09282023வி
Last updateபு, 02 மார் 2022 7pm

மனக்கோலங்கள் – மன நோய்கள் பகுதி - 03

இந்தத் தொடருக்கு எதிபார்த்ததை விட பாராட்டுகள் கிடைத்திருக்கிறது. நன்றிகள். நீங்கள் குறிப்பிட்ட விடயங்கள் யாவும் வரும் தொடர்களில் உள்ளடக்குவேன். இன்று அந்த அழகிய பெண்ணுக்கு என்ன நடந்தது என்று பார்ப்போம். இது நடந்தது 84 ம் ஆண்டு. உண்மைச் சம்பவங்களுக்கு – வாடிக்கையாளரின் (Client)  பெயர் மாத்திரம் கற்பனையாகும். ஒரு பெண் என்பதை விட வாடிக்கையாளரின் நலன் கருதி கற்பனைப் பெயருடன் எழுதுகிறேன். ஏனையோரின் பெயர்களும், அனைத்துச் சம்பவங்களும் உண்மையே.

நாவண்ணன் என்ற காலம் சென்ற சிறந்த கலைஞரை பலரும் அறிந்திருப்பீர்கள். அவருக்கு தெரிந்த ஒரு இளம் பெண்ணுக்கு பாதிப்பு ஏற்பட்டுளதாகவும், அவருக்கு ஹிப்னாடிசம் மூலம் தீர்வுகாண முயற்சித்தார். குறிப்பிட்ட காலை நேரத்துக்கு சாரு இலங்கையர் வீட்டுக்கு சென்றோம். அங்கு வயது முதிர்ந்த ஒரு பாட்டி, சாருவின் தாய், அவர்களது உறவினர் ஒருவர், சாருவின் சகோதரனும் அவ்வீட்டில் இருந்தனர். சாரு வெளியில் வரவில்லை. சாருவுக்கு என்ன நடந்தது என்று கேட்டேன். அப்பெண் 8 ம் வகுப்பு வரை வகுப்பில் முதல் மாணவியாக வந்ததாகவும். கடந்த இரண்டு வருடமாக் எல்லம் போய்விட்டது என்றும் கூறினார்கள். நித்திரையின்மை, பாடசாலை செல்ல விருப்பமின்மை – அடிக்கடி கவலைப்பட்டு அழுதல் – சிறிய விடயங்களுக்கும் பயப்படுதல். அவர்களது கூட்டான முடிவு பாம்பு அல்லது பேய்க்கு அப்பெண் பயந்து இருக்கலாம் என்பதே. பல மருத்துவர்கள், பாதிரிமார்கள், சைவசமயச் சாமி மார்களுடன் தொடர்பு கொண்டும் அவர்களால் அப்பெண்ணை பழைய நிலைக்கு கொண்டு வர முடியவில்லை. அவர் ஓரிரு உறவினரைத் தவிர மற்றைய ஆண்களை பார்த்து பயப்பிட்டார். முற்றத்தில் இருந்தே எமது உரையாடல் நடை பெற்றது. வீட்டிற்குள் வெளியாட்கள் போகும்பொழுது சாரு பயப்பிட்டார். நானும் சாருவை உறவினர்களின் உதவியுடன் வெளியில் கூட்டி வரும்படி அழைத்தேன். பயந்து மிருண்ட விழிகளுடன் வெளியே வந்தார். முகத்தில் கறுப்புக் கோடுகள் தெரிந்தது. நான் தூரத்தில் இருந்தவாறே கதைத்தேன். ஏன் பயப்படுகிறிர்கள் என்ற கேள்விக்கு தனக்குத் தெரியாது என்றே சொன்னார்.  தான் பாம்பைப் பார்த்து பயந்ததையும் ஒத்துக்கொண்டார். அவருக்கு நான் கிட்டச்சென்று கதைப்பதை அவர் விரும்பவில்லை. முற்றத்தில் ஒருபுறத்தில் நானும், நாவண்ணனும், மறுபுறத்தில் சாருவும் உறவினரும். 6 – 7 மீற்றர் தூரத்தில் இருந்தே அவரை ஹிப்னாடிசம் செய்ய முயற்சித்தேன். அவ்வளவு தூரத்தில் இருந்து முயற்சித்தது அதுவே முதல் முறை. என்னால் இயன்றளவு முயற்சித்தேன். அவர் உடனே ஹிப்னாடிசத் தூக்கத்திற்குச் சென்று விட்டார். பின்பு அருகில் சென்று அவரை இரண்டு வருடம் பின்னால் கொண்டு சென்று கேட்ட பொழுது அவர் நடந்தைக் கூறினார்.

