கனகரத்தினம் கொலை முயற்சி நடைபெற்ற சில நாட்களின் பின்னதாக கணேஸ் வாத்தி கொழும்பில் பொலீசாரால் கைது செய்யப்படுகிறார்.வழமைபோல அவரும் பஸ்தியாம்பிள்ளை என்ற காவல்துறை அதிகாரியால் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார். பஸ்தியாம்பிள்ளையின் சித்திரவதை தொடர்பாக நாம் அனைவரும் அறிந்திருந்தோம் கணேஸ் வாத்தி கைதானது தொலைத் தொடர்புகள் அரிதான அந்தக் காலப்பகுதியில் எமக்குத் தெரிந்திருக்கவில்லை.
கணேஸ் வாத்தி சித்திரவதைகளின் கோரத்தில் எம்மைப்பற்றி தகவல்களைச் சொல்லிவிடுகிறார். பொலிசார் எமது பலம், நாம் வைத்திருந்த ஆயுதங்கள், உறுப்பினர்கள் போன்ற அடிப்படைத் தகவல்களைச் சேகரித்துக்கொள்கின்றனர்.
தேடப்பட்டவர்கள்,முக்கிய உறுப்பினர்கள் அனைவரும் மடுப் பண்ணையிலேயே வாழ்ந்தார்கள். அங்குதான் எமது முக்கிய முடிவுகளும், பிரதான தொடர்புகளும் பேணப்பட்டன.
நான் நிரந்தரமாக ஒரு குறித்த பண்ணையில் தங்குவதில்லை. பண்ணைகளின் நிர்வாகம் எனது பொறுப்பிற்கு உட்பட்டிருந்ததால் நான் நிரந்தரத் தங்குமிடம் ஒன்றை வைத்துக் கொள்ளவில்லை. சந்தர்ப்பவசமாக அன்று நானும் மடுப்பண்ணையில் தங்கவேண்டியதாயிற்று.
பொழுது இன்னும் முழுதாகப் புலராத நேரம். அதிகாலை ஐந்து மணியிருக்கும். அடர்ந்த காட்டில் சேவல் கூவவில்லை. பறவைகள் மட்டும் அங்கும் இங்குமாய் சோம்பல் முறித்து மெல்லிய மொழியில் பேசிக்கொண்டன.
பண்ணையின் அமைப்பு முறை ஓரளவு பாதுகாப்பு முன்னேற்பாடுகளுடன் கூடியதாகவே அமைந்திருந்தது. மரங்களுக்கு மேலே நான்கு பேர் தங்கியிருக்கக் கூடிய வகையிலான பரண் அமைக்கப்பட்டிருந்தது. தவிர ஒரு குடிசையும் அமைத்திருந்தோம். பரணில் நானும், உமாமகேஸ்வரனும், நாகராஜாவும் உறங்கிக் கொண்டிருந்தோம். நான் அப்போது சற்று கண்விழித்திருந்தேன்.
கீழே கொட்டிலில் செல்லக்கிளி, ராகவன், நிர்மலன்,ரவி, சித்தப்பா,யோன் ஆகியோர் இருந்தனர். பரணுக்கும் கொட்டிலுக்கும் இடையே அரைக் கிலோமீட்டர் இடைவெளி இருந்தது. இதே வேளை அந்தக் காலை நேரத்தில் பொலீஸ் வாகனத்தில் அதன் சாரதியோடு கைது செய்யப்பட்ட கணேஸ் வாத்தியையும் சற்றுத் தூரத்தில் நிறுத்தி வைத்துவிட்டு பஸ்தியாம்பிள்ளை தனது உதவியாளர்களுடன் குடிசையை நோக்கி நடந்துவருகிறார்.
அவரோடு இன்னும் இரு முக்கிய அதிகாரிகள் இருந்தனர். பேரம்பலம், பாலசிங்கம் ஆகிய அந்த இருவரும் கூட தமிழ் இளைஞர்களின் தீவிரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக அறியப்பட்டவர்கள் தான்.
மூவரும் குடிசைக்கு வந்தவுடன் உறக்கத்திலிருந்த அனைவரையும் சுற்றிவளைத்துக் கொள்கின்றனர். பொலீசாரின் சந்தடியில் விழித்துக்கொண்ட அனைவரும் செய்வதறியாது திகைக்கின்றனர். அதிர்ச்சியில் எழுந்த அவர்கள் பஸ்தியாம்பிள்ளை குழுவினருடன் பேச்சுக்கொடுக்க ஆரம்பிக்கின்றனர்.
