நீண்ட நாள் கழித்து கிடைத்த,
விடுமுறையொன்றில்
ஊருக்குப் போயிருந்தேன்
முன்பு கிடைத்த,
சந்தோசம் எதுவுமே
இருக்கவில்லை!
பிள்ளையாரடிச் சந்தியும்
வேம்படிக் கோயிலும்
வெறிச்சோடிக் கிடப்பதைக்
கண்ட எனக்கு

யுத்த கால
இருட்டுக்குள்
எங்கள் ஊரார்
வாழ்வு
கறுத்துக் கிடப்பது தெரிந்தது!
ஆசையோடு நான் சந்திக்கம்
முந்தைய நாளைய
என் பாடசாலைச் சிநேகிதன்
நீயில்லா இடைவெளியில்
மரக்காலொன்றும்,
ஊன்றுகோலொன்றும்
பரிசாகக் கிட்டியதாகச்
சொல்லி – என்னைக்
கட்டியணைத்தான் ….?
கேள்விக்குறியான
எதிர்கால வாழ்வை
எண்ணி
கதறி அழுதான் ..?