல்பான தாராள வாதக் கலாச்சாரமும் துளிர்விட்டடிருந்தது. வடகிழக்குப் பெண்கள் ‘மினி ஸ்கேட்’ அணிவது கூட சமூக வழமையாகியிருந்த கலாச்சார மாற்றம் துளிர்விட்டிருந்த காலமது. சுப்பிரமணியம் பூங்கா இளம் காதலர்களால் நிரம்பி வழிந்தது. பிரபாகரனின் வயதை ஒத்த மத்தியதர வர்க்க இளைஞர்கள், உருவாகி வளர்ந்து கொண்டிருந்த அந்தக் கலாசாரத்தை நுகர்ந்து கொண்டிருந்த வேளைகளில் பிரபாகரனுக்கு இயந்திரத் துப்பாக்கி மீது அளவற்ற காதல் ஏற்பட்டிருந்தது. தமிழீழத்தை எப்போதாவது அடைந்தே தீருவோம் என்று தீர்க்கமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

கைப்பற்றப்பட்ட துப்பாக்க்கியைத் தன்னுடனேயே வைத்துக்கொண்ட பிரபாகரன், அடிக்கடி அதைத் தொட்டுப்பார்த்துக் கொள்வார். குழந்தைகள் போல தன்னோடு வைத்துக்கொண்டே உறங்கச் சென்றுவிடுவார். சில வேளைகளில் நள்ளிரவு கடந்த வேளைகளிலும் திடுமென எழுந்து உட்கார்ந்து கொண்டு துப்பாகியைச் சுத்தம் செய்து கொள்வார். எங்கள் உறக்கத்தைக் கலைத்து இயக்கத்தின் அடுத்த நடவடிக்கைகள் குறித்துப் பேசுவார். நாம் ஒரு இராணுவக் குழுவைக் கட்டமைத்து விடுவோம், தமிழ் ஈழம் கிடைத்துவிடும் என்ற கருத்தில் துளியளவும் குலைந்து போகாத நம்பிக்கை வைத்திருந்ததார்.

பஸ்தியாம்பிள்ளை உட்பட்ட இரகசியப் பொலீசாரைக் கொலைசெய்த நிகழ்வு எமக்கு மட்டுமே தெரிந்திருந்ததது . இலங்கை அரசிற்கு அவர் கொல்லப்பட்டாரா, தலைமறைவானாரா, விபத்தில் சிக்கிவிட்டாரா என்பதெல்லாம் மர்மமாகவே இருந்தது இலங்கை முழுவதும் தேடுதல்களும், திடீர்ச் சோதனைகளும் அதிகரித்திருந்தன. இலங்கை அரசு அதிர்ந்து போயிருந்தது. அரச படைகளைப் பொறுத்தவரை கனகரத்தினம் கொலைமுயற்சியின் தாக்கத்திலிருந்து இன்னமும் மீட்சியடையாத நிலையில் இன்னொரு மூன்று முக்கிய பொலீஸ் அதிகாரிகள் குறித்த மர்மம் நீடித்தது.

இந்த மர்மம் நீண்டகாலம் நீடிக்கவில்லை. ஏதோ வழியில் அரச படைகள் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைகளை அறிந்துவிடுகின்றனர். சம்பவம் நிகழ்ந்து சரியாக நான்கு நாட்களுள் இரகசியப் பொலீசாரின் இறந்த உடல்களைப் பொலீசார் மீட்டதாக 12.04.1978 இல் அனைத்து பிரதான இலங்கை ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருந்தன. அதுவும் எங்கு எப்போது நடைபெற்றது என்ற நுண்ணிய தகவல்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. கொல்லப்பட்டவர்களின் உடல்கள் மீட்கப்படுகின்றன. இலங்கை முழுவதும் ஒரே பரபரப்பு.

வீரகேசரி, தினகரன், டெயிலி நியூஸ் போன்ற தினசரிகளின் தலைப்புச் செய்திகள் இதுவாகத்தான் இருந்தன.

‘வன்செயல் சம்பவங்கள் தொடர்பாக மன்னார் பகுதிக்கு விசாரணை செய்யச் சென்ற இரகசியப் பொலீஸ் உத்தியோகத்தர்கள் நால்வர், துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் கோரமாகக் கொல்லப்பட்டார்கள். மடுவுக்கும், மடுவீதிக்கும் இடையிலுள்ள மூன்றாவது கட்டையிலுள்ள காட்டுப்பிரதேசத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இரகசியப் பொலீஸ் இன்ஸ்பெக்டர் பஸ்தியாம்பிள்ளை, சப்-இன்ஸ்பெக்டர் பேரம்பலம், சார்ஜன்ட் பாலசிங்கம், கான்ஸ்டபிள் சிறிவர்தனா(சாரதி) ஆகியோரே இவ்வாறு கொல்லப்பட்டவர்கள்’ என்று வீரகேசரியின் தலைப்புச் செய்தி அறிவித்தது.

