கொலை, பாலியல் வன்புணரச்சி போன்ற கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் போலீசுக்காரனைத் தண்டிப்பதற்கு நீண்ட நெடிய போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்பது இன்று  ருச்சிகா வழக்கு பிரபலமான பிறகு  மெத்தப் படித்த அறிவுஜீவிகளுக்கும் புரிந்திருக்கும். அப்படிப்பட்ட போலீசுக்காரனோ, இராணுவச்சிப்பாயோ தீவிரவாதிகளை எதிர்த்துப் "போராடும்' அதிரடிப் படைப் பிரிவைச் சேர்ந்தவனாக இருந்துவிட்டால், அவனது கிரிமினல் குற்றங்களும் மனித உரிமை மீறல்களும் கேள்விக்கு இடமில்லாதது ஆகிவிடும்.

 

காஷ்மீரிலும், சட்டிஸ்கரிலும், ஜார்கண்டிலும், வடகிழக்கு இந்திய மாநிலங்களிலும் இப்படிபட்ட நூற்றுக்கணக்கான வழக்குகளைக் காணமுடியும். அப்படிபட்ட வழக்குகளில் ஒன்றுதான் காஷ்மீர் மாநிலத்தின் தென்பகுதியில் உள்ள ஷோபியன் நகரில் கடந்த ஆண்டு நடந்த இரட்டைப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொலைவழக்கு. ஷோபியன் நகரைச் சேர்ந்த 22 வயதான கர்ப்பிணிப் பெண்ணாண நீலோஃபர் ஜானும், அவரது மைத்துனியும் 17 வயதான பள்ளி மாணவியுமான ஆஸியா ஜானும் கடந்த ஆண்டு மே 29 அன்று அவ்வூரின் ஒதுக்குப்புறத்தில் அமைந்துள்ள தங்களின் ஆப்பிள் தோட்டத்தைப் பார்வையிடக் கிளம்பிச் சென்றனர். அவ்விரு இளம்பெண்களும் இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால், அவர்களது குடும்பத்தாரும், அவ்வூர்ப் பொதுமக்களும் அப்பெண்களைத் தேடத் தொடங்கினர். அப்பெண்கள் வீடு திரும்பாதது பற்றி நீலோஃபர் ஜானின் கணவர் போலீசாரிடம் புகார் செய்திருந்ததால், போலீசாரும் பொதுமக்களோடு சேர்ந்து கொண்டு தேடத்தொடங்கினர். ஆனாலும், ஒருவராலும் அப்பெண்களின் நிலை பற்றி அறிய முடியவில்லை. அதேபொழுதில், மறுநாள் காலை 6 மணியளவில் அப்பெண்களின் இரு சடலங்களும், அவர்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் ஓடும் ராம்பி ஆரா என்ற சிற்றாரில் கிடந்தன. போலீசார் அவர்களின் சடலங்களை ஆற்றில் கண்ட மாத்திரத்திலேயே, அப்பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாகக் கூறி வழக்கை முடித்துவிட முயன்றனர்.

 

முதல் நாளிரவு அந்தப் ஆற்றுப் பகுதியைச் சல்லடைப் போட்டுத் தேடியும் கிடைக்காத அவர்களின் உடல்கள், மறுநாள் அதிகாலையில் திடீரென ஆற்றில் கிடந்தது, போலீசார் எவ்வித விசாரணையுமின்றி அப்பெண்கள் ஆற்றில் மூழ்கி இறந்துவிட்டதாக முடிவுக்கு வந்தது, அப்பெண்கள் தங்களின் ஆப்பிள் தோட்டத்திற்குச் செல்லும் வழியில் பாதுகாப்புப் படையின் மூன்று முகாம்களைக் கடந்து செல்ல வேண்டிய இக்கட்டான சூழல்  இவை பொதுமக்களின் மனத்தில் சந்தேகத்தைத் தோற்றுவித்தன. அப்பெண்கள் பாதுகாப்பு படையினரால் கடத்தப்பட்டுப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டிருக்கலாம் என்று அந்நகரப் பொதுமக்கள் சந்தேகத்தை எழுப்பினர். போலீசார் அப்பெண்களின் சந்தேகத்திற்கிடமான மரணம் குறித்து விசாரிக்காமல், அவ்வழக்கை முடித்துவிடக் காட்டிய அவசரம் பொதுமக்களின் சந்தேகத்திற்கு மேலும் வலுவூட்டியது.