பஸ்தியாம்பிள்ளை திறமைமிக்க அதிகாரி. அந்த நேரத்தில் தீவிரவாத அரசியலில் ஈடுப்படுள்ளவர்களின் தரவுகள் பல அவரின் மூளைக்குள்ளேயே பதியப்பட்டிருந்தது. ஆக செல்லக்கிளி போன்ற தேடப்படுகின்றவர்களை அவர் அடையாளம் கண்டுகொண்டிருப்பார் என்பது எமது எல்லோரதும் ஊகம்.
அங்கிருந்த போராளிகள் தாம் வந்திருப்பது விவசாயம் செய்வதற்காகத் தான் என்று பொலீசாருக்குச் சொல்கின்றனர். அக்காலப்பகுதியில் இளைஞர்கள் காடுகளைச் சுத்திகரித்து விவசாயம் செய்வது வழமையன நிகழ்வு என்பதால் அவர்கள் அவ்வாறு கூறுகிறார்கள். பஸ்தியாம் பிள்ளை குழுவினர் இவர்கள் கூறியதை நம்பினார்களோ என்னவோ நம்புவது போல் நடித்துக்கொண்டிருந்தார்கள்.
நான் ஏனைய பண்ணைகளுக்குச் சென்று வேலைகளை கவனிக்க வேண்டும் என்பதால் வழமையாகவே நேரத்துடன் எழுந்துவிடுவேன். அன்றும் பாதி உறக்கத்தில் என்னோடு பரணில் இருந்த உமாமகேஸ்வரன்,நாகராஜா ஆகியோரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றப்பண்ணைகளுக்குச் செல்லும் வழியில் குடிசையை நோக்கி நடக்கிறேன். அங்கு நிலைமைகள் வழமைக்கு மாறானவையாக இருப்பதை சற்று அண்மித்ததும் அவதானிக்கக் கூடியதாக இருந்தது.
உறக்கம் கலைந்த அவர்கள், பரணைவிட்டு இறங்கி மூவருமாக குடிசையை நோக்கிச் செல்கிறோம்.
அதிகாலையில் அமைதியாக இருக்கும் பண்ணையில் ஆள் அரவமும் பேச்சுக்குரல்களும் கேட்டன. இவற்றை அவதானித்த நான் ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதாக எண்ணி மிக அவதானமாக ஓசை படாமல் அருகே சென்ற போது அன்னியர்களின் பேச்சுக் குரல்களை அவதானிக்கின்றேன். உடனே பரணுக்குத் திரும்பிச் சென்று உமாமகேஸ்வரனையும், நாகராஜாவையும் உசார்படுத்துகிறேன்.
நாங்கள் மூவரும் மெதுவாக அடர்ந்த காட்டு வழியில் வேறு வேறு திசைகளில் சென்று குடிசையைச் சுற்றி வளைத்துக்கொள்கிறோம். நாகராஜவிடம் ஒரு குறிசுடும் துப்பாக்கியும் உமாவிடமும்,என்னிடமும் ஒவ்வொரு கைத்துப்பாக்கியும் இருந்தது. அருகே சென்றதும் அங்கிருப்பது பொலீஸ் என்பது எமக்குத் தெரியவருகிறது. நாம் மூவரும் நகரவில்லை நடப்பதை மறைவிலிருந்தே அவதானிக்கிறோம்.
இதற்கிடையில் குடிசையிலிருந்த எம்மவர்கள் பஸ்தியாம் பிள்ளை குழுவினருடன் சாதரணமாக பேச்சுக்கொடுத்துக் கொண்டிருந்தனர்.
பஸ்தியாபிள்ளை குழுவினருக்கு அவர்கள் அனைவரையும் பொலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கமும் இருந்தது.
பொலீஸ் அதிகாரிகளைத் தேனீர் தயாரித்து அருந்த அழைத்ததும் அவர்களும் ஒத்துக்கொள்கிறார்கள். அவ்வேளையில் அங்கே இருந்த குறி சுடும் துப்பாக்கியைக் கண்ட பஸ்தியாம்பிள்ளை அது எதற்காக எனக் கேள்வியெழுப்புகிறார். யானைகள் அதிகமான காடு என்பதால் பாதுகாப்பிற்காக வைத்திருக்கிறோம் எனக் கூறி எம்மவர்கள் தப்பித்துக்கொள்ள முனைகின்றனர்.
