04012023
Last updateபு, 02 மார் 2022 7pm

இடதுசாரியம், மார்க்சியம், முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ் … (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 05)

அரசு மற்றும் ஜனநாயகம் பற்றிய அரிவரிப்பாடத்தை திரித்தல் மூலம் தான், பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் ஒரு வடிவமாக காட்டுகின்றனர். மே 18 முதல் புதிய திசைகளின் அரசியல் வழிமுறைகள் இதற்குள் தான் உள்ளது. தேர்தல் பற்றிய இவர்களின் அரசியல் நிலை என்பது, வியக்கத்தக்க வகையில் இதுதான் ஜனநாயகம் என்று மோசடி செய்து காட்டுவதுதான்.

பாராளுமன்ற அரசியல் தளத்தில் இப்படித்தான் இவர்கள் காலடி எடுத்து வைக்கின்றனர். இதன் பின், ஜனநாயகம் பற்றிய அடிப்படையான அறிவு கூட இருப்பதில்லை, இருக்க அனுமதிப்பதில்லை. உண்மையில் புலிகள் எப்படி தங்கள் அணிகளை மந்தைகளாக உருவாக்குகின்றரோ, அதே பாணியில் மே 18 முந்தைய தமிழீழக்கட்சி (புலியின் உளவு அமைப்பாக செயற்பட்டது) உறுப்பினர்களின் அரசியல் நிலை காணப்படுகின்றது. இன்று புதிய திசை, மே 18 என்பன, கற்றல் கற்றுக்கொடுத்தல் முதல் விவாதித்தல் விவாதம் செய்தல் அனைத்தையும் மறுதலிக்கின்றது. இதன் மூலம் ஒரு சில பிரமுகர்கள் தமக்கான சில மந்தைகளை உருவாக்க முனைகின்றனர். இதற்கமைய தங்கள்தரப்பு மத்தியில், மாற்றுத்தரப்பை முத்திரை குத்துகின்றனர்.

ஜனநாயகம் என்றால் தேர்தல், வாக்குப்போடுதல், அதை முன்னிறுத்தல் என்ற நிலைக்குள், வழிகாட்டுகின்றனர். வேடிக்கை என்னவென்றால்

1. ஜனநாயக புரட்சி நடைபெறாத நாட்டில், அதன் உறுப்பில் ஜனநாயகம் இருந்ததாக காட்டி அதை மீட்க தேர்தல் வழிமுறையை தாங்கள் ஆதரிப்பதாக கூறுகின்றனர்.

2. சுரண்டப்படும் மக்களுக்கும், சுரண்டு வர்க்கத்துக்கும் ஜனநாயகம் என்பது ஒன்றுதான் என்று காட்டி, அதை அடையத் தேர்தல் வழிமுறையைக் காட்டுகின்றனர்.

இப்படி இதற்குள் தான் புதிய திசைகள், மே 18, புதிய ஜனநாயகக் கட்சி அரசியல் வெளிப்படுகின்றது. இடதுசாரியம், மார்க்சியம், முற்போக்கு என்ற முகாந்திரத்தின் கீழ், கடைகெட்ட ஜனநாயக விரோத பாராளுமன்றத்தை ஜனநாயகத்தின் சின்னமாகக் காட்டுகின்றனர். அதற்கு வரும் பாதையை, ஜனநாயகத்தின் அச்சுகளாக போற்றி, அதை உயர்த்துகின்றனர். பாராளுமன்றம் என்னும் பன்றித் தொழுவத்தில் வீற்று இருக்கின்ற, பன்றிகளில் நாமும் ஒருவராக மாறுவதுதான் அதற்காக ஒருவரை ஆதரிப்பது தான் ஜனநாயகத்தின் மகத்துவம் என்கின்றனர்.