 

எனவே, ஷோபியன் நகரப் பொதுமக்கள் அப்பெண்களின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரியும், குற்றவாளிகளை உடனடியாகக் கைது செய்யக் கோரியும் போராடத் தொடங்கினர். காஷ்மீர் மாநில அரசு அப்போராட்டத்தை ஒடுக்கக் காட்டிய வேகத்தில், நூறில் ஒரு பங்கைக்கூட அப்பெண்களின் மரணம் குறித்த விசாரணையில் காட்டவில்லை. முறையான விசாரணை கோரிய பொதுமக்கள் தீவிரவாதிகளை ஆதரிப்பதாக அவதூறு செய்யப்பட்டனர். பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை ஒடுக்க போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்ததோடு, நிஸார் அகமது என்ற சிறுவன் இறந்தும் போனான். இப்போராட்டத்தை ஆதரித்த சையத் ஷாகிலானி, ஷாபிர் ஷா, யாசின் மாலிக் , மிர்வாயிஸ் உமர்ஃபாரூக் ஆகிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும் சிறைச்சாலையிலும் அடைக்கப்பட்டனர்.

 

அப்பெண்களின் மரணமும், அரசின் அடக்குமுறையும் நாடெங்கும் அம்பலமான பிறகுதான், அப்பெண்கள் இறந்துபோய் எட்டு நாட்கள் கழிந்த பிறகுதான ;காஷ்மீர் போலீசார் அவ்வழக்கு குறித்து முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்தனர். அதன் பிறகு நடந்த இரண்டு பிரேதப் பரிசோதனை அறிக்கைகளும் முன்னுக்குப் பின் முரணாண தகவல்களை அளித்ததால், பொதுமக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்தது. இதன்பின், அம்மாநில அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முஸாபர் ஜான் கமிட்டி, ""அப்பெண்கள் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருப்பதாக''ச் சுட்டிக்காட்டியதோடு, ""போலீசார், பிரேதப் பரிசோதனை நடத்திய மருத்துவ அதிகாரிகள், தடய அறிவியல் நிபுணர்களின் திறமையின்மையாலும், நிர்வாகக் குளறுபடிகளாலும் இந்த ஆதாரங்கள் அழிந்துபோய்விட்டதாக'' க் குற்றம் சுமத்தியது. இதன்பிறகாவது, மாநில அரசு விசாரணையைத் தீவிரப்படுத்தி உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடித்திருக்க வேண்டும்; ஆனால், இதற்கு மாறாக இவ்வழக்குவிசாரணை மையப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. போராடிய பொதுமக்களுள் ஒருவர்கூட மையப் புலனாய்வுத் துறையின் விசாரணையைக்கோரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

மையப் புலனாய்வுத் துறை விசாரணையை ஏற்றுக் கொண்ட மறுநிமிடமே, அப்பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டுக் கொல்லப்பட்டதாகத் தெரியவில்லை எனக் கருத்துத் தெரிவித்தது. இக்கருத்து, இவ்விசாரணை மூலம் உண்மையைக் கண்டுபிடிக்கவா அல்லது மூடிமறைக்கவா என்ற சந்தேகத்தை காஷ்மீர் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது. இம்மரணங்கள் குறித்துத் தற்பொழுது சி.பி.ஐ. அளித்துள்ள அறிக்கை காஷ்மீர் மக்களின் சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது. ""அவ்விரு இளம் பெண்களும் ஆற்றில் மூழ்கி இறந்து போனதாக'' சி.பி.ஐ. அளித்துள்ள அறிக்கையை, காஷ்மீர் மக்கள் மட்டுமல்ல, பல்வேறு மனிதஉரிமை அமைப்புகளும், அறிவுத்துறை வர்க்கத்தைச் சேர்ந்த பலரும் கூட முழுமையாக நம்ப மறுத்துள்ளனர்.