‘ பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் சேபால ஆட்டிகல, வடபகுதி பொலீஸ் மா அதிபர் அனா செனிவரத்ன, இரகசியப் பொலீஸ் அதிபர் நவரட்ணம் ஆகியோர் விசாரணையை முடித்துக்கொண்டு கொழும்பு திரும்பியுள்ளனர். இவ்விசாரணை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் நேற்றிரவு அவர்கள் கையளித்தனர்’ என்று மறு நாள் வீரகேசரிச் செய்தி தெரிவித்தது.

தமிழீழக் கனவிலிருந்த தமிழ்ப் பேசும் மக்கள் ‘பொடியள் கெட்டிக்காரங்கள்’ என்று பரவலாகப் பேசிக்கொண்டார்கள். தலமறைவு வாழ்க்கை நடத்திய நாம் வெளியே சென்று வரும் வேளைகளில் தமிழர்கள் பேசிக்கொள்ளும் போதெல்லாம் மௌனமாய் பெருமையடைந்து கொள்வோம்.அரசபடைகள் எப்படி இந்தத் தகவல்களைப் பெற்றுக்கொண்டார்கள் என்பது எமக்குப் புதிராக இருந்தது. புளியங்குளம் முகாமில் பிரபாகரன் உட்பட மத்திய குழுக் கூட்டங்களை நடத்தினோம். அவ்வேளைகளில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஆராய்வோம்.

விரைவிலேயே தகவல்கள் அரச உளவாளிகளுக்கு தெரிய வந்தது எப்படி என்பதை நாம் அறிந்து கொண்டோம். பதினேழு வயதில் செட்டியின் சாகச நடவடிக்கையால் கவரப்பட்டிருந்த பிரபாகரன் உட்பட நாமெல்லாம் இப்போது செட்டி தான் இந்தத் தகவல்களை இராணுவத்திற்கு வழங்கியிருந்தார் என்று அறிய வந்ததும் சற்று அதிர்ச்சியாகத் தான் இருந்தது. அவ்வேளையில் செட்டி சிறையிலிருந்து திரும்பி சில மாதங்களே இருக்கும். பிரபாகரன் செட்டியோடு எந்தத் தொடர்புகளும் வைத்துக்கொள்ளக் கூடாது என்பதில் நானும் குலமும் ஆரம்பத்திலிருந்தே உறுதியாக இருந்தோம். இந்த விடயத்தில் எம்மிருவராலும் பிரபாகரன் மீது ஆளுமை செலுத்த முடிந்தது என்பது என்னவோ உண்மைதான்.

துரையப்பா கொலையை ஒட்டிய காலகட்டத்தில் பிரபாகரன் எம்மைச் சந்திக்க வந்த வேளையில் செட்டியின் ஆளாகவே அறிமுகமானதால் நாம் தொடர்பு வைத்துக்கொள்வதை நிராகரித்திருந்தோம். செட்டியுடன் உறவுகளை அறுத்துக்கொள்வது என்ற உறுதி வழங்கப்பட்ட பின்னரே நாம் இணைந்து செயற்பட ஆரம்பித்தோம்.

பஸ்தியாம்பிள்ளைக் கொலையில் செல்லக்கிளி அதிரடி நடவடிக்கைகள் எமக்கு உண்மையில் பிரமிப்பாகவே இருந்தது. செட்டி கூட இப்படித்தான். இப்படியான சந்தர்ப்பங்களில் துணிவாகச் செயற்படும் திறமை படைத்தவர். அவரது வாழ்க்கை முழுவதும் குற்றச் செயல்களோடு தொடர்புடையதாக இருந்ததால் தயக்கமின்றி முன்செல்லக் கூடியவர். பலம்மிக்க கட்டுக்கோப்பான இராணுவத்தைக் கட்டியமைப்பதே விடுதலையைப் பெற்றுத்தரும் என நம்பியிருந்த பிரபாகரன், அந்த இராணுவத்தைக் கட்டியமைப்பதில் செட்டி போன்ற துணிச்சல் மிக்கவர்கள். காத்திரமான பங்கு வகிக்க கூடியவர்கள் என நம்பியிருந்தார்.