இந்த நிலையில் புலியின் பின்னான மே 18 வைக்கும் வாதத்தைப் பார்ப்போம்;. "..பொதுவில் எமது போராட்டத்தில் கோட்பாட்டு, அரசியல் புரிதல்மட்டமானது மிகவும் அடிநிலையில் இருக்கிறது. அறிவுத்துறை சோம்பேறித்தனமும், போலிப்புலமையும் ஓங்கி நிற்கின்றன. வெறுமனே சில வறட்டுச் சூத்திரங்களை திரும்பத் திரும்ப உச்சரிப்பதே போதியளவு விவாதத்தை நடத்தியதாக கருதப்படுகிறது. வெறுமனே ஊரவ யனெ Pயளவ இல் தமது இணையத்தளங்களை நடத்தும் குழுக்கள் கருத்துக்கள் எதனையும் புதிதாக உருவாக்க முனைவதில்லை. அதற்கான திறமையும், உழைப்பும் இவர்களிடம் கிடையாது. தமிழக மாலெ குழுக்களது வாசகங்கள் சிலவற்றை இரவல் எடுத்து திரும்பத் திரும்ப உச்சரிப்பதே இவர்களது மார்க்சிய புரிதலாக உள்ளது. தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது…. இப்படியாக நடந்து கொண்டு ஆரோக்கியமாக விவாதம் நடத்துவதாக கூறினால் இதுதானே இந்த காலத்தின் மிகச் சிறந்த நகைச் சுவையாக இருக்கும்" என்று கூறுகின்றார் மே 18 ரகுமான் ஜான்.

நல்ல வேடிக்கை தான்; போங்கள். தாங்கள் சொல்வது, விவாதத்தின் மூலம் பெற்ற அதிவுயர் அறிவின் பாலான வழிமுறை என்கின்றார். அட இது என்ன என்று பார்த்தால், தேர்தலில் நிற்றல், அதை ஆதரித்தல் தான். இதை மறுப்பது வறட்டுச் சூத்திரமாம். தமிழக மாலெ குழுக்களது வாசகமாம். இப்படி இவர் கண்டுபிடித்து முத்தரை குத்த சொல்வது தான், அவரின் அறிவின்பாலான "சோம்பேறித்தனமும், போலிப் புலமையும்" அற்ற கண்டுபிடிப்பாம். இதுதான் மிகச்சிறந்த நகைச்சுவை.

எந்தவொரு விடையத்துக்கும் வெளிப்படையாக பதிலளிக்க வக்கற்றவர். நேர்மையாக சந்தர்ப்பவாதமற்ற வழிகளில், எதையும் அணுக வக்கற்றவர்தான் இந்த ரகுமான் ஜான்.   தமிழீழக்கட்சி மூலம் புலிக்கு ஆள்காட்டியாக செயல்பட்டவர், காட்டிக்கொடுத்தவர், இன்று வரை அதை பற்றி பேசாது இருப்பவரின் நேர்மையான அந்தப் பக்கம் தான் என்ன.

புலிகளின் தலைவர் தமிழினத்தை அழிக்க, துன்பவியல் சம்பவமாக வருணித்த அதேபாணியில், கடந்த காலத்தை வருணித்த அறிவு தான் மே 18 ரகுமான் ஜானின் அரசியல் மட்டம். அதுதான் மே 18 என்று, தன் இயக்கத்துக்கு, தலைவரின் தொடர்ச்சியாக புலியின் பின்பாக தன்னை அறிவிக்கின்றது.

அவர் கூறுகின்றார் "..தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது… " என்கின்றார். "பொது எதிரிக்கு எதிராக போராட" என்று கூறியே, இயக்கங்கள், புலிகள், தமிழீழக் கட்சி.. தமிழ் மக்களுக்கு என்னசெய்தது என்பது எமக்கும் தெரியும். இதன் போது நீங்கள் அவர்களுடன் எப்படி அவர்களைத் தொழுது கொண்டு, மக்களை ஒடுக்க உதவினீர்கள் என்பதும் தெரியும். இது இனி யாராலும் அழிக்க முடியாத ஒரு வரலாறு. இதை எதிர்த்து நாங்கள் மட்டும் போராடியது, நீங்கள் "பொது எதிரிக்கு எதிராக" என்று கூறி எமக்கு எதிராக அவர்களுடன் கூடி நின்றதும் உண்மை. இதையெல்லாம் மறுக்கத்தான் முடியுமா?

