புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் கடந்த 40 ஆண்டுகளாக லியோ பாஸ்ட்னர்ஸ் எனும் போல்ட்நட் தயாரிக்கும் ஆலை இயங்கி வருகிறது. ஐந்தாண்டுகளுக்கொருமுறை அரசின் சலுகைகள் மானியங்களைப் பெறுவதற்காக நிறுவனத்தின் பெயரை வௌவ்வேறு பெயர்களில் மாற்றிக் கொண்டு மக்களின் வரிப்பணத்தை விழுங்கிவரும் இந்நிறுவனம்,

தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நசுக்கியும் சுரண்டியும் கொழுத்து விரிவடைந்துள்ளது. இங்கு பணியாற்றும் தொழிலாளிகளுக்கு பணிநிரந்தரமோ, சட்டபூர்வதொழிற்சங்க உரிமைகளோ கிடையாது. 1993 மற்றும் 1996ஆம் ஆண்டுகளில் தொழிற்சங்கம் அமைக்க முயற்சித்த "குற்ற'த்துக்காகவும், நிர்வாகத்தின் அடக்குமுறையை எதிர்த்துக் கேட்டதற்காகவும் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குமுறிக் கொண்டிருந்த தொழிலாளர்கள், பு.ஜ.தொ.மு.வில் இணைப்புச் சங்கமாகத் திரண்டனர். இதைக் கண்டு பீதியடைந்த நிர்வாகம், தொழிலாளர்களின் வீடுகளுக்கு மொட்டைக் கடிதம் அனுப்பி மிரட்டுவது, ஊதிய உயர்வு அளிக்காமல் பல்லாண்டுகளாக ஏய்ப்பது, பணிமூப்புக் காலத்தை ஆவணப்படுத்த மறுப்பது, வேலைக்கு வரவில்லை ஆயுதபூசை விழாவில் ஆபாச நடனமாடினர் என்றெல்லாம் பொய்க்குற்றம் சாட்டி வேலைநீக்கம் செய்வது என அட்டூழியங்களைக் கேள்விமுறையின்றி அரங்கேற்றிவருகிறது.

 

இக்கொடுமைகளை எதிர்த்து, இவ்வட்டாரமெங்கும் உழைக்கும் மக்களிடம் துண்டுப் பிரசுரங்கள்,n தருமுனைக் கூட்டங்கள்மூலம் தொடர் பிரச்சாரத்தை மேற்கொண்ட பு.ஜ.தொ.மு., அதன் தொடர்ச்சியாக கடந்த 28.10.09 மற்றும் 6.11.09 ஆகிய தேதிகளில் பெருந்திரளான தொழிலாளர்களை அணிதிரட்டி எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அதன் பிறகு, 12.11.09 அன்று தொழிலாளர் துறை செயலருக்கு மனுகொடுக்கும் வகையில் தொழிலாளர்களைத் திரட்டி மிகப்பெரிய பேரணியை பகுதிவாழ் உழைக்கும் மக்களின் பேராதரவுடன் நடத்தியது. பல்வேறு இணைப்புச் சங்கங்களும், குடும்பத்தோடு தொழிலாளர்களும், மாணவர்கள் இளைஞர்களும் பங்கேற்ற இந்த ஊர்வலம், புதுவை மாநிலத் தொழிலாளர்களிடம் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. லியோ பாஸ்ட்னர்ஸ் நிர்வாகத்தின் கொத்தடிமைத்தனத்தையும் அடக்குமுறைகளையும் எதிர்ப்பதோடு, மறுகாலனியாக்கத்தின் வேட்டைக்காடாக புதுவை மாநிலம் மாற்றப்பட்டு தொழிலாளர்களின் சட்டபூர்வ உரிமைகள் பறிக்கப்பட்டு வருவதற்கு எதிராகவும் கடந்த இரு மாதங்களாக தொழிலாளர்களை அணிதிரட்டிப் பிரச்சாரம் செய்துவரும் பு.ஜ.தொ.மு., அடுத்த கட்டப் போராட்டத்துக்குத் தயாராகி வருகிறது. ஏற்கெனவே இந்துஸ்தான் லீவர், பவர்சோப்ஸ், கோத்ரேஜ் சாராலீ, மெடிமிக்ஸ் முதலான ஆலைகளில் போர்க்குணமிக்கப் போராட்டங்களின் மூலம் நிர்வாகத்தைப் பணியவைத்துள்ள பு.ஜ.தொ.மு., லியோ பாஸ்ட்னர்ஸ் நிறுவனத்திலும் வெற்றியைச் சாதிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை.

 

- பு.ஜ.செய்தியாளர்கள்,