மக்களின் பலத்தில் தங்கியிருக்காத, தனிமனித சாகசங்களில் நம்பிக்கையுள்ளவர்களைப் பொறுத்தவரை எதிரிக்கும் நண்பர்களுக்கும் இடையேயான இடைவெளி மிகக் குறுகியது என்பதற்கு செட்டி முதல் உதாரணமாக அறிமுகமானவர். இப்போது செட்டி அரசின் உளவாளியாகிவிட்டார் என்பது எங்களைவிட பிரபாகரனுக்கு அதிர்ச்சியானதாக இருந்தது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் செயலாளராகத் தெரிவு செய்யப்பட்டிருந்த எமது மத்திய குழு உறுப்பினர் உமாமகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் அணிச் செயலாளராகச் செயற்பட்ட வேளையில் அதன் மகளிர் அணியின் செயலாளராகவிருந்த ஊர்மிளா என்பவருடன் அறிமுகமாகியிருந்தார். ஊர்மிளா மிகுந்த தேசிய உணர்வுகொண்ட போராளி என்பது தவிர அடக்கு முறைகள் மிகுந்த சமூகத்தில் எமக்கு ஆதரவாகக் கிடைத்த முதல் பெண் என்பது இன்னொரு சிறப்பம்சம். அவருடனான தொடர்புகளை உமா தொடர்ச்சியாகப் பேணிவந்தார். ஊர்மிளாவிற்கு அறிமுகமான பெண் ஒருவருக்கு தொடர்பான இன்னொருவர் இலங்கை உளவுப்பிரிவில் வேலைசெய்து கொண்டிருந்தார். அவரூடாக உளவாளியாக மாறியிருந்த செட்டி சிறிலங்கா இரகசியப் பொலீசாருக்கு எழுதியிருந்த கடிதத்தின் பிரதியொன்று ஊர்மிளாவிற்குக் கிடைக்கிறது. அந்தக் கடிதத்தில் மடுப் பண்ணையில் பஸ்தியாம்பிள்ளையைக் கொலைசெய்த சம்பவத்தின் விபரமும் தொடர்புபட்ட போராளிகளின் பெயர்களும் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்தக் கடிதத்த்தின் பிரதியை கொழும்பு சென்றுவரும் சாந்தன் ஊடாக ஊர்மிளா எமக்குச் சேர்பிக்கிறார். ஆக, செட்டிதான் காட்டிக்கொடுப்பாளன் என்பதை உறுதி செய்து கொள்கிறோம். இனிமேல் இந்த விபரங்கள் எப்படி செட்டிக்குத் தெரிய வந்தது என்று ஊகிக்க எமக்கு நேரமெடுக்கவில்லை. செல்லக்கிளி செட்டியின் ஒன்றுவிட்ட சகோதரர். அவரூடாகத் தான் செட்டி இவற்றை அறிந்திருக்க வேண்டும் என்பது சற்று வெளிப்படையாகவே அனுமானித்துக் கொள்ளக்கூடிய நிலையில், செல்லக்கிளியிடம் இது குறித்துக் கேட்கிறோம். செல்லக்கிளி யாழ்ப்பாணம் சென்ற வேளையில் கள்வியங்காட்டில் செட்டியைச் சந்தித்திருக்கிறார். அங்கு தனது வீரச்செயல்கள் குறித்து செட்டியிடம் பேசியிருக்கிறார். அவரோ செல்லக்கிளி சொன்னவற்றையெல்லாம் எழுதி இலங்கை உளவுத் துறைக்கு அனுப்பியிருக்கிறார். அவர் அனுப்பிய கடிதத்தின் பிரதி இப்போது எம்மிடம் இருந்தது.

நாம் கணேஸ் வாத்தி இல்லாத ஐந்து உறுப்பினர்களாகச் சுருங்கிப் போன மத்திய குழுவை இப்போது அவசரமாகக் கூட்டுகிறோம். ஏனைய பண்ணைகள் குறித்த விபரங்களை செல்லக்கிளி செட்டியிடம் தெரிவிக்கவில்லை என முதலில் உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ஆக,பண்ணையின் கட்டமைப்புக்கள் அனைத்தும் அப்படியே இருக்க மேலதிக நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கிறோம்.