"நட்பு சக்தி" என்பது யார்? உண்மையில் யார் எப்படி மக்களுடன் நிற்கின்றனர் என்பது அதனைத் தான் தீர்மானிகின்றது. மக்கள் அரசியலை முன்வைத்து, எப்படி மக்களை அமைப்பாக்குகின்றார்கள் என்பதுடன் அது தொடர்புடையது. தேர்தலில் சாக்கடையில் நீங்கள் படுத்து புரள்வதை ஆதரிப்பதோ, நட்பு சக்திகளின் அடையாளம்? புலியை ஆதரித்து தமிழீழக் கட்சியாக இருந்த உங்களை, அன்று ஆதரித்து நிற்பமோ நட்;பு சக்திக்கு அடையாளம்? நாங்கள் உங்களைப் போன்ற மக்கள்விரோத அரசியலை ஆதரித்து, மக்களுக்கு துரோகம் செய்ய  தயாராயில்லை.

"அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது…" என்கின்றீர்கள். இப்படி நீங்கள் சொல்வதுதான், பொய்யும் அவதூறுமாகும். சரி நாங்கள் அப்படி சொன்னதாக சொல்லும் நீங்கள், அதற்கு ஆதாரத்தை முன்வையுங்கள். இப்படி முத்திரை குத்தி அரசியல் ரீதியாக உங்களை தக்க வைப்பபதற்கு அப்பால், இதில் எந்த உண்மையும் கிடையாது. நீங்கள் அப்படி இருக்கின்றீர்கள். கற்றன் நசனல் வங்கி பணத்தை நான் மோசடி செய்ததாக, என் அரசியலுக்கு பதில் சொல்ல முடியாத தேசம்நெற்றும் இனியொருவும் எந்த ஆதாரமுமின்றி பரப்புரை செய்த போது, அதன் பின் நீங்கள் இருந்தீர்கள். அவர்கள் உங்கள் கூட்டாளியாக இருந்ததும், இருப்பதும் வெளிப்படையான உண்மை. கற்றன் வங்கிப் பணம் உங்களிடம் தரப்பட்டது தெரிந்தும், என் அரசியலை மறுக்க இது உங்கள் அவதூறுக்கு உதவுகின்றது. இப்படி "அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது" நீங்கள் தான், நாங்கள் அல்ல. அண்மையில் உங்கள் கூட்டாளியாக உள்ள இவ் இரண்டு இணையமும் சேர்ந்து, என் பெயரில் தயாரித்த ஈமெயில் மூலம் என்ன செய்தது, எதைச் சொன்னது என்பது தெரிந்தது. அதிலும் கற்றன் நசனல் வங்கிப் பணத்ததைப்பற்றித்தான் பேசியது. அனைத்தும் உங்கள் சம்மத்துடன்தான். இதை நீங்கள் கண்டித்தது கிடையாது.

இப்படியிருக்க எம்மைப் பார்த்து "..தமது எதிர்த்தரப்பாரை, அவர்களும் ஒரு பொது எதிரிக்கு எதிராக போராட முனையும் நட்பு சக்திகள் என்ற அக்கறை எதுவும் இன்றி, அவதூறு செய்வது, பொய்யான தகவல்களை தெரிந்து கொண்டே வெளியிடுவது… " என்று கூறுவது நகைச்சுவை. ஆதாரமற்ற அவதூறு. முத்தரை குத்தல்;. இதன் மூலம் தேர்தலில் நிற்றலையும், ஆதரிப்பதையும் நியாயப்படுத்தும் வாதங்கள். அவதூறுகள், பொய்கள் மூலம் முத்திரை குத்தி, மறுபடியும் மே 18 முதல் புலி அரசியல் செய்ய முனைகின்றனர்.