தேனிர் தயாரித்தாயிற்று. குடிசையைச் சூழ மரக் குற்றிகள் இருந்தன. அவற்றின் மேல் அமர்ந்து இளைப்பாறியபடியே தேனீர் அருந்துகின்றனர்.
பரணிலிருந்து இறங்கிவந்து குடிசையைச் சுற்றி மறைவிடங்களிலிருந்து அவதானித்துக் கொண்டிருந்த எமக்கு அங்கு என்ன நடக்கிறது என்பது குறித்துக் குழப்பமடைந்திருந்தோம்.
மரக் குற்றிகளில் அமர்ந்திருந்த போது பஸ்தியாம்பிள்ளை கொண்டு வந்திருந்த இயந்திரத் துப்பாகியை தனக்கு அருகில் வைத்துவிட்டு பேசிக்கொண்டிருந்தார். எம்மில் அனைவரும் இயந்திரத் துப்பாக்கி பற்றி அறிந்திருந்தோம் ஆனால் யாரும் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை.
இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி துப்பாக்கியக் கைப்பற்றினால் தப்பித்துவிடலாம் என அங்கிருந்த எம்மவர் மௌனமாகத் திட்டமிட்டுக்கொண்டனர். அதற்கு முதலில் பொலீஸ் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தனிமைப்படுத்த வேண்டும் என்பதையும் திட்டமிடுகிறார்கள்.
இவ்வேளையில் பேரம்பலம் முகம் கழுவிக்கொள்ள கிணற்றுக்கு அருகே அழைத்துச் செல்லப்படுகிறார். கிணறும் கூப்பிடு தொலைவில் இருந்தாலும் குடிசைக்கு மறைவாகவே இருந்தது.
யோனும், சித்தப்பாவும் பேரம்பலத்தைக் கிணற்றிற்குக் கூட்டிச் செல்கின்றனர். அவர் போக மற்றைய இருவரும் இன்னும் உரையாடலில் இருந்தனர். ஆக இரண்டு பொலீசார் நான்கு போராளிகள் அங்கு எஞ்சியிருந்தனர்.
நாகராஜாவும் தொலைவிலிருந்தே என்ன நடக்கப் போகிறது என்பதை ஊகித்துக்கொண்டதால் குறிசுடும் துப்பாகியோடு குடிசையை மேலும் அண்மிக்கிறார்.
இவ்வேளையில் தான் திகில் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. ரவி பஸ்தியாம்பிள்ளையின் இயந்திரத்துப்பாகியை எடுத்துவிடுகிறார். பதட்டம் பரபப்பு எல்லாம் ஒருங்கு சேர ரவிக்கு அதனை இயக்கத் தெரியவில்லை. அங்கும் இங்குமாக பல தடவை இயக்குவதற்கு முனைகிறார்.
ரவி துப்பாகியைக் கைப்பற்றிய அதே கணத்தில் விரைந்து செய்ற்பட்ட ராகவன் பஸ்தியாம்பிள்ளையை மடக்கிக் கட்டிப் புரள்கிறார். மறுபுறத்தில் பாலசிங்கத்தை மடக்கிய கறுப்பி என்ற நிர்மலன் அவரோடு குறிசுடும் துப்பாகியொன்றைக் கைப்பற்றுவதற்காக மல்யுத்தம் நடத்திக்கொண்டிருந்தார். இவ்வாறு இரு முனை யுத்தம் நடக்க திகில் நிறைந்த திரைப்படக் காட்சிபோல அனைத்தையும் நாம் அவதானித்துக்கொண்டிருந்தோம்.
இதே வேளை பாலசிங்கத்தை நோக்கி மறைவிலிருந்த நாகராஜா தன்னிடமிருந்த துப்பாக்கியால் சுடுகிறார். இதனால் நிர்மலனது கையில் கூட ஒரு காயம் ஏற்படுகிறது.
ரவி இயந்திரத் துப்பாகியை இயக்க முனைந்து கொண்டிருந்த வேளையில் விரைந்து செய்ற்பட்ட செல்லக்கிளி பஸ்தியாம் பிள்ளையின் தலையில் குறிசுடும் துப்பாக்கியால் அடித்துவிடுகிறார். அடிவிழுந்ததும் பஸ்தியாம்பிள்ளை நினைவு குலைந்த நிலையிலேயே ராகவனோடு கட்டிப்புரழ்கிறார்.
இது நடந்துகொண்டிருந்த வேளையில் பேரம்பலம் என்பவர் கிணற்றுக்கு முகம்கழுவச் சென்றவரை அவரோடு சென்ற யோனும் சித்தப்பாவும் கிணற்றுகுள் தள்ளிவிடுகின்றனர். இவ்வேளை ஒரு எதிர்பாராத சம்பவமும் நிகழ்ந்தது. அவரைத் தள்ளி விழுத்தும் போது யோனும் சேர்ந்து கிணற்றினுள் விழுந்துவிடுகிறார். அதிஷ்டவசமாக யோனுக்கு நீச்சல் தெரிந்திருந்ததால் அவர் நீந்திக்கொண்டிருக்க பேரம்பலம் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டுருந்தார்.
அனைத்துமே திகில் நிறைந்த திரைப்பட்ம் போல் ஒன்றன்பின் ஒன்றாக நிகழ்கின்றன. கண்ணிமைக்கும் நேரத்துள் அனைத்தும் தலை கீழ் நிகழ்வுகளாகிவிடுகின்றன. ஆரம்பத்திலிருந்தே எம்மவர்கள் யாரும் சரணடைவதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ தயாராக இருக்கவில்லை. இறுதிவரை போராடுவதாகவே தீர்மானித்திருந்தனர்.
ரவியிடமிருந்து இயந்திரத் துப்பாக்கியை வாங்கிக்கொண்ட செல்லக்கிளி சில கணங்களுள் அதனை எவ்வாறு இயக்குவது என்று கற்றுக்கொள்கிறார். உற்சாகமாகிவிட்ட அவர் விழுந்துகிடந்த பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டுக்கொல்கிறார். உடனடியாகவே கிணறு இருந்த திசையை நோக்கி ஓடிய செல்லக்கிளி அங்கு கிணற்றினுள் தத்தளித்துக் கொண்டிருந்த பேரம்பலத்தையும் சுட்டுக்கொல்கிறார்.
மூன்று பொலீசாரும் திகில் நிறைந்த சில கண நேரத்துள் மரணித்து விடுகின்றனர்.
ஆர்ப்பாட்டமில்லாத இராணுவ வெற்றி நிலைநாட்டப்படுகிறது. இலங்கையில் தமிழர்கள் எங்கிருந்தாலும் பஸ்தியாம்பிள்ளையை அறிந்திருந்தனர். இலங்கையில் இருதயப்பகுதியில்,பலத்த காவல் துறை பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நிகழ்ந்த கனகரத்தினம் கொலை முயற்சி ஜெயவர்தன அரசை உலுக்கியிருந்ததது.
அதன் பின்னர் இலங்கையின் உளவுத்துறையில் பஸ்தியாம்பிள்ளையின் செல்வாக்கு உச்சமடைந்திருந்தது. அவர் இப்போது எமது குடிசைக்கு முன்னால் உயிரற்ற உடலாக… எல்லாம் ஒரு கனவுபோல நடந்து முடிந்தது.
செல்லக்கிளி ஒரு உணர்ச்சிப் பிழம்புபோல. எதையும் உணர்வுபூர்வமாக மட்டுமல்ல உணர்ச்சி பூர்வமாகவும் ஈடுபாட்டோடு செய்யவல்லவர். இயந்திரத் துப்பாக்கியை இயக்கி பஸ்தியாம்பிள்ளையைச் சுட்டதும் உரத்த குரலில் ‘வாழ்க தமிழீழம்’ எனச் சத்தமிட்டது காடுமுழுவதும் மறுபடி மறுபடி எதிரொலித்தது. செல்லக்கிளியின் குதூகலத்தோடு மறைந்திருந்த நான்,உமாமகேஸ்வரன். நாகராஜா ஆகியோரும் கலந்து கொள்கிறோம். எம்மையே எம்மால் நம்ப முடியவில்லை. இளைஞர்களுக்கும், தமிழ்த் தேசியக் குரலுக்கும் சிம்ம சொப்பனமாக இருந்த பஸ்தியாம் பிள்ளையை அவரது துப்பாக்கியாலேயே சுட்டுக் கொலை செய்த சம்பவம் எமக்கெல்லாம் ஒரு பெரும் சாதனை.
07ம் திகதி ஏப்பிரல் மாதம் 1978 ஆம் ஆண்டு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகப் பல குறிப்புகள் பதியப்பட்டிருக்கின்றன.
அந்த இராணுவ வெற்றியின் அரசியல் பலாபலன்களை எடை போடவும் அதன் பின்னரான அரசியலை வழி நடத்தவும் நாம் திட்டமிடவில்லை. அதற்கான கட்டமைப்பும் மக்கள் திரளமைப்புக்களும் இருந்ததில்லை. எமது நோக்கம் பலமான இராணுவத்தைக் கட்டியமைப்பதாக மட்டும் தான் அமைந்தது. அதற்கு மேல் எதுவும் இல்லை. அந்தப் பலமான இராணுவத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கொலைகள் ஒரு மைற்கல்லாகவே எமக்குத் தெரிந்தன.
அன்று மட்டுமல்ல முள்ளிவாய்க்கால் வரை யாருமே அரசியல் எதிர்விளைவுகள் குறித்துச் சிந்தித்ததில்லை. எத்தனை மனித் உயிர்கள் எத்தனை இராணுவ வெற்றிகள் !
இதன் பின்னர்தான் இவர்கள் வந்த வாகனம் பற்றியும் அதில் வேறு யராவது இருக்கலாம் என்ற நினைவும் வருகிறது.செல்லகிளியும் வேறு இருவரும் பாதை வழியே பதுங்கியபடி செல்கின்றனர். இவர்கள் காரை நோக்கி ஒடிச்செல்லும் போது சாரதி காரிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இறங்கி ஓட முனைகிறார். அவரை சிறிது தூரம் துரத்திச் சென்ற செல்லக்கிளி இறுதியில் சுட்டுக் கொலை செய்துவிடுகிறார்.
சிறிவெர்தன என்ற அந்தச் சாரதியைக் கொலை செய்வதைத் தவிர அவர்களுக்கு வேறெந்த மாற்றும் இருக்கவில்லை. அவர் அங்கேயே கொலை செய்யப்படுகிறார்.
கொலைகளின் பின்னால்,அது எந்த வடிவில் அமைந்திருந்தாலும்,தனிமனித வக்கிர உணர்வுகள் மட்டும் தான் காரணம் என்பது வரட்டுத்தனமான வாதம். அதன் பின்புலமாக அமைந்த அரசியல் தான் மாற்று வழிமுறையற்ற கொலைகளை ஏற்றுக்கொள்ளுமாறு நிர்ப்பந்தித்தது. நாம் மக்கள் என்ற கடலில் மீன்கள் போல வாழ்ந்த கெரில்லாப் போராளிகளல்ல, மக்களிலிருந்து அன்னியமாக வாழ்ந்த வெறும் தலைமறைவுப் போராளிகள் தான்.
நிலைமையை புரிந்துகொண்ட கணேஸ் வாத்தி கையை மேலே தூக்கிக் கொண்டு இறங்கி வருகிறார். பின் அவரையும் ஏற்றிக் கொண்டு குடிசையை நோக்கி வாகனத்தை செல்லக்கிளி ஓட்டி வருகிறார்.
எமக்கு அதன் பின்னர்தான் இவை அனைத்துமே கணேஸ் வாத்தி வழங்கிய தகவல்களின் அடிப்படையில் தான் நிகழ்ந்தது என்பது தெரியவருகிறது. அதிர்ச்சிக்கு மேலாக அனைவருக்கும் அவர் மீதான ஆத்திர உணர்வு மேலிடுகிறது. அப்போது ராகவன் கணேஸ் வாத்தியைச் சுடவேண்டும் என்று துரத்திக்கொண்டு வரும் போது கணேஸ் வாத்தி எனக்குப் பின்னால் பதுங்கிக் கொண்டு உயிர்ப்பிச்சை கேட்கிறார். நான் தவறு செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் என்று கெஞ்சுகிறார். அப்படியிருந்தும் ராகவன் ரவி ஆகியோர் அவரை தாக்கிவிட்டார்கள். கணேஸ் வாத்தியோ எனக்குப்பின்னால் ஒரு குழந்தை போல பயத்தில் பதுங்கிக் கொண்டார்.
இப்போது சூடு பட்டடதில் நிர்மலனுக்கு கையிலிருந்து இரத்தம் வடிந்துகொண்டிருந்தது. முதலில் நாம் அனைவரும் அங்கிருந்து தப்பித்துகொள்ள வேண்டும். அதுதான் எமது அடுத்த திட்டம். எங்கே போவது என்பதெல்லாம் பின்னர் முடிவெடுக்க வேண்டும் ஆனால் தப்பித்தாக வேண்டும்.அது தான் பிரதான நோக்கம்.
கிணற்றினுள் இறந்து கிடந்த பேரம்பலத்தை வெளியே எடுத்து எரிப்பதற்கு எமக்கு நேரமிருக்கவில்லை. அவரை அப்படியே விட்டுவிடுகிறோம். பாலசிங்கத்தினதும் பஸ்தியாம் பிள்ளையினதும் உடல்களைத் தூக்கி குடிசைக்குள் போட்டுவிட்டு, கிடைத்த காய்ந்த மரங்களையும் சருகுகளையும் அவற்றின் மீது போட்டுவிட்டு தீவைத்து விடுகிறோம்.
அவ்வேளையில் அங்கே தண்ணீர் இறைக்கும் இயந்திரம், சைக்கிள் போன்றன இருந்தன. அவற்றையும் அங்கேயே வைத்து எரிக்கிறோம்.
ஆக, தடயங்களையும் உடல்களையும் அழிப்பதற்கான வேலையை ஓரளவு செய்து முடித்து விடுகிறோம்.
இப்போது எவ்வளவு விரைவாகத் தப்பிச் செல்ல முடியுமோ அவ்வளவு விரைவாகச் செல்லவேண்டும் என்பது தான் அடுத்த நோக்கம். அதற்கு முன்பதாக நிர்மலனின் கையிலிருந்து இரத்தப்பெருக்கு அதிகமாக, அவரை மன்னாருக்குக் கூட்டிச் சென்று சிகிச்சையளிப்பது என்பதும் முடிவாகிறது. அப்போது எமக்கு பொலிசார் வந்த கார் கைவசம் இருந்ததால் அதே காரில் மன்னாரை நோக்கிச் செல்ல முடிவெடுத்து, நாகராஜாவும், ராகவனும், நிர்மலனும் செல்ல செல்லக்கிளி காரைச் செலுத்துகிறார். அவர் ஒரு திறமையான வாகன ஓட்டுனரும் கூட.
மன்னாருக்குச் சென்று அங்கிருந்த தெரிந்த வைத்தியரின் உதவியோடு நிர்மலனுக்கு மருத்துவம் சிகிச்சை மேற்கொள்ளப் படுகிறது. ராகவனும்,நிர்மலனும் அங்கேயே தங்கி விடுகிறார்கள்.
செல்லக்கிளி திரும்பி வந்து சேர்வதற்குள் நாங்கள் எம்மால் முடிந்த அளவிற்குத் தடயங்களை அழித்துவிட்டோம். அந்த இடைவெளியில் கணேஸ் வாத்திக்கு மரண தண்டனை வழங்குவதில்லை எனவும் முடிவெடுக்கிறோம். ஆனாலும் அவர் தொடர்ந்தும் இயக்கத்தில் இணைந்து இயங்குவதற்கு அனுமதிப்பதில்லை எனவும் கூடவே மற்;றொரு முடிவையும் அங்கிருந்த அனைவரும் சேர்ந்தே மேற்கொள்கிறோம்.
பின்னர் முகாமிலிருந்து புறப்பட்ட அனைவரும் வவுனியா வரை பஸ்தியாம்பிள்ளை குழுவினர் பயன்படுத்திய காரிலேயே வருகிறோம். செல்லக்கிளி தான் காரின் சாரதி. எங்களை எல்லாம் பொலீசார் எப்போதும் கைது செய்யலாம், சித்திரவதைக்கு உட்படலாம் என்று எண்ணியிருந்தோம். ஆனால் பொலீஸ் வாகனமொன்றில் முழுச் சுதந்திரத்தோடு பிரயாணம் செய்வோம் என நாம் எதிர்பார்த்ததில்லை.
எல்லோரும் வெற்றியின் பெருமிதத்தில் இருந்தோம். கணேஸ் வாத்தியைத் தவிர. கணேஸ் வாத்தியை வவுனியாவில் இறக்கிவிட்டு இனிமேல் இயக்கத்தோடு தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டாம் என்று எச்சரிக்கிறோம். அவர் அங்கு இறங்கி எம்மோடு எதுவும் பேசாமலே சென்றுவிடுகிறார்.
இன்று உச்சமடைந்திருக்கும் இனப்படுகொலையின் கோரம் அப்போதும் பண்பியல் மாற்றமின்றி இருந்தது. அப்போது கூட நட்பு சக்திகளுக்கும், எதிரிகளுக்கும் இடையேயான இடைவெளி கூட மிக நெருக்கமானதாகத் தான் இருந்தது. சில மணி நேரங்களில் கணேஸ் வாத்தி என்ற மத்திய குழு உறுப்பினர் துரோகியாகிப் போய் மயிரிழையில் உயிர் பிழைத்த நிகழ்வு, ஆயுதப் போராட்டத்தில் ஆய்வுகளினதும் அரசியலினதும் தேவையை உணர்த்தி நிற்கிறது.
எம்மால் உருவாக்கப்பட்ட துரோகிகளை அழிக்கும் செயன்முறை மறுபடி மறுபடி வேறு வேறு வடிவங்களில் இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மக்கள் திரள் அமைப்புக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் போராட்டங்களிலெல்லாம் நீதிக்கும் தீர்ப்பு வழங்கலுக்கும் புதிய வடிவங்களைக் காண்கிறோம். மக்களின் பிரதிநிதிகள் மக்கள் மன்றத்தில் வழங்கிய தீர்ப்புக்கள் குறித்தும் அவற்றின் நடைமுறை குறித்தும் நாம் அப்போது அறிந்திருக்கவில்லை. தனிமனிதர்களின் முடிவுகளே தீர்ப்புகளாயிருந்தன. அதிலும் ஆயுத பலம் கொண்ட மனிதர்கள் சிலர், தாம் சரி அல்லது தவறு என்று முடிவு செய்வதற்கு தமக்குத் தாமே அதிகாரத்தை வழங்கியிருந்தனர். புலிகளுக்கு மட்டுமல்ல சிறுகச் சிறுக ஈழத்தின் ஒவ்வொரு மூலைகளிலும் உருவான இயக்கங்கள் அனைத்திற்கு இது பொருந்தும்
கணேஸ் வாத்தியை கொலை செய்வதற்கு என்னோடு இணைந்து எதிர்ப்புத் தெரிவித்தவர்களுள் உமாமகேஸ்வரனும் ஒருவர். அவர் மற்றவர்களோடு வாத்தியை மன்னித்து விடவேண்டும் என்று விவாதித்தார்.
இந்தச் சம்பவங்கள் எதுவுமே பிரபாகரனுக்குத் தெரியாது. அவர் அவ்வேளையில் யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்தார்.
இப்போது எனது வேலைகள் கடினமானவையாக அமைகின்றன. நான் ஏனைய பண்ணைகளுக்குச் செல்லவேண்டும். அவர்களின் இடங்களை மாற்ற வேண்டும். இலங்கை அரசின் உளவுப்படை அவை குறித்தெல்லாம் தகவல்கள் வைத்திருக்கின்றனவா என்பதெல்லாம் எமக்கு உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆக, நான் பண்ணைகளை மீழமைப்புச் செய்யவேண்டிய நிலையில் இருந்தேன்.
இதனால் நான் புளியங்குளம் பண்ணைக்கு அருகாமையில் இறங்கிக் கொள்கிறேன். ரவி, நாகராஜா போன்றோர் ஏனைய பண்ணைகளை நோக்கி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிக்க விரைகிறார்கள்.
உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் முறிகண்டிக் காட்டினுள் சென்று காரை எரித்துவிட்டு கைப்பற்றப்பட்ட இயந்திரத் துப்பாக்கியையும் மறைத்து வைத்துவிட்டு பிரபாகரனிடம் தகவல் சொல்வதற்காக யாழ்ப்பாணம் நோக்கி விரைகிறார்கள் .எல்லாவற்றிற்கும் மேலாக ஆயுதங்கள் மட்டுமே விடுதலை பெற்றுத்தரும் என முழுமையாக நம்பியிருந்த எம் வசம் இப்போது ஒரு இயந்திரத் துப்பாக்கி இருக்கிறது. போராட்டம் என்பது அடுத்த நிலையை நோக்கி வளர்ச்சியடைந்து விட்டதான பிரமையில் அனைவரும் உற்சாகத்திலிருக்க அந்த மக்ழ்ச்சியைப் பிரபாகரனோடு பகிர்ந்துகொள்ள உமாமகேஸ்வரனும் செல்லக்கிளியும் யாழ்ப்பாணம் நோக்கிச் செல்கின்றனர்.
இன்னும் வரும்…
———————————————————————————————–
இன்னும் சிலரின் இனிய நினைவுகள்..
நந்தன் : வடமராட்சியைச் சேர்ந்த இவர். அரசியல் ஆர்வம்மிக்க ஒரு போராளி.மார்க்சிய,லெனிய, மாவோயிசக் கருத்துக்களோடு பரிட்சயமான நந்தன்,மனோ மாஸ்டரோடு காரசாரமான விவாதங்களில் ஈடுபடுவார். ஏனைய போராளிகளோடு இணைந்து பண்ணைகளில் வாழ்ந்த நந்தன் அதிகமாகப் புத்தகங்களையும் அரசியல் தேடலையும் நேசித்தவர். பின்னாளில் தமிழீழ தேசிய விடுதலை முன்னணி(NLFT)யின் மத்தியகுழு உறுப்பினராகவும் இருந்தவர்.
டானியல்: கிழக்கைச் சேர்ந்த இவர், உற்சாகமான உணர்வுபூர்வமான போராளி. கிழக்கின் கோரமான இராணுவ ஒடுக்குமுறை இவர்களின் உணர்வுகளில் தேசிய இரத்தத்தைப் பாய்ச்சியிருந்தது. மிக நிதானமான பண்பு கொண்ட இவர், நேர்மையானவரும் கூட. டானியல் கிழக்குப் பண்ணைகளுக்கும் பொறுப்பாக நியமிக்கப்பட்டார்.
பொன்னம்மான் : யோகரத்தினம் குகன் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் கலட்டி என்ற யாழ்ப்பாணப் புறநகர்ப்பகுதியைச் சேர்ந்தவர். இராணுவத் தாக்குதல் தயாரிப்புச் சம்பவம் ஒன்றில் மரணித்துப் போன பொன்னம்மான், பண்ணைகளில் வாழ்ந்திராவிட்டாலும், யாழ்ப்பாணத்திலிருந்தே பல முக்கிய பணிகளில் ஈடுபட்டார். உயர் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த இவர், உறுதிமிக்க போராளி. பின்னாளில் இவரின் சகோதரரும் கூட தமிழீழ விடுதலைப் புலிகளில் இணைந்து செயற்பட்டார். பொன்னம்மான் யாழ்ப்பாணப்பகுதியில் பல தொடர்புகளைப் பேணுவதில் பிரதான பாத்திரம் வகித்தவர்.
கே.பீ : இன்று இலங்கையிலிருக்கும் இவர், எம்மிடம் முதலில் இருந்த விசைப்படகுக்குப் பொறுப்பாக இருந்தார். பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் வேளையிலேயே இயக்கப் பணிகளையும் மேற்கொண்டார்.
லாலா ரஞ்சன் : ஞானேந்திரமோகன் கனகநாயகம் என்ற இயற்பெயரைக் கொண்ட ரஞ்சன், பருத்தித்துறையைச் சேர்ந்த இளம் போராளி. இராணுவப் பயிற்சிகளிலும் பண்ணை வேலைகளிலும் ஆர்வமுடைய இவர் இலங்கை அரச படைகளுடன் ஏற்பட்ட மோதலில் 1984 ஆம் ஆண்டு தொண்டமனாறில் கொலை செய்யப்பட்டார்.
அன்ரன்: இன்னுமொரு பல்கலைக்கழக மாணவன். எம்மோடு உறுதியான தொடர்புகளைக் கொண்டிருந்தவர். பேரினவாத அடக்குமுறைக்கு எதிரான போர்க்குணம் மிக்க போராளி.
கணேஸ் வாத்தி : எமது மத்திய குழு உறுப்பினர்களில் ஒருவர். ஆரம்பத்திலிருந்தே புலிகளில் பங்களித்த போராளி. பகுதி நேரமாக மட்டும் தான் எம்மோடு இணைந்திருந்தார். பண்ணைகளை உருவாக்கத்தில், அதன் ஆரம்பப் பணிகளில் பங்களித்தவர்.
இன்னும் வரும்
20 வயது கூட நிரம்பாத இளஞன் தம்பி பிரபாகரன்-ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்
70களில் பிரபாகரன் எமக்கெல்லாம் ஒரு ஹீரோ – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர்
தமிழீழ விடுதலைப் புலிகளின் தோற்றம் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (மூன்றாம் பாகம்)
பற்குணம் – இரண்டாவது உட்படுகொலை – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பகுதி ஐந்து) : ஐயர்
புலிகளின் உறுப்பினராகும் உமா மகேஸ்வரன்- ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஆறு) ஐயர்
புலிகளின் தலைவராகும் உமாமகேஸ்வரன் : ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் ஏழு) : ஐயர்
புதிய பண்ணைகளும் புதிய போராளிகளும் – ஈழப் போராட்டத்தில் எனது பதிவுகள் (பாகம் எட்டு)
சக போராளிகளுடனான எனது அனுபவக் குறிப்புகள் – ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் : ஐயர் (பாகம் ஒன்பது)