அரசபடைகளுக்கு இப்போது ஒரு தலைமறைவு இயக்கம்ஒழுங்குபடுத்தப்பட்ட வகையில் இயங்கி வருவதாகத் தெரிந்துவிட்டது. கனகரத்தினம் எம்.பி இன் கொலை முயற்சிக்கும் பஸ்தியாம்பிள்ளை குழுவினரின் கொலைக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதாக பாதுகாப்புச் செயலகம் அறிக்கை வெளியிட்டது. எம்மை நோக்கிய அவர்களின் நடவடிக்கைகளும் தீவிரமடைய ஆரம்பித்திருந்தது. இப்போது எதிர்பார்புடனிருந்த தமிழ் மக்களுக்கு எம்மை அறிமுகப்படுத்திக் கொள்ள இது சரியான சந்தர்ப்பம் எனத் தீர்மானிக்கிறோம். இந்த வகையில் நமது அனைத்து நடவடிக்கைகளையும், தாக்குதல்களையும் உரிமை கோருவதாக முடிவிற்கு வருகிறோம்.அந்த முடிவின் அடிப்படையில் துண்டுப்பிரசுர வடிவிலான கடிதம் ஒன்றைத் தயாரித்து பத்திரிகைகளுக்கு அனுப்புவதாகத் தீர்மானிக்கிறோம். அதற்கான பொறுப்பு அவ்வேளையில் செயலதிபராகவிருந்த உமாமகேஸ்வரனிடம் வழங்கப்படுகிறது.

உமாமகேஸ்வரனால் எழுதப்பட்டு அவர் கையொப்பத்தோடு வெளியிடப்பட்ட பிரசுரம் தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது துண்டுப் பிரசுரம். இந்தப் பிரசுரத்தில் நாம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கைகள் அனைத்தும் உரிமை கோரப்படுகின்றன.

துண்டுப் பிரசுரத்தின் முழுமையான விபரம்:

தொடர்புடையோரின் கவனத்திற்கு,

தமிழ்ப் புதிய புலிகள் என்ற ஸ்தாபனத்தின் ஸ்தாபகப் பெயர் 05.05.1976 முதல் மாற்றி அமைக்கப்பட்டு ‘தமிழீழ விடுதலைப் புலிகள்’ என்ற புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பின்வரும் மரணங்களுக்கு நாங்கள் பொறுப்பு ஏற்கிறோம்:

1. திரு.அல்பிரட் துரையப்பா ( யாழ். மேயர், வடபகுதி சுதந்திரக் கட்சி அமைப்பாளர் சுட்டுக் கொலை)

2. திரு என். நடராஜா (உரிமையாளர் பெற்றோல் கராஜ், உரும்பிராய்; கோப்பாய் சுதந்திரக் கட்சி அமைப்பாளர், குண்டு வீச்சு)

3. திரு ஏ.கருணாநிதி, (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை,சுட்டுக்கொலை)

4. திரு. சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ், காங்கேசந்துறை.

(அதே நாளில் சுட்டுக்கொலை)

5. திரு.சண்முகநாதன் (இரகசியப் பொலீஸ் வல்வெட்டித்துறை)

6. திரு. தங்கராஜா (முன்நாள் நல்லூர் சுதந்திரக் கட்சி எம்பீயான திரு.அருளம்பலத்தின் காரியதரிசி)

7. திரு.சி.கனகரத்தினம் (முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணி, தற்போது ஐ.தே.க வில் அங்கம் வகிக்கும் பொத்துவில் எம்.பி)

8. திரு,பஸ்தியாம்பிள்ளை (இரகசியப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்)

9.திரு.பேரம்பலம் (இரகசியப் பொலீஸ் சப் இன்ஸ்பெக்டர்)

10. திரு.பாலசிங்கம் (இரகசியப் பொலீஸ் சார்ஜன்ட்)

11. திரு.சிறிவர்தன(இரகசியப் பொலீஸ் சாரதி)

1978 ஏப்பிரல் ஏழாம் திகதி காலை ஆறு மணியளவில் பஸ்தியாம்பிள்ளை கோஷ்டியினர் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தேடிவந்தனர். அவர்கள் வசம் எஸ்.எம்.ஜி, ஷொட்கன், கைத் துப்பாக்கி ஆகியவை இருந்தன. அவர்கள் புலிகளைத் தாக்கினார்கள். அப்புலிகள் தங்களுக்கு உடல் காயமோ உயிர்ச் சேதமோ எதுவுமின்றி அவர்களை அழித்தார்கள். காரும் அழிக்கப்பட்டது.