தேர்தல் நிராகரிப்பை இப்படி முத்திரை குத்தி காட்டிவிட்டு முன்வைப்பதைப் பார்ப்போம்; "அரசியல் என்பது வெறுமனே வாக்களிப்பது என்பதாகவே சுருங்கிப் போயுள்ளது. கடந்த காலத்தில் கூட யாருமே பாராளுமன்றத்தின் பற்றாக்குறை குறித்தோ, அதற்கு மாற்றான வழிமுறைகளில் ஒழுங்கமைத்துக் கொள்வது குறித்தோ எதுவுமே செய்யவில்லை" இதனால் நாங்கள் வாக்கு கேட்டுப் போவது அவசியம் என்கின்றார். தேர்தலில் நின்று வாக்களிக்கக் கோரினால், எப்படி  மக்கள் வாக்களிப்பிற்கு வெளியில் சிந்திப்பர். மாற்றான வழியில்லை என்பதால், நாங்கள் மக்கள் பின்னால் வால்பிடித்து சென்று வாக்கு கேட்கின்றோம் என்கின்றார். மக்கள் சாதியம், ஆணாதிக்கம் போன்றவற்றை புரிந்து கொள்ளாது வாழ்வதால், அதை நாங்கள் இப்ப ஒழிக்க முடியாது என்றனர் புலிகள். எனவே தமிழீழம் அடைந்த பின் அதை மாற்றுவது சாத்தியம் என்று பேசிய அதே இயக்க அரசியல்; தான் இதுவும். அதே உத்தி பற்றியும், தேர்தல் பற்றியும் அதே நிலையில் மீள முன்வைக்கின்றார். இப்படிப்பட்டவர்களின் தலைமையால் தான், நடந்து மக்கள் விரோத போராட்டமே அழிந்து போனது.

இயக்கப் பாணியல் மீள வைக்கும் மற்றொரு வாதத்தைப் பாருங்கள். "மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தமது தொகுதிகளில் உள்ள பாராளுமன்ற அங்கத்தவர்களது உதவிகளில் சார்ந்திருக்க நேர்கிறது. அந்த பொறுப்பை ஏன் இந்த கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமும் நாம் ஒப்படைக்க வேண்டும்." என்கின்றார். தாங்கள் கடைந்ததெடுத்த நல்லவர்கள், சமூக அக்கறையாளர் என்கின்றார். வேடிக்கைதான். யாரும் கடைந்தெடுத்த அயோக்கியராக, பிழைப்புவாதிகளாக பிறப்பதில்லை. இந்த வர்க்க அமைப்பில், அவர்கள் வர்க்க நலன் சார்ந்த வெளிப்பாடு. எந்த இயக்கத் தலைவரும், எந்தக் கொலையாளியும் இயக்கத்துக்கு சென்ற போது, எந்த மக்கள் விரோத உணர்வுடனும் சென்றது கிடையாது. அதன் பின்தான், வர்க்க அமைப்பில் தான், அவர்களின் அரசியல் பாத்திரம் தீர்மானமாகின்றது. இப்படியிருக்க நாங்கள் அயோக்கியராக, பிழைப்புவாதியாக இருக்க மாட்டோம் என்று கூறுவது நகைச்சுவை. உங்கள் தமிழீழக்கட்சி எப்படிப்பட்ட அயோக்கியராக, கொலையாளியாக ஆள்காட்டியாக செயல்பட்டது என்பது எம்முன்னான வரலாறு. அதைப்பற்றி வாய் திறக்க மறுக்கின்றது, உங்கள் அயோக்கியத்தனம்.

ஜனநாயகப் புரட்சி நடைபெறாதா நாடுகளில், பாராளுமன்றங்களில் அயோக்கியர்களையும் பிழைப்புவாதிகளையும் உருவாக்கி ஆள்வது தான் ஜனநாயகம். அதென்ன உங்களுக்கு  மட்டும் இது விதிவிலக்காக்கிவிடும். சரி "கடைந்தெடுத்த அயோக்கியர்களிடம் பிழைப்புவாதிகளிடமுமா நாம் ஒப்படைக்க வேண்டும்." என்று கேட்ட இதுவல்லாத நபர்களை ஜனநாயக புரட்சி நடைபெறாத எந்த நாட்டிலாவது உங்களால் காட்ட முடியமா!? காட்ட முடியாது. ஜனநாயகப் புரட்சி நடைபெறாதா நாட்டு பாராளுமன்றம், அதைத்தான் உற்பத்தி செய்கின்றது.