 

""சம்பவம் நடந்த அன்று ராம்பி ஆரா ஆற்றில் கழுத்தளவுக்கு மேல் தண்ணீர் ஓடியதாகவும், அப்பெண்கள் ஆற்றைக் கடக்க முயன்றபொழுதுதான் நீரில் மூழ்கி இறந்து போனதாக''க் கூறியுள்ள சி.பி.ஐ., இதற்கு ஆதாரமாகப் பல்வேறு சாட்சியங்களையும் குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்பெண்களின் மரணம் குறித்து விசாரணை நடத்திய ஜனநாயக உரிமை இயக்கங்களுக்கான கூட்டுக் கமிட்டி, சம்பவம் நடந்த அன்று அந்த ஆற்றில் முழங்காலுக்குக் கீழ்தான் தண்ணீர் ஓடியிருக்கும்பொழுது, அப்பெண்கள் எப்படி மூழ்கி இறந்துபோயிருக்க முடியும் என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது. முஸாபர் ஜான் கமிட்டியிடம் சாட்சியம் அளித்துள்ள அரசு அதிகாரிகள், சம்பவம் நடந்த அன்று அந்தஆற்றில் அதிகத் தண்ணீர் ஓடவில்லை எனக் கூறியிருப்பதை இக்கூட்டுக் கமிட்டி எடுத்துக் காட்டியுள்ளது. மேலும், இம்மரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதல ;பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும், நீரில் மூழ்கி இறந்து போனதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சம்பவம் நடந்து நான்கு மாதங்கள் கழித்து, மூன்றாவது முறையாகப் பிரேதப் பரிசோதனை நடத்துவதற்காக அப்பெண்களின் சடலங்களைத் தோண்டியெடுத்த சி.பி.ஐ.யும், அதனால் நியமிக்கப்பட்ட மருத்துவஅதிகாரிகளும் சடலங்களைப் பார்த்த மாத்திரத்திலேயே, ""ஆஸியா ஜானின் பாலியல் உறுப்பிலுள்ள "கன்னித்திரை' நல்ல நிலைமையில் இருப்பதாக'' அறிவித்தனர். விசாரணையின் முடிவு எப்படி அமையும் என்பதற்கான முன்னோட்டம் இது.

 

ஆனால், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய நீதிக்கான சுதந்திரமான பெண்கள் அமைப்பு, ""மிகவும் மெல்லிய சவ்வுப் படலமான கன்னித் திரை புதைக்கப்பட்டு நான்கு மாதங்கள் கழிந்த நிலையில் அழுகி சிதைந்து போயிருக்கும்'' எனத் தமக்கு பேட்டியளித்த பல்வேறு மருத்துவ மற்றும் தடய அறிவியல் நிபுணர்கள் கூறியதாகக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், சி.பி.ஐ.யோ, தனது அறிக்கைக்கு மறுப்பு தெரிவிப்பவர்களை அயோக்கியர்கள் என வசைபாடவில்லையே தவிர, அவர்களைப் பல்வேறு வழிகளில் அவமானப்படுத்தும் கீழ்த்தரமான வேலைகளில் இறங்கியிருக்கிறது. ""அவர்களுக்கு நவீனமான வழிகளில் தடய அறிவியல் சோதனைகள் நடத்தும் அறிவில்லை'' என மட்டை அடியாக அடித்துவிட்டது.

 

அவ்விரு பெண்களின் சடலங்களையும் முதல் பிரேதப் பரிசோதனை செய்து, ""அவர்கள் நீரில் மூழ்கி இறக்கவில்லை'' என அறிவித்த காஷ்மீரைச் சேர்ந்த அரசுமருத்துவர் பிலால், தற்பொழுது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அச்சடலங்களை இரண்டாவது பிரேதப் பரிசோதனை செய்து, ""ஆஸியா ஜானின் தலையில் ஏற்பட்ட காயம் ஆற்றில் விழுந்ததால் ஏற்பட்டதில்லையென்றும், அதனால் அவர் இறந்து போகவில்லை என்றும்'' சாட்சியம் அளித்த மகப்பேறு மருத்துவர் நிகத் ஷஹீனும் தற்பொழுது தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அது மட்டுமின்றி, ஆஸியா ஜான் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டுள்ளார் எனக் காட்டுவதற்காக மருத்துவர் நிகத் ஷஹீன் பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டதாகவும் சி.பி.ஐ. குற்றம் சுமத்தியுள்ளது.