 

நடந்தது என்ன?

 

வகுப்பிலே நன்றாகப் படித்து ஒரு திறமையான பெண்ணாக் வாழ்ந்து வந்தார், எல்லாப் பெண்களைப்ப் போல் அவரும் பருவம் அடைந்தார். சாருவின் அழகு மேலும் அதிகரித்தது. வழமை போல் பூப்புனித நீராட்டு வரை பள்ளிக்கூடம் போகவில்லை.

 

பூப்புனித நீராட்டு முடிந்து பள்ளிக்கூடம் சென்றார். வீடு திரும்ம்பு வழியில் ஒரு ஒழுங்கையால் சென்று திரும்பும் பொழுது ஒரு இளைஞன் மார்பில் பிடித்து விட்டு ஓடிவிட்டான். அவன் அப்பெண்ணின் மைத்துணனே. சாரு உடனே வீட்டில் வந்து முறையிட்டார். அவர்கள் அவ்விளைஞனைக் கண்டித்து விட்டு – விட்டார்கள். அச்சம்ம்பவத்தையும் எல்லோரும் மறந்து விட்டார்கள். ஆனால் இச்சம்பவம் அவரது ஆழ்மனதில் சென்று அதிர்ச்சியாக (வசயரஅய) பதிந்து விட்டது. அவரது வெளி மனதிற்குத் தெரியவில்லை தான் ஏன் பயபடுகிறேன் என்று.

 

அதன் சில நாட்களின் பின் ஒரு பாம்பைப் பார்த்த பொழுதும் அவர் அளவுக்கதிகமாக பயப்பிட்டது எல்லோரது கவனத்தையும் ஈர்த்தது. அவரை நான் அதிர்ச்சியில் இருந்து விடுவித்து ஹிப்னாடிச தூக்கத்தால் விழிக்கச் செய்த பொழுது என்ன ஆச்சரியம். எனது கண்களையே நம்ப முடியவில்லை. அவரது முகத்தில் இருந்த கறுப்புக் கோடுகள் மறைந்து விட்டது. அவரது உண்மையான சிரிப்பும் அழகும் அவருக்கு திரும்பக் கிடைத்து விட்டது. அவரே பின்பு எங்களுக்கு தேனீர் வழங்கி எங்களை அன்பாக வழியனுப்பி வைத்தார். நான் ஹிப்னாடிசம் படிக்கும் பொழுது எனது ஆசிரியர் இப்படியான உதாரணங்களை கூறுவார். என்னால் நம்புவது கடினம்மாக இருந்தது. நானே நேரில் சந்தித்த பொழுது மிகவும் மகிழ்ச்சியாகவும் - ஹிப்னாடிசத்திலும் எனது ஆசிரியரிலும் மதிப்புக் கூடியது. மறுநாளே ஆசிரியரிடம் சென்று கூறி பாராட்டைப்பெற்றேன்.

 

ஏன் பாம்பைக் கண்டு பயந்தார் ?


நாங்கள் பயத்தைக் கற்பனை அளவு கோலால் அளப்போமாயின், கூடிய பயம் பத்து(10) என்றும் குறைந்த பயம் பூச்சியம் (0)என்றும் வைத்துக் கொள்வோம். அவருக்கு பாம்பிற்கு பய அளவு இரண்டு (2) என்று வைத்துக் கொள்வோம். அதிர்ச்சியால் வந்த பயத்தின் அளவு 10 ஆக இருக்கிறது. அவர் அந்த நிலையில் பாம்பைக் காணும் பொழுது ஏற்பட்ட பயம் பன்னிரண்டு ஆகும். இது ஒரு கற்பனை அளவே. ஆளுக்கு ஆள் வேறுபடும். ஏற்கனவே அவருக்கு ஒரு அதிர்ச்சியிருந்தால் மற்றச் சின்னப் பிரச்சனைகள் காந்தம் போல் சென்று ஒட்டிக் கொள்ளும். அவரது அதிர்ச்சியின் அளவு நாளுக்கு நாள் அதிகரித்து செல்லும். அவர் தற்பொழுது பல் வைத்தியரிடம் சென்றால், அந்த நோவின் அளவு ஒன்று என்றால் அவருக்கு இப்பொழுது 13(அலகு) மடங்கு நோ தெரியும். அதிர்ச்சியை எடுத்து விட்டால், ஒரு அலகு நோவே தெரியும்.

மன அதிர்ச்சி (Trauma) ?

 

(Trauma)  மன அதிர்ச்சி எனப்படுவது ஒரு நோயல்ல, அது ஒரு ஆழ் மனத்தில் ஏற்படும் தடையே. ஆழ்மனம் எப்பொழுதும் எமது மனதையும் உடலையும் சுத்திகரித்துக் கொண்டும், திருத்திக் கொண்டுமே இருக்கின்றது.  ஒரு கவலையான சம்பவத்தை பார்த்து விட்டு, அதை மறந்து சிறிது நேரத்தின் பின் எம்மால் மகிழ்ச்சியாக கதைக்க முடிகின்றது. சிரிக்க முடிகின்றது. ஆழ் மனதில் மன அதிர்ச்சி இருக்குமாயின், அது ஆழ் மனதின் வழமையான இயக்கத்தை தடுக்கும். ஒரு சிறிய கவலையைப் பார்த்தாலும் அதிலிருந்து மீள பலகாலம் செல்லும். மன அதிர்ச்சி என்பது நோயல்ல, அது ஆழ் மனத்தின் செயற்பாட்டைத் தடுக்கும் ஒரு தடையே. (block).

 

எந்த சம்பவங்களால் மன அதிர்ச்சி ஏற்படும்?

 

வீட்டில் பெற்றோர் சண்டை இடும் பொழுது, குடும்பம் பிரியும் பொழுது, ஏதாவது பயப்படும் பொழுது, பாலியல் வன்முறை, காதல் தோல்வி, பிரிவு, இடம்பெயர்வு, உயிராபத்தான் வருத்தங்கள், விபத்து, வன்முறை படங்களை பார்த்தல், கொலைகளை பார்த்தல், உறவினரின் இளப்பு, பெற்றொரின் தண்டனைகள், பெற்றோரின் கடுமையான வார்த்தைப் பிரயோகங்கள், ஆசிரியரின் தண்டனைகள், இளம் வயதில் பராமரிப்பு குறைந்து இருத்தல், இளவயதில் பிள்ளைகளுக்குரிய அடிப்படை உரிமைகள் மறுக்கப்படல் போன்றன. இவை எல்லோருக்கும் எல்லா நேரத்திலும் அல்ல. சந்தர்ப்பம் சூழ்நிலைகளைப் பொறுத்து சிலருக்கு மன அதிர்ச்சியாகி விடுகின்றது. சிலருக்கு சம்பவமாகி விடுகிறது – இன்னும் சிலருக்கு புதினமாகி விடுகிறது.

 

இவை உடலுக்கு நேரடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது, மனதுக்கே ஏற்படுத்தும்.

 

மன அதிர்ச்சிகளால் வரும் நோய் அறிகுறிகள்.

 

சாப்பாட்டுப் பிரச்சனைகள், நித்திரைப் பிரச்சனை, பாலியல்பிரச்சனைகள் (ளநஒரயட னளைழசனநச), விரக்தி, கவலை, மனஅழுத்தம் (Stress, Anxiety, and Depression), பயம் (phobia) - (ஆழ்மனதிற்கு தர்க்கம், பகுப்பாய்வு, பகுத்தறிவு இல்லை, விடயம் பெரிதாக இருக்கலாம், சிறிதாக இருக்கலாம் அது பயப்படும்), கோபம், தற்கொலை போன்றவற்றிற்கு தூண்டுதல் (compulsions), உணர்வுகள் மங்கிய நிலமை, ஞாபக மறதி, ஒவ்வாமை (Allergy) , அமைதியின்மை, இடுப்பு – கழுத்துக்குக் கீள் நோ போன்றன. இருவர் ஒரு இடத்தில் ஒரே மாதிரியான விபத்தை அனுபவித்து இருந்தாலும் அவர்களுக்கு ஏற்படும் நோய் அறிகுறி வேறு வேறாக இருக்கும். நோய் அறிகுறி தோன்ற பல வருடங்களும் எடுக்கலாம். துப்பாக்கியில் நிரப்பிய குண்டுகள் போல் மன அதிர்ச்சிகள் நிரம்பியிருக்கும். எப்பொழுது வேண்டுமானாலும் தட்டுப்பட்டு வெடிக்கலாம் இவற்றின் உதாரணங்களை அடுத்த தொடரில் பார்ப்போம்.


கட்டுரையாளர்களின் ஆக்கங்கள்