இதை செய்யவே புலியின் வாலாக உருவான மே 18 வைக்கும் வாதங்கள், மிகச் சுவையானது. "நாம் விரும்பினாலும் இல்லாவிட்டாலும் அண்மையில் ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது இந்த பாராளுமன்ற முறைமை அமுலில் இருந்தே ஆக வேண்டியுள்ளது. இதில் பல்வேறு சந்தர்ப்பவாதிகளும், பிழைப்புவாதிகளும் கலந்து கொண்டு ஆசனங்களை நிரப்பவே போகிறார்கள். பாராளுமன்றத்தை நாம் நிராகரிப்பதனால் இந்த இடங்களில் மோசமான பேர்வழிகள் அமர்ந்து கொண்டு அதனை தேசவிரோத செயற்பாடுகளுக்காக பயன்படுத்தப் போகிறார்கள். வேறு ஜனநாயக சக்திகள் அந்த இடங்களை எடுப்பதனால் இப்படியாக எமது போராட்டத்திற்கு ஊறு விளைவிக்கும் புல்லுருவியொன்றை ஒரு பகிரங்கமான மேடையை விட்டும் அகற்றி விடுகிறோம்." எந்தளவுக்கு அரசியல் பொறுக்கியாக இருக்க முடியுமோ, அதை ரகுமான் ஜான் முன்வைக்கின்றார். இருக்கும் மக்கள் விரோத பிரதிநிதிக்கு பதில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அல்லது எங்களை நீங்கள் தெரிவு செய்தால் மக்கள் நலனுடன் செயல்படுவோம் என்கின்றார். உலகில் எத்தனை பாராளுமன்றங்கள், மக்கள் பிரதிதிகள் இப்படி செயல்பட்டனர். இப்படி சொல்லி ஆட்சிக்கு வந்தவன், வென்றவன் எத்தனை பேர் இதன்படி நடந்துள்ளனர். இயக்கங்களோ மக்கள் விடுதலையை முன்வைத்தவர்கள், கடைசியில் அவர்கள் என்னதான் செய்தனர். இப்படி இரத்தமும் சதையும் கொண்ட வரலாறு எம்மிடம் இருக்கின்றது.

சரி ரகுமான் ஜான்  "தன்னியல்புவாதம்" தான் கடந்தகால தவறுக்கு காரணம் என்றார். தேர்தல் பற்றிய அவரின் நிலைப்பாட்டை அவர் தானே "தன்னியல்பாக" முன்வைத்தவர். மார்க்சியம் பேசியபடி, பாராளுமன்ற சாக்கடையை திறந்து காட்டுகின்றார். இப்படி அவர் வைக்கும் வாதங்கள், நாங்கள் புரட்சி செய்ய பராளுமன்றத்தையும் பயன்படுத்த முடியும் என்பது தான். கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமும், மூடிமறைத்த பாசிச அரசியலுமாகும்.

பி.இரயாகரன்

இதற்கு முந்தையா தொடர்கள்

1. வாக்கு போடாதவனை வாக்குப்போட வழிகாட்டும் இனியொரு நாவலனும் மே 18 ரகுமான் ஜானும் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 01)

2. கம்யூனிச கட்சிகள் பாராளுமன்றம் சென்று சீரழிந்த வழியையே இனியொருவும் மே18ம் வழிகாட்கின்றது (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 02)

3.ஜனநாயக விரோதிகளாக இருத்தல்தான் பாராளுமன்ற ஜனநாயகத்தின் உள்ளடக்கம் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 03)


4. ஜனநாயகத்தையும்இ ஜனநாயக விரோதத்தையும் தீர்மானிப்பது ஜனநாயக புரட்சிக்கான கடமைதான் (தேர்தலும் சந்தர்ப்பவாதமும் பகுதி - 04)


பி.இரயாகரன் - சமர்