 

மேலும், மர்மமான முறையில் இறந்து போன நீலோஃபர் ஜானின் கணவர் உள்ளிட்டுப் பலரும் சி.பி.ஐ. விசாரணையின் பொழுது பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டனர். அப்பெண்கள் ஆற்றில் மூழ்கித்தான் இறந்து போனார்கள் எனக் காட்டுவதற்காகவே, சி.பி.ஐ. இவர்களை மிரட்டிப் பணிய வைத்திருக்கலாம் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சுமத்தியுள்ளன.

 

இவ்விசாரணை முடிவை ஏற்க மறுக்கும் காஷ்மீர் மக்கள், இந்திய அரசைச் சாராத வேறு ஏதாவதொரு நடுநிலையான அமைப்பு இச்சம்பவம் பற்றி மறுவிசாரணை நடத்த வேண்டும் எனக் கோரி வருகிறார்கள். இந்த நியாயமான கோரிக்கையை ஏற்க மறுக்கும் இந்திய அரசும், தேசியவாதிகளும், ""பிணத்தின் மீது அரசியல் நடத்துகிறார்கள்'', ""மதவெறியையும் இனவெறியையும் தூண்டிவிடுகிறார்கள்'' என காஷ்மீர் மக்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசிவருகின்றனர். ""காஷ்மீர ;முசுலீம்கள் ஆதாரமற்ற சந்தேகம் மூலம் ஷோபியன் சம்பவத்தைப் பெரிதுபடுத்திவிட்டதாகவும், அந்தச் சந்தேகத்தைக்கூட சி.பி.ஐ. விசாரணை தெளிவுபடுத்திவிட்டது'' எனவும் நிரூபிக்க இந்திய "தேசியவாதிகள்'முயன்று வருகிறார்கள்.

 

சி.பி.ஐ., நேர்மையான, நடுநிலையான அமைப்பு என்பதே பார்ப்பன பாசிசக் கும்பல்கள் பரப்பிவரும் கட்டுக்கதைதான். அவ்வமைப்பு காங்கிரசு கும்பலின் கைத்தடியாக நடந்து கொண்டு வருவதற்கு எத்தனையோ ஆதாரங்களைக் காட்ட முடியும். போஃபார்ஸ் பீரங்கி ஊழல் வழக்கு உள்ளிட்டு எத்தனையோ வழக்குகளில் சி.பி.ஐ. அரசியல் சார்போடு நடந்து கொண்டுள்ளது. குவாட்ரோச்சி உள்ளிட்ட எத்தனையோ குற்றவாளிகளைத் தப்பவிட்டிருக்கிறது. சிறுமி ருச்சிகாவை மானபங்கப்படுத்திய போலீசு உயர்அதிகாரி ரத்தோருக்கு இரண்டு மாத கால சிறைத்தண்டனை வாங்கிக் கொடுப்பதற்கு, சி.பி.ஐ. 16 ஆண்டுகள் வழக்கு நடத்தியதிலிருந்தே, அதனின் திறமையையும், நேர்மையையும் அவதானித்துக் கொள்ளலாம்.

 

காஷ்மீர் முசுலீம்கள் இந்திய இராணுவத்தை, துணைஇராணுவப் படையினரை, தமது மாநிலப் போலீசாரைச் சந்தேகிக்க வலுவான காரணங்கள் உள்ளன. அவர்கள் அன்றாடம் இந்திய அரசுப் படையினரின் பயங்கரவாதத்தாக்குதல்களை, மனித உரிமை மீறல்களைச் சந்தித்துவரும்பொழுது, வேறு யாரைச் சந்தேகிக்க முடியும்? காஷ்மீரில் அமைதியான முறையில் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நடைபெற்றதைக் காட்டி, அம்மக்கள் தீவிரவாதிகளைப் புறக்கணித்துவிட்டதாக இந்திய அரசு கூறிவந்தாலும்கூட, காஷ்மீரத்து முசுலீம்கள் மீது இந்திய அரசுப் படையினர் தொடுத்துவரும் பயங்கரவாதத் தாக்குதல்கள் இம்மியளவுகூடக் குறையவில்லை.