இந்த மரணங்களுக்கு வேறு எந்தக் குழுவோ அல்லது இயக்கமோ அல்லது தனி நபர்களோ உரிமை கொண்டாட முடியாது. இலங்கையிலும் வெளிநாட்டிலும் உள்ள புலிகளைத் தவிர இவற்றுக்கு உரிமை கொண்டாடும் வேறு எவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

தங்கராஜா கொலைமுயற்சி புலிகளால் மேற்கொள்ளப்படவில்லை. அப்போது ஒரு குழுவாக சில இராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்ட தங்கதுரை குட்டிமணி சார்ந்த குழுவினராலேயே மேற்கொள்ளப்பட்டது. அவர்கள் அப்போதும் இந்தியா இலங்கைக்கு இடையேயான கடத்தல் வியாபாரம் மேற்கொண்டிருந்தனர். அக்குழுவினர் தமது நடவடிக்கைகளையும் புலிகளின் பெயரிலேய்ர்ர் உரிமை கோருமாறு ஏற்பட்ட இணக்கத்தின் அடிப்படையிலேயே தங்கராஜாவின் பெயரும் எமது பிரசுரத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டது.

துண்டுப் பிரசுரத்தை எழுதி முடித்ததும், சாந்தன் அதனைக் கொழும்பிற்குக் கொண்டு சென்று ஊர்மிளாவிடம் ஒப்படைத்து தட்டச்சுச் செய்கிறார். அங்கிருந்தே அதன் பிரதிகள் பத்திரிகைகளுக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன. அது அனுப்பப்பட சில தினங்களிலேயே தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னத்தோடும்,உமாமகேஸ்வரனின் கையொப்பத்துடனுமான அந்தத் துண்டுப்பிரசுரம் பத்திரிகைகளில் வெளியாகின்றது. தமிழ்ப் பகுதிகளில் மட்டுமல்ல சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் பரபப்பை ஏற்படுத்திய இப் பிரசுரம், இலங்கை அரசையும் கூட மிகவும் பாதித்தது.

இப் பிரசுரம் வெளியான மறு தினத்திலிருந்து, இலங்கைத் தீவு தனது அனைத்து வாழ்வலங்களையும் ஒரு புறத்தே ஒதுக்கி வைத்துவிட்டு, புலிகள் பற்றிப் பேசிக்கொண்டிருந்தது. தமிழ்ப் பேசும் சிறுபான்மையினர் தம்மைப் பாதுகாக்க இறைவனால் அனுப்பிவைக்கப்பட்ட பாதுகாவலர்கள் போலவே புலிகளை நேசிக்க ஆரம்பித்தனர். சிங்கள மக்கள் பெருந் தேசியவாதம் இன்னொரு படிநிலை வளாச்சியை அடைவது போல் தோற்றமளித்தது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர் அனா செனிவரத்ன கொக்காவிலில் சிங்களக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும் என்று வவுனியா பொலீஸ் நிலையத்தில் பேசினார். 77 இன வன் முறையால் இடம்பெயர்ந்து வவுனியாவில் தங்கியிருந்த தமிழ் அகதிகள் பொலீசாரால் தாக்கப்பட்டனர். புலிகள் தடைச் சட்டம் குறித்து பாராளுமன்றத்தில் பேசப்படுகிறது. தமிழர் விடுத்லை கூட்டணி உறுப்பினர்கள் தாக்கப்படுகிறார்கள்.

பிரபாகரன் கனவுகண்ட இராணுவ வெற்றிக்கும்,ஒழுங்கு படுத்தப்பட்ட இராணுவத்திற்கும் மக்கள் ஆதரவைக் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. பிரபாகரன் ஹிட்லரின் நாசிக் கொள்கையாலோ, சுபாஸ் சந்திரபோசின் எதிர்ப்பு அரசியலாலோ ஆட்கொள்ளப்படவில்லை. அவை பற்றியெல்லாம் அவருக்கு கரிசனை இருந்தது கிடையாது. அவர்கள் கட்டமைத்திருந்த இராணும் குறித்தும் அதன் ஒழுங்கு முறைகள் குறித்துமே அவரின் முழுக் கவனமும் ஒருங்குபடுத்தப்பட்டிருந்தது. அன்று மாவோசேதுங்கின் இராணுவப்படைப்புகளை இவர் வாசிக்கச் சந்தர்ப்பம் கிடைத்திருந்தால் அவராலும் பிரபாகரன் ஆட்கொள்ளப்பட்டிருப்பார் என்று பிற்காலங்களில் நான் எண்ணுவதுண்டு.

இன்னும் வரும்..

01.20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

02.70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்

 

03.தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)

 

04.முக்கோண வலைப்பின்னலைத் தகர்க்கும் புலிகளின் முதற் கொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள்(பகுதி நான்கு) : ஐயர்

 

05.பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்

 

06.புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்

 

07.புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்

 

08.புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)

 

09.சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)

 

10. நிசப்தம் கிழித்த கொலைகள்ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் பத்து)

  http://inioru.com/