உடல் அரசியலாளர்கள், சயனைற் அருந்துபவர்கள், தீக்குளிப்பவர்கள்;, தமிழ் உணர்வாளர்கள் முதல் மே 18-ன் ஜான், இனியொரு நாவலன், புதிய ஜனநாயகக் கட்சி வரை தங்களின் தேவைகளுக்காக தவறுகளுக்காக, மார்க்சியத்தையும், மார்க்சியத் தலைவர்களையும் துணைக்கு அழைக்கி;ன்றனர். நல்லவேளை சாமியார் நித்தியானந்தா போன்றவர்களும், போப்பாண்டவரின் திருச்சபைகளும், துறவற கன்னியாஸ்திரி மடங்களும் இதை இன்னும் துணைக்கு அழைக்கவில்லை.


தற்போது இலங்கையில் நடைபெறும் “வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட – சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்றத் தேர்தலில்" புதிய ஜனநாயகக் கட்சியும், அதற்கு வக்காலத்து வாங்குபவர்களும், தங்கள் “பாராளுமன்ற சந்தர்ப்பவாத அரசியலுக்காக” பலவற்றைப் பகிர்கின்றனர். இதற்கு அக்டோபர், சீனப் புரட்சி முதல் உலகின் ஏனைய நாட்டுப்புரட்சிகளில் உள்ள தேர்தல் ஆவணங்கள் தரவுகள் கண்டெடுத்து, இது சமன் அது என்கினறனர். 


இவை பற்றி முன்னொரு தடவையும் சொல்லியுள்ளேன். மார்க்சிச லெனினிச மாஓசேதுங் சிந்தனையை கொப்பியடிப்பதல்ல, ஒப்புவிப்பதல்ல, மார்க்சிசயவாதிகளின் வேலை. எம்நாட்டின் ஸ்தூல நிலைமைகளுக்கேற்ப எப்படிப் பிரயோகிப்பது என்பதுதான், சரியான அரசியல்.


முதலில் நாம் எமது நாட்டின் கம்யூனிஸ்ட் கடசிகள், இடதுசாரிகளையும், அவர்களின் பாராளுமன்ற அரசியல் வாழ்வையும் பார்ப்போம். 60-ம் ஆண்டுகளில் ஸ்டாலின் அவர்களின் மறைவையொட்டி குருச்சேவ் சோவியத் கட்சியின் தலைவராகின்றார். அவரால் ஓர் “புதுத் தத்துவம்” அறிமுகமாகின்றது. அதற்கு “பாராளுமன்ற சமாதான சகஜீவனம்” என பெயரிடப்படுகின்றது. அதன் தொழிற்பாடு உலகின் பாட்டாளி வர்க்கமும், ஏனைய அடக்கியொடுக்கப்பட்ட வர்க்கங்களும், மக்களும், தங்கள் அரசியலை, அரசியல் அதிகாரத்தை, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை ஆயுதப் புரட்சியின்றி, கம்யூனிஸ்ட் கட்சியும், அதன் நேச சக்திகளும் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெறுவதன் மூலம் சோஸலிச சமுதாயத்தை உருவாக்கலாம் என்பதே!

 

இச் சமாதான சகஜீவனக் (திரிபுவாத) கொள்கையை இலங்கையில் நடைமுறைப்படுத்தப் புறப்பட்டவர்கள் பீற்றர் கெனமன் விக்கிரமசிங்க தலைமையிலான கம்யூனிசக் கட்சியே. இப்பாதையில் பயணிக்கப் புறப்பட்டவர்கள், பேரினவாதத்திற்கு இரையாகியது மட்டுமல்ல, அரசு இயந்திரத்தின் பங்காளிகளாகி, மக்களை அடக்கியொடுக்கியதில், மக்கள் மத்தியில் இல்லாமலே போயுள்ளார்கள்.


இவர்களின் திரிபுவாத, இனவாத, தொழிலாளி விரோத, மக்கள் விரோத நடவடிக்கைகளால், இவர்களில் இருந்து பிரிந்துபோன சண் தலைமையிலான கம்யூனிஸ்ட கட்சியாக (திரிபுவாதப் போக்கற்ற நிலையிலும்) இயங்கிய போதிலும், பெரும்பான்மையான மக்கள் மத்தியில் கால் ஊன்ற முடியாத சூழ்நிலைமைகள் இருந்தது. இந்நிலையில் பிளவிற் கூடாக, கம்யூனிஸ்ட் கட்சி (இடதாக) இருந்தவர்கள், கடந்தகால பட்டறிவினூடாக, கம்யூனிஸ்ட் கட்சியின் பெயர் கொண்டு இயங்காமல், இயங்க முடியாமல் பின்பு புதிய ஜனநாயகக் கட்சியாக பரிமாணம் பெற்றார்கள்.