 

• சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக்என்ற சிறுவன், கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையினரின் திமிரை எதிர்த்துக் கேள்வி கேட்டதுதான் அச்சிறுவன் செய்த தவறு. இப்படுகொலைக்குக் காரணமான அப்படையைச் சேர்ந்த உயரதிகாரியைக் காப்பாற்றுவதற்காக இப்பொழுது விசாரணைநாடகம் நடந்து வருகிறது. இப்படுகொலை நடந்ததற்கு ஒரு வாரம் முன்னர்தான் வாமிக் ஃபரூக் என்ற 14 வயது சிறுவனை, பாதுகாப்பு படையைச் சேர்ந்த ஒரு அதிகாரி கண்ணீர் புகை குண்டை வீசியெறிந்து கொன்றான். இப்படுகொலையைக் கண்டித்து நடந்த போராட்டங்களையடுத்து, அந்த அதிகாரி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளான்.

 

• கடந்த ஆண்டு ஜூன் மாதம் தேசியதுப்பாக்கிப் படை அதிகாரிகளால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட 16வயது சிறுவன் பஷாரத் அகமது இன்றுவரை வீடு திரும்பவில்லை. அச்சிறுவனைப் பிடித்துச் சென்ற மதியமே விடுவித்துவிட்டதாக அதிகாரிகள் புளுகி வருகின்றனர்.

 

• கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய துப்பாக்கிப் படைப் பிரிவால் விசாணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த 14 வயது சிறுவன் முஷ்டாக் அகமது மிர், சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டான். அதே ஆண்டில், மன்ஜூர் அகமத் பெசூக்,ஃபயஸ் அகமது மிர் ஆகியோரும் கொட்டடியில் வைத்துக் கொல்லப்பட்டனர்.

 

• 2007-08ஆம் ஆண்டில் மட்டும் 39 கொட்டடிக் கொலைகள் நடந்திருப்பதாகவும், விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களுள ;91 பேர் "காணாமல்' போய்விட்டதாகவும் அம்மாநில மனித உரிமை ஆணையம் தெரிவித்திருக்கிறது. 2008ஆம் ஆண்டில் பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட 261 பேரில் பலரைக் குற்றமற்றவர்கள் என நீதிமன்றம் விடுவித்துவிட்டாலும், விடுவிக்கப்பட்டவர்கள் அனைவரையும் மீண்டும் உடனடியாகவே வேறொரு குற்றச்சாட்டின் கீழ் பாதுகாப்புப் படையினர் கைது செய்து சிறையில் அடைத்துவிட்டதாக அம்மாநிலத்தின் ழுஉட்டஅமைச்ழுஉரே ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

காஷ்மீரில் அன்றாடம் நடக்கும் இத்தகைய மனித உரிமை மீறல்களைப் பட்டியல் போட்டு மாளாது. இப்படிபட்ட நிலையில் பல்வேறு சந்தேகங்களுக்கு இடமளிக்கும்வகையில் தயாரிக்கப்பட்டுள்ள சி.பி.ஐ. விசாரணை முடிவை காஷ்மீர் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பதற்கு அவர்களுக்கு முழு உரிமையுண்டு. காஷ்மீரில் அரசுப் படையினர் நடத்திவரும் மனித உரிமைமீறல்களுக்குப் பாதுகாப்பு அளிப்பதாகவே, அந்த அட்டூழியங்களைத் தூண்டிவிடுவதாகவே சி.பி.ஐ.யின் முடிவு அமைந்திருப்பதாக மனிதஉரிமை அமைப்புகள்கூடக் குற்றம் சுமத்தி வருகின்றன.

 

இத்தகைய அரசு பயங்கரவாத அட்டூழியங்களை எதிர்த்துப் போராடினால், அதற்குப் பெயர் முசுலீம்மதவெறியா? இத்தகைய அட்டூழியங்களைத் தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் நியாயப்படுத்தும் இந்து தேசியம் மட்டும் புனிதமானதா? இத்தகைய அட்டூழியங்களுக்கு நீதி வழங்காமல் காஷ்மீரில் அமைதியை நிலைநாட்டிவிடமுடியாது; இந்து தேசியவெறியை, தேசிய இன ஒடுக்குமுறையை எதிர்த்து வரும் காஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டமும் ஓய்ந்து விடாது.


• செல்வம்