 

புதிய ஜனநாயகக் கட்சி, கடந்த மூன்று மாதங்களுக்கிடையில் இரு தேர்தல்களில் (ஜனாதிபதி - பாராளுமன்றம்) இரு வேறு நிலைகளை எடுத்துள்ளது. ஒன்றில் நிராகரிப்பு. மற்றதில் பங்கு பற்றல். இதற்கு “விட்டால் குடும்பி - அடித்தால் மொட்டை” என்ற நிலையில் இருந்து கொள்கை விளக்கம்! இம் மூன்று மாதங்களுக்கிடையில், தேசிய சர்வதேச ரீதியில், உலகமயமாதலில், தத்துவத்தில், இயங்கியலில், இயங்கியல் பொருள்முதல்வாதத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் ஏற்பட்டு விட்டனவோ? சரி விடுங்கள்.


முரண்பாட்டின் சர்வவியாகத் தன்மையின் பாற்பட்டுப் பார்த்தால் கூட உங்களின் தேர்தலில் பங்குபற்றலில் மேடையாக பாவித்தல் போன்றனவற்றிற்கு, மக்கள் மத்தியில் உங்களுக்கு உள்ள பலம்தான் என்ன?


தண்ணியில்லாத குளத்தில் நின்று கொண்டு, பெரும்வலை வீசி மீன் பிடிப்பதாக காட்டுகின்றீர்கள்;. இதற்கு மார்க்சிச லெனினிசமும், மாவோவும் லெனினும் தேவையோ? போதாக் குறைக்கு உங்கு நீங்கள் “சிறு மழைத் தூறல்களுக்குள் திரிய” இங்கே இனியொருவும் நாவலனும் பெரும்மழையென குடை பிடிக்கின்றார்கள். மே 18-ன் ஜான் “றெயின் கோட்டுடன்” திரிகின்றார்.


“பலம் மிகப் பெற்ற ஒரு அமைப்பாக இடதுசாரிப் பிரிவு தமிழ் மக்கள் மத்தியல் வக்கற்றுப் போனமையால், தமிழ்ததேசிய இடதுசாரி சக்திகள் அனைத்தையும் ஐக்கியப்படுத்த முடியாமல் உள்ளது. நேர்மைத்திறன் மிக்க இயங்காற்றல் சாத்தியப்படும் பட்சத்தில் தமது புரட்சிகரப் புனிதம் குறித்த அலட்டல் இல்லாமல், இப்பணியை முன்னெடுத்திருக்க முடியும். நேர்மையீனம் வளர்வதற்கு இடமளிக்கும் பட்சத்தில், தமது பலவீனங்களை மறைப்பதற்கு ஏற்றதாய், “அதீத புரட்சிப் புனித வேசம்” பூணுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டியேற்படும். தனித்தவிலாக பத்தோடு பதினொன்றாய்ப் “புனிதப்புரட்சி இடதுசாரிகள்” இந்த அர்த்தங் கெட்ட தேர்தல் களத்தில், முண்டியடிக்க நேர்ந்தமை, இவ்வகையிலான வேகங்காட்ட முயல்வதையே காட்டுகிறது”  என்கினறார் தாயகன் ரவி (பார்க்க “புதிய மிடுக்குடன் பேச வேண்டும்”)


மாக்சிச லெனினிச வாதிகள், எதிலும் தேச கால வர்த்தமானத்தை, இடம் பொருள் ஏவல் கொண்டு, சமகால, நீண்டகால நோக்கிலான செயற்பாட்டுத் தளத்தில் நின்று பார்க்கவேண்டும்,  செயற்படவேண்டும். எமது நாட்டின் பாராளுமன்றத் தேர்தல் எப்படி அமையும், என்பதற்கு, கடும் தத்துவார்த்த சூத்திரங்களும், அதைக்  பூதக்கண்ணாடிகள் கொண்டு பார்க்கவும் தேவையில்லை.


நடக்கப் போவது இதுதான் சுயேட்சைகளாகி உள்ளவர்களுக்கு, மக்கள், யானைப் பசிக்கு சோளப்பொரி போட்ட கணக்கில், தட்டுத்தடுமாறி வாக்குப் போடப்போகின்றார்கள். தேர்தல் முடிய நாங்களும் இதுக்குத்தான், இந்தப் பெரிய புதுப் போராட்டம், புரட்சி எல்லாம் செய்தோம் என எண்ண நேரிடும்! இதை புதிய ஜனநாயகப் புரட்சிக்கு சமகால நோக்கில் கிடைத்த வெற்றியாகவும் கருதலாம் கணிக்கலாம்! இப்படி மார்க்சியத்தின் பெயரில் ஆய்வும் செய்